இன அரசியல்-2: ஆதி மனிதன், ஜாவா மனிதன், ஹெய்டில்பர்க் மனிதன், நிண்டேர்தல் மனிதன்

இன அரசியல்-2: ஆதி மனிதன், ஜாவா மனிதன், ஹெய்டில்பர்க் மனிதன், நிண்டேர்தல் மனிதன்

மனிதனுடைய வரலாறு மிக வியப்பானது. பிற வரலாறுகளைப் பயில்வதன்முன் நாம் மனிதனைப்பற்றிய வரலாற்றையே அறிதல் வேண்டும். மனித வரலாறே மற்றைய வரலாற்றுக் கல்விகளுக்குத் துணை புரிவது. அவனுடைய வடிவமும் இன்றைய மனிதனைவிட வேறுபட்டிருந்தது. இப்பூமியில் வாழத் தொடங்கிய பல்லாயிரம் ஆண்டுகளில் அவனுடைய வடிவம் சிறிது சிறிதாக பண்பட்டு இன்றைய நிலையை அடைந்துள்ளது. அவனுடைய வாழ்க்கை முறைகளும் அவ்வாறே பண்பாட்டைந்துள்ளன.

மனித தோற்றம்

இவ்வுலகின் பல்வேறு இடங்களில் மிக மிகப் பழங்காலத்தில் வாழ்ந்த மக்களின் மண்டை ஓடுகளும்,  எலும்புகளும் கண்டு எடுக்கப்பட்டன. அவைகளை வைத்து அம்மக்களின் வடிவங்களை விஞ்ஞானிகள் அமைத்துள்ளார்கள். கண்டுபிடிக்கப்பட்ட மண்டை ஓடுகளுக்கும், எலும்புகளுக்கும் அருகில் கல்லாயுதங்களும், விலங்குகளின் எலும்புகளும் கிடந்தன. இவைகளை ஆதாரமாகக் கொண்டு ஆராய்ச்சியாளர் ஆதிகால மக்களின் வரலாறுகளை எழுதியுள்ளார்கள். மக்கள் நாகரிகமடைந்து எழுதப்பயின்று வரலாறுகளை எழுதிவைக்கத் தொடங்குவதற்கு முற்பட்ட மனித வரலாறு இவ்வகையிலேயே எழுதப்பட்டுள்ளது. மேல் நாட்டார் மனித வரலாற்றை ஓர் கலையாகக் கொண்டு அதனை ஊக்கத்தோடு கற்கின்றனர். பற்பல புதிய நூல்களை வெளியிடுகின்றனர். மனித வரலாறு மனிதனின் பகுத்தறிவைத் தூண்டி வளர்க்கத்தக்கது. தலைமுறைகளாகத் தொடர்ந்து வரும் நம்பிக்கைகள், பழக்கங்கள், வழக்கங்கள், பழங்கதைகள் போன்ற பலவற்றைத் தக்கவாறு விளக்கத்தக்கது. நம் நாட்டில் இன்னும் சாதி, மத வரலாறுகளில் நாம் திளைத்துள்ளோம்.

ஆதி மனிதன்
 

யூஜீன் துர்போயிஸ்

யூஜீன் துர்போயிஸ் (Eugène Durbois) என்னும் டச்சுக்காரர் 1891-ல் ஜாவாவிலே மிகப் பழங்கால மனிதனின் மண்டை ஓட்டையும், எலும்புகளையும் இந்தோனேஷியாவில் அமைந்துள்ள சோலோ நதிக்கரையில் கண்டு எடுத்தார். இவை ஆறு வாரிக்கொண்டு வந்து குவித்த மணற்படைகளுள் கிடந்தன. இவை கிடந்த இடத்தின் அருகில் விலங்குகளின் எலும்புகளும் காணப்பட்டன. துர்போயிஸ் கண்டு எடுத்த மண்டை ஓட்டுக்கும் எலும்புகளுக்கும் உரிய மனிதனுக்கு விஞ்ஞானிகள் ஜாவா மனிதன் எனப் பெயரிட்டுள்ளார்கள். இவனுடைய வடிவு குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்டது. ஆகவே நிமிர்ந்து நிற்கும் வாலில்லாக் குரங்கு மனிதன்  எனவும் அவன் அறியப்படுவான். அம் மனிதனின் மூளை இன்றைய மனிதனின் மூளையில் மூன்றில் இரண்டு பங்கு அளவிலானது. 

ஜாவா மனிதன் (Java Man)

இவன் காலம் 4,75,000 ஆண்டுகள் வரை ஆகும். இன்றைய மக்கள் ஜாவா மனிதனை வாலில்லாக் குரங்கு மனிதன் என்று அழைக்கிறார்கள். ஜாவா மனிதன் மயிர் மூடிய உடலையும் தொங்கும் தோள்களையும் பெரிய உறுப்புகளையும் முன்புறம் தள்ளிய தாடையையும் நோக்குகின்றவர்களுக்கு வாலில்லாக் குரங்குபோல் தோன்றலாம். ஆனால், ஜாவா மனிதன் மனிதனே. சீனாவில் பீகிங் எனுமிடத்தில் 1929 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டன. இம்மனிதன் பீகிங் (Peking) மனிதன் எனப்படுவான்.

குரங்குகள் தவழ்ந்து செல்லும், ஆனால் நடக்கத் தொடங்கியப்பின் ஜாவா மனிதன் ஒரு போதும் நாலு கால்களில் சென்றதில்லை. இன்று காணப்படுவது போன்றதல்லாத அழகிய ஓர் இடத்தில் மரத்தில் கட்டப்பட்ட ஒரு கூட்டில் இருந்து வளர்ந்தான். பால்குடி மறந்தபின் தோற்றத்தில் கிட்டத்தட்ட ஜாவா மனிதர்களைப் போன்ற உராங்குடன் என்னும் குரங்குக் குட்டிகளோடு விளையாடினான். மனிதக் குரங்குகள் செய்யும் ஒலிக் குறிகளின் பொருளை ஜாவா மனிதன் அறிந்திருந்தான். ஜாவா மனிதன் அவைகளைப் போலவே சத்தமிட்டான். சிறிது வளர்ந்த பின், குடும்பத்தவர்களுக்கு உணவு தேடிவர அரம்பித்தான். உண்ணக் கூடிய பழம், நத்தை பூச்சிகள் போன்றவைகளை தேடிக்கொண்டு வந்தான். சில சமயங்களில் பறவைகளையும் பிடித்து அவைகளின் இறைச்சியையும் உண்டான். குரங்குகளிடம் காணப்படாத சில குணங்கள் ஜாவா மனிதனுக்கு உண்டு. ஜாவா மனிதன் பெற்றோரும் ஆகிய மூவரும் தேடிய உணவை அவர்கள் இருக்கும் மரத்தடிக்குக் கொண்டு வந்து, அதனைத் தந்தை சமமாக பிரித்துத் தந்தார். வாலில்லாக் குரங்குகளோ தமக்கு வேண்டிய உணவை தாமே தேடி உண்டன. காட்டிலே நாயோடு இருக்கும் குட்டியின் தந்தைக் குரங்கு மந்திரம் தாய்க்கும், குட்டிக்கும் உணவு கொண்டு வந்தது.

ஜாவா மனிதன் இனத்தில் பத்து அல்லது பன்னிரெண்டு குடும்பங்கள் வரையில்தான் இருந்தன. ஜாவா மனிதன் வாலில்லாக் குரங்குகளுள் திருமணம் செய்து கொள்ளவில்லை.  வயது வந்த ஓர் ஆண், பெண்ணைத் தேடும் பொருட்டு நூற்றுக்கணக்கான மைல்கள் திரிந்தான். உடம்பு முழுவதும் மயிருள்ள ஒரு இளம் பெண்  கிடைத்தாள். அவர்கள் உறுமிச் சத்தமிட்டு ஒருவர் கன்னத்தோடு ஒருவர் கன்னத்தை உரசி, உடனே இருவரும் திருமணம் செய்துகொள்வதென நிச்சயம் செய்து கொண்டனர். இருவரும் உயர்ந்த மரம் ஒன்றின் மீது கூடுகட்டத் தீர்மானித்து, கூடுகட்டி இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். மரம் ஆற்றங்கரையில் நின்றது. அதன் கிளைகள் ஆற்றுக்கு மேலே தொங்கின. ஒருநாள் பூமி வெடித்தது போல பெரிய சத்தம் கேட்டது. ஆற்றில் ஐம்பதடி உயரமுள்ள ஒரு அலை எழுந்தது. அது ஜாவா மனிதனையும், மனைவியையும் ஆற்றில் அடித்து விழுத்தி வாரிக்கொண்டு போய் விட்டது. அவ்வலை எரிமலைக் குழம்பினால் உண்டாயிற்று.

ஹெய்டில்பர்க் மனிதன் (Heidelberg man)
 

ஜெர்மனியின் ஜெய்டில்பர்க் எனுமிடத்தில் பழங்கால மனிதனின் மணை ஓடும் எலும்புகளும் 1907 இல் கண்டெடுக்கப்பட்டன. இவன் காலம் 3,00,000 ஆண்டுகள் வரை ஆகும். ஹெய்டில்பர்க் மனிதனுக்கு ஒரு சகோதரனும், இரண்டு சகோதரிகளும் இருந்தார்கள். நான்கு பேரும் ஒரு மரத்தில் கூடுகட்டி வாழ்ந்தனர். நீண்டு வளைந்த பற்களையுடைய கொடிய புலி இரை தேடுவதற்கு இரவில்  உலாவித் திரிந்தது. ஹெய்டில்பர்க் மனிதன் அக்கொடிய விலங்குக்குப் பயந்து வாழ்ந்தான். அப்புலி இரவு நேரத்தில் மரங்களை முன்னங்கால்களால் உதைத்து ஆட்டும், அப்போது மரக்கிளைகளில் இருக்கும் குரங்குகள் பழங்களைப்போல பொத்தென்று கீழே விழும். ஹெய்டில்பர்க் மனிதனின் கூடு மரத்தின் உச்சிக் கிளையில் இருந்தது. 

ஒரு முறை சிம்பன்சி என்னும் மனிதக் குரங்கின் மனைவியைப் புலி பிடித்தது. அப்போது அம் மனித குரங்கு ஆத்திரங்கொண்டு பெரிய கல்லை எடுத்துப் புலியின் மண்டையில் அடித்தது. புலி அக்குரங்கைத் தனது முன்னங்கால்களால் வாரி எடுத்துக் கிழித்தெறிந்துவிட்டது. பின்பு அம்மனிதக் குரங்கின் சகோதரனை, புலி சதை சதையாகக் கிழிப்பதை கண்டு அவனது மனம் வேலை செய்து கொண்டிருந்தது. உடனே தனது சகோதரிமாரோடு ஓடி மறைந்துவிட்டான். அவனது உயிர் போக நேர்ந்தாலும் அப்புலியை கொன்று விட வேண்டுமென எண்ணி, தொலைவில் நின்றபடியே புலியைக் கொல்லலாம் என்று அவன் மூளையில் தோன்றிற்று.

அவன் தந்தை ஒரு தண்டாயுதத்தைச் செய்து வைத்திருந்தார். அது முதல் பறவைகளை கல்லால் எறிவதை நிறுத்தி விட்டு, அவை புலியைக் கொல்வதற்குப் பயன்படுமா என்று பல நாட்களாக ஆலோசித்தான். அவன் சகோதரி தினமும் வெளியே சென்று உணவு கொண்டு வந்தாள். பழங்கள், குருவிகளின் முட்டைகள், தவளைகள், முயல் இலைகள் என்பவை அவர்கள் கொண்டு வரும் உணவு வகைகள் நான் உணவு தேடும் பொருட்டு ஒரு விரலைத்தானும் அசைக்கவில்லை. கடைசியில் ஒரு எண்ணம் தட்டிற்று. உடனே மகிழ்ச்சியினால் ஆரவாரஞ் செய்து எழுந்து கூத்தாடினான். உடனே சிம்பன்சி என்னும் மனிதக்குரங்களும் ஓடிவந்து அவன் ஆடுவது போல கூத்தாடின.

தோலை பிளந்து அதனால் ஒரு கவண் செய்தான். ஆற்றங்கரைக்கு சென்று அங்கு கிடைக்கும் அழுத்தமான கூழாங்கற்களைக் கவணில் வைத்துக் கழற்றி எரிந்து பழகினான். நாளடைவில் கல் இலக்கில் படும்படி எறியும் பழக்கம் உண்டாயிற்று. பின்பு பறக்கும் பறவைகளின் இறக்கைகள் மீது கல்படும்படி எறியப் பழக்கம் அடைந்தான். ஒரு நாள் மத்தியான நேரம் வெய்யில் நன்றாகக் காய்ந்து கொண்டிருந்தது. அப்போது புதர்களைப் பார்த்து கற்களை எறிந்தான். சடுதியாகப் புதர் அசைந்தது. உடனே புலியொன்று வெளியே வந்தது. அதன் வால் நிலத்தை அடித்து கொண்டிருந்தது. வெய்யில் படுதலால் அதன் கண்கள் வெளிச்சமாக தோன்றின. உடனே புலியின் கண்களை நோக்கி கற்களை வீசினான். உடனே அந்தப் புலி விழுந்து இறந்து போயிற்று.

அந்த தீவிலே இனத்தவர்கள் பலர் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு கவண் செய்யும் வகையை அனைவருக்கும் கற்றுக் கொடுத்தான். அவர்கள் வரும்போது முயல்களையும் பிற உணவுப் பொருட்களையும் கொண்டு வந்தார்கள். கவணின் துணையைக் கொண்டு நன்றாக வேட்டையாடலாம். புலியைக் கொல்லும் போது பார்த்து கொண்டிருந்த சிம்பன்சி குரங்குகள். அதன்பின் அவை அவன் அருகில் வருவதில்லை.

உணவு சமைத்து உடல் செழுமையுறுவதற்கு மனிதன் பலவகை உணவுகளை உட்கொள்ள வேண்டும். எறிதடி கவண் என்பவைகளின் உதவியாலும் அவைகளுக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்களின் வாய்ப்பினாலும் அவர்களுக்கு ஊன் உணவு எப்பொழுதும் கிடைத்தது. முதலாவது உறை பனிக் காலத்துக்கு பின் தோன்றி இரண்டாவது வெப்ப காலத்தில் ஐரோப்பிய சமவெளிகளில் வாழ்ந்தான். எல்லா வகை உணவுகளையும் உண்ண அறியாமலிருந்தால் அவர்கள் விலங்குகள் சென்ற வழியே போயிருப்பர். இனத்தவர்களுடன்  மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தான். விலங்குகள் மலைக் குகைகளில் வசிப்பதையும், குகைகள் மழைக்கும், வெய்யிலுக்கும் பாதுகாப்பு அளிக்கின்றன என்பதையும் கவனித்தான். பெரிய மலைக் குகை ஒன்றுக்கு சென்று. அங்கு  இருந்த கழுதைப்புலியை துரத்திவிட்டு குடும்பத்துடன் அங்கு குடியேறினான். இதற்கு பிறகு மரத்தில் கூடிகட்டி ஒருபோதும் வாழவில்லை. குகைகளிலும், மரப்பொந்துகளிலும் வாழ்ந்தான்.

நியாண்டேர்தல் மனிதன் (Neanderthal Man) 

ஹெய்டில்பார்க் மனிதனுக்கும், நியாண்டேர்தல் மனிதனுக்குமிடையில் இரண்டு லட்சம் ஆண்டுகள் கழிந்தன. 1875 இல் நியாண்டேர்தல் என்னுமிடத்தில் பழைய மனிதனின் மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டது. இம்மனிதன் நியாண்டேர்தல் மனிதன் ஆவன். அவனது காலம் 40,000 ஆண்டுகள் ஆகும்.

இக்காலத்தில் உறைபனி மூன்று முறை மனிதரையும் விலங்குகளையும் தனக்கு முன்னால் துரத்திக் கொண்டு பூமியை சுற்றி வந்தது. நியாண்டேர்தல் மனிதன் நாலாவது குளிர்காலத்தில் வாழ்ந்தான். இவ்வினத்தவர் முன்னேற்ற வழிகளில் செல்ல ஆரம்பத்திருந்தார்கள். மனித இறைச்சியை உண்ணும் மக்களும் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு நாடி எலும்பு இருக்கவில்லை. ஆகவே அவர்கள் அதிகம் பேசாதவர்களாக இருந்தனர். அவர்கள் தமது கைகளால் காட்டும் சைகைகளோடு இருபது ஒலிக் குறிகளையும் பேச்சாக பயன்படுத்தினர்.

மனித இறைச்சியை உண்ணும் குணம் பசிக்கொடுமையால் உண்டாகவில்லை. எலும்புகளை உடைக்கும்போது அவைகளினுள் உள்ள ஊன் மிக சுவையுடையதாயிருந்தது. சுவை காரணமாக மனித எலும்பையும் உடைத்து ஊனை உண்ட மக்கள் மனித இறைச்சியையும் உண்ணத் தொடங்கினார்கள். இன்றும் தென் கடல் தீவுகளில் வாழும் மக்கள் நீளப்பன்றியைச் சிறந்த உணவாகக் கொள்கிறார்கள். நீளப்பன்றி என்பது மனிதனைக் குறிக்கும். வீரமுள்ளவனைக் கொன்று தின்பதால் அவனுடைய வீரம் உண்பவனைச் சேர்கின்றதென்னும் நம்பிக்கையும் இருந்து வந்தது.

இவனுக்கு முன்பு மக்கள் நெருப்பை பற்றி அறிந்திருக்கவில்லை. குகைகளிலும், மரப்பொந்துகளிலும் நடுங்கிக்கொண்டிருந்து உணவைப் பச்சையாகப் புசித்தனர். ஓநாய்களிடமிருந்தும், புலிகளிடமிருந்தும் பாதுகாத்துக் கொள்ள இவர்களிடம் மிகக் கீழ்த்தரமான ஆயுதங்கள் மாத்திரமிருந்தன. நாட்கள் கழிந்தன. இவர்களின் உடல்கள் வயிரமடைந்தன. இளைஞர், இருபது பேர் அல்லது முப்பது பேர் சேர்ந்து கூட்டங்களாகத் திரிந்தார்கள். வயது முதிர்ந்தவர்கள் அவர்களோடு செல்ல முடியாமலிருந்தது. தம்மைப் பின் தொடர்ந்து செல்ல முடியாதவர்களை வலியுள்ள ஒருவன் தனது தண்டாயுதத்தால் மண்டையிலடித்துக் கொன்றான். நெருப்புக் கண்டுபிடிக்கப்பட்டது. இப்பொழுது முன்னேற்றம் விரைந்து சென்றது.

ஒருநாள் குகைக்கு வெளியே இரவு முழுதும் புயல் அடித்தது. மின்னல் இடைவிடாமல் நெருப்பைக் கக்கிக் கொண்டிருந்தது. காலையில் காட்டுமரங்கள் புகைந்து கொண்டிருந்தன. எரிந்து  சிந்திக் கிடக்கும் சாம்பலில் நெருப்பில் வெந்து கிடக்கும் விலங்குகளையும் பறவைகளையும் பார்த்தேன். அவைகளுள் ஒன்றை எடுத்துக் கரியைத் துடைத்துவிட்டுப் பல்லாற் கடித்துப் பார்த்தான். இவ்வகை ருசியான உணவை முன் ஒரு போதும் உண்டதில்லை. நெருப்புத் தணலைக் கல் ஒன்றின் மீது வைத்து அதனை விலங்கின் குடல் ஒன்றால் தூக்கிக்கொண்டு அவனது குகைக்குச் சென்றான். அவன்  மனைவியர் பலருள் ஒருத்தியை சுள்ளிகள் பொறுக்கி வரும்படி சொன்னான்.  சுள்ளிகள் மீது தணலை வைத்து நெருப்பை மூட்டி எரித்தான்.

அவன் இனத்தவர்கள் அவனிடமிருந்து நெருப்பை பெற்றுச் சென்றார்கள். அந்த நெருப்பு இராப்பகல் எரியும்படி விறகிட்டு எரிக்கப்பட்டது. நெருப்பு அவிந்து போகுமாயின் மறுபடி மின்னலும் புயலும் உண்டாகும் காலத்தை பார்த்திருக்க வேண்டும். நெருப்பு இல்லாவிடில் குளிர் காயவும், சமைக்கவும் முடியாது. குகையிலுள்ள பெண்களுக்கும், வளர்ந்த பிள்ளைகளுக்கும் இப்பொழுது புதுக்கடமை ஒன்று உண்டாயிற்று. அக்கடமை விறகுகளை இட்டு நெருப்பை அணைந்து போகாதபடி பார்த்து கொள்வதாகும்.

நெருப்பைக் கண்டுபிடித்தான்

நெருப்பு எப்பொழுதாவது அணைந்து விடுமோ என்று ஏங்கி கொண்டிருந்தான். ஒருமுறை அவர்கள் வேட்டையாட சென்றபோது, இன்னொரு வேட்டையாடும் கூட்டத்தினர் அவர்களை சந்தித்தார்கள். இரு கூட்டதாரும் எதிர்த்து கடுமையாக சண்டை செய்தனர். அவர்களை எதிர்த்தவர்கள் இவர்களினும் பலராயிருந்தனர். அவர்கள் இவர்களைத் துரத்தி விட்டு இவர்கள் நெருப்பை பிடித்து கொண்டார்கள். அப்போது ஓடிச் சென்று பார்த்தபோது தங்கிய குகைகளில் நெருப்பு இல்லை. ஆகவே இவர்கள் குளிரால் வருந்திக் கொண்டிருந்தார்கள். உணவை சமைக்க முடியாமலும் துயரப்பட்டனர். இவனுக்கு புதல்வர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் சோம்பேறியும் பலங்குறைந்தவனுமாயிருந்தான். அவன் வேண்டும்போது நெருப்பை உண்டாக்கக் கண்டுபிடித்தான். அவன் தீத்தட்டிக்கல் ஆயுதத்தால் வேலை செய்வதில் கெட்டிக்காரன். அவன் முரடான கல்லாயுதத்தால் மரத்தை சுரண்டிக் கொண்டிருந்தான். அப்பொழுது மரம் சூடேறுவதை கண்டான். பின்பு ஒருநாள் இரண்டு மரத்துண்டுகளை எடுத்து நீண்ட நேரம் உரசினான். சடுதியில் புகை உண்டாயிற்று. பின்பு மரத்தின் துறையில் நெருப்பு தோன்றிற்று. அவன் உடனே பெருங்கூச்சலிட்டான். இதன் பின்பு அவர்கள் ஒரு போதும் தங்களுடன் நெருப்பைக் கொண்டு திரியவில்லை. நெருப்பை சுற்றிச் சிறு குடிசைகள் எழுந்தன. நெருப்பின் உதவியால் ஆயுதங்களை நான்றாக கூராக்கவும், வயிரப்படுத்தவும் அறிந்தனர். நெருப்பைக் கண்டுபிடித்த பின் குடும்ப உணர்ச்சியும் நெருங்கி வளர்ந்தது.

நெருப்பு மனிதனையும் விலங்குகளையும் பிரித்து வைத்தது. குளிர் மிகுந்த இரவு காலத்தில் சிம்பன்சி என்னும் மனித குரங்குகள் இவர்கள் குகைமுன் எரியும் நெருப்பைக் கண்டு வந்தன. தமது கைகளை நெருப்பில் காய்ச்சி குளிர் காய்ந்து மகிழ்ச்சியினால் சத்தமிட்டன. ஒரு மனிதக் குரங்குக்கும் நெருப்பின்மேல் விறகை இட்டு எரிக்கச் செய்தது. பின்னர் நெருப்பு அணைந்தவுடன் அவை மறுபடியும் குளிரால் நடுங்கின.

வாழத் தகுதியுள்ளது நிலைபெறுதல் தகுதியற்றது மறைந்து போதல் என்பதே அன்று முதல் இன்று வரையும் உள்ள இயற்கை விதி. இவ்விதியை இன்னொரு மயிர் அதிகமில்லாதவரும், உயரமுடைவருமாகிய ஒரு சாதியினர் வேட்டையாடி அழித்தார்கள். விரிவளர்ச்சி (Evolution) விதி தகுதியுள்ளதற்கு அல்லது வலியதற்கு இடங்கொடு என்பதே. இவர்கள் இவ்விதிக்கு மாறாக நிற்க முடியவில்லை.

பெண்கள்

விலங்குகள் போன்ற மக்களிடையே பெண்களின் நிலை எவ்வாறிருந்தது? பெண்கள் மிகவும் கவனிக்கப்படாதவர்களாகவும் அடிமை போன்றவர்களாகவம் இருந்தனர். பெண் புனிதமானவள், இரக்கமுள்ளவள், மனிதனின் இனிய பாதியாயுள்ளவள் என்னும் கருத்துகள் தோன்றவில்லை. 

அக்காலத்தில் மனிதன் அரை விலங்காகவே இருந்தான். பெண்கள் அடர்ந்த மயிருள்ளவர்களாகவும், அதிக விறைப்பு ஏறாதவர்களாகவும் சாந்தமான தோற்றமுடையவர்களாகவும், இருந்தனர். அவர்களில் பலர் வட்டமாக குந்தியிருப்பார்கள். அவர்களில் சிலர் கல்லாயுதங்களால் கிழங்குளைச் சுரண்டி சுத்தம் செய்வர். சிலர் விதைகளைக் கல்லின்மேல் வைத்துக் கல்லால் அடித்து உடைத்துக் கொண்டிருப்பர். சிலர் மான் முதலிய விலங்குகளின் தோல்களை பல்லினால் சப்பி மிருதுவாக்கிக் கொண்டிருப்பர். சிலர் தமது குழந்தைகளுக்கும் பன்றி, நாய்க் குட்டிகளுக்கும் பால் கொடுத்து கொண்டிருப்பர். நெருப்பைச் சுற்றியிருந்து அவர்கள் பலவகை கதைகளைப் பேசுவார்கள்.

இருபதாம் நூற்றாண்டாகிய இன்று நன்கு வளர்க்கப்படும் பெண்கள், பெண்ணினத்தினர் ஆண்களை விலங்கு நிலையினின்றும் எப்படி மேலே வரச்செய்தார்கள் என்பதை அறியமாட்டார்கள். சமீப காலத்திலேயே பெண்கள் ஆண்களை ஒத்த உரிமைகளைப் பெற்று அவர்களோடு சம வாழ்க்கை நடத்துகின்றனர். இன்று ஆண்களை போலவே பெண்களும் வேலை செய்து கூலி பெறுகிறார்கள். அவர்கள் தங்கள் உழைப்பைக் கொண்டே வாழ்கின்றனர். ஆண்களின் சம்பந்தமில்லாமலேயே பெண்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com