பஞ்சாங்கம்

திங்கட்கிழமை

20

விளம்பி வருடம், ஆவணி 4-ம் தேதி

நல்ல நேரம்

காலை 9.15 - 10.15   மாலை 4.45 - 5.45

ராகு காலம்

7.30 - 9.00

எம கண்டம்

10.30 - 12.00

குளிகை

1.30 - 3.00

திதி

நவமி

நட்சத்திரம்

கேட்டை

சந்திராஷ்டமம்

கார்த்திகை, பரணி

இன்றைய ராசிபலன்

மேஷம் - குழப்பம்
ரிஷபம் - இரக்கம்
மிதுனம் - சோர்வு
கடகம் - கவலை
சிம்மம் - இன்பம்
கன்னி - ஜெயம்
துலாம் - வேதனை
விருச்சிகம் - ஆதாயம்
தனுசு - அனுகூலம்
மகரம் - சினம்
கும்பம் - நன்மை
மீனம் - சுகம்

யோகம்: சித்த யோகம் 

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

விசேஷம்: விருதுநகர் ஸ்ரீசுவாமி அம்பாள் ரிஷப சேவை. இராமேஸ்வரம் ஸ்ரீ சுவாமி அம்பாள் தங்கக்கேடயச் சப்பரத்தில் பவனி.

கேள்வி - பதில்
 • நான் அப்பார்ட்மெண்ட்டில் ஒரு சிறிய வீடு வாங்கி வாடகைக்கு விட்டுள்ளேன். இதை விற்றுவிட்டு வேறு வீடு வாங்கலாமா? தற்போது குடியிருக்கும் வீட்டை முன்னேற்றம் செய்யலாமா?
  - வாசகர், கோயம்புத்தூர்

 • உங்களுக்கு கடக லக்னம், மேஷ ராசி. தற்சமயம் சனிபகவானின் தசை நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நன்மைகள் உண்டாகத் தொடங்கும். அதனால் அவசரப்பட்டு வீட்டை விற்க வேண்டாம். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

   

 • தனியார் துறையில் வேலை பார்க்கும் எனக்கு அரசு வேலை கிடைக்குமா? குடும்பத்தில் அமைதி கிடைக்குமா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகர், அம்பாசமுத்திரம்

 • உங்களுக்கு மகர லக்னம், சிம்ம ராசி. பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பது சிறப்பு. இதனால் உத்தியோகம் சிறப்பாகவே செல்லும் என்று புரிந்துகொள்ள வேண்டும். சுக ஸ்தானத்தில் குருபகவான் அமர்ந்து ஏழாமதிபதியையும் அயன ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் பார்வை செய்கிறார். இதனால் தனியார் துறையில் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். குடும்பத்திலும் மேன்மை உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

 • என் கடைசி மகனுக்கு இன்னும் திருமணம் கைகூடுவில்லை. எப்போது நடைபெறும்? என்னென்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
   - வாசகர், சென்னை

 • உங்கள் கடைசி மகனுக்கு மீன லக்னம், ரிஷப ராசி. களத்திர ஸ்தானாதிபதி தன் ராசிக்கு அயன ஸ்தானத்தில் மறைவு பெற்று சர்ப்பகிரகத்துடன் இணைந்திருப்பது குறை. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். மற்றபடி தற்சமயம், நீச்சபங்க ராஜயோகம் பெற்ற சனிபகவானின் தசை நடப்பது சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • கடைசி காலத்தில் நானும் என் மனைவியும் தனியாக வாழ்கிறோம். ஒரே மகன். எல்லாருமாக கூட்டுக்குடும்பமாக வாழ வழி உண்டா? ஆயுள் எவ்வாறு உள்ளது?
   - வாசகர், ஈரோடு

 • உங்களுக்கு மீன லக்னம், கன்னி ராசி. புத்திர ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுயசாரத்தில் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான், சூரியன், சுக்கிர பகவான்களுடன் களத்திர ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார். இது சிறப்பான அமைப்பு. அதோடு தற்சமயம், புதபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குப்பிறகு உங்கள் மகன் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.

 • என் மகளுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? அரசு வேலை கிடைக்குமா? ஆயுள் பலம், செல்வ வளம் எப்படி இருக்கும்?
   - வாசகர், இரணியல்

 • உங்கள் மகளுக்கு மீன லக்னம், சிம்ம ராசி. செவ்வாய்பகவான் தனபாக்கியாதிபதியாகி களத்திர ஸ்தானத்தில் இருந்தாலும் செவ்வாய் தோஷமில்லை. தற்சமயம் செவ்வாய்பகவானின் தசை நடக்கிறது. அவருக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திருமணம் கைகூடும். மற்றபடி களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டியது அவசியம். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். அரசு கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனி, பகவான்கள் சுப பலத்துடன் இருப்பதால் அரசு அல்லது அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். எதிர்காலம் சிறப்பாக அமையும். தீர்க்காயுள் உண்டு.

 • நான் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். ஹோமங்கள் பூஜைகள் செய்துவருகிறேன். சிறிய அளவில் வருமானம் வருகிறது. மனைவிக்கும் உடல்நிலை சரியில்லை. காசி, கயா போன்ற இடங்களுக்கு வரச்சொல்கிறார்கள். அங்கு சென்றால் நல்ல வருமானம் வரும். ஆனால் மனதில் நிம்மதியில்லை. இளைய மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. என்ன செய்வது? ஆயுள், எதிர்காலம் எவ்வாறு இருக்கும்?
   - வாசகர், சென்னை

 • உங்களுக்கு ரிஷப லக்னம், மிதுன ராசி. தர்மகர்மாதிபதியாகிய சனிபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் ஆயுள் பற்றிய பயம் வேண்டாம். தீர்க்காயுள் உண்டு. தற்சமயம் நட்பு ஸ்தானத்தில் உள்ள லக்னாதிபதியான சுக்கிரபகவானின் தசையில் சுய புக்தி நடக்கிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு நீங்கள் செய்துவரும் தொழிலில் வருமானம் கூடத்தொடங்கும். மற்றபடி குடும்பத்தினரும் அனுசரித்துச் செல்வார்கள். பிரதி தினமும் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

 • பி.எட்., படித்துவரும் என் மகள் வயிற்றுப்பேத்திக்கு ஜாதகத்தில் லக்னத்தில் ராகுவும் 7- இல் கேதுவும் உள்ளனர். மேலும் செவ்வாய் 12 -இல் மறைந்ததால் திருமணம் தாமதமாகுமா? எத்தகைய வரன் அமையும்? அரசு உத்தியோகம் கிடைக்குமா?
   - வாசகர், திருப்பூர்

 • உங்கள் பேத்திக்கு துலாம் லக்னம், மிதுன ராசி. சர்ப்பதோஷம் உள்ளது. தன, களத்திர ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீட்டில் இருந்தாலும் புதபகவானின் வீட்டில் இருப்பதால் பரிகாரச் செவ்வாய் என்கிற அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி தற்சமயம், லக்ன ராஜயோக காரகரான சனிபகவானின் தசை நடக்கிறது. அதனால் அவரின் வாழ்க்கையில் அனைத்து நன்மைகளும் படிப்படியாகக் கிடைத்து விடும். அரசு வேலை கிடைக்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் படித்த சிறப்பான வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • எனது மகனுக்கு இரண்டு வருடங்களாக பெண் பார்த்து வருகிறேன். எப்போது திருமணம் நடைபெறும்?
   - வாசகர், மடிப்பாக்கம்

 • உங்கள் மகனுக்கு கடக லக்னம், ரிஷப ராசி. பூர்வபுண்ணியாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி தனாதிபதியுடன் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானாதிபதியை குருபகவான் பார்வை செய்வதும் சிறப்பு. தற்சமயம் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
   - வாசகர், ஆம்பூர்

 • உங்களுக்கு கும்ப லக்னம், கன்னிராசி. லக்னத்தில் ராகுபகவானும் களத்திர ஸ்தானத்தில் கேதுபகவானும் இருப்பது சர்ப்ப தோஷமாகும். களத்திர ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதாலும் தற்சமயம் ராகுபகவானின் தசை நடப்பதாலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் படித்த பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

 • அரசு வேலையில் உள்ள என் மகளுக்கு அரசு வேலையிலுள்ள வரன் அமைந்தும் திருமணம் கைகூடவில்லை. திருமண காலம் எப்போது வரும்? நல்ல வேலையிலுள்ள வரன் அமையுமா?
   - வாசகர், மீன்சுருட்டி

 • உங்கள் மகளுக்கு விருச்சிக லக்னம், மிதுன ராசி. களத்திர ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சுயசாரத்தில் (பூரம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்து இருப்பது சிறப்பு. அவருடன் தொழில் ஸ்தானாதிபதியும் அஷ்டம ஸ்தானாதிபதியும் இணைந்திருக்கிறார்கள். தன, பூர்வபுண்ணியாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பு. அவருக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள அரசு வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் கணவர்3 ஆண்டுகளாக குடும்பத்தைப் பிரிந்து வாழ்கிறார். குடும்பத்துடன் மீண்டும் இணைவாரா? என் மீதும் மகன் மீதும் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? வேலையில் பிரச்னை வருமா? கடனை எப்போது அடைப்பேன்?
   - வாசகி, பாண்டிச்சேரி

 • உங்களுக்கு கன்னி லக்னம், மகர ராசி. உங்கள் கணவர் உங்கள் மீது தொடுத்துள்ள வழக்கு, அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் உங்களுக்கு சாதகமாக வெற்றி பெறும். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் கடன்கள் முழுமையாக அடைந்து விடும். வேலையை முன்கூட்டியே விட்டுவிட வேண்டிய அவசியமில்லை. உங்கள் கணவருடன் மறுபடியும் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு குறைவு. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.

 • நான் ரியல் எஸ்டேட் புரோக்கர் தொழில் செய்து வருகிறேன். ஒன்றரை வருடமாக உடல்நிலை சரியாக இல்லை. தொழிலும் பின்னடைவு ஆகிவிட்டது. சொந்த வீடு அமையுமா? ஆயுள் எவ்வாறு உள்ளது?
   - வாசகர், ஈரோடு

 • உங்களுக்கு கும்ப லக்னம், மேஷ ராசி. லக்னம் மற்றும் அயன ஸ்தானத்திற்கு அதிபதியான சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதிகள் கர்ம ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார்கள். தற்சமயம் சனிபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. இன்னும் இரண்டாண்டுகளுக்குள் சொந்த வீடு அமையும். நீங்கள் செய்துவரும் தொழில் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்றதாகவே அமைகிறது. தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் பெண் வயிற்றுப் பேத்திக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய வரன் அமையும்? திருமண வாழ்க்கை எவ்வாறு இருக்கும்? பெற்றோர் பார்த்த இடம் அமையுமா?
   - வாசகர், பெங்களூரு

 • உங்கள் பேத்திக்கு மிதுன லக்னம், தனுசு ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதிகள் பாக்கிய ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. குருபகவானும் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப்பெற்றுள்ளார். இதனால் களத்திர ஸ்தானாதிபதி சுபபலத்துடன் இருப்பதால் படித்த நல்ல வேலையிலுள்ள பெற்றோர் நிச்சயித்த வரன் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அமைந்து திருமணம் கைகூடும். மணவாழ்க்கை, எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.

 • என் பேரனுக்கு எந்தத் துறையில் படிப்பு, வேலை வாய்ப்பு, மேன்மை அமையும்? எதிர்காலம் எவ்வாறு உள்ளது?
   - வாசகர், திருப்பூர்

 • உங்கள் பேரனுக்கு மீன லக்னம், தனுசு ராசி. லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் கல்வி ஸ்தானாதிபதியும் கல்வி காரகருமான புதபகவான், களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் உச்சம் பெற்று புதஆதித்ய யோகமும் பெற்று இருப்பதால் சிவில், மெக்கானிக்கல், மேலாண்மைத் துறையில் பட்டப்படிப்பும் பட்டமேற்படிப்பும் அமையும். படித்த துறையிலேயே வேலையும் அமையும். தற்சமயம் குருபகவானின் பார்வையைப் பெற்றிருக்கும் சுக்கிரபகவானின் தசை நடப்பதால் படிப்படியாக பெற்றோர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? திருமணத்திற்குப்பிறகு வேலை கிடைக்குமா? அரசு வேலைக்கு வாய்ப்பு உண்டா? உறவில் திருமணம் அமைய வாய்ப்புண்டா?
   - வாசகி, திருவள்ளூர்

 • உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி. களத்திர ஸ்தானாதிபதி அசுபக்கிரகங்களுடன் இணைந்திருப்பது குறை. இதற்கேற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். மற்றபடி இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் தெற்கு அல்லது தென்கிழக்கு திசையிலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். அரசு வேலையை விட தனியார் வேலையே உகந்தது. பாக்கிய ஸ்தானம் வலுவாக இருப்பதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி புதன்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

 • என் பூர்வீகச் சொத்து பங்கினை என்னை ஏமாற்றி கையொப்பம் பெற்று எனக்குப் பணம் தராமல் ஏமாற்றிவரும் என் உடன்பிறந்த சகோதரருக்கு தண்டனை உண்டா? பணம் எனக்கு எப்பொழுது கிடைக்கும்? ஜோதிட ரீதியாக நான் ஏன் ஏமாற்றப் பட்டேன். எனக்கு சனி, குரு, சந்திரன் உச்சம். "காரகோ பாவ நாசாய' என்பதால் வந்த வினையா? எந்தக் கடவுளை வணங்க வேண்டும்?
   - வாசகர், சிதம்பரம்

 • உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரியஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமானஇரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுயசாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அஸ்வினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூல நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
   ஒருவர் வாழ்க்கையில் ஏமாற்றப்படுவதற்கு முக்கியமான இடமாக ஏழாம் வீடு அமைகிறது. இதை களத்திர, நட்பு ஸ்தானம் என்பார்கள். இந்த வீடு ஏழாம் வீட்டின் சுப அல்லது அசுப நிலையினால் ஒருவருக்கு அனுசரித்துச் செல்லும் கணவன் அல்லது மனைவி அமையுமா அல்லது அமையாதா என்று அறிந்து கொள்ளமுடியும். இதை வைத்துதான் சிலருக்கு அனுசரித்துச் செல்லாத கணவரோ அல்லது மனைவியோ அமைந்தால் "அவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம்' என்று ஒரு வாக்கியம் உண்டாகியது. இந்த ஏழாமிடம் நட்பு ஸ்தானமுமாகிறது. சிலருக்கு வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் அமைந்து அவர்களால் தக்க நேரத்தில் தக்க உதவிகளும் கிடைக்கும். சிலர் எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திலேயே இருப்பார்கள். இவர்களுக்கு ஏழாம் வீடு சுப பலத்துடனும் வலுவாகவும் அமைந்திருக்கும் என்றால் மிகையாகாது. இந்த ஏழாம் வீடு சுப வலு குறைந்திருப்பவர்களுக்கு நண்பர்களாலும் மற்றவர்களாலும் நன்மைகள் இராது. மேலும் அவர்களால் தொல்லைகள், சிக்கல்களில் மாட்டிக்கொள்ளுதல் போன்றவைகளும் உண்டாகும்.
   உங்களுக்கு இரண்டு மற்றும் ஏழாம் வீடான நட்பு ஸ்தானத்திற்கும் அதிபதியாக சுக்கிரபகவான் வருகிறார். அவர், சுபக்கிரகமாகி ஒருகேந்திர வீடான ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகி மற்றொரு கேந்திர வீடான லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். அதேநேரம் சுக்கிரபகவானை சுபாவ அசுபக் கிரகமான சனிபகவான் சமசப்தமாகப் பார்வை செய்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகத்தை அசுபக் கிரகம் பார்வை செய்தால் கேந்திராதிபத்ய தோஷம் பெருமளவுக்கு மறைந்து விடும் என்பது விதி. அதனால் இத்தகையோர் மற்றவர்களால் ஏமாற்றப்படலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
   " காரகோ பாவ நாசாய' என்றால் அந்த காரகர் அந்த பாவத்திலேயே இருப்பது குறை என்பதாகும். சூரியபகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்தால் தந்தைக்கும்; சந்திரபகவான் நான்காம் வீட்டில் இருந்தால் அன்னைக்கும்; செவ்வாய்பகவான் மூன்றாம் வீட்டில் இருந்தால் சகோதரருக்கும்; குருபகவான் ஐந்தாம் வீட்டில் இருந்தால் புத்திரருக்கும்; சுக்கிரபகவான் ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திரத்திற்கும் (கணவன் அல்லது மனைவி) ஆகாது என்றும் உள்ளது. அனுபவத்தில் இதுவும் முழுமையாக ஒத்துவருவதில்லை. ஆயுள்காரகரான சனிபகவான் ஆயுள் ஸ்தானத்தில் இருப்பது தீர்க்காயுள் என்றும் உள்ளது.
   உங்களுக்கு சகோதர காரகரான செவ்வாய்பகவான் சகோதர ஸ்தானத்திலேயே சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். மூத்த சகோதர ஸ்தானத்தை பதினொன்றாம் வீடாகவும் இளைய சகோதர ஸ்தானத்தை மூன்றாம் வீடாகவும் வைத்துள்ளார்கள். பூர்வீகச் சொத்து கஷ்டம் இல்லாமல் கிடைக்கவும் அதன்மூலம் வருமானம் கிடைக்கவும் ஒருவருக்கு ஒன்பதாம் வீடும் சூரியபகவானும் வலுவாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒன்பதாமதிபதி குருபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். சூரியபகவான் சுய சாரத்தில் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய்பகவானும் சனிபகவானும் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். பாக்கிய ஸ்தானத்தில் ராகுபகவான் (பிதாமஹர் அதாவது தந்தையின் தந்தையைக் குறிப்பவர்) அமர்ந்திருப்பது சிறுகுறை. மற்றபடி பூர்வீகச் சொத்து கிடைப்பதற்கு பெரிய பாதகமான அமைப்பு எதுவும் இல்லை. நட்பு ஸ்தானத்திற்கு உண்டான குறை வெளிப்படாமல் சனி மஹா தசை முடியும் வரையில் காக்கப்பட்டீர்கள். ஆறாமதிபதியின் தசை நடக்கத் தொடங்கியவுடன் மனதில் சிறிது அலட்சியம் உண்டாகி, சகோதரருக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கையெழுத்துப் போட்டு கொடுத்து ஏமாற்றப்பட்டீர்கள். ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு குறை இருந்தால் அது ஒரு காலகட்டத்தில் தன் வேலையை காட்டி விடும் என்று புரிந்து கொள்ள வேண்டும். பன்னிரண்டாமதிபதியை விட்ட எட்டாமதிபதியும், எட்டாமதிபதியை விட ஆறாமதிபதியும் கெடுதல் செய்வார்கள் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். ஒருவருக்கு அனுபவப்பட்ட அறிவு மற்றும் பாடம் கிடைத்தால் அதை "புத்திக்கொள்முதல்' என்பார்கள். இந்த அனுபவத்தில் புத்திக்காரகரான புதபகவானின் பங்கு நிச்சயம் இருக்கும். அதாவது தர்க்க ரீதியாக யோசிக்காமல் அவசர புத்தியை செயல்படுத்தி வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பது புதபகவானே ஆவார். மற்றபடி உங்கள் ஜாதகம் மிகவும் சிறப்பாக வலுவாக உள்ளதால் உங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படாது என்று கூறவேண்டும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியவுடன் நடக்க இருக்கும் சுக்கிரபகவானின் புக்தியில் உங்கள் சகோதரரிடமிருந்து வரவேண்டிய உங்கள் பணம் கைவந்து சேரும் என்று உறுதியாகக் கூறலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
   

ராசி பலன்கள்

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை