இன அரசியல்-5: சமகால மனித இனங்கள்

இன அரசியல்-5: சமகால மனித இனங்கள்

சமகால மனித இனங்கள்: காக்கேசியர், மங்கோலியர் மற்றும் நீக்ரோவினர்
 

உலகளாவிய நிலையில் மனித குலத்தவர் இன்று இனங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு இனத்தவரும் மரபணுசார்ந்த, உயிரியில் சார்ந்த பண்புகளால் மற்ற இனத்தவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர்.

இந்த இனப் பண்புகளில் சில மட்டும் புறத்தோற்றத்தில் காணப்படுபவையாக உள்ளன. மண்டையோட்டின் அளவு, முக அமைப்பு,  மூக்கின் தன்மை, கண் அளவு, தலை மயிரின் தன்மை, உள்ளங்கை – உள்ளங்கால் ஆகிய இரண்டின் தோற்கூற்றியல் கூறுகள், தலைச் சுழிகள், உடல் உயரம், உடல் நிறம் போன்றவை புறத் தோற்றக் கூறுகளாகும். இரத்தவகை, என்சைம், புரோட்டீன் போன்ற அகப் பண்புகளும் இனவேறுபாடுகளைக் காட்டும் கூறுகளாக உள்ளன. இவற்றில் அடிப்படையில் பெரும்பான்மையான அறிஞர்கள் இன்று மனித குலத்தைப் பின்வரும் மூன்று பெரும் இனங்களாக வகைப்படுத்துவார்கள்.
A. காக்கேசியர் 
B. மங்கோலியர் 
C. நீக்ரோவினர் 

மனித குலத்தின் இந்த மூன்று பெரும் இனங்களுக்குரிய பேராளர்கள் எங்கெல்லாம் புலம் பெயர்ந்து சென்றனர். இப்போது அவர்கள் எங்கெல்லாம் பரவிக் காணப்படுகின்றனர் என்பதைப் பற்றி நிறைய அறிய வேண்டும். இப்புரிதலை ஏற்படுத்திக் கொண்டாதல் தான் இந்திய மண்ணில் குடியேறிய இனங்கள் பற்றியும், திராவிடப் பகுதியில் பல்வேறு இனங்களின் சேர்மத்தால் ஏற்பட்ட இனச் சங்கமம் பற்றி பார்போம்.

காக்கேசியர் (Caucasoid)

காக்கேசிய மக்கள் வழக்கமாக மொழிசார்ந்த பிரதேசங்களைக் கொண்டு மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றனர்: ஆர்ய இனம் (இந்தோ-ஐரோப்பிய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்), செமித்திய இனம் (செமித்திய மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள்) மற்றும் ஹாமிட்டிக் இனம் (பெர்பர்-கஷிட்டிக்-எகிப்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள்) ஆகியவை ஆகும். 

காக்கேசிய இனத்தார் பின்வரும் பதினொரு கிளையினங்களாகப் பாகுபடுகின்றனர்.

1.    நடுநிலக்கடலினத்தவர் 
அ. பூர்வ நடுநிலக்கடலினத்தவர் 
ஆ. அட்லாண்டிக் பகுதி நடுநிலக்டலினத்தவர் 
இ. இந்திய – ஆப்கன் அல்லது ஈரானிய ஆப்கன் இனத்தவர் 
2.    நார்டிக் 
3.    ஆல்பைன் 
4.    கிழக்கு பால்டிக் 
5.    தைனாரிக் 
6.    ஆர்மீனியர் 
7.    கெல்டிக் 
8.    லாப் 
9.    தொல் காக்கேசியர் 
i.    இந்திய திராவிடர் (Indo-Dravidian)
ii.    தொல் ஆஸ்திரேலியர் (Proto--Australoid)
       அ. ஆஸ்திரேலிய முதுகுடியினர் 
       ஆ. முன்னை திராவிடர் / ஆஸ்திரேலியர் / வேடர் 
10. பாலினீசியர் 
11. அய்னு 

1. நடுநிலக் கடலினத்தவர் (Mediterranean)

வெள்ளைக்காரர்கள் எனப் பொது வழக்கில் கூறப்படும் இனத்தவர்களில் இக்கிளையினத்தவர் மிகவும் தொன்மையானவர்கள். ஆனால் இவர்கள் எப்போது தோன்றினார்கள் என்பது துல்லியமாகக் கூறமுடியாத நிலையே உள்ளது.  மனித குல வரலாற்றின் பல்வேறு கட்டங்களில் இவர்கள் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிச் சென்றனர். அதனால் இன்று போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ், இத்தால், கிரீஸ், துருக்கி ஆகிய நாடுகளிலும், காலனிகளாகச் சென்றதால் வடக்கு ஆப்பிரிக்காவிலும் காணப்படுகின்றனர். மேலும், அரேபியா, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளிலும் பரவிக் காணப்படுகின்றனர்.

அ. பூர்வ நடுநிலக்கடலினத்தவர் (Classical Mediterranean)

இவர்கள் நடுநிலக்கடல் பகுதி முழுவதும், குறிப்பாக போர்ச்சுகல், ஸ்பெயின், பிரான்ஸ் ஜெர்மனி, இத்தாலி, ஆகிய நாடுகளில் வாழ்பவர்கள், மேலும் ஐரோப்பாவின் கிழக்கு, நடு, வடமேற்குப் பகுதிகளில் சிதறலாகப் பரவிக் காணப்படுகின்றனர்.  எகிப்திலும் வடக்கு ஆப்பிரிக்காவிலும் கூட இவ்வினப் பண்புகள் கொண்டோர் உள்ளனர்.

ஆ. அட்வாண்டிக் பகுதி நடுநிலக்கடலினத்தவர் (Atlanto Mediterranean)

இவர்கள் வடக்கு ஆப்பிரிக்கா, பாலஸ்தீனம், ஈராக், கிழக்கு பால்கன் பகுதிகளில் பரவலாகவும், பிரிட்டிஷ் தீவுகள், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய இடங்களில் சிதறலாகவும் உள்ளனர்.

இ. இந்திய – ஆப்கன் அல்லது ஈரானிய – ஆப்கன் இனத்தவர்  (indo-Afghan or Irano-Afgan)

இவ்வினத்தார் பெரும்பான்மையாக ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பலுஸிஸ்தான், வடமேற்கு இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.

2. நார்டிக் (Nordic)

நார்டிக் இனத்தார் ஸ்காண்டிநேவியா, பாலடிக்பகுதி, வடக்கு பிரான்ஸ் ஆகிய இடங்களில் பரவலாகவும், நெதர்லாந்து, பெல்ஜியம், பிரிட்டிஸ் தீவுகள் ஆகிய இடங்களில் குறைவாகவும் ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளில் சிதறலாகவும் காணப்படுகின்றனர்.

3. ஆல்பைன் (Alpine)

ஆல்பைன் இனத்தார் நடு ஆசியாவில் தோன்றியவர்கள் எனச் சில மானிடவியலர்கள் கூறுவர். இவர்களை ஆசிய மங்கோலியர்களுடன் இணைத்துப் பேசுபவர்களும் உண்டு. ஆல்பைன் இனத்தார் நார்டிக், நடுநிலக்கடலினத்தார் ஆகியோரின் கலப்புக் கூறுகளையும் கொண்டிருக்கிறார்கள். ஆல்பைன் இனத்தவர்கள் நடு ஐரோப்பா முதல் கிழக்கு ஐரோப்பா வரை பரவிக் காணப்படுகின்றனர்.  குறிப்பாக, பிரான்ஸ் முதல் ஊரல் மலைத் தொடர்வரை இவர்கள் பரவியுள்ளனர். மேலும், மென்மார்க், பால்கன், நார்வே, வடக்கு இத்தாலி, சிற்றாசியாவின் மலைப் பதிகள் ஆகிய இடங்களில் வாழ்கின்றனர். கூடவே இவர்கள் ஐரோப்பா முழுவதிலும் சிதறலாகப் பரவிக் காணப்படுகின்றனர்.

4.    கிழக்கு பால்டிக்  (East baltic)

இவ்வினத்தாரிடமும் கலப்பினக் கூறுகள் உள்ளன. குறிப்பாக, நார்டிக், ஆல்பைன் ஆகிய இரண்டும் இனங்களின் கூறுகள் அதிகமாக உள்ளன. இவர்களுடைய இனத்தோற்றம் முழுமையாக அறியப்படாமலேயே உள்ளது. இவர்கள் வட கிழக்கு ஜெர்மனி, பால்டிக் நாடுகள், போலந்து, ரஷ்யா, பின்லாந்து ஆகிய பகுதிகளில் பரவி வாழ்கின்றனர்.

5.    தைனாரிக்  (Dinaric)

தைனாரிக் இனத்தவரிடம் நார்டிக், ஆர்மீனிய இனங்களின் கூறுகள் கலந்துள்ளன. இன்னும் சிலரிடம் ஆல்பைன், அடலாண்டிக் நடுநிலக்கடல் இனம், இந்திய – ஆப்கன் ஆகிய இனங்களின் கூறுகள் கலந்துள்ளன. இவர்கள் பெரும்பாலும் தைனாரிக் ஆல்பைன் பகுதி என்றழைக்கப்படும் யூகோஸ்லேவியா, அலபேனியா, ஆஸ்டிரியன் டைரால் ஆகிய பகுதி களில் வெகுவாகவும், நடு ஐரோப்பாவில் சிதறலாகவும் காணப்படுகின்றனர்.

6.    ஆர்மீனியர் (Armenoid)

இவர்களும் சில இனங்களின் கலப்பால் தோன்றிய ஒரு புதிய வகையினரே. ஆர்மீனியர்களிடம் பூர்வ நடுநிலக்கடலினத்தார்.  ஆல்பைன் நார்டிக், இந்திய-ஆப்கன் ஆகிய இனக் கூறுகள் கலந்துள்ளன.  அண்மைக்கால ஆண்வுகளின்படி இவர்கள் நடுநிலக்கடல் இனம், ஆல்பைன் இனம் ஆகிய இரண்டு இனங்களின் மிகுதியான கலப்பால் தோன்றியவர்கள் என அறிய முடிகிறது இவர்களின் பூர்வீகம் சிற்றாசியர்  இங்கிருந்தே அரேபியா, இந்தியா போன்ற நாடுகளுக்குப் பரவினர் என அறிஞர்கள் கருதுகின்றனர். ஆர்மீனரியர்கள் துருக்கி சிரியா, பாலஸ்தீனம் ஆகிய நாடுகளில் பரவலாக உள்ளனர். எனினும், ஈரான், ஈராக், பால்கன் நாடுகள், கிரீஸ், பல்கேரியா. ஆமெரிக்கா ஆகிய நாடுகளிலும் பரவிக் காணப்படுகின்றனர்.

7.    கெல்டிக் (keltic) 

இவர்கள் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றனர். இங்கிலாந்திலும் மேற்கு ஐரோப்பாவிலும் சிதறலாகப் பரவி வாழ்கின்றனர்.

8.    லாப் (Lapp) 

வடக்கு ஸ்காண்டிநேவியா, வடக்கு பின்லாந்து, ஸ்வீடன், நார்வே, வடகிழக்கு ரஷ்யா ஆகிய இடங்களில் வெகுவாக உள்ளனர். இவர்களிடம் ரஷ்யா, பின்லாந்தியா, ஸ்வீடன் நாட்டவர், நார்வே நாட்டவர் இனக்கூறுகள் கலந்துள்ளன. என்னும் இவர்களைத் தனி இனமாகக் கருதுவதற்குரிய சிறப்புக் கூறுகள் பல உள்ளன. மேலும், இவர்களிடம் மங்கோலிய இனக் கூறுகளும் கலந்துள்ளன. என்றாலும் காக்கேசிய இனக் கூறுகளே மிகுந்திருக்கின்றன. என்பதால் லாப்பியர் தனி இனமாகவே அடையாளம் பெறுகின்றனர்.

9.    தொல் காக்கேசியர்  (Archaic Caucasoid)

தமிழர் உள்ளிட்ட திராவிடர்கள் இவ்வினத்திற்குரியவர்கள். இந்த இனத்தில் பின்வரும் நான்கு கிளையினங்கள் உள்ளன.

1.ஆஸ்திரேலிய முதுகுடினர் (Australian aboriges)
இவர்களிடம் மிக அரிதான நீக்ரோ இனச் கூறுகள் சிலவும், பசிபிக் பெருங்கடலினக் கூறுகள் சிலவும் கலந்துள்ளன. ஆஸ்திரேலியாவின் தொல்குடிகள் இவர்களே.  இவர்கள் தொல் திராவிடர்களோடும் ஒத்துள்ளனர்.

2.முன்னைத் திராவிடர்கள் (Pre-Dravidian or Australoid or Veddoid)
தென்னிந்தியாவில் வாழும் தொல்குடிகளான காடர், இருளர், குறும்பர், கோண்டு, கோந்த், பீல் ஓராவ்ன், செஞ்சு போன்றவர்கள் இவ்வினத்தவர்களாவர்.

3.வேடர்
இவர்களே இலங்கையின் தொல்குடியினர். கிழக்கு மாகாணத்தில் வாழ்கின்றனர்.  12 ஆம் நூற்றாண்டு வரை மலைக்குகைகளில் வாழ்ந்து வந்தனர்.  இவர்கள் இப்போது சிங்களம், தமிழ் இரண்டும் கலந்து கிளை மொழியைப் பேசி வருகின்றனர்.  (ஆனால் திராவிட உறவுமுறையைக் கொண்டுள்ளனர்.

4.சகாய அல்லது சனாய் 
மலாய் முந்நீரகத்தில் வாழ்கின்றனர்.

10.பாலினீசியர் (Polynesian)

இவர்கள் பல இனக் கூறுகளின் கலப்பினைக் கொண்ட இனத்தவராக உள்ளனர். வெள்ளையர்களாகத் தோன்றினாலும் தொடக்கால நடுநிலக் கடலினத்தவர், ஆசிய மங்கோலியர், பசிபிக் பகுதி நீக்ரோவினர் ஆகிய மூன்று இனத்தவர்களுடன் கலப்புற்று இவர்கள் தனி இனமாக மாறிவிட்டனர். இவ்வினத்தார் பிசிபிக் பெங்கடலில் உள்ள பாலினிசியத் தீவுகளின் குறிப்பாக, நியூசிலாந்து பிரண்ட்லி தீவுகள், சமோவா, மர்குவசாஸ், ஹவாய் போன்ற தீவுகளில் பரவிக் காணப்படுகின்றனர்.

11.அய்னு (Ainu)

இவர்களே ஜப்பானில் தொல்குடியினர். அய்னுக்கள் அடிப்படையில் காக்கேசிய இனத்தைச் சேர்ந்தவர்களாயினும் இவர்களிடம் மங்கோலிய இனக் கூறுகள் வெகுவாகக் கலந்து விட்டன.  ஆஸ்திரேலிய முதுகுடிகளின் சில பண்புகளும் இவர்களிடம் காணப்படுகின்றன. இவர்கள் வடக்கு ஜப்பான், தெற்கு சகஉறாலின், யெசோ ஆகிய பகுதிகளில் மிகுதியாகக் காணப்படுகின்றனர்.

மங்கோலியர்
 

மங்கோலிய இனத்தார் பின்வரும் பிரிவினர்களாகப் பாகுபடுகின்றனர்.

1. பூர்வ மங்கோலியர் அல்லது மைய மங்கோலியர் 
2. துருவப் பகுதியினர் அல்லது எஸ்கிமோவினர்
3. இந்திய மலாய் மங்கோலியர் 
அ. மலாய் வகை 
ஆ. இந்தோனேஷிய வகை அல்லது நெசியாத் 
4. அமெரிக்க இந்தியர் 
அ. தொல் அமெரிக்க இந்தியர் 
ஆ. வடக்கு அமெரிக்க இந்தியர் 
இ. புதிய அமெரிக்க இந்தியர் 
ஈ. தெகுக்லீஷ் 
உ. வடமேற்குக் கரை அமெரிக்க இந்தியர் 

1. பூர்வ மங்கோலியர்/மைய மங்கோலியர்  (classical mogoloid or Central Mogoloid)

இவ்வகை மங்கோலியர்கள் சைபீரியா, ஆமூர் ஆற்றுப்பகுதி ஆகிய இரண்டிடங்களில் அதிகமாகவும், வடக்குச் சீனம், மங்கோலியா, திபேத் ஆகிய பகுதிகளில் சிதரலாகவும் வாழ்கின்றனர். திபெத்தியர்கள் மற்றும் வட சீனர்களும் இவ்வினத்தவர்கள். புரியத்  கொர்யத், கோல்டி  கில்யக்  போன்ற சமூகத்தார் இவ்வினத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

2. துருவப் பகுதினர் அல்லது எஸ்கிமோவினர் (Arctic or Eskimoid)

வடக்கு ஆசியா, வட அமெரிக்காவின் துருவக் கடற்கரைப் பகுதி, கிரீன்லாந்து, லேப்ரடார்,  மேற்கு அலாஸ்கா ஆகிய பகுதிகளில் இவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  சுக்சிஸ், கம்சடேல்ஸ், யாக்குட், கடோயேட் போன்ற சமூகத்தார் இவ்வினத்தில் முக்கியமானவர்கள் எனலாம்.

3.  இந்திய மலாய் மங்கோலயர் (Indo-Malayan Mongoloid)

இவ்வினத்தார் இந்தோனேஷிய வகை எனவும், மலாய் வகை எனவும் இரு பிரிவினராகப் பாகுபடுகின்றனர்.  முதல் வகையினர் தென் சீனம், இந்திய-சீனம், பர்மா, தாய்லாந்து ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றனர். இரண்டாம் வகையினர் மேற்கூறிய பகுதிகளில் காணப்படுவதுடன் டச்சு கிழக்கிந்தியப் பகுதி, பிலிப்பைன்ஸ், ஜப்பான் ஆகிய நாடுகளிலும் வாழ்கின்றனர். பெரும்பாலான ஜப்பானியர்கள் மலாய் வகை மங்கோலியர்களாக உள்ளனர். இந்தோனேஷிய வகையினரைக் காட்டிலும் மலாய் வகையினர் மங்கோலிய இனக்கூறுகளை அதஜகம் கொண்டுள்ளனர்.

4.  அமெரிக்க இந்தியர்  (American or American Indian)

இவர்கள் செவ்விந்தியர்கள் என்று கூறப்படுவார்கள் இவர்களே அமெரிக்காவின் தொல்குடிகள்.  இவர்கள் அனைவரும் இனத்தால் மங்கோலியர்கள். அந்நாட்டின் வட பகுதியிலும் மையப்பகுதியிலும் தென் பகுதியிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.  கொலம்பசுக்குப் பிறகு இங்கு மனிதக் குடியேற்றம் ஏற்பட்ட பின்னர் அத்தொல்குடிகளின் பூர்வ நிலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பறிபோனது. ஆமெரிக்க இந்தியர்களில் பின்வரும் ஐந்து பிரிவினர் உள்ளனர்.

அ. தொல் அமெரிக்க இந்தியர் (Palaeo American)

இவர்கள் தென் அமெரிக்காவின் தொல்குடியாவர். பிரேசிலின் லாகோ சாந்தா வகையினர் ஆவர். இப்போது கிழக்கு அமெரிக்காவிலும் கனடாவிலும் வெகுவாகக் காணப்படுகின்றனர். அமெரிக்கா முழுவதிலும் சிதறலாக உள்ளனர்.

ஆ. வடக்கு அமெரிக்க இந்தியர் (north Amerind)

ஆமெரிக்காவின் வட பகுதியின் தொல்குடிகளும் வடக்கு, கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்த உட்வேண்ட்ஸ் மக்களும் இவ்வகையில் அடங்குவர்.

இ. புதிய அமெரிக்க இந்தியர் (New Amerind)

இவ்வகையினர் அமெரிக்காவின் தென்பகுதி, நடுப்பகுதி, வடப்பகுதி ஆகிய இடங்களில் உள்ள மேட்டுநிலங்களில் பரவலாகக் காணப்படுகின்றனர்.

ஈ. தெகுக்லீஷ் (Tehucleche)

இவர்கள் பட்டகோனியா பகுதியில், அதிலும் குறிப்பாக தியாரா டெல் புயூகோவில் ஒன்ஸ் பகுதியில் வாழ்கின்றனர்.

உ. வட மேற்குக் கரை அமெரிக்க இந்தியர் (North-West Coast Amerind)

இவ்வகை மங்கோலியர்கள் தென்கிழக்காசிய மக்களைப் போன்ற சாயல் கொண்டவர்கள்.  இவர்கள் வட அமெரிக்காவின் வட மேற்குக் கடற்கரைப் பகுதியில் பெருமளவு வாழ்கின்றனர். இவர்களில் வடக்கத்தியார், தெற்கத்தியார் என இரு பிரிவுகளுண்டு.  முதலாம் பிரிவினர் குழிந்த அல்லது நேரான மூக்கும் அகன்ற முகத்தையும் கொண்டுள்ளனர். இரண்டாம் பிரிவினர் குவிந்த உணரமான மூக்கையும் நீண்ட முகத்தையும் கொண்டுள்ளனர்.

நீக்ரோ
 

நீக்ரோ இனத்தார் பின்வரும் பிரிவினர்களாகப் பாகுபடுகின்றனர்.

1.ஆப்பிரிக்க நீக்ரோ 

அ. தூய நீக்ரோ 
ஆ. நைல் பகுதி நீக்ரோ 
இ. பண்டு 
ஈ. புஷ்மன் - ஹாட்டண்டாட் 
உ. நீக்ரில்லோ (ஆப்பரிக்கக் குள்ளர் ) 

2. பெருங்கடல் நீக்ரோ 

அ. நீக்ரிட்டோ 
1. ஆசியக் குள்ளர் 
2. பசிபிக் குள்ளர் 
ஆ. பப்புவர், மெலனீஷியர் 

1.  ஆப்பிரிக்க நீக்ரோவினர் (Arican Negro)
நீக்ரோ இனத்தின் முக்கிய பிரிவாக விளங்கும் இவ்வினத்தில் பின்வரும் ஐந்து கிளையினத்தவர்கள் உள்ளனர்.

அ. தூய நீக்ரோ (True Negro)
இவர்கள் மேற்கு ஆப்பிரிக்க, கினி கடற்கரை ஆகிய பகுதிகளில் வாழ்பவர்கள்.
 ஆ. நைலி பகுதி நிக்ரோ (Nilotic Negro)
இவர்கள் நைல் ஆற்றில் மேல் பகுதியிலும் கிழக்கு சூடானிலும் வாழ்பவர்கள்.
இ. பண்டு(Bantu)
இவர்கள் பண்டு மொழி பேசுபவர்கள். நடு ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றனர்.
ஈ. புஷ்மன் - ஹாட்டண்டாட் (Bushman-Hottentot)
புஷ்மன் பிரிவினரும் ஹாட்டண்டாட் பிரிவினரும் இனத்தவர்கள் (மிகச் சில கூறுகளே மாறுபடுகின்றன). ஆனால் பண்பாட்டால் மாறுபட்டவர்கள். புஷ்மன்கள் குவாய் அல்லது கான் எனவும், ஹாட்டண்டாட் கோய் கோய் எனவும் அழைக்கப்படுகின்றனர். புஷ்மன்கள் இப்போது கலகாரிகப் பாலைவனத்தோடு தங்கள் வரிஜடத்தைச் சுருக்கிக் கொண்டனர். முன்னாளில் தெற்கு ஆப்பிரிக்கா முழுவதும் பரவிக் காணப்பட்டனர்.  ஹாட்டண்டாட் மக்கள் தென் மேற்கு ஆப்பிரிக்காவில் பெரிதும் வாழ்கின்றனர்.
உ. நீக்ரில்லோ (ஆப்பிரிக்கக் குள்ளர்) (Negrillo-African Pygmy)
அக்கா, பட்வா, பம்பூட்டி ஆகிய சமூகத்தார் இப்பிரிவில் அடங்குவர். இவர்கள் காங்கோ பகுதியில் நடுநிலக் கோட்டுப் பகுதியிலுள்ள காடுகளில வாழ்கின்றனர்.
 

2. பெருங்கடல் பகுதி நீக்ரோ (Oceanic Negro) 

இவர்களில் நீக்ரிட்டோ (Negrito), பப்புவர்-மெலனீஷியர் (Papuans and Melanesians) ஆகிய இரண்டு பிரிவினர்கள் உள்ளனர். நீக்ரிட்டோவினர் பிரிவில் மேலும் இரண்டு பிரிவினர்கள் உள்ளனர். ஆசியக் குள்ளர்கள் (Asianic Pygmy), பசிபிக் குள்ளர்கள் (Oceanic Pygmy). ஆசியக் குள்ளர்கள் எனப்படுவோர் அந்தமான தீவுகளில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்களில் ஒங்கி போன்ற பழங்குடியினர். மிகக் குறைந்த உயரமுடையவர்கள். பசிபிக் குள்ளர்கள் நியூகினி, அதையொட்டிய தீவுப் பகுதிகளில் பெரிதும் காணப்படுபவர்கள். பப்புவர்கள் நியூகினியிலும் மெலனீஷியாவின் பல தீவுகளிலும் வாழ்பவர்கள்.

3.  அமெரிக்க நீக்ரோ (American Negro)

இவ்வகையினர் பலரின் கவனத்தை ஈர்ப்பவர்கள். மேற்கு ஆப்பிரிக்க நாடாகிய நைஜீரியாவிலிருந்து பெருமளவு நீக்ரோக்கள் அடிமைகளாக அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டனர். ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டு செல்லப்பட்ட நீக்ரோவினர் 19ஆம் நூற்றாண்டில் அடிமைமுறை ஒழிக்கப்பட்ட பின்னர் அங்கேயே வாழத் தலைப் பட்டதால் அமெரிக்க இனச் சேர்மத்தில் இவர்கள் தனி தனித்தவராகவே உள்ளனர். அமெரிக்க நீக்ரோ என இவர்கள் தனிமைப்பட்டாலும் இவர்கள் அங்குள்ள காக்கேசிய இனத்தாருடன் சில நூற்றாண்டுகள் கலப்புற்றதால் இன்று அங்கு வடஅமெரிக்க காக்கேசியர் என்ற பிரிவினராகவும் தனி இன அடையாளம் பெற்று வாழ்கின்றனர்.

  • References:
  • Outline of History by H. G. Wells
  • On the Geographical Distribution of the Chief Modifications of Mankind by the scientist Thomas Henry Huxley
  • The Races Of Europe by Stevens Coon Carleton

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com