பஞ்சாங்கம்

வியாழக்கிழமை

20

விளம்பி வருடம், புரட்டாசி 4-ம் தேதி

நல்ல நேரம்

காலை 10.30 - 11.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

1.30 - 3.00

எம கண்டம்

6.00 - 7.30

குளிகை

9.00 - 10.30

திதி

ஏகாதசி

நட்சத்திரம்

உத்திராடம்

சந்திராஷ்டமம்

திருவாதிரை, புனர் பூசம்

இன்றைய ராசிபலன்

மேஷம் - வெற்றி
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - விவேகம்
கடகம் - நட்பு
சிம்மம் - பெருமை
கன்னி - வீம்பு
துலாம் - தாமதம்
விருச்சிகம் - அனுகூலம்
தனுசு - ஜெயம்
மகரம் - போட்டி
கும்பம் - மறதி
மீனம் - ஆதரவு

யோகம்:  சித்த யோகம்

சூலம்: தெற்கு

பரிகாரம்: தைலம்

விசேஷம்: திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் குதிரை வாகனத்தில் வையாழி சேவை. 

கேள்வி - பதில்
 • என் மகன் காமர்ஸ் படிப்பு படிக்கிறான். சட்டப்படிப்பு ஏற்றதா? போலீஸ் துறையில் சேர ஆசைப்படுகிறான். ஸ்திர ராசி, ஸ்திர லக்னம் என்பதால் எத்தகைய துறையில் சேரந்து உயர் கல்வி பயில்வது சிறந்தது. கேதுவின் சாரத்தில் மூன்று கிரகங்கள் (சனி, ராகு, சுக்கிரன்) பயமாக உள்ளது, சிறப்பான எதிர்காலம் அமையுமா? 
  - வாசகர், கோயம்புத்தூர்

 • உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்தம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுய சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். ஒரு கிரகம் நீச்சமாகி வர்கோத்தமம் பெற்றால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாவதற்குரிய பல விதிவிலக்குகளில் ஒன்றாகும். இதனால் சனிபகவான் ஆறாம் வீட்டில் முழுமையான பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். இதனால் ஆறாம் வீட்டிற்குரிய காரகத்துவங்கள் சிறப்படையும். மேலும் சனிபகவான் 3,6,11 ஆம் வீடுகளில் இருப்பது சிறப்பாகும். இதனால் தைரிய, சுக ஸ்தானாதிபதியான சனிபகவான் தான் ஆதிபத்யம் பெற்றுள்ள வீடுகளின் பலனையும் முழுமையாக வழங்குவார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். எந்த ஒரு கிரகத்துக்கும் ராசியை விட நவாம்சத்தில் சுபபலம் கூடியிருந்தால் அந்த கிரகம் சிறப்பான நன்மைகளைச் செய்யக்கூடிய தகுதியைப் பெறும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதனால் நண்பர்கள் மூலமாக நன்மைகள் உண்டாகும் என்று பொதுவாகக் கூற வேண்டும். 
  அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்ன கேந்திரத்தில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியான தன் ஆட்சி, உச்ச மூலத்திரிகோண வீட்டை அடைகிறார். செவ்வாய் புதபகவான்களின் பரிவர்த்தனையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதாவது, லக்னாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை மற்றும் ஆறாமதிபதியும் எட்டாமதிபதியும் பரிவர்த்தனை (விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது) என்கிற இரண்டு வகையிலும் சிறப்பைப் பெறுகிறது. இதனால் இந்த இரண்டு தசா புக்திகளும் ஒன்றுக்கொன்று இணைந்து வேலை செய்யும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த இரண்டு கிரகங்களின் காரகத்துவங்களும் வலுப்பெறும். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கேதுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
  ஸ்திர லக்னம், ஸ்திர ராசி அமைந்திருப்பதால் எத்தகைய கல்வி அமையும் என்று பொதுவாகக் கூற முடியாது. அதாவது, அந்த இரண்டு வீடுகளுக்கும் நான்காம் வீட்டைக் கொண்டு கல்வியை ஓரளவுக்கு கணிக்க வேண்டுமே அன்றி, அதை முழுமையாகப் பயன்படுத்தக் கூடாது. ஒருவர் கல்வி கற்பதற்கு மூன்று திரிகோணாதிபதிகளும் துணை புரிகிறார்கள். அதோடு கற்ற கல்வியைப் பயன்படுத்த தொழில் ஸ்தானமும் காரணமாகிறது. நான்காம் வீட்டிற்கு அதிகபலம் கூடி அதன்படி கல்வி அமைந்தாலும் அந்த ஜாதகத்தின் மூல பலத்திற்கேற்ப உத்தியோகமோ தொழிலோ அமையும். உதாரணமாக, ஒருவருக்கு கணினி துறையில் கல்வி அமைந்து அவர், வங்கி காப்பீட்டுத் துறையில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக கணினி சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பார். அதேபோல் கணினி படிப்பு படித்து கணினி துறையிலேயே உத்தியோகம் செய்வார். அதனால் லக்னத்திலிருந்து நான்காம் வீட்டை மட்டுமே கொண்டு கணினி படிப்பைப் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடாது. அவருக்கு லக்னத்திலிருந்து நான்காம் வீடு கும்ப ராசியாகும். சிம்ம ராசியிலிருந்து நான்காம் வீடு விருச்சிக ராசியாகும். நான்காம் வீட்டில் குரு, கேதுபகவான்களும் விருச்சிக ராசியில் சூரிய புதபகவான்களும் அமர்ந்திருக்கிறார்கள். புதபகவானை கணக்கன் என்பார்கள். புதபகவான் வலுத்திருந்தால் காமர்ஸ் படிப்பு நன்கு வரும். அதேநேரம் அவர் முழுமையாக கணிதம் சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட வாய்ப்பு குறைவு. அவருக்கு லக்னாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் சட்டம் நீதி துறைகளுக்கு காரகம் பெற்றிருக்கிறார்கள். 
  ஒருவர் ஜாதகத்திற்கு ஏற்ற படிப்புகளைப் படித்து அந்த துறையிலேயே கோலோச்சுவதற்கு மூன்று திரிகோணாதிபதிகளும் சீராக பலம் பெற்றிருக்க வேண்டும். அவருக்கு செவ்வாய், குரு, சந்திர பகவான்கள் நல்ல பலத்துடன் இணக்கமாக இருப்பதால் சட்டப் படிப்பு ஏற்றது. செவ்வாய்பகவான் காவல்துறைக்கும் காரகம் வகிப்பதால் அந்தத் துறையிலும் வெற்றி கிடைக்கும். இங்கு, குருபகவானின் பலத்தையும் பார்க்க வேண்டும். குருபகவான் பாக்கியாதிபதியை சமசப்தமாகப் பார்வை செய்வதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. அதனால் அவர் சட்டம் படித்தாலும் சட்ட வல்லுநராக வங்கி, காப்பீடு போன்ற துறைகளிலும் கம்பெனி சட்டங்களை செயல்படுத்தும் சட்ட நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்வார் என்று கூறலாம். அதனால் அவரை சட்டப்படிப்பை மேற்படிப்பாகப் படிக்க வைக்கவும். லாபாதிபதியும் லக்னாதிபதியும் வலுவாக இருப்பதாலும் தொழில் ஸ்தானாதிபதி லக்ன கேந்திரத்தில் இருப்பதாலும் நிரந்தர வருவாய் வரும் சிறப்பான வேலை அமைந்துவிடும். 
  குரு மஹா தசை நடக்கும் காலத்தில் சட்டத்துறையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். ராகுபகவான் பாக்கியாதிபதியுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருப்பதால் இன்னும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் ராகுபகவானின் தசையில் சுய புக்தி முடிந்தவுடன் உத்தியோகத்தில் உயரத்தொடங்கி விடுவார். கேதுபகவானின் சாரத்தில் மூன்று கிரகங்கள் இருந்தால் பாதிப்பு என்று எதுவும் இல்லை. இதேபோன்று பலருக்கும் ராகுபகவானின் சாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் குறையா என்று சந்தேகம் உள்ளது. இத்தகையோர்களுக்கு ராகு- கேது பகவான்கள் பெற்றுள்ள சுப அல்லது அசுபத் தன்மையை பொறுத்தே பலன்கள் அமையும். மற்றபடி, பொதுவாக, ராகு- கேது பகவான்களின் சாரம் சிறப்பல்ல என்று கூற முடியாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
   

 • எனக்கு 36 வயதாகிறது. இன்னும் திருமணம் நடைபெறவில்லை. நிறைய பரிகாரங்கள் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? 
  - வாசகர், கொமாரபாளையம்
   

 • உங்களுக்கு மகர லக்னம், மகர ராசி. குடும்பாதிபதியும் தசாதிபதியும் அஷ்டம ஸ்தானத்தில் அசுபக்கிரகத்துடன் இணைந்திருப்பது குறை. தற்சமயம் குருபகவானின் தசையில் பாக்கியாதிபதியின் புக்தி நடக்கத் தொடங்கி உள்ளது. இது திருமணத்திற்கு ஏற்ற காலகட்டமாக அமைகிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் தகுதியான பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்மனை வழிபட்டு வரவும்.

 • கடந்த நான்கு ஆண்டுகளாக பல பிரச்னைகளில் சிக்கித் தவிக்கிறேன். நான் வசிக்கும் சொந்த வீடு வாஸ்து சரியில்லை என்கிறார்கள். என் தந்தையின் சொத்து விஷயமாக உடன்பிறந்தோருடன் தீராத பகையில் உள்ளேன். சொத்து கிடைக்குமா? வேறுவீடு வாங்கி குடிபோகும் யோகம் உண்டா? சட்டத்துறையில் ஈடுபட உள்ளேன். அதில் பிரகாசிக்க முடியுமா? ஆயுள் பாவம் எவ்வாறு உள்ளது? வீட்டில் தொலைந்து போன நகை மீண்டும் கிடைக்குமா? 
  - வாசகர்

 • உங்களுக்கு கன்னி லக்னம், துலா ராசி. லக்னாதிபதி லக்னத்திலேயே உச்சம் பெற்றிருப்பதும் தன, பாக்கியாதிபதி தன ஸ்தானத்திலேயே மூலதிரிகோணம் பெற்றிருப்பதும் சிறப்பு. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றுள்ள சுக களத்திர ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்திருப்பது சிறப்பு. சட்டத்துறைக்கு காரகரான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்றிருக்கிறார். உங்கள் தந்தையின் சொத்து உங்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும். சட்டத்துறையிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சனிபகவான் வலுத்துள்ளதால் தீர்க்காயுள் உண்டு. திருட்டுபோன நகை திரும்ப கிடைக்கும் வாய்ப்பு குறைவு. பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும்.

 • என் வயது 75. என் கடைசி மகனின் வயது 40. இன்னும் திருமணமாகவில்லை. எப்போது திருமணமாகும்? தமிழ் பேசும் பெண் அமைவாரா? பரிகாரம் செய்ய வேண்டும்? 
  - வாசகர், புதுதில்லி

 • உங்களின் கடைசி மகனுக்கு கடக லக்னம். ரிஷப ராசி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி, குடும்பாதிபதி மற்றும் புதபகவான்கள் ஆறாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் தொழில் ஸ்தானத்திலுள்ள குருபகவானால் பார்க்கப்படுவதால் சிவராஜயோகம், குருமங்கள யோகம் ஆகிய யோகங்கள் உண்டாகின்றன. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம், குருபகவானின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். உங்கள் இனத்திலிருந்தே பெண் அமைவார். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். இந்த குருமஹா தசையில் முற்பகுதிக்குள் அதாவது இன்னும் 6 ஆண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும். தீர்க்காயுள் உண்டு.

 • என் வாழ்க்கையில் துன்பப் படாத நாள்களே இல்லை. மனைவி, இரண்டு குழந்தைகள் இருந்தும் நிரந்தமாக எந்த வருமானமும் இல்லை. ராகு தசை நடக்கிறது. எனக்கும் மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. பூர்வீகச் சொத்து எப்போது கிடைக்கும்? எப்போது நல்ல காலம் பிறக்கும்? 
  - வாசகர், கும்பகோணம்
   

 • உங்களுக்கு கும்ப லக்னம், சிம்ம ராசி. லக்னாதிபதி ராகுபகவானுடன் இணைந்து குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். தொழில் ஸ்தானத்தில் தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்றும் குருபகவானின் பார்வை குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனி, ராகு பகவான்களின் மீதும் படிவதும் சிறப்பு. தற்சமயம் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடப்பதால் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் பொருளாதார நிலை, குடும்பத்தில் மகிழ்ச்சி இரண்டும் மேன்மையடைந்து விடும். மற்றபடி உங்களுக்கு வலுவான ஜாதகமாக அமைகிறது. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். புத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் குழந்தைகளும் நல்ல நிலைமையை எட்டி விடுவார்கள். இந்த காலகட்டத்தில் பூர்வீகச் சொத்தும் கைவந்து சேரும்.

 • என் மகனுக்கு திருமணம் நடைபெற்று சில பிரச்னைகளால் விவாகரத்து கோரி இருக்கிறோம். இவருக்கு இரண்டாவது திருமணம் செய்யலாமா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? 
  - வாசகர், பெரம்பலூர்

 • உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மேஷ ராசி. தற்சமயம் குடும்பாதிபதியின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியின் புக்தி நடக்கிறது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் மறுமணம் கைகூடும். படித்த பெண் தெற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பாக்கியாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • பி.இ., படித்துள்ள என் மகனுக்கு வேலை ஏதும் கிடைக்காததால் சொந்தத் தொழில் செய்து வருகிறார். ஆனால் பெரிய முன்னேற்றமில்லை. வேலை கிடைக்கும் வாய்ப்புண்டா? வெளிநாடு செல்லும் வாய்ப்பு இருக்கிறதா? 
  - வாசகி, மயிலாடுதுறை

 • உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், துலா ராசி. தற்சமயம் லாப ஸ்தானத்திலுள்ள பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானின் தசை நடப்பதால் செய்தொழில் சீராகவே நடக்கும். இன்னும் மூன்றாண்டுகளுக்குப்பிறகு வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும் உண்டு. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

 • என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? வேலை எப்போது கிடைக்கும்? 
  - வாசகி, சேலம்

 • உங்கள் மகளுக்கு கன்னி லக்னம், விருச்சிக ராசி. களத்திர ஸ்தானாதிபதி களத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. சர்ப்பதோஷம் உள்ளது. சர்ப்ப தோஷம் உள்ள வரனை மட்டுமே பார்க்க வேண்டும் என்பது இல்லை. ஆறாமதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியுமாகி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து சந்திர கேந்திரத்தில் இருப்பதால் சச மஹாயோகமும் உண்டாகிறது. குரு சந்திர யோகம், சந்திர மங்கள யோகம், குரு மங்கள யோகம். நீச்சபங்க ராஜயோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

 • காது கேட்கும் திறன் குறைபாடுள்ள என் மகன் பி.இ., படிக்கிறார். படிப்பில் முயற்சிக்கு ஏற்ற பலன் இல்லை. டிகிரி முடிப்பாரா? அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா? சுயதொழில் பலன் தருமா? எந்தத் துறையில் எதிர்காலம் உள்ளது?
  - வாசகர், மயிலாடுதுறை

 • உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி. கல்வி ஸ்தானாதிபதி வாக்கு ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். லக்னாதிபதியும் லக்னத்திலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். இதனால் படிப்பை நல்ல படியாக முடித்து விடுவார். அதோடு கல்வி ஸ்தானத்தில் கல்விக்காரகர் லக்ன சுபராகி அமர்ந்து இருப்பதும் சிறப்பு. தனியார் துறையில் நல்ல வேலை உடனடியாக கிடைக்கும். மெக்கானிக்கல், மார்க்கெட்டிங் , கணினி சம்பந்தப்பட்ட துறைகள் ஏற்றது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • நல்ல குடியில் பிறந்து உயர்ந்த புகழுடன் இருந்த நான், தற்போது நல்ல நிலையில் இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? 
  - வாசகர், தஞ்சாவூர்

 • உங்களுக்கு விருச்சிக லக்னம், ரிஷப ராசி. உங்கள் மனைவிக்கு மேஷ லக்னம், கடக ராசி. இருவருக்கும் அடுத்த ஆண்டு மே மாதம் வரையில் காலம் சரியாக அமையவில்லை. அதற்குப்பிறகு இருவரும் சேர்ந்து வாழ வாய்ப்புகள் அமையும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மறுபடியும் சிறப்பான உத்தியோகம் கிடைத்துவிடும். தொடரும் சனிமஹா தசையில் வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களும் கைகூடிவிடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • வெளிநாட்டில் வேலை பார்க்கும் என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரங்கள் செய்ய வேண்டுமா?
  - வாசகர், திருப்பூர்

 • உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், மீன ராசி. லக்னாதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் குருபகவானுடன் இணைந்து இருப்பது சிறப்பு. களத்திர ஸ்தானாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதும் சிறப்பு. சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து ஆட்சி பெற்று இருப்பதும் சிறப்பு. அதோடு தற்சமயம் சுக்கிரபகவானின் தசையும் நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் பொருத்தமான பெண் அமைந்து திருமணம் கைகூடும்.வெளிநாட்டில் நிரந்தரமாக தங்கும் வாய்ப்பு உள்ளது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனக்கு 47 வயதாகிறது. திருமணம் நடக்கவில்லை. திருமணம் நடக்கும் வாய்ப்பு உண்டா? எத்தகைய பெண் அமைவார்? 
  - வாசகர், திருச்சி

 • உங்களுக்கு கும்ப லக்னம், மிதுன ராசி. சர்ப்பதோஷம் உள்ளதால் திருமணம் நடக்காது என்று கூற முடியாது. களத்திர ஸ்தானாதிபதி அசுபக் கிரகத்துடன் இணைந்திருப்பதற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். தற்சமயம் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவானின் தசை நடக்கிறது. களத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் தகுதியான பெண் உங்கள் இனத்திலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

 • பி.டெக்., படித்துள்ள என் மகன் அரசுத் தேர்வுகள் எழுதி வருகிறான். அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது கைகூடும்? எத்தகைய பெண் அமையும்? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
  - வாசகர், காரைக்குடி

 • உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி. தொழில் ஸ்தானாதிபதி உச்சம் பெற்று தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்வது சிறப்பு. அரசுக் கிரகங்களும் முழுமையான பலம் பெற்றிருக்கிறார்கள். அவருக்கு அவர் முயற்சி செய்யும் வேலை கிடைக்கும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் அமையும். இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள பெண் அந்நிய உறவில் கிழக்குத் திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • எனக்கு இரண்டு பெண்கள், ஓர் ஆண் பிள்ளை. மூவருக்கும் திருமணமாகிவிட்டது. கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எனது உடலாரோக்கியம், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
  - வாசகி, பாளையங்கோட்டை

 • உங்களுக்கு சிம்ம லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. சுக ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சுகாதிபதியுடன் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் குடும்பாதிபதியும் இணைந்து இருக்கிறார்கள். இதனால் குருமங்கள யோகம் சிறப்பாக ஏற்படுகிறது என்று கூற வேண்டும். ஆரோக்கிய ஸ்தானாதிபதி பலம் பெற்று நட்பு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதனால் உங்களுக்கு ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சீராகவே செல்லும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • எங்களுக்கு நல்ல குணவதியான மருமகள் எப்போது அமைவார்? பரிகாரம் எதும் செய்ய வேண்டுமா? முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களின் ஜாதகங்களில் உள்ள தோஷங்களை பொருட்படுத்த வேண்டாம் என்கிறார்களே.. அது உண்மையா? 
  - வாசகர், மயிலாடுதுறை

 • உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மகர ராசி. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவான் உச்சம் பெற்று சந்திரபகவானுடன் இணைந்து இருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியும் உச்சம் பெற்றிருக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். மற்றபடி எந்த வயதிலும் திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை