மகரம்

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

மகரம் (CAPRICORN)

(டிசம்பர் 22 – ஜனவரி 19)

இது ஒரு பெண் ராசி. பூமி ராசி மற்றும் சர ராசி. இதன் அதிபதி சனி. இங்குதான் செவ்வாய் உச்சம் பெறுகிறார். குரு நீசம் பெறுகிறார். பொதுவாக, சனியானவர் எதற்கும் தடங்கல்களைக் கொடுப்பவராகவும், எதிலும் ஏற்றத்தை தராதவராகவும், பொறுப்புகளைக் கொடுப்பவராகவும்தான் கருதப்படுகிறார். இதுவும் ஒரு நாலு கால் ராசி. இதனுடய உருவம் ஆடு. இதனுடைய சின்னம் J. இதுதான் உடலிலுள்ள எலும்புகள், முழங்கால் மூட்டுகள் இவற்றையெல்லாம் குறிக்கிறது. சூரியனுக்கும் சந்திரனுக்கும் இது எதிரியின் வீடு. ஆனால் சுக்கிரனுக்கும் புதனுக்கும் இது நண்பனின் வீடு. இது ஒரு பூமி ராசியாக இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் செலவைக் குறைப்பதில் நாட்டம் உள்ளவராகவும் நியாயஸ்தர்களாகவும் எதையும் யோசித்துச் செயல்படுபவர்களாகவும், கடின உழைப்பை மேற்கொள்பவராகவும் இருப்பார்கள். இந்த ராசிக்கு சனி அதிபதியாவதால், 6-ம் வீட்டுடன் சம்பந்தப்பட்டால் மூட்டு வலிகள், தோல் சம்மந்தமான வியாதிகள் ஆகியவை வரக்கூடும்.​

ஜூன் 27

இன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச் சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.

அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

ஜூன் 23-29

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தொழில் ரீதியாக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும்.  தோற்றத்தில் பொலிவு உண்டாகும். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள்.சமுதாயப் பணிகளில் ஈடுபடுவீர்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.  

உத்தியோகஸ்தர்கள் திட்டமிட்ட வேலைகளை மிகவும் கவனத்துடன் செய்து முடிப்பீர்கள். வருமானத்திற்கு குறைவு இருக்காது. வியாபாரிகள் கடும் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். வியாபாரத்தை திறம்பட நடத்துவீர்கள். விவசாயிகள் கூடுதல் மகசூலை அள்ளுவார்கள். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். புதிய குத்தகை எடுக்கும் முயற்சிகள் இந்த வாரம் வேண்டாம்.  

அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய வாரம். கட்சி மேலிடத்தின் உத்தரவை நிறைவேற்ற முனைப்புடன் செயல்படுத்துவீர்கள். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும்.

ரசிகர்களின் ஆதரவு நன்றாக இருக்கும்.பெண்மணிகள் ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். தந்தைவழி உறவினர்களால் நன்மை அடைவீர்கள். மாணவமணிகள் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்கு கடுமையாக உழைக்க வேண்டி வரும்.

பரிகாரம்: லட்சுமிநரசிம்மரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 23,26.

சந்திராஷ்டமம் :  28,29.

ஜூன் மாதம்
மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

பக்குவமாக எடுத்து சொல்லி எதிரில் இருப்பவர்களை திருப்தியடையச் செய்யும் குணமுடைய மகர ராசியினரே உங்களிடம் வாதத்திறமை இருக்கும்.  இந்த மாதம் பல வழிகளிலும் ஏற்பட்ட தொல்லைகள் குறையும். ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்து வதும் நல்லது. திடீர் இடமாற்றம் ஏற்பட்டாலும் அதன் மூலம் சாதகம் உண்டாகலாம். வீண் செலவுகள் கவுரவ குறைச்சல் ஏற்படலாம். மிகவும் கவனம் தேவை. தாய் தந்தையின் உடல் நிலையிலும் கவனம் செலுத்துவது நல்லது.
தொழில் வியாபாரத்தில் மெத்தன போக்கு காணப்பட்டாலும் குரு பார்வையால் தேவையான பணவரத்து இருக்கும். புதிய முயற்சிகளில் தாமதமான நிலை காணப்படும். நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த காரியங்கள் வேகம் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சல் காரியங்களில் இழுபறி என்ற நிலையை காண்பீர்கள். பேச்சை குறைத்து செயலில் ஈடுபடுவது நன்மையை தரும். சக ஊழியர்கள் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட காரியங்கள் சுமூகமாக முடியும்.

குடும்பத்தில் சுமூகமான நிலை காணப்படும். ஆனாலும் மனதில் குடும்பம் தொடர்பான கவலை, பிள்ளைகள் பற்றிய கவலை இருந்து வரும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. வாக்குவாதத்தை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தொல்லைகள் குறையும். வீண் செலவுகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

கலைத்துறையினருக்கு உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது.

அரசியல் துறையினருக்கு நற்பெயர் கிட்டும். சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய புள்ளியின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் மெத்தன போக்கு ஏற்படாமல் தீவிர கவனத்துடன் பாடங்களை படிப்பது வெற்றிக்கு வழி வகுக்கும்.

உத்திராடம் 2, 3, 4 பாதம்:
இந்த மாதம் தான் உண்டு தன்வேலை உண்டு என்று இருப்பது நல்லது. எதிர்பாரத செல்வ சேர்க்கை உண்டாகும். அதே நேரத்தில் மனதில் வீண்கவலையும் ஏற்படலாம். எதிலும் ஒரு வேகம் உண்டாகும். அடுத்தவர் விஷயங்களில் தலையிடும் போது கவனம் தேவை. உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம் தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தன போக்கு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் விஷயமாக வெளியூர் செல்ல நேரலாம். எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்க தாமதம் ஏற்படலாம்.

திருவோணம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பொறுப்புகள் கிடைக்க பெற்று அதனால் நன்மை அடைவார்கள். குடும்பத்தில் திருப்தியான நிலை காணப்படும். வீட்டிற்கு தேவையான பொருள் வாங்குவதால் செலவு ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே  இருந்த மனவருத்தம் நீங்கி நெருக்கம் ஏற்படும்.  பிள்ளைகளுடன் மனதுக்கு பிடித்த இடத்திற்கு சென்று பொழுதை கழிப்பீர்கள்.

அவிட்டம் 1,2 பாதம்:
இந்த மாதம் எதிர்பார்த்த செல்வ சேர்க்கை உண்டாகும். மனதில் வீண் கவலை ஏற்படலாம். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய மனக்கவலை உண்டாகும். பயணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். வீண் அலைச்சல் காரியதடை ஏற்படலாம் கவனம் தேவை. எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். மனதில் நிம்மதி உண்டாகும். உதவி என்று வருபவர்களுக்கு  தயங்காமல் உதவிகளை செய்வீர்கள். இரவில் நல்ல உறக்கம் வரும்.

பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு தொண்டு செய்வதும் பிரதோஷ காலத்தில் சிவனை வழிபடுவதும் கஷ்டங்களை நீக்கி வீண் விரயத்தை குறைக்கும். காரியத்தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 1, 2, 28, 29

அதிர்ஷ்ட தினங்கள்: 22, 23

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலை நிலவும். பெற்றோருடன் இணைந்து வாழ்வீர்கள். பிரிந்திருந்த உற்றார் உறவினர்கள் கூடுவார்கள். குலதெய்வ அருளால் குடும்பத்தில் புத்திரப் பேறுகள் உண்டாகும். ஆன்மிகத்தில் தெளிவு உண்டாகும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உங்களைச் சார்ந்தவர்களுக்குத் தக்க ஆலோசனைகளைக் கூறுவீர்கள். முன்பு பாதியில்விட்ட காரியங்களைத் தொடர்ந்து நடத்தி வெற்றிகரமாக முடித்துவிடுவீர்கள். சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். தேக ஆரோக்கியம் சீர்படும். தக்க உடற்பயிற்சிகளையும் செய்வீர்கள். இனிமையாகப் பேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக்கொண்டு சேமிப்புகளைக் கூட்டிக்கொள்வீர்கள். அரசாங்கத்திலிருந்து எதிர்பாராத சலுகைகளும் தேடி வரும் காலகட்டமாக இது அமைகிறது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்களை சிரமப்பட்டு முடிப்பீர்கள். சோதனைகளைச் சாதனைகளாக மாற்ற முயல்வீர்கள். எதிரிகளின் வகையில் அசட்டையாக இருந்தால் அவர்களால் சிறு இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். உங்கள் வேலைகளை அடுத்தவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். மனதில் இருந்த அச்சங்களை விரட்ட தியானம், பிராணாயாமம் போன்றவைகளைச் செய்வீர்கள். நினைத்தது நினைத்தபடியே நடக்கும். உணர்ச்சிவசப்படாமல் சிந்தித்து முடிவெடுப்பீர்கள். புதிய வாய்ப்புகளைத் தேடிப் பெறுவீர்கள். இதனால் சிறப்பான வளர்ச்சியை எட்டிவிடுவீர்கள். உங்கள் பேச்சை குடும்பத்தினர் அங்கீகரிப்பார்கள். உங்களை ஒதுக்கியவர்கள் உங்கள் கண்ணில் படாமல் ஒதுங்கிவிடுவார்கள். முடியாது என்கிற வேலையே இல்லை என்கிற அளவுக்கு யுக்தியுடன் செயலாற்றுவீர்கள். உடல் நலனில் பாதகம் இல்லாவிட்டாலும் சிறிய வயிறு பிரச்னைகள் இந்த காலகட்டத்தில் உண்டாகலாம். இதனால் சிறிது மருத்துவச் செலவுகளும் செய்ய நேரிடும்.

உத்தியோகஸ்தர்கள் பதற்றப்படாமல் அமைதியாக அலுவலக வேலைகளைச் செய்வீர்கள். பொருளாதாரத்தில் மேம்பாடுகள் அடைவீர்கள். அலுவலகத்தில் வீடு கட்டுவதற்காக கொடுக்கப்பட்டிருந்த மனுக்கள் பைசலாகி வீட்டுக்கடன் கிடைத்துவிடும். மேலதிகாரிகளின் வழிகாட்டுதலால் வேலைகளைச் சரியாகச் செய்து முடித்து நற்பெயர் எடுப்பீர்கள். வியாபாரிகளுக்கு சரிவுகள் என்பது இராது. வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். எதிர்ப்புகளைச் சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகள் கைகொடுக்கும். தனித்து சில முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். கூட்டாளிகளும் உங்கள் குணமறிந்து நடந்துகொள்வார்கள். உங்களது திட்டங்களுக்கு உறுதுணையாக நின்று செயல்படுவார்கள் என்றால் மிகையாகாது. விவசாயிகளுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் வசூலாகி பணவரவு கூடும். தானியப் பொருள்கள் உற்பத்தியில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய கால்நடைகளை வாங்கி பயன்பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் அதிர்ஷ்டகரமான திருப்பங்களைக் காண்பார்கள். கட்சியில் உயர்ந்த பதவிக்கு மாறுவார்கள். சிறிய பரிசுத் தொகையும் கிடைக்கும். சுதந்திரமாகக் கட்சியில் பணியாற்றுவீர்கள். தொண்டர்களிடம் உங்கள் பேச்சுக்கு மதிப்பிருக்கும். சமூகத்தில் உங்கள் பெயர் புகழ் மரியாதை கூடும். கலைத் துறையினருக்கு சமூகத்தில் முக்கிய பதவிகள் கிடைக்கும். திறமைகேற்ப ஒப்பந்தங்கள் செய்வீர்கள். ரசிகர் மன்றங்களைச் சற்று கவனத்துடன் கையாளவும். ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் கிடைக்கும். பெண்மணிகள் தேவையற்ற விஷயங்களைத் தள்ளி வைத்துவிட்டு முக்கியமான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்துவீர்கள். குடும்பத்தில் உங்களது கௌரவம் ஓங்கும். கணவரிடம் அக்கறையுடன் நடந்துகொள்வீர்கள். சுபகாரியங்களை நடத்த எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். மாணவமணிகளுக்கு படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். ஆசிரியர் சொல்கேட்டு நடப்பீர்கள். விளையாட்டுத்தனத்தைக் குறைத்துக் கொள்ளவும். நண்பர்களிடம் பார்த்துப் பழகவும். 

பரிகாரம்: அம்பாள் தரிசனம் உகந்தது.

***

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் அந்தஸ்தும் புகழும் படிப்படியாக உயரும். குடும்பத்தினருடன் விட்டுக்கொடுத்துச் சென்று கருத்து வேறுபாடுகளை குறைத்துக்கொள்வீர்கள். குழந்தைகள் விஷயத்திலும் நல்ல விஷயங்கள் நடக்கும். செய்தொழிலிலும் பிரச்னைகள் ஏற்படாது. புதிய வாய்ப்புகளும் கிடைக்கப்பெறுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலை பாக்கியமும் உண்டாகும். சிலர் பழைய கூட்டாளிகளை விட்டு விலகி புதிய கூட்டாளிகளுடன் இணைவார்கள். புத்தியைக் கூர்மையாக்கி திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவீர்கள். புதிய ஊர்களுக்குச் சென்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் செயல்களில் மற்றவர் தலையீட்டை விரும்பமாட்டீர்கள். வழக்குகளில் சாதகமான தீர்ப்பாகும். ஆன்மிக பலம் முன்பைவிட அதிகரிக்கும். மகான்களையும் மகத்துவம் மிகுந்த புண்ணியத் தலங்களையும் வழிபட்டு மகிழ்ச்சியடைவீர்கள். குழந்தைகளின் மேற்படிப்புக்கு வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் இடம் கிடைக்கும். அதற்கான வங்கிக் கடன்களும் உடனடியாகக் கிடைக்கும்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் சிறு இடையூறுகள் ஏற்பட்டு விலகும். செய்தொழிலில் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவீர்கள். எதிலும் சிந்தித்து நல்ல முறையில் செயல்படுவீர்கள். இருப்பினும் மனதில் ஒரு சிறு குறை இருந்துகொண்டே இருக்கும். மனதில் உள்ள குறைகளை மறைத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் உலா வருவீர்கள். அனாவசிய சட்டச் சிக்கல்களில் சிக்கிக்கொள்ள நேரிடலாம். அனைத்துச் செயல்களையும் நேர் வழியில் மட்டுமே செய்யவும். வசிக்கும் வீட்டிற்கும் வண்டி வாகனங்களுக்கும் பராமரிப்புச் செலவுகள் செய்ய நேரிடும். வருமானம் தொடர்ந்துகொண்டிருந்தாலும் வரவுக்கு முன்பே செலவு காத்துக்கொண்டிருக்கும். அநாவசிய செலவுகளைத் தவிர்க்கவும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திற்காக செலவு செய்வீர்கள். ஏதாவது ஒருவகையில் சாதனை புரிவீர்கள். நீண்ட கால எண்ணம் ஒன்று நிறைவேறும். கௌரவத்திற்கு எந்தப் பங்கமும் ஏற்படாது. ஆன்மிகத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் அதிக லாபத்தை எதிர்பார்க்க முடியாது. எவருக்கும் முன் ஜாமீன் போடுவதோ உங்கள் பெயரில் பணம் வாங்கிக் கொடுப்பதோ வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் குதூகலத்துடன் ஈடுபடுவார்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட பணிகளில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். நெடுநாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த இடமாற்றத்தைப் பெறுவீர்கள். சக ஊழியர்களும் உதவிகரமாக இருப்பார்கள். அலுவலக ரீதியான பயணங்களில் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. வியாபாரிகள் மந்தமான நிலையிலிருந்து விடுபடுவார்கள். வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் தோன்றும். புதிய சந்தைகளுக்குச் சென்று வியாபாரம் செய்து பெரும் லாபத்தை அள்ளுவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். வங்கிகளில் கடன் பெற்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு இது முன்னேற்றம் தரும் ஆண்டாக அமைகிறது. புதிய குத்தகைகள் தேடி வரும். புதிய முதலீடுகள் செய்து விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு எதிரிகளின் பலம் குறையும். பெரிய பதவிகள் தேடி வரும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். கட்சி மேலிடம் கரிசனத்தோடு நடந்துகொள்ளும். தொண்டர்களின் ஆதரவும் அமோகமாக இருக்கும். அவர்களின் குறைகளையும் பெரிதுபடுத்த வேண்டாம். கலைத் துறையினரின் பெயரும் புகழும் வளரும். புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். திறமைகளை ஒருமுகப்படுத்தி அவற்றுக்கு செயல்வடிவம் கொடுத்து புகழ் பெறுவீர்கள். அனைத்து வசதி வாய்ப்புகளையும் பெற்று மகிழ்வீர்கள். பெண்மணிகள் குடும்பத்தின் தூண்கள் என்கிற நிலைமையை இந்த ஆண்டு பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். எதிர்பார்த்திருந்த சுபகாரியங்கள் நடக்கும். குடும்பத்தில் அமைதி அன்யோன்யம் நிலவும். கணவரிடம் அன்பைப் பெறுவீர்கள். ஆடை ஆபரணங்களை வாங்குவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும். மாணவமணிகள் படிப்பில் ஏற்பட்ட தடங்கல்களை மீறி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். விளையாட்டுகளில் வெற்றிகளைக் காண்பீர்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபட்டு வரவும்.