மேஷம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

மேஷம் (ARIES)

(மார்ச் 21 – ஏப்ரல் 19)

இது ஒரு ஆண் ராசி. நெருப்பு ராசியும்கூட. இது ஒரு நான்கு கால் ராசி. செம்மறி ஆட்டின் உருவம் கொண்ட ராசி. இதை A என்ற அடையாளத்தால் குறிப்பார்கள். இந்தக் குறியீடு, ஒரு செம்மறி ஆடு நீண்ட மூக்குடனும், இரண்டு காதுகளுடன் இருப்பதுபோல் தெரிகிறது அல்லவா! இது ஒரு சர ராசி. அதாவது, நகரும் தன்மை கொண்ட ராசி. இதற்கு அதிபதி செவ்வாய். சூரியன் இந்த ராசியில்தான் உச்சம் பெறுகிறார். சனி இங்குதான் நீச்சம் பெறுகிறார். இந்த ராசிக்கு செவ்வாய் அதிபதியாவதால், இந்த ராசியை லக்கினமாகக் கொண்டவர்கள், மிகவும் சுறுசுறுப்பு உடையவர்களாகவும், முன்னேறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள். இந்த லக்கினம், மற்ற கிரகங்களால் கெட்ட பார்வையால் பார்க்கப்பட்டால், அவர்கள் மிகுந்த அவசரக்காரர்களாகவும், நிதானித்துச் செயல்படாதவர்களாகவும் இருப்பார்கள். அதுவே, நல்ல பார்வையால் பார்க்கப்பட்டால் நிதானம் மிக்கவர்களாகவும், தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவராகவும் இருப்பார்கள். உடல் உறுப்புகளில் தலையைக் குறிப்பது இந்த ராசிதான்.

அக்டோபர் 23

இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

அக்டோபர் 20 - அக்டோபர் 26

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலை உயரும். புதிய சொத்துகளை வாங்குவீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும். வம்பு வழக்குகளில் இருந்த நெருக்கடிகள் மறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகளை நிறைவேற்றுவீர்கள். 

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத் சூழல் சாதகமாகவே இருக்கும். துணிந்து காரியமாற்றி நற்பெயர் எடுப்பீர்கள். பணம் வந்து சேரும். வியாபாரிகள் முயற்சிக்குத் தகுந்த லாபத்தைப் பெறுவீர்கள். கனிவுடன் பழைய கடன்களை வசூலிப்பீர்கள். விவசாயிகள் புதிய உபகரணங்களை வாங்கி லாபத்தைப் பெருக்குவீர்கள். இருப்பினும் கால்நடை பராமரிப்புச் செலவு கூடுதலாக இருக்கும். 

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடவும். புதிய பொறுப்புகள் உங்களை வந்து சேரும். கலைத் துறையினரின் விடாமுயற்சிகள் பெரும் வெற்றிகளைக் கொடுக்கும். சமூகத்தில் பெயரும் புகழும் உண்டாகும். பெண்மணிகள் குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பதில் சிரமப்படுவீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். அதிக மதிப்பெண்களைப் பெறுவார்கள். 

பரிகாரம்: ஸ்ரீ அனுமனை வணங்கி வரவும். 

அனுகூலமான தினங்கள்: 20, 21. 

சந்திராஷ்டமம்: 22, 23, 24.

அக்டோபர் மாதம்
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எதையும் சமாளித்து குறுகிய காலத்தில் முன்னுக்கு வரும் திறன் உடைய மேஷ ராசியினரே நீங்கள் ரத்த சம்பந்தமான உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவர். இந்த காலகட்டத்தில் ராசியாதிபதி செவ்வாயின் சஞ்சாரத்தால் எதையும் சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களது செய்கை உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்தலாம். எனவே நிதானமாக இருப்பது நல்லது. சொந்த காரியங்களில் தாமதம் ஏற்படலாம். சின்ன விஷயங்களால் மன நிறைவை அடைவீர்கள். எதிர்பாலினரிடம் பழகும் போது கவனம் தேவை.

தொழில் ஸ்தானத்தில் கேது இருக்கிறார். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். மருந்து, ரசாயனம் போன்ற தொழில்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான காரியங்களில் ஈடுபடும் போது அவசரப்படாமல் நிதானமாக செயல்படுவது காரிய வெற்றியை உண்டாக்கும். எளிதில் மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்பு உண்டு.

குடும்பம் தொடர்பான கவலைகள் மறையும். குடும்ப செலவை சமாளிக்க பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் ஆன்மீக எண்ணங்கள் ஏற்படும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பும், மரியாதையும் கூடும்.

பெண்களுக்கு அடுத்தவர்கள் செயல்கள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். எனவே நிதானமாக செயல்படுவது நன்மையை தரும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கும் திறமை கூடும்.

கலைத்துறையினருக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். தேவையான பொருள்களை வாங்குவீர்கள். நீண்ட நாட்களாக செய்ய நினைத்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். மதிப்பும், மரியாதையும் வரும்.

அரசியல் துறையினருக்கு மனஸ்தாபம் நீங்கும். நண்பர்களிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. வாழ்வில் முன்னேற அக்கறை காட்டுவீர்கள். மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும்.

மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி குறையும். எதையும் அவசரப்படாமல் நிதானமாக செய்வது நல்லது.

பரிகாரம்: கந்த சஷ்டி கவசம் சொல்லி முருகனை வணங்க பிரச்சனைகள் குறையும். மனதில் அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்;

அதிர்ஷ்ட தினங்கள்: 15 - 16 - 17

சந்திராஷ்டம் தினங்கள்: 22 - 23 - 24

அஸ்வினி:

இந்த மாதம் உறவினர்கள் வகையில் தவிர்க்கமுடியாத சுபச் செலவுகளை சுமக்க நேரும். முக்கியமான பயணமும், முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் உண்டாகும். அது உங்கள் எதிர்காலத்துக்கு நல்ல அஸ்திவாரமாக இருக்கும். சிலர் கூட்டு முயற்சிகளில் லாபம் தேடலாம். சிலர் குடும்பத்தினரோடு கூட்டுச் சேர்ந்து தொழில் செய்து லாபம் பார்க்கலாம்.

பரணி:

இந்த மாதம் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தொழில், வேலை, உத்தியோகம் ஆகியவற்றில் வெற்றி அடையலாம். சேமிப்பும் அடையலாம். உங்கள் உழைப்பும் நம்பிக்கையும் உங்களுக்கு முழுமையான பலனையும் திருப்தியையும் தரும். எதிர்ப்பும் இடையூறும் ஒருபுறம் இருந்தாலும், உங்களின் தன்னம்பிக்கையாலும் தைரியத்தாலும் அவற்றைப் போராடி எதிர்த்துநின்று வெற்றிகொள்வீர்கள்.

கார்த்திகை 1ம் பாதம்:

இந்த மாதம் கடமைகளைக் காப்பாற்றுவீர்கள். பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்காது என்றாலும், வைத்தியச் செலவும் அல்லது வீண்விரயச் செலவும் தவிர்க்க முடியாததாக இருக்கும். அதனால் சிலசமயம் விரக்தி ஏற்படலாம். ஜாதக தசாபுக்தியை அனுசரித்து தேவையான பரிகாரங்களைச் செய்து கொள்வதால், மனதில் ஆறுதலும் நம்பிக்கையும் உண்டாகும். தொழில், வியாபாரம், உத்தியோகத்தில் பிரச்சனை இருக்காது.


ஐப்பசி மாத பலன்கள்

இம்மாதம் சுகஸ்தான ராசியில் ராகு - ரணருண ராசியில் ராசிநாதன் செவ்வாய், சுக்கிரன் - சப்தமஸ்தானத்தில் சூரியன், புதன், குரு - அஷ்டம ராசியில் சனி - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகங்களின் சஞ்சாரம் இருக்கிறது.

ஐப்பசி மாதம் - 11ம் தேதி - 28.10.2017 - சனிக்கிழமை அன்று பகல் மணி 11.49க்கு புதன் சப்தம ராசியில் இருந்து அஷ்டம ராசிக்கு மாற்றம் பெறுகிறார்.

ஐப்பசி மாதம் - 17ம் தேதி - 03.11.2017 - வெள்ளிக்கிழமை அன்று இரவு மணி 9.47க்கு சுக்கிரன் ரணருண ராசியில் இருந்து சப்தம ராசிக்கு மாற்றம் பெறுகிறார். 

இந்த மாதம் பல வகையிலும் நற்பலன்கள் தேடி வரும். தெய்வபக்தி அதிகரிக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தரும். ராசிநாதன் செவ்வாய் மறைந்திருந்தாலும் சாரப்படி மனதில் சுய நம்பிக்கை அதிகரிக்கும். வாக்கு ஸ்தானத்தை சனி பார்ப்பதால் கவனமாக பேசுவது நல்லது. வீண் பழி உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவை. பணவரத்து  அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். வேலையில் மாற்றம் உண்டாகலாம். பயண செலவு உண்டாகலாம்.  

குடும்ப ஸ்தானம் பலம் குன்றி காணப்படுவதால் குடும்பத்தில் இருப்பவர்களால் ஏதாவது மனம் நோகும்படியான நிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எச்சரிக்கையாக பேசுவது நல்லது.  கலைத்துறையினருக்கு வீண் அலைச்சல், காரிய தாமதம் போன்றவை ஏற்படலாம். புதிய முயற்சிகளை தள்ளி போடுவதும் நல்லது. காரிய அனுகூலம் ஏற்படும். உணர்ச்சிகரமாக பேசி மற்றவர்களை கவருவீர்கள். 

எல்லாவற்றிலும் எதிர்பார்த்த நன்மை உண்டாகும். பணம் வரத்து கூடும். அரசியல் துறையினருக்கு கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனை தீரும். நீண்ட நாளாக இருந்த கஷ்டம் நீங்கும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். அரசாங்கம் மூலம் லாபம் ஏற்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் சாதகமாக இருக்கும். மாணவர்களுக்கு  கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை தோறும் விரதம் இருந்து முருகனை வணங்கி வர காரிய தடைகள் நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள், வியாழன்

தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - 2017

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் வருமானம் உயரத் தொடங்கும். பழைய கடன்கள் அடையத் தொடங்கும். மனதில் இருந்த கவலைகள் மறையும். அரசாங்கத்திலிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உங்கள் செயல்களைத் திருப்தியாகச் செய்து முடித்துவிடுவீர்கள். உங்களின் முக்கியமான செயல்களுக்கு அடுத்தவர்களின் தயவை நாடமாட்டீர்கள். சரியான முடிவை எடுக்கத் திணறும் நண்பர்களுக்கு உங்கள் அறிவுரைகளுடன் தேவையான உதவிகளையும் செய்வீர்கள். சமுதாயத்தில் உங்கள் நிலை உயரும். செல்வம் செல்வாக்கு இரண்டும் சீரிய நிலையில் இருக்கும். உங்களின் அனுபவ அறிவு தக்க சமயத்தில் கை கொடுக்கும். பரமபத பாம்புபோல் அவ்வப்போது சரிவைச் சந்தித்தவர்கள் பரமபத ஏணியில் திடீரென்று ஏறி உயர்ந்த நிலையை அடைந்து விடுவீர்கள். குடும்பத்தில் குதூகலம் தாண்டவமாடும். பெற்றோர்களாலும் உங்கள் கோரிக்கைகள் நிறைவேறும். ஆன்மிக விஷயங்களில் அதீத ஈடுபாடு உண்டாகும். பெரியோர்களிடம் நல்ல மதிப்பு வைப்பீர்கள். உற்றார் உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். மனதில் இருந்த சஞ்சலங்கள் மறைந்து தெளிவுடன் காரியமாற்றுவீர்கள். அறிவாற்றலும் நிர்வாகத் திறமையும் உயரும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.
 
இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் ஆன்மிகச் சிந்தனைகளால் சிறப்படைவீர்கள். தோற்றத்தில் புதிய மிடுக்கு உண்டாகும். முகத்தில் பொலிவு கூடும். வாழ்க்கையில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம், மன வளம் மேம்பட யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள். உங்கள் பேச்சினால் மற்றவர்களைக் கவர்ந்து விடுவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உண்மையை பேசுவீர்கள். குடும்பத்தாருடன் சுமுகமான உறவை வைத்துக்கொள்வீர்கள். உறவினர்களுக்கிடையே இருந்த பிணக்குகளை உங்களின் சமயோசித பேச்சுகளால் தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் திரும்ப வந்து சேர்வார்கள். சமுதாயத்தில் உங்கள் பெயர், கௌரவம், அந்தஸ்து உயரக் காண்பீர்கள். பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசியையும் தேடிப் பெறுவீர்கள். நெடுநாளாகத் தீராமல் இருந்த வழக்குகளிலும் சாதகமானத் தீர்ப்பு கிடைக்கும். மற்றபடி சோதனைகளைக் கடந்து சாதனையாளராக வலம் வரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் தங்களின் செல்வாக்கு உயரக் காண்பீர்கள். உங்கள் செய்கையால் சக ஊழியர்களிடம் நம்பகத் தன்மையை அதிகரித்துக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணவரவு கிடைத்து பொருளாதார நிலை சீரடையும். வேலையில் தொடர்ந்து வந்த கெடுபிடிகள் குறையக் காண்பீர்கள். புதிய பொறுப்புகளையும் மேலதிகாரிகள் கொடுப்பார்கள். பதவி உயர்வும் இந்த ஆண்டு கிடைக்கும். வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் லாபத்தைக் காண்பீர்கள். வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உங்கள் நடவடிக்கைகளுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். புதிய வழிகளில் வருமானத்தைப் பெருக்க முயற்சி செய்வீர்கள். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்துகொண்டால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். விவசாயிகள் அமோகமான விளைச்சளைக் காண்பார்கள். சக விவசாயிகள் தக்க நேரத்தில் உதவி செய்வார்கள். திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்துவார்கள். புதிய குத்தகைகளைப் பெறுவீர்கள். உங்கள் அந்தஸ்து, செல்வாக்கு உயரும் ஆண்டாக இது அமைகிறது. 

அரசியல்வாதிகள் எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்துச் செய்தால் கட்சித் தலைமையின் வெறுப்பிலிருந்து தப்பிக்கலாம். தொண்டர்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவு கிடைக்கும். வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. கலைத்துறையினருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் திரும்ப கைவந்து சேரும். தோற்றத்தில் பொலிவு கூடும். மிடுக்கான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். பெண்மணிகள் வீட்டில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். கணவருடனான ஒற்றுமையும் சீராக இருக்கும். மாணவமணிகள் நண்பர்களிடம் கவனத்துடன் பழகவும். படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நெடுநாளைய கோரிக்கை ஒன்றைப் பூர்த்தி செய்வீர்கள்.

பரிகாரம்: ராதா கிருஷ்ணரை வழிபட்டு நலன்களைக் கூட்டிக்கொள்ளுங்கள்.

***

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். யூகசக்தி பரிமளிக்கும். மற்றவர்களின் எண்ணங்களை முகத்தைப் பார்த்தே புரிந்துகொள்வீர்கள். உற்றார் உறவினர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். பொருளாதாரம் எதிர்பார்த்த அளவுக்கு இருக்கும். செய்தொழிலில் நல்ல முறையில் செயல்படுவீர்கள். இந்த காலகட்டத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். எதிரிகளை அவர்களின் வழியிலேயே சென்று திருத்துவீர்கள். அறிவுப்பூர்வமான ஆலோசனைகளை எவர் வழங்கினாலும் அவற்றை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் அனைவராலும் மதிக்கப்படுவீர்கள். குடும்பத்தில் இருந்த நிம்மதியற்ற சூழ்நிலை மாறி மகிழ்ச்சி குடிகொள்ளும். விலகிச் சென்ற நண்பர்கள் திரும்பி வருவார்கள். ரகசியங்களை எச்சரிக்கையுடன் இருந்து அடுத்தவர்களுக்குத் தெரியாமல் காப்பாற்றுவீர்கள். வெளியில் கொடுத்திருந்த பணத்தை வசூலிக்க கஷ்டப்பட வேண்டியிருக்கும். வழக்குகளிலும் சாதகமான தீர்ப்புகள் வரத் தாமதமாகும். செயல்களில் வேகத்தைக் குறைத்துக்கொண்டு விவேகத்தைக் கூட்டிக் கொள்வீர்கள். பங்கு சந்தைகளில் ஈடுபட வேண்டாம். உடல் ஆரோக்கியம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். 

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும். முகத்தில் புதுப்பொலிவு உண்டாகும். செய்தொழிலில் இருந்த சறுக்கல்கள் விலகி படிப்படியாக உயர்வைக் காண்பீர்கள். வருமானத்திற்குத் தடையாக இருந்த விஷயங்கள் தானாகவே விலகிவிடும். அதிர்ஷ்ட வாய்ப்புகளும் தானாகவே தேடி வரும். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். மனதிற்கினிய பயணங்களைச் செய்வீர்கள். இதன்மூலம் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளும் தானாகவே ஓய்ந்துவிடும். நடக்காது என்று நினைத்திருந்த செயல்கள் திடீரென்று நடந்தேறும். உற்றார் உறவினர்களின் வருகையால் நன்மைகள் உண்டாகும் வீட்டிலும் வெளியிலும் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். சிலருக்கு வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். நடையிலும் ஒரு புதிய மிடுக்கு உண்டாகும். தொட்டது துலங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்கள் இந்த புத்தாண்டில் மேலதிகாரிகளின் அபரிமிதமான பாராட்டு மழையில் நனைவார்கள். ஆவலுடன் எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நெருக்கம் அதிகமாகும். அரசு ஊழியர்களுடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் வகையில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். வியாபாரத்தில் போட்டியிருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாகவே இருக்கும். வருமானம் சிறப்பாக இருப்பதால் வண்டி வாகனங்கள் வாங்கி வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு மகசூல் பெருகும். லாபத்தைச் சேர்த்து வருங்காலம் வளமாக அமைவதற்கு அடித்தளம் போடுவீர்கள். கால்நடை கோழி முட்டை வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் கூடும். 

அரசியல்வாதிகள் மனச்சோர்வு நீங்கி எதையும் சாதிக்கும் அளவுக்குத் தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். புதிய பதவியில் அமர்ந்து சமுதாயத்திற்கு தொண்டாற்றுவீர்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பல கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். வருமானமும் படிப்படியாக உயரும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை மேலோங்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டாகும். தாய்வீட்டுச் சீதனம், பூர்வீகச் சொத்து ஆகியவை கிடைக்க வாய்ப்புண்டு. மாணவமணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் சாதகமாக அமைகிறது. தேர்வுகளில் எதிர்பார்த்த மதிப்பெண்களை அள்ளுவார்கள். நண்பர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

பரிகாரம்: பெருமாள் வழிபாடு உகந்தது.