தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி: நவீன அரசியல்வாதிகளுக்கு ஒரு பண்டைய வழிகாட்டி

தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி: நவீன அரசியல்வாதிகளுக்கு ஒரு பண்டைய வழிகாட்டி

எப்படி தேர்தலில் வெற்றி பெற வேண்டும்: நவீன அரசியல்வாதிகளுக்கு ஒரு பண்டைய வழிகாட்டி_ குயிண்டஸ் டூலியஸ் சிசரோ
(How to Win an Election: An Ancient Guide for Modern Politicians)

மார்க்கஸ் துல்லியஸ் சிசரோ  (MARCUS TULLIUS CICERO)


மார்க்கஸ் துல்லியஸ் சிசரோ 3, (ஜனவரி கி.மு106 – 7 டிசம்பர் கி.மு43) ஒரு ரோமானியரும், மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், அரசியலமைப்பாளரும் ஆவார். இவர் ரோமானியச் செல்வந்தர் குலத்தின் செல்வ வளமிக்க நகரியக் குடும்பத்தைச் சார்ந்தவர். இவர் பரவலாக ரோமின் மாபெரும் சொற்பொழிவாளராகவும் உரைநடையாளராகவும் கருதப்பட்டவர்.

லத்தின் மொழியின்பால் இவரது செல்வாக்கு செறிவானது. இலத்தினில் மட்டுமன்றி பிற ஐரோப்பிய மொழிகளின் உரைநடையும் கூட பின்னாட்களில் 19ஆம் நூற்றாண்டு வரை, ஒன்று இவரைப் பின்பற்றியது அல்லது எதிர்த்துச் செயல்பட்டது. மைக்கெல் கிராண்ட் (Michael Grant) அவர்களின் கூற்றுப்படி, சிசரோவைப் போல "வேறு எம்மொழியின் அறிஞருமே இவ்வளவு தாக்கத்தை ஐரோப்பிய மொழிகளின் இலக்கியத்திலும் எண்ண ஓட்டத்திலும் செலுத்தியதில்லை". சிசரோ கிரேக்க மெய்யியலின் முதன்மையான சிந்தனைகளை ரோமானியருக்கு அறிமுகப்படுத்தினர். மேலும் புதிய பல மெய்யியல் கலைச்சொற்களை லத்தீன் மொழியில் உருவாகினார். உதாரணமாக humanitas, qualitas, quantitas, and essentia போன்ற கலைச்சொற்களை பயன்படுத்தி லத்தீன் மொழியை வளப்படுத்தினார். இதனால் இவர் மொழியியலாளர், மொழிபெயர்ப்பாளர், மெய்யியலாளர் என்றெல்லாம் பன்முகத் தளங்களில் பெயர் பெற்றார்.

இவரது நூல்கள் ஐரோப்பியப் பண்பாட்டில் பெருந்தாக்கம் செலுத்தி வருபவையாகும். ரோம் வரலாற்றை எழுத இவரது நூல்கள் இன்றும் முதன்மையான சான்றுகளை அளித்து வருகிறது. குறிப்பாக ரோமக் குடியரசு வீழ்ச்சியின் கடைசி காலம் குறித்து எழுத இவையே பெரிதும் பயன்படுகின்றன.

அவர் ஒரு திறமையான பேச்சாளர் மற்றும் வெற்றிகரமான வழக்கறிஞராக இருந்தாலும்,  சிசரோ தனது அரசியல் வாழ்க்கையை அவரது மிக முக்கியமான சாதனை என்று நம்பினார். வெளிப்படையான படைகளால் இரண்டாவது கேட்லினியன் சதி முயற்சி, நகரத்தின் மீது படையெடுப்பின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றபோது (second Catilinarian conspiracy), சதித்திட்டத்தில் இருந்து  சிசரோ இந்த கிளர்ச்சியை ஒடுக்கியதுடன், சதிகாரர்கள் ஐந்து சதிகாரர்களை பிடித்து நடவடிக்கை எடுத்தார். கி.மு. 1-ஆம் நூற்றாண்டின் 2-ஆம் பாதியில் கயஸ் ஜூலியஸ் சீசரின் (Gaius Julius Caesar) சர்வாதிகாரம், உள்நாட்டுப் போர்களால் குழப்பமான நேரத்தில் சிசரோ பாரம்பரிய குடியரசு அரச பணிக்கு வந்தார்.

குயிண்டஸ் டூலியஸ் சிசரோ (Quintus Tullius Cicero)

இவர் மார்கஸ்  துல்லியஸ் சிசரோவின் இளைய சகோதரர் ஆவார். 65-64 BC-இல் ரோமானியக் குடியரசின் தேர்தல் பிரசாரத்துக்கு வழிகாட்டியாக அவரது சகோதரர் மார்கஸ் துல்லியஸ் சிசரோ வுக்கு எழுதிய குயிண்டஸ் துல்லியஸ் சிசரோ எழுதிய ஒரு கடிதத்தின் தொகுப்பு "தேர்தலுக்கான சிறிய கையேடு" (Commentariolum Petitionis or De petitione consulates) என்று அறியப்படுகிறது. அரசியலில் இருக்கும் ஒருவருக்கு தெரியாத விஷயங்கள் எதையும் சொல்லவில்லை. ஆனால், மிகவும் சொல்லாட்சியுடன் எழுதப்பட்டிருக்கிறது.


பிலிப் ஃப்ரீமேன்

 கலிஃபோர்னியாவிலுள்ள மாலிபுவில் உள்ள பெப்பர்டைன் பல்கலைக்கழகத்தில் (Pepperdine University), மேற்கத்திய கலாச்சாரம் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார். இவர் குயிண்டஸின் கடிதங்களைத் தொகுத்து “தேர்தலில் ஜெயிப்பது எப்படி?” (How to Win an Election: An Ancient Guide for Modern Politicians) என்ற புத்தகமாக வெளியிட்டுள்ளார்.

“ஒரே வருஷத்தில் கோடீஸ்வரராக ஆவது எப்படி?” “ஒரே மாதத்தில் 20 பவுண்ட் எடை குறைப்பது எப்படி?” “30 நாளில் ஆங்கிலத்தில் பேசுவது எப்படி?” என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், இதுவரை வெளிவராத விஷயம் “தேர்தலில் ஜெயிப்பது எப்படி?” என்பது.  எல்லோருக்கும் உள்மனதில் இருக்கும் ஆசை, அரசியலில் ஒரு செல்வாக்குள்ள  பதவியைப் பிடிப்பது. ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள்.  இன்றைய உலகில் தகுதி எதுவும்  இல்லாமல் கிடைக்கும் பதவி, அரசியல் பதவிதான்.

அந்த அரசியல் பதவி, எந்த மட்டத்தில் இருந்தாலும், கிடைக்க வேண்டுமானால் கீழே சொல்லப்பட்டிருக்கிற அறிவுரைகளை முழுவதுமாக நம்பிப் பின்பற்ற வேண்டும். 

இந்த அறிவுரைகள் எல்லாக் காலத்திற்கும் ஒத்து வரக்கூடியவை. 
வெற்றி நிச்சயம். 

1. உங்கள் உறவினரும், குறிப்பாக உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் உங்களை ஆதரிப்பார்கள், ஆதரிக்க வேண்டும் என்ற நிலையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தின் ஒற்றுமை பற்றி “கிசுகிசு” வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2. உங்களைச் சுற்றி, அரண் மாதிரி,  சரியான ஆட்களை வைத்துக்கொள்ளுங்கள். நல்ல புத்திசாலியான, நம்பகரமான அணியைத் தேர்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

3. யாரெல்லாம் உங்களுக்கு உதவிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களோ, அவர்களிடம் நயமாகவோ (தேவைபட்டால் கடுமையாகவோ) நீங்கள் செய்த உதவிகளை ஞாபகப்படுத்தி அவர்களுடைய நன்றிக்கடனைத் தீர்க்க இதுதான் சரியான சமயம் என்று எடுத்துச்சொல்லுங்கள்.

4. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையோ, மதத்தினரையோ நம்பாமல் உங்கள் ஆதரவாளர்களை விரிவாக்கிக்கொள்ளுங்கள். இது எப்படிச் சாத்தியமாகும் 5-ஆவது குறிப்பைப் படியுங்கள்.

5. எல்லோருக்கும் எல்லாவற்றையும் கொடுப்பதாக வாக்குறுதி கொடுங்கள். இலவசங்களைக் கண்ணை மூடிக்கொண்டு அள்ளி வீசுங்கள். “ஜெயித்தால் எப்படி நிறைவேற்ற முடியும்?” என்ற எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள். “Public memory is short” என்பது முற்றிலும் உண்மை.

6. பேச்சுத் திறமை வெற்றிக்கு ஒரு அருமையான சாதனம். அதை வளர்த்துக்கொள்ளுங்கள். என்ன பேசுகிறோம் என்பது  முக்கியமில்லை. எப்படிப் பேசுகிறோம் என்பதுதான் முக்கியம்.  வாக்காளப் பெருமக்களை எவ்வளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்புங்கள். 

7. தேர்தலின்போது உங்கள் ஊரை விட்டு வெளியே செல்லாதீர்கள். நிச்சயமாக உல்லாசப் பயணம் மேற்கொள்ளாதீர்கள். வெற்றிக்குப் பிறகு கொண்டாடுங்கள்.

8. உங்கள் எதிரிகளின் பலவீனத்தை அறிந்து அதை முழுவதுமாக உபயோகித்துக் கொள்ளுங்கள். லஞ்ச ஊழல்பற்றித் தெரிந்தால் அது உங்களுக்குச் சரியான ஆயுதம்.  அதைவிட உயர்ந்தது உங்கள் எதிரிகளின் “சின்ன வீட்டு” லீலைகள்.

9. வெட்கப்படாமல் வாக்காளர்களை வானளாவப் புகழுங்கள். அவர்களை நேரடியாகப் பார்த்து, அவர்களின் முதுகில் தட்டி, அவர்கள்தான் உங்கள் உலகம் என்று சொல்லுங்கள்.

10. உங்கள் வாக்காளர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுங்கள். எல்லோரும் யாரையாவது நம்ப வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். உங்களைத் தேர்ந்தெடுத்தால் அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாகும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துங்கள்.

இன்னும் நிறைய இருக்கின்றன. இது போதும். மனசாட்சியைத் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, தேர்தலைச் சந்தியுங்கள் வெற்றி நிச்சயம் என்கிறார் குயிண்டஸ் துல்லியஸ் சிசரோ.

தொடரும்...

Lr.C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com