இன அரசியல்-8: ஆதிமனித வாழ்வியல் முறை

இன அரசியல்-8: ஆதிமனித வாழ்வியல் முறை

தொல்பழங்காலத்தில் வாழ்ந்த ஆதிமனிதனின் வாழ்வியல் பற்றி அறிந்து கொள்ளக் கல் ஆயுதங்கள், கருவிகளைத் தவிர தொல்லியல் அகழ்வாய்வுகளின் வழி கிடைக்கப்பெற்ற உண்மைகளும் துணைபுரிகின்றன.

ஆதிமனிதன் வாழ்க்கையை முழுமையாக அறிந்து கொள்ளக்  கள ஆய்வும், தொல்லியல் அகழாய்வும் துணைபுரிகின்றன. பழைய கற்காலத்தில் குளிர்ந்த நிலப்பகுதியில் வாழ்ந்தவர்கள் வேட்டையாடியும், மீன்பிடித்தும் தம் உணவைத் தேடிக் கொண்டனர். சூழ்நிலை ஏதுவாக இருந்தால் பழம் பறித்தல், கிழங்குகளைத் தோண்டிச் சேகரித்தல் போன்ற தொழில்களைச் செய்தனர். வெப்பப் பிரதேசத்தில் பழம் பறித்தல் கிழங்கு, தானியம், கொட்டை சேகரித்தல் முதலியன முக்கிய தொழிலாக இருந்தன. இன்றைக்கும் கலஹாரி பாலைவனப் புஷ்மன் இனத்தினர் இப்பழக்கங்களையே கொண்டுள்ளனர்.

பழைய கற்காலத்தில் இடைப்பகுதியிலும், இறுதிப்பகுதியிலும் வாழ்ந்த மக்கள் பொதுத் தன்மைகளைக் கொண்டிருந்தாலும் அவர்கள் வேறுபட்ட வாழ்க்கைச் சூழல்களைப் பெற்றிருந்தனர் என்று தெரிகிறது. ஆதிமனிதன் என்றவுடன் பெரும்பாலோர்க்கு குகைகள் தான் மனதில் தோன்றும் குளிர்ந்த பிரதேசத்தில் உள்ள குகைகள் மனித வாழ்விற்கு ஏற்றவனவாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை. ஏனெனில் தோற்பார்வையால் போர்த்திக்கொண்டால் மட்டுமே இவ்விடங்களில் மனிதர்களால் வாழ முடியும்.

வெப்பப் பிரதேசங்களில் குகைகள் முக்கிய வாழ்விடமாக இருந்தன. ஆகவே தான் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் கற்கால மனிதனின் குகைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. மழையிலிருந்து பாதுகாக்க இலையினால் பின்னப்பட்ட பாய்கள் கூரைகளாய் உபயோகிக்கப்பட்டன. தொல் பொருள் அகழ்வாராய்ச்சியின் போது சில இடங்களில் வட்டமாக அல்லது செவ்வக வடிவில் கற்கள் அமைந்திருப்பது காணப்பட்டது. அவற்றைக் குடியிருப்புகளின் அடித்தளம் என்று கருதலாம்.  இத்தகைய வாழ்விடங்களிலோ அல்லது அதற்கு அருகிலோ அடுப்புகள் உபயோகித்தமைக்கான அடையாளமும் காணப்படுகின்றன.

கற்கால மனிதன் ஒரு நிலையான வாழ்விடத்தில் சமூதாய வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும் வேட்டையாடும் போதும், உணவுகளைச் சேகரிக்க முயலும் போதும் சிறு சிறு குழுக்களாய்ப் பிரிந்து வாழ்ந்தான். கலஹாரி புஷ்மன் இனத்தவர் இன்று வரை இவ்வாறு தான் வாழ்ந்து வருகின்றனர். மனிதனின் உடைப் பழக்கங்கள் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு அமைந்திருந்தன.  வெப்பப் பிரதேசத்தில் தோலினால் ஆன சிறிய ஆடையையே அணிந்தான். குளர்ப் பிரதேசத்தில் உறையவைக்கும் குளிரில் இன்றைய எஸ்கிமோக்கள் போலவே உடைகளை அணிந்திருந்தான்.

ஆயுதங்கள், கருவிகள்
 

தென்மேற்கு பிரான்சில் Gourdon-Polignanஇல் இருந்து 12,000 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட எலும்பு ஊசிகளின் தொகுப்பு. (பிரான்ஸ், துலூஸ் அருங்காட்சியகம்) எலும்பினால் ஆன ஊசி சொலுட்ரியன் காலத்தில் தான் தோன்றியது. முந்திய காலத்தில் கல்லினால் ஆன கூரிய முனை கொண்ட நீண்ட கல் ஆயுதத்தையே தோலில் துளையிட உபயோகப்படுத்தினர்.  தாவரங்களிலிருந்து பிரித்த சணல் போன்ற கயிறுகளையும், விலங்குகளின் நரம்புகளையும் நூலாகப் பயன்படுத்தினர். ஆர்க்டிக் பகுதிமக்கள் இன்றும் மானின் நரம்பைத் தைக்கும் நூலாக உபயோகப்படுத்துகின்றனர். இக்காலத்தில் தோலினாலும், மரத்தினாலும் ஆன காலனிகள் உபயோகத்தில் இருந்தன. கற்கால மனிதனின் துளைக் கருவிகள் இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் இனத்திற்கு இனம் வேறுபட்டுள்ளன. காலம் மாறமாற இவை படிப்படியாக வளர்ச்சி அடைந்துள்ளன. ஒரே இனத்தவர் கூட வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு விதமான கருவிகளைப் பயன்படுத்தினர்.

கடைக்கற்காலத்துக் கல் ஆயுதங்கள் உருவத்தில் சிறியனவாயும் அதிகமான முனையுடன் சுரண்டுவதற்கு வசதியாகவும் அமைந்திருந்தன. இவர்கள் துளையிடும் கருவிகள் மற்றும் எலும்பினால் ஆன துளையீடுகள், ஊசிகள் போன்றவற்றைச் செய்து பயன்படுத்தினர். இந்தக்கருவிகள் அனைத்தும் அன்றாட வேலைகள் செய்வதற்கும் உரியனவாகவே இருந்தன. இம்மக்கள் தம்முன் சண்டைக்கு ஆயுதங்களைப் பயன்படுத்தியது மிகக் குறைவே ஆகும்.

பழைய கற்காலத்தின் இடைப்பகுதியில் கல்லினால் செய்யப்பட்ட கூர்மையான வேல் முனைகள் மரத்தினால் ஆன ஈட்டிகள் எலும்பினால் ஆன துளைப்பான்கள், கதைகள் போன்றவை பயன்பட்டன. பல வகையான கூர் ஈட்டிமுனைகள், எறிகற்கள், கூர்மையாகச் செய்யப்பட்டு எலும்பினூடோ அல்லது நீண்ட மரக்கொம்புகளின் முனையிலோ கட்டப்பட்ட ஈட்டியைப்போல் உபயோகமாயின். மனிதன் அருகில் நெருங்க முடியாத கொடிய விலங்குகளையும் இந்த ஈட்டிகள் மூலம் வீழ்த்தித் தனது இரையாக்கிக் கொண்டான். சொலுட்ரியன் காலத்தில் ஏற்பட்ட இந்த மாற்றம் நாளடைவில் மகதலேனியன் காலத்தில் மேலும் முன்னேற்றம் அடைந்தது. மரம் மற்றும் எலும்பினால் ஆன கூரிய ஆயுதங்களுடன் மீன் பிடிப்பதற்கான தூண்டில்களும் உருவாயின.

உணவு மற்றும் வேட்டையாடுதல்

மனிதன் தோன்றிய போதே வேட்டையாடுதலும் தோன்றிவிட்டது. தான் வேட்டையாடும் விலங்களுக்கு ஏற்ப பலவிதக் கருவிகளையும் முறைகளையும் தானே உருவாக்கி வேட்டையாடினான். இக்கருவிகள் மூலம் அவன் பலத்தையும், வேகத்தையும் மட்டுமின்ற அவனது அறிவுக் கூர்மையையும் நாம் அறிகிறோம். முதலில் எல்லா மிருங்களையும் கல்லாலும் தடியாலும் நெருங்கி வேட்டையாடியவன் அதன் அபாயம் தெரிந்து நீண்ட கூரிய கல் ஈட்டிகளைக் கொண்டு அருகில் நெருங்காமல் பாதுகாப்பாக வேட்டையாடினான்.

ஒடும் மிருகங்களைக் குறிபார்த்துக் கூரிய ஈட்டி எறிந்து வேட்டையாடியவன், பின்னர் மலையுச்சியிலிருந்து நெருப்பு அல்லது ஒலி கொண்டு மாடு, மான், ஆடு போன்ற மிருகங்களை விரட்டிக் கீழே விழச் செய்து உணவாக உட்கொண்டான். யானை, காண்டாமிருகம் போன்ற பெரிய தாவர உண்ணிகளைப் பெரிய பள்ளம் தோண்டி இலை, தழை, செடி, கொடி, மூங்கில், புல் கொண்டு மூடிப்பள்ளத்தில் விழச் செய்து வேட்டையாடினான். மாமிச உண்ணிகள் போன்ற கொடிய மிருகங்களை அவற்றின் இரை கொண்டே வலை விரித்துக் கல்லின் உதவியால் பிடிக்கும் வழக்கத்தையும் கற்றுக் கொண்டு வேட்டையில் சிறந்து விளங்கினான். வேட்டையாடுவதில் பல்வேறு யுத்திகளைக் கையாண்டு அறிவாலும், ஆற்றலாலும் புலி போன்ற கொடிய மிருங்களையும் பிடித்து தனக்கு அடிமையாக்கினான். மனிதன் நீண்ட காலம் வரை மீன்பிடிப்பதில் முன்னேற்றம் அடைய வில்லை.

ஒரு சில விலங்கு. பறவையைப் பார்த்து மீன்பிடிக்க முனைந்தவன். கற்காலத்தின் பிற்பகுதியில் தூண்டில் போட்டு மீன் பிடிக்கவும் கற்றுக் கொண்டவன் குளிர்ந்த பிரதேசத்தில் உறைபனியின் கீழ்க்கிடக்கும் மிகப்பெரிய மீன்களையும் சீல், வால்ரஸ் போன்றவைகளையும் வேட்டையாடினான். இவன் சிறிய கற்கள் உதவியாலே, தந்தம், கொம்பு ஆகியவற்றைத் தூண்டில் போல் செய்து உபயோகித்தான். மத்தலேனியன் காலத்தில் மீன் ஒரு முக்கிய உணவாகவும் மீன்படிப்பதும் ஒரு முக்கிய தொழிலாகவும் ஆனது. இந்தியாவிலும், ஆசியாவிலும் பிற பகுதிகளிலும் ஆப்பிரிக்காவில் குறிப்பாக நைல் நதிக்கரைப் பகுதிகளிலும் மீன் பிடிக்கும் நுண்கற்காலச் சமூகத்தினர் வாழ்ந்தனர். மீன்பிடிப்பதற்கும் வலைகள் கற்காலத்தின் பிற்பகுதியில் உபயோகத்திற்கு வந்தன. இவர்கள் மீன்களை உலரவைத்துக் கருவாடாக்கிப் பயன்படுத்தவும் அறிந்திருந்தனர்.

தாவர உணவுகளில் பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், தண்டுகள், பூக்கள், கீரைவகைகள் ஆகியவை அடங்கும். இவைகளைச் சேகரிக்கும் பொறுப்பு பெண்களிடமும் சிறியவர்களிடமும் கொடுக்கப்பட்டது.  தாவர உணவு வகைகள் இடத்திற்கு இடம் மாறி  இருந்தன. சீனாவில் வாழ்ந்த பீகிங் மனிதன் நெருப்பைப் பயன்படுத்தியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. ஐரோப்பாவில் மௌஸ்டீரியன் காலத்தில் நெருப்புப் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது. ஆனாலும் கற்காலத்தின் கடைசியில் தான் ஆதிமனிதன் நெருப்பைத் தானே உண்டாக்கினான். கற்களை உரசியும் மரத்துளைகளில் மரத்தை உரசியும், இரும்புக்கனிமத்தின் மேல் கல்லை இடித்தும் அவன் நெருப்பை உண்டாக்கினான்.  அவன் கல் அகல்களை தாவரக் கயிறுகளைத் திரியாகவும் உபயோகித்தான்.  இவ்வாறு ஆதிமனிதன் தன் வாழ்க்கையில் ஒளி உண்டாக்கிக் கொண்டது அவனது நாகரிகத்தின் சிறந்த கூறு என்றும் அறிவின் சிறந்த சாதனை என்றும் கூறவேண்டும்.

ஆதிச் சமூக பிறப்பு இறப்பு

தொல்லியல் வல்லுநர் போர்டஸ் - பழைய கற்கால மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு உதவியாக ஒரு ஆதாரமும் இல்லை. சுமார் நூறு பேர் கொண்ட குழுவே ஒரு பெரிய சமுதாயமாக இருந்திருக்ககூடும். கற்கால மனிதனின் சராசரி ஆயுள் ஐம்பதைக் கூடத் தாண்டியிருக்க வாய்ப்பில்லை. குழந்தை இறப்பு மிக அதிக அளவில் இருந்திருக்க வேண்டும் என்று கூறுகிறார்.

முதன் முதலாகப் பிணங்களைப் புதைக்கும் முறை மௌஸ்டீரின் காலத்தில் ஏற்பட்டது. புதைக்கும் போது மிருக எலும்புகளுடன் புதைக்கும் வழக்கமும் பூக்கள் மீது புதைக்கும் வழக்கமும் அவன் உபயோகித்த கற்கருவிகள். ஆயுதங்கள் ஆபரணங்களோடு புதைக்கும் வழக்கமும் நாளடைவில் ஏற்பட்டன. ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் புதிய கற்காலத்தின் போது தான் இறந்தவர்களைப் புதைக்கும் பழக்கம் பின்பற்றப்பட்டது. இப்பழக்கமே பின்னாளில் பெருங் கற்கால ஈமச்சின்னங்கள் உருவாக வழிவகுத்தன. குழந்தைகளைப் புதைக்கும் முறை சிறப்பாகக் காணப்படுவதால் குழந்தைப் பிணத்திற்கு இக்காலத்தில் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர் எனலாம். பெண்களைப் புதைக்கும் போதும் ஆண்களைப் புதைப்பது போலவே புதைத்தனர். புதைக்கும் முறையில் ஆண், பெண் என்ற பேதம் இல்லை எனலாம்.  புதிய கற்காலத்தில் வாழ்விடங்களிலேயே பிணங்களைப் புதைத்தவர்கள் பெருங்கற்காலத்தில் பிணங்களைப் புதைக்கத் தனி இடம் ஒதுக்கி அங்குப் புதைத்தனர்.

கலைகள், ஆபரணங்கள்

கற்கால மனிதன் கலைத்திறனை அவன் படைத்த கல் ஆயுதங்கள், கொம்பு, எலும்பு, தந்தக் கருவிகள், சுடுமண் பொம்மைகள், கல் பொம்மைகள், பாறை ஒவியங்கள், பாறைச் செதுக்கல்கள், குகை ஒவியங்கள் மூலம் அறியலாம். ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பழைய கற்காலத்தில் இடைப்பகுதியிலும் கடைசிப் பகுதியிலும், கலை ஆர்வத்துடன் கல் ஆயுதங்களையும், இதர கருவிகளையும், குகை ஒவியங்களையும் பாறைச் செதுக்கல்களையும், கல் மற்றும் மண் பொம்மைகள் ஆபரணங்களையும் உருவாக்கினான். இதனால் சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கலைஞன் உருவாகிவிட்டான் எனலாம். எல்லா இடங்களிலும் கலைத்திறன் ஒரே மாதியாக வளர்ச்சி பெறவில்லை.  கலை ஆர்வம் மிகுந்த க்தவேனியன் காலத்து மனிதன் உருவாக்கிய தொல்பொருட்கள் ஐரோப்பாவில் பல முக்கிய பொருட்காட்சிகளிலும், அகழ்வைப்பு சங்கங்களிலும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஆப்பிரிக்காவில் காணப்படும் ஏராளமான பாறைச் செதுக்கல்களும், ஒவியங்களும், கற்கால மனிதனின் கலைத்திறனைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. இம்மாதிரியான ஒவியங்கள் வரையும் முறை இன்றும் ஆதிவாசிப் பழங்குடியினரிடம் காணப்படுகின்றன.

ஐரோப்பாவில் கி.மு. 30,000 ஆண்டுகளுக்கு முன்னும் அதற்குப் பிறகும் வரையப்பட்ட குகை ஒவியங்கள் வியப்பூட்டுவன. இவை காணப்படும் லாஸ்காஸ். ஆல்டாமிரா, போன்ற குகைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒவியங்கள் அதிசயத்தக்க முறையில் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. மிருகங்களை வெவ்வேறு ரூபத்தில் வரைந்திருக்கும் முறையில் கலைத்திறன் பிரதிபலிக்கிறது. இங்குக் காணப்படும் ஒடும் மிருகங்கள். ஆக்ரோஷமாகத் தாவும் மிருகங்கள் அவற்றை வீரமாக வேட்டையாடும் மனிதர்கள், ஒடி ஒளியும் மனிதர்கள் எனப் பல ஒவியங்கள் கலைப் பொக்கிஷமாகப் பாதுகாக்கப்படுகின்றன. நாம் நம்ப முடியாத படி ஒரு குகை ஒவியம் நீருக்கடியில் 30 மீட்டர் நீளமுள்ள குகையில் வரையப்பட்டுள்ளது. எனவே தான் இக்குகை ஒவியங்களின் காலம் அவ்வளவு பழைமையானது என்று நீண்ட காலம் வரை உலகம் ஏற்றுக் கொள்ள மறுத்தது.  ஆனால் தற்சமயம் விஞ்ஞான ரீதியான மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் காலக் கணிப்புகள் அவை மிகப்பழமையான ஒவியங்கள் தான் (கி.மு. 30,000 – 10,000) என்று உறுதி செய்கின்றன. இவ்வகை ஒவியங்கள் ஆப்பிரிக்காவிலும், இந்தியாவிலும் பல இடங்களில் காணப்படுகின்றன.

குகை ஒவியங்கள் கற்கால மனிதனின் கலைத்திறனை மட்டும் உணர்த்தாமல் அவன் வாழ்க்கையைப் பற்றியும் அவன் மேற்கொண்ட தொழில்கள் பற்றியும் வேட்டையாடிய மிருகங்கள் பற்றியும் தெளிவாக அறிய உதவுகின்றன.  மேலும் மந்திர தந்திர சக்திகளில் அவன் கொண்டுள்ள நம்பிக்கைகளையும் உணர்த்துகின்றன. இந்த ஓவியங்களில் மிருகங்களை வேட்டையாடும் சித்திரங்களே அவனது நம்பிக்கையை நமக்குப் பறை சாற்றுகின்றன.  இவன் தன் உடம்பிலேயே உருவம் வரைந்து கொள்ளும் முறையையும் அறிந்திருந்தான். இப்பழக்கம் இன்றும் பல பழங்குடியினரிடமும் காணப்படுகிறது. பச்சை குத்திக்கொள்ளும் வழக்கமும் இதைப் போலவே உருவாகியிருக்க முடியும். பிற்காலத்தில் வரையப்பட்ட ஒவியங்களில் சில குறியீடுகள் சித்திர எழுத்தாகிப் பின்னாளில் எழுத்தாக மாறியிருக்க வேண்டும். கற்கால மனிதன் பேசிய பேச்சு, பாடிய பாட்டுகள், சொன்ன சொற்கள், இன்று கிடைக்கவில்லை. ஆனால் அதற்கு ஈடுகட்டும் வகையில் இக்கலைப் பொக்கிஷங்கள் நமக்குப் பல உண்மைகளை உணர்த்துகின்றன.

கடவுள் வழிபாடு

கடவுள் வழிபாடு பற்றிய நேரான ஆதாரம் எதுவும் இல்லை. பெண் தெய்வம் அல்லது தாய்த் தெய்வம் போன்ற சுடுமன், கல்பொம்மைகள், கற்கால மனிதனின் வழிபாட்டு எண்ணத்தையும் சமயத்தையும் வெள்ப்படுத்துகின்றன. இறந்தவர்களைப் புதைக்கும் முறையில் இறப்பிற்குப் பிறகு ஒரு வாழ்க்கை இருப்பதை அவன் நம்பினான் என்று கருதலாம். தண்ணீரை அல்லது உணவைச் சேமிக்கவோ அல்லது வேறு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது தான் பாண்டங்களின் இன்றியமையாமையை மனிதன் உணர்ந்தான்.  தண்ணீர் எடுக்கவும், குடிக்கவும் மண்டை ஒட்டையே கூட அவன் முதன் முதலாக உபயோகிகத்திருக்க வேண்டும். பின்னர் மென்மையான கற்களைக் குடைந்து குழிவான பாத்திரம் தயாரித்தான்.  இதுபோன்ற கல் சட்டியிலிருந்து மண்சட்டியைத் தயாரித்தான்.  சக்கரம் கண்டுபிடித்த பிறகு தன் தேவைக்கு ஏற்ப பலவிதமான பாத்திர வடிவங்களை உருவாக்கி நெருப்பினால் சுட்டு உபயோகித்தான்.  சக்கரம் கண்டுபிடித்த பிறகு பாத்திரம் தயாரிப்பதில் ஒரு மாபெரும் புரட்சி நிகழ்ந்தது. இவன் விலங்குகளின் எலும்பு, காய்ந்த காய்கள் (ஈரைக்குடுக்கை) மூங்கில் போன்றவைகளையும் பாண்டங்களாக உபயோகித்தான்.  இப்பழக்கம் இன்றும் பழங்குடியினரிடம் உள்ளது.

மருத்துவம்

தொல் பழங்காலத்தில் மனிதன் தன்னை நோய்களிலிருந்தோ அல்லது அடிப்பட்டு அவதியுற்றபோதோ, வேட்டையின் போது  பெரிய காயம் ஏற்பட்ட போதோ எப்படி மருத்துவம் செய்து கொண்டான் என்பது புரியாத புதிராகவே உள்ளது. அவன் அக்காலத்திலேயே தசைப்புண்களுக்கும், எலும்பு முறிவுகளுக்கும் ஒரு வகையான மருத்துவ முறையைப் பின்பற்றியிருக்கலாம்.

தொடரும்...

C.P.சரவணன், வழக்கறிஞர் 9840052475

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com