ஆயுதக்கட்டுப்பாடும், ஆயுதக்களைவும்

ஆயுதக்கட்டுப்பாடும், ஆயுதக்களைவும்

ஆயுதக்களைவு என்பது சர்வதேச அரசியலில் மிகவும் பிரபலமான ஒரு வார்த்தையாகும்...

பொதுவாக அரசுகள் ஆயுதங்களைக் குறைக்க விரும்பாததுடன் அவ்வாறான ஒரு எதிர்பார்ப்பினைக் கூட கொண்டிருப்பதுமில்லை. வழமையாக எல்லா அரசுகளும் ஆயுத பலத்தை வைத்திருக்கவே விரும்புகின்றன. ஆயுத பலம் இருந்தால்தான் தமது எல்லைப் பிரேதசங்களை எதிரியின் தாக்குதல்களிலிருந்தும், ஆக்கிரமிப்பிலிருந்தும் பாதுகாக்க முடியும் என அரசுகள் நம்புகின்றன. ஆனால் சர்வதேசப் பாதுகாப்பு, அமைதி, சமாதானம் என்பவற்றைப் பேணிக்கொள்ள வேண்டுமாயின், ஆயுத சமாதானம் என்பவற்றைப் பேணிக் கொள்ள வேண்டுமாயின், ஆயுத பாவனையில் இருந்து உலகை மீட்டெடுக்க வேண்டும். இந்நிலையிலேயே ஆயுதக்கட்பாடு, ஆயுதக்களைவு என்ற எண்ணக்கருக்கள் பற்றி சிந்திக்கப்படுகிறது.

    ஆயுதக்களைவு என்பது ஆயுதங்களைப் பாவனையில் இருந்து நீக்குதல் என்பதாகும். ஆயுதப் படைகள் உருவாவதை தடுப்பதையும், ஆயுதங்களைச் சர்வதேச மட்டத்தில் இல்லாதொழிப்பதையும் இலக்காக கொண்டதாகும்.

    ஆயுதக்கட்டுப்பாடு என்பது ஆயுதக்களைவுடன் தொடர்புபடுகின்ற பிரிதொரு எண்ணக்கருவாகும். ஆயுதக் கட்டுப்பாட்டினை இரு பிரிவாகப் பிரித்துப் பார்க்கலாம். ஒன்று ஆயுதக் குறைப்பு சர்வதேச மட்டத்தில் அல்லது பிராந்திய மட்டத்தில் செயற்படுத்தப்படுவதாகும். இரண்டாம் உலக மகா யுத்தத்தினைத் தொடர்ந்து ஃபின்லாந்து, ஆஸ்திரியா போன்ற நாடுகள் தாம் சர்வதேச அரசியலில் நடுநிலைமை வகிக்க வேண்டும் என்ற எண்ணப்பாட்டில் தாமாகவே விரும்பி தங்கள் ஆயுதங்களைக் குறைத்துக்கொண்டன. பிராந்திய நலன் என்ற புரிந்துணர்வின் அடிப்படையில் மத்திய, தென் அமெரிக்க நாடுகள் தமது பிராந்தியத்தில் அணு ஆயுதப் பாவனையினைத் தடுக்க வேண்டும் என்ற உடன்பாட்டிற்கு 1967ஆம் ஆண்டில் வந்திருந்தார்கள்.

    ஆயுதமட்டுப்படுத்தல் என்பது வேறுபட்ட சர்வதேச உடன்பாடுகளில் உள்ளடக்கப்பட்டிருந்த யுத்த அபாய ஆயுதங்களை மட்டுப்படுத்துவதாகும். எடுத்துக்காட்டாக, அணு ஆயுதப் பரீட்சிப்பினை (atom bomb test) மட்டுப்படுத்தல், விற்பனைக்கு என ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆயுதங்கள் தவிர்ந்த ஏனைய ஆயுதங்களை உற்பத்தியில் இருந்து மட்டுப்படுத்தல், ராணுவ தொழில்நுட்பங்கள் பரிமாற்றத்தை மட்டுப்படுத்தல் போன்றவை இங்கு உள்ளடக்கப்படுகின்றன. ஆயுத மட்டுப்படுத்தல் என்பது மரபுசார் சர்வதேச சட்டத்துக்குட்பட்டது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

    சர்வதேச அரசியலில் ஆயுதக்களைவினை ஏற்படுத்திக் கொள்வதற்காகப் பல்வேறு வகையான சர்வதேச உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டு வந்துள்ளன. இரு உலக மகா யுத்தங்களுக்கு முன்னரே ஆயுதக்களைவு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டிருந்தன. 1817-ஆம் ஆண்டு ரஸ்-பீகாட் உடன்படிக்கையும் (Rush–Bagot Treaty), 1922-ஆம் ஆண்டு வாஷிங்டன் கடற்படை உடன்படிக்கையும் இவ்வகையில் முன்னணியில் நிற்கின்றன.

    1945-ஆம் ஆண்டு ஐப்பான் அணுகுண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து பிரிதொரு யுத்தம் நடத்தப்படுவதைத் தடுக்கும் முகமாகச் சர்வதேசச் சங்கம் ஆயுதக்களைவு மகாநாட்டை கூட்டியிருந்தது. இரண்டாம் உலகமா யுத்தத்தின் பின்னர் புதிய தன்னியக்கத் துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஆயுதக்களைவு தொடர்பான கலந்துரையாடல்களில் பிரதிபலித்தது.

    1946-ஆம் ஆண்டிற்கும் 1948-ஆம் ஆண்டிற்கும் இடையில் அணு ஆயுதம் என்பதற்கு ஆயுதக்களைவுக் கலந்துரையாடல்களில் முதன்மை கொடுக்கப்பட்டது. அணு ஆயுதத்தில் இக்கால கட்டத்தில் ஐக்கிய அமெரிக்கா மாத்திரமே தனி வல்லமை பொருந்தியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. சோவியத் ரஷ்யா மரபு ரீதியான படைபலத்தினால் மட்டுமே ஐக்கிய அமெரிக்காவினை எதிர்க்க வேண்டியிருந்தமையினால் அணு ஆயுதம் தொடர்பான ஆயுதக்களைவு மாநாட்டை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருந்தது. ஆனால் 1949-ஆம் ஆண்டும் அணுகுண்டு வெடிப்பினை சோவியத் ரஷ்யா வெற்றிகரமாக நடத்தி முடித்தது. இதன் பின்னர் அணு ஆயுதக் கட்டுப்பாட்டுத் திட்டங்களை விருப்புடன் நோக்குவதில் சோவியத் ரஷ்யா அக்கறை காட்டவில்லை. சோவியத் ரஷ்யா அணு குண்டு தயாரிப்பில் முன்னணி வகித்து வந்த ஐக்கிய அமெரிக்காவும், அதன் ராணுவக் கூட்டாளியாகிய நேட்டோ அணியும் பின் நிலைக்குத் தள்ளப்பட்டன. சோவியத் ரஷ்யாவும் அதன் கூட்டு நாடுகளாகிய கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் மரபு சார் ஆயுதத்திலும் சமபலமுள்ள நாடுகளாக எழுச்சியடைந்தன. ஆயுத பலத்தில் யார் உச்சபலம் பெற்றுள்ளார்கள் என்பதைத் தீர்மானிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இரு பக்கமும் அணு ஆயுத உற்பத்தியினைக் கட்டுப்படத்த வேண்டும் எனத் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடத்தொடங்கின.

    முதல் தடவையாக இரு பக்கமும் 1954-இலும், 1957-இலும் புதிய - புதிய ஆயுதக் களைவுப் பிரேரணைகளை சமர்ப்பிக்கத் தொடங்கின. இத்திட்டங்களில் அணு ஆயுதங்களும், மரபுசார் ஆயுதங்களும் முதன்மைப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் மேற்குத் தேசங்களுக்குச் சமமாகச் சோவியத் ரஷ்யா அணு ஆயுத உற்பத்தியில் முன்னணிக்கு வரக்கூடாது என்பதே பிரதானமானதாக இருந்தது. சோவியத் ரஷ்யாவினைப் பொறுத்தவரையில் மேற்குத் தேசங்களை விட அணு ஆயுதத்தில் தாம் முன்னணியில் இருப்பதே தனது சமுதாயத்திற்கு நலனானது என எண்ணியிருந்தது. இந்த எதிர்மாறான நிலை அணு ஆயுதக்களைவு தொடர்பாக ஒரு நிதானமான முடிவுக்கு வருவதை தடுத்திருந்ததுடன், இரு வல்லரசுகளும் ஆயுதக் கையாடலில் மிகவும் துரிதமாக வளரவும் தொடங்கின. விமானப் படைகளுக்கும், ஏவுகணைகளுக்கும் அணுசக்தியை பயன்படுத்தும் அளவுக்கு இரு வல்லரசுகளினதும் ராணுவ போட்டி என்பது உச்சநிலையினை அடையலாயிற்று.

    ஆனால் 1959-இல் பிரிட்டீஷ், சோவியத் ரஷ்யா ஆகிய இரு அரசுகளும் இணைந்து ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தில் பொதுவானதும், பூரணமானதுமான என்பதனை 3 கட்டங்களில் ஏற்படுத்துதல் என்று ஓர் பிரேரணையினை 1960 ஆம் ஆண்டிலிருந்து ஏற்றுக் கொண்டிருந்தது. 1961 ஆம் ஆண்டு 18 நாடுகளை உள்ளடக்கிய ஆயதக்களைவு அமைப்பு ஒன்று நிறுவப்பட்டது. இதில் 5 மேற்கு நாடுகளும், 5 கிழக்கு நாடுகளும் 8 அணி சேரா நாடுகளும் அங்கம் வகித்தன. இந்த அமைப்பு முதல் நிலையில் தேசிய மட்டத்தில் அணு ஏவுகணைகளை இல்லாதொழித்தல் என்பதில் உடன்பாடு கண்டிருந்தது.


1972-ஆம் ஆண்டு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் 

    ஆயுதக்கட்டுப்பாட்டுப் பேச்சுவார்த்தை ஐக்கிய அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையில் 1972-ஆம் ஆண்டு ஆயுத கட்டுப்பாட்டு ஒப்பந்தம் (strategic arms limitation treaty) என்ற பெயரில் துவங்கியது.

ஆயுத மட்டுப்படுத்தலில் இரு விஷயங்கள் முக்கியப்படுத்தப்பட்டிருந்தது. ஒன்று எறிபடைத்துறைக்கு (Ballistic) எதிரான ஏவுகணைகளை  (Anti-ballistic missile ) உருவாக்குவதையும், அதைக் கையாளுவதையும் மட்டுப்படுப்படுத்துதல், மற்றையது வல்லரசுகள் அணு ஆயுதங்கள் கொண்ட படைகளின் அளவினைக் கட்டுப்படுத்துதல். இம்முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் நிக்ஷனும், பிரஸ்னெவ்வும் கையெழுத்திட்டிருந்தனர். இது ஐந்தாண்டுத் திட்டமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். ஜிம்மி காட்டர் ஜனாதிபதியாகப் பதவி ஏற்றபோது சோவியத் ரஷ்யா தொடர்ந்து இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தால், தாமும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்தால், தாமும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தத் தயார் என அறிவித்திருந்தார். இதற்கிடையில் 1979 ஆம் ஆண்டு வியன்னா உச்சி மாநாட்டில் புதிய ஆயுதக்களைவுப் பேச்சு வார்த்தைக்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டன. இதன் பிரதிபலிப்பே அதுபற்றிய சிந்தனையாகும்.

1979-ஆம் ஆண்டு ஜிம்மி காட்டரும், பிரஸ்னேவும் உடன்படிக்கையினை வரைந்தார்கள். இது ஐக்கிய அமெரிக்காவின் செனட்சபையில் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில் சோவியத் ரஷ்யா ஆப்கானிஸ்தானில் தலையிட்டிருந்தது. இது ஐக்கிய அமெரிக்காவுக்கு சோவியத் ரஷ்யா மீது சந்தேகத்தை ஏற்படுத்தவே திட்டத்தை செனட் நிராகரித்தது. திட்டம் நிறைவேற்றப்படாவிட்டாலும், அது கடும் விமர்சனத்திற்குள்ளான திட்டமாகும். திட்டம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுள் நேட்டோ, வோர்சோ நாடுகள் தவிர்ந்த ஏனைய நாடுகள் அணுவல்லமை பெறுவதை நிரகரிக்கின்றது. குறிப்பாக சீனா அணு வல்லமை பெறக்கூடாது என்பதை இதன் இலக்காக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    நடுத்தரக்குறியிலக்கெல்லை கொண்ட அணு ஏவுகணைகள் தொடர்பான பேச்சு வார்த்தைகள் இருபதாம் நூற்றாண்டின் இறுதிக்காலங்களில் ஆரம்பமாகியது. நடுத்தரத் தூரம் கொண்ட அணு ஏவுகணைகளுடன் (intermediate range nuclear missiles) தொடர்புடைய ஆயுதங்கள் 1970-களின் பின்னர் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தன. 1979-ஆம் ஆண்டு நேட்டோ அணி நாடுகளின் கூட்டத் தொடரின் போது “தம் அணி சார்ந்த நீண்டகுறியிலக்கெல்லையை அச்சுறுத்தும் அணுப்படைகளுக்குச் (long range threat nuclear forces)  சமமான தரத்திலும், எண்ணிக்கையிலும் சோவியத் ரஷ்யாவிடம் SS-20 ரக ஆயுதங்கள் காணப்படுவதாகச் சொல்லப்பட்டது. நேட்டோ நாடுகள் தமது LRTNF-இன் தரத்தினை அதிகரிக்க வேண்டும் என தீர்மானித்துக் கொண்டன. இதனால் ஏற்பட்ட சர்வதேசப் பதட்டத்தினைப் போக்குவதற்காக 1981 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையினை நடத்துவதற்காக ஜெனிவாவில் ஐக்கிய அமெரிக்கா, சோவியத் ரஷ்யா ஆகிய இரு வல்லரசுகளும் சந்தித்தன. ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவது பிரேரணையில் பூச்சியத் திட்டத்தனைப் பற்றி அறிவித்தது. இதில் நவீன நடுத்தரத் தூரம் கொண்ட ஆயுதங்களை இல்லாதொழிப்பதாக இருந்தது. சோவியத் ரஷ்யாவின் SS-20 ஏவுகணைகளின் அளவினை ஐரோப்பாவில் நேட்டோ அணியிடம் உள்ள அணு ஆயுதப் படையின் அளவுக்கு சமமாகக் குறைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால் இதனை ஐக்கிய அமெரிக்கா ஏற்க மறுத்துவிட்டது. மீண்டும் 1983ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா நடுத்தரத் தூரம் கொண்ட அணு ஏவுகணைகளைக் குறைக்க முன்வந்தது. ஆனால் இதனை ஐக்கிய அமெரிக்கா தொடர்ந்து நிராகரித்துவிட்டதுடன் சோவியத் ரஷ்யா தனது பூச்சியத் திட்டத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டது. 1985 ஆம் ஆண்டு மீண்டும் ஐக்கிய அமெரிக்காவும், சோவியத் ரஷ்யாவும் நடுத்தரத் தூரம் கொண்ட அணு ஆயுதங்கள் தொடர்பாகப் பேசுவதற்காக நிபந்தனைகள் ஏதுவுமற்ற முறையில் ஜெனிவாவில் சந்தித்தன. இப்பேச்சுவார்த்தையில் மிகவும் சிக்கலான விஷயங்களாகிய அணு ஆயுதங்கள், விண்வெளி ஆய்வு நடவடிக்கைகள் போன்றன கருத்தில் எடுக்கப்பட்டிருந்தன.

    ஆயுதக்களைவு, ஆயுதக்கட்டுப்பாடு ஆகியன கெடுபிடி யுத்தத்திற்குப் பின்னர் புதிய பரிமாணத்தினைப் பெற்றுக்கொண்டது. ரஷ்யா சுயமாகவே பெருமளவு ஆயுதங்களை அழித்துக்கொண்டதுடன் இருதுருவ அதிகார அரசியலும் முடிவுக்கு வந்திருந்தது. உலகம் அமைதியையும், சமாதானத்தினையும் அடைவதற்கான திறவுகோலாக இச்சம்பவங்கள் அமையும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com