மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-13: அரசர்களின் அமைச்சர்கள், முகஸ்துதி செய்வோரை விலக்குவதன் அவசியம் 

மாக்கியவெல்லி அரசியல் சிந்தனைகள்-13: அரசர்களின் அமைச்சர்கள், முகஸ்துதி செய்வோரை விலக்குவதன் அவசியம் 

அரசர்களின் அமைச்சர்கள்


    அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது லேசான காரியமல்ல. அவர்கள் நல்லவர்களாயிருப்பதும், பொல்லாதவர்களாயிருப்பதும் அரசனுடைய திறமையில் இருக்கிறது. ஒரு அரசனைப் பார்த்தவுடன், அவனைப் பற்றி ஏற்படும் முதல் அபிப்பிராயம், அவனோடு கூடவிருக்கும் மனிதர்களைப் பார்த்து உண்டாகிறது. அவர்கள் தகுதியும், நம்பகமும் உடையவர்களாயிருந்தால் அரசனை அறிவாளி என்று நினைக்கலாம். ஏனெனில் அவன் அவர்களுடைய யோக்கியதையை அறிய வல்லவனாயும், அவர்களை விசுவாசத்துடன் இருக்கும்படி செய்யக் கூடிய சக்தியுடையவனாயும் இருக்கிறான். அமைச்சர்கள் இதற்கு நேர்மாறாயிருந்தால், அரசனைப் பற்றி மட்டமான அபிப்பிராயமே உண்டாகிறது. அவன் செய்கிற முதல் தவறு, தகுதியற்ற அமைச்சர்களைப் பெருக்கிக் கொள்வதுதான்.

ஸீனாவின் அரசனான மெஸ்ஸர் பான்டல்போ பெட்ருசி (Messer Pandolfo Petrucci) , மெஸ்ஸர் அன்டோனியோடா வெனப்ரோவைத் (Messer Antonio da Venafro)  தன் மந்தியாகத் தெரிந்து கொண்டதற்காக அன்டோனிடோவைத் தெரிந்தவர்களால் புத்திமான்  என்று போற்றப்பட்டான். புத்தியில் மூன்று விதங்களுண்டு: பிறர் உதவியின்றியே விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளுவது ஒன்று, பிறர் எடுத்துக் காட்டினால் தெரிந்து கொள்ளும் சக்தியுடையது மற்றொன்று, தனக்காகவும் தெரியாது, சொன்னாலும் தெரியாது என்னும் விதம் மூன்றாவது. முதலாவது மிகச் சிறந்தது. இரண்டாவதும் சிறந்ததே, முன்றாவது விதம் மோசமானது. ஆகவே பாண்டால்போ முதல்தர மாணவனாக இல்லாவிட்டாலும் இரண்டாந்தரமானவனாய் இருந்தானென்று ஏற்படுகிறது. பிறர் செய்கைகளில் நல்லது கெட்டது எவை என்று அறிந்து கொள்ளும் சக்தி சுயமாக இல்லாவிட்டாலும் அயலார் மூலமாமக வருவதால் தன் மந்திரியின் காரியங்களிலும் நியாய அநியாயாங்களை உணர்ந்து, நியாயாமானவற்றிற்கு ஊக்கமளித்து அநியாயங்களைத் திருத்த முடிகிறது. மந்திரி அப்படிப்பட்ட அரசனை ஏமாற்ற முடியாதாகையால் நல்லவனாக இருந்துதான் ஆகவேண்டும்.

அமைச்சனை அறிந்து கொள்ள விரும்பும் அரசனுக்குத் தவறாக முறை ஒன்றிருக்கிறது. அவன் தனது அரசனை விடத் தன்னையே பெரியதாக மதித்து அரசனுடைய லாபத்தில் அக்கறையின்றித் தன்னுடைய லாபத்திலேயே கண்ணுங் கருத்துமாயிருப்பதாகத் தெரிந்தால்,  அப்படிப் பட்டவன் ஒருக்காலும் நல்ல மந்திரியாகமாட்டான். அவனை நம்பவே முடியாது. பிறருடைய ராஜ்யத்தை நிர்வகிக்கிறவன், தன்னைப்பற்றி நினைக்கவே கூடாது. அரசனுடைய நன்மையையே நாடவேண்டும். அரசனுக்குசட சம்பந்தமில்லாதவற்றில் கவலை எடுத்துக் கொள்ளக் கூடாது. அரசனும் அமைச்சனுடைய விசுவாசத்தை ஸ்திரமாக்கிக் கொள்வதற்காக அவனைக் கௌரவித்துச் செல்வங்களை அளிக்க வேண்டும். இவனை அன்புடன் நடத்தி பெருமைகளை வழங்கிகப்  பொறுப்பான வேலைகளை அவனிடம் ஒப்புவிக்க வேண்டும். வேறு செல்வங்களையும் கௌரவங்களையும் அவன் தேடிச்செல்லாத முறையில் அவனுக்கு எல்லாம் குறைவறச் செய்து வரவேண்டும். அரசனும், அமைச்சரும் இவ்வித உறவை மேற்கொண்டவர்களாயிருந்தால் பரஸ்பரம் நம்பிக்கையுடன் இருக்கலாம்:  அப்படியில்லாவிட்டால் இருவரில் ஒருவருக்கு எப்போதும் கெடுதல்தான்.

முகஸ்துதி செய்வோரை விலக்குவதன் அவசியம் 


    நான் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தைக் கூறத் தவறலாகாது.  அரசர்கள் மிகவும் சிரமப்பட்டே தடுக்கக்கூடிய ஒரு தவறைக் குறிப்பிட வேண்டும். அது அவர்கள் பகுத்தறிவை உபயோகிக்காமல் தகுதியற்றவர்களைத் தங்களோடு சேர்த்து வைத்துக் கொள்வதால் விளைவது.  இது முகஸ்துதி செய்வோரைப் பற்றியது. ராஜ சபையில் முகஸ்துதிக்காரர்களுக்குக் குறைவிராது. மனிதர்களுக்கு சகஜமாகவே தங்களுடைய காரியங்களைப் பற்றிப் பெருமையுண்டு, அக்காரியங்களின் மேன்மையைப்பற்றிக் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வார்கள். ஆகையால் இக்கொடிய நோயினின்றும் தப்புவது கஷ்டம் இந்நோயினின்றும் தப்ப விரும்புவோர், பிறருடைய அலட்சியத்துக்கு உள்ளாக வேண்டிவரும். முகத்துக்கெதிராக உள்ளதைச் சொன்னால் கோபம் வராது என்று தெரியப்படுத்துவதைத் தவிர முகஸ்துதியைத் தடுப்பதற்கு வேறு வழி இல்லை.  ஒவ்வொருவனும் அரசனுடைய முகத்துக்கெதிராக உண்மையை உரைக்கக் கூடுமானால் அரசன் அவர்களுடைய மரியாதையை இழக்க நேரிடும். ஆகவே அறிவாளியான அரசன் மூன்றாவது வழியைக் கடைப்பிடிக்க வேண்டும். தன் சபையில் அறிவிற் சிறந்தவர்களை அழைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.  அவர்களுக்கு மட்டுமே தன்னெதிரில் உள்ளதை ஒளியாமல் உரைக்கும் உரிமையைத் தரவேண்டும். அதுவும் அரசன் எதைப் பற்றிக் கேட்கிறானோ, அதைப்பற்றி மாத்திரம் அபிப்பிராயம் கூறும் சுதந்திரத்தைக் கொடுக்க வேண்டும்  தவிர,  மற்ற விஷயங்களைப் பற்றி பேசவிடக் கூடாது. ஆனால் அரசன் அவர்களுடைய அபிப்பிராயத்தை எல்லா விவயங்களிலும் கலந்து கொண்டு பிறகு தன்னிஷ்டப்படி முடிவுக்கு வந்து தன் தீர்மானத்தில் உறுதியுடனிருக்க வேண்டும். இந்தக் சபைகளிலும் தனித் தனியாக ஒவ்வொருவரிடமும் அவர்கள் எவ்வளவு யதார்த்தாமாகப் பேசுகிறார்களோ அந்தளவுக்கு அது தனக்குப் பிரியமானது என்பதைத் தெளிவுறக் காண்பிக்க வேண்டும்.  அவர்களைத் தவிர வேறெவரையும் யோசனை கேட்கக் கூடாது. தானே ஆற அமர யோசித்து உறுதியாகத் தீர்மானிக்க வேண்டும். அப்படியில்லாமல் இதற்கு மாறாக நடக்கிறவன். முகஸ்துதிக்கு வசப்பட்டு அவசரபுத்தியுடன் நடக்கிறவனென்றும் விதவிதமான யோசனையைக் கேட்டுச் சபல சித்தமுடையவனாயிருப்பவன்  என்றும் பழிக்கப்படுவான்.

நவீன காலத்திய திருஷ்டாந்தம் ஒன்று கொடுக்கிறேன். இப்போதிருக்கும் சக்கரவர்த்தி மாக்ஸிமிலியனுக்கு வேண்டியவனான ப்ரிலுகா (PreLuca) என்பவன் சக்கரவர்த்தியைச் குறித்துப் பேசுகையில், “மாக்ஸிமிலியன் ஒருவரையும் ஆலோசனை கேட்பது கிடையாது. தன்னிஷ்டப்படியும் ஒன்றும் செய்தது கிடையாது” என்று சொன்னான். இது முன் சொல்லப்பட்ட நீதிக்கு விரோதமாய் நடந்ததால் வந்தது. அந்தச் யோசனைகளை ஒருவரிடமும் சொல்லுவதுமில்லை. ஒருவருடைய புத்திமதியைக் கேட்பதுமில்லை.  ஆனால் அவன் தன் எண்ணங்களை நிறைவேற்றப் புகும்போது அவை வெளிப்பட்டுவிடுவதால் அவனைச் சுற்றியிருப்பவர்கள் அதை எதிர்த்து அரசன் அந்த யோசனைகளைக் கைவிட்டுவிடும்படி எளிதில் செய்துவிடுகிறார்கள். இவ்வண்ணம் ஒரு நாள் செய்கிற காரியத்தை மறுநாள் மாற்றும்படி ஆகிறது. அவன் என்ன செய்ய நினைக்கிறான்,  எதை விரும்புகிறான் என்பது யாருக்குமே தெரிகிறதில்லை. அவனுக்கு நிதான புத்தியிருக்கிறதா என்பதையும் நம்ப முடிவதில்லை.

ஆகையால் அரசன் ஆலோசனை கேட்கவேண்டும்.  ஆனால் தனக்கெப்பொழுது இஷ்டமோ, அப்பொழுது கேட்க வேண்டுமே தவிர மற்றவர்கள் வேண்டும் பொழுதல்ல.  தானாக ஆலோசனை கூற வருவோருக்கு இடந்தரலாகாது. அவன் பெரிய கேள்விக்காரனாக இருக்க வேண்டும். தான் விசாரிக்கும் விஷயங்களைக் குறித்த உண்மைகளைப் பொறுமையுடன் கேட்க வேண்டும். உண்மையான பதிலை உரைக்க முன்பின் பார்ப்பவர்களிடம் அரசன் மிகவும் கோபம் கொள்ள வேண்டும். அரசன் புத்திமானென்று பெயர் பெறுவது அவனுடைய சுயபுத்தியாலன்று, நல்ல அமைச்சர்கள் இருப்பதால்தான என்று சிலர் எண்ணுகிறார்கள். அது தவறான எண்ணம்,  சுயமாகவே புத்தி இல்லாதவன் இதரர்களுடைய நல்ல ஆலோசனைகளைக் கேட்கமாட்டானென்பது மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை, சகல விஷயத்திலும் அடக்கியாளும் புத்திமான் ஒருவன் கையில் தன்னை ஒப்புவித்திருந்தால் என்னவோ, அப்படியிருந்தால் அவன் நன்றாய் ஆட்டுவிக்கப்படலாம். ஆனால் அது நீடித்து நிற்காது. அந்த அதிகாரி சீக்கிரத்தில் ராஜாவை ராஜ்யத்தை விட்டுத் துரத்திவிடுவான், அரசன் மிகுந்த புத்திமானாக இல்லாவிட்டால் பலரடங்கிய சபைகளில் ஒற்றுமையை ஏற்படுத்தி ஒரு மன்பபட்ட அபிப்பிபராயங்களைப் பெற வியலாது.  அவர்களெல்லோரும் சுயநலத்தையே கருதுவார்கள்.  சாதாரண அறிவுள்ளவனுக்கு அவர்களைத் திருத்தவாவது புரிந்து கொள்ளவாவது சாமர்த்தியம் இருக்காது. அது அப்படித்தான் இருக்க முடியும். ஏனெனில் உண்மையுடனிருக்கும்படி கட்டாயப்படுத்தபட்டாலொழிய, மக்கள் கபடிகளாய்த்தான் இருப்பார்கள். ஆகையால் நல்ல ஆலோசனைகளுக்கெல்லாம் அரசனுடைய சிறந்த புத்தி தான் ஆதாரமென்றும், பிறருடைய புத்திமதிகளால் அரசன் அறிவாளியாகி விடவில்லையென்றும் முடிவாக ஏற்படுகிறது. 

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com