தனுசு

(வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.

பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்).

***

தனுசு (SAGITTARIUS)

(நவம்பர் 22 – டிசம்பர் 21)

இது ஒரு நெருப்பு ராசி. உபய ராசி மற்றும் ஆண் ராசி. இதன் அதிபதி குரு. குருவானவர் தெய்வ அம்சம் உள்ளவராகக் கருதப்படுகிறார். “குரு பார்க்கக் கோடி புண்ணியம்” என்பார்கள். குரு எங்கிருந்தாலும், அல்லது எங்கு பார்த்தாலும் நன்மை விளையும் என்று சொல்வார்கள். இந்த ராசி மிகுந்த முன்னேற்றத்தை தருகின்ற ராசி. மனித சுதந்திரத்தை எதிர்பார்க்கின்ற ராசி. நல்ல சிந்தனைகளைக் கொடுக்கின்ற ராசி. பாதி மனிதன் வில், அம்புடன் பாதி குதிரை மேல் இருப்பது போன்ற உருவத்தைக் கொண்டுள்ள ராசி. இதனுடைய சின்னம் அம்பு. இதன் குறியீடு I. இடுப்பு, தொடைகள் மற்றும் கணையத்தைக் குறிப்பது இந்த ராசி. இது ஒரு இரட்டை ராசி. சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் இங்கிருந்தால், நண்பன் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது. சனி, சுக்கிரன், புதன் ஆகியவை இங்கிருந்தால், எதிரியின் வீட்டில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

ஆகஸ்ட் 18

இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து  செல்வது நல்லது.  பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
 

ஆகஸ்ட் 11 - ஆகஸ்ட் 17

(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பொருளாதார நிலைமை சீராக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் படிப்படியான வெற்றிகளைத் தேடித்தரும். குடும்பத்தில் உறவினர்களால் சிறு குழப்பங்கள் ஏற்படலாம். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உடல் நலம் சீராக இருக்கும். வீடு மாற்றம் செய்ய நினைப்பவர்கள் அதை நிறைவேற்றிக்கொள்ளலாம். 

உத்தியோகஸ்தர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பணவரவும் நன்றாகவே இருக்கும். வியாபாரிகள் துணிந்து முதலீடுகள் செய்து எதிர்பார்த்த லாபத்தை அள்ளுவார்கள். விற்பனையில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். விவசாயிகள் புதிய குத்தகைகளை எடுக்க வேண்டாம். வாய்க்கால் வரப்பு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். 

அரசியல்வாதிகள் யோசித்து எடுக்கும் முடிவுகள் வெற்றியைக் கொடுக்கும். தொண்டர்களை அனுசரித்துச் செல்லவும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வார்கள். உங்கள் முயற்சிகள் வெற்றிப்பாதையை காட்டும். பெண்மணிகள் இல்லத்தில் நிலவும் சந்தோஷத்தால் உற்சாகம் அடைவார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறையுடன் செயல்படவும். 

பரிகாரம்: அனுமனை வழிபட்டு வரவும். 

அனுகூலமான தினங்கள்: 11, 12. 

சந்திராஷ்டமம்: இல்லை.

ஆகஸ்ட் மாதம்

(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படும் தனுசு ராசியினரே நீங்கள் உயர்ந்த எண்ணங்களை உடையவர்கள். இந்த மாதம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். சுப பலன்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள்  அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும்.  மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும்.

அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். தொகுதி மக்களிடம் நெருங்கி பழகுவது அவசியம்.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அயராத உழைப்பால் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள்.

மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

மூலம்:
இந்த மாதம் மனதில் தன்னம்பிக்கை கூடும். துணிச்சலாக எதிலும் ஈடுபடுவீர்கள். சந்திரன் சஞ்சாரம் உங்களது எண்ணப்படியே எதையும் செய்து முடிக்கும் சூழ்நிலை ஏற்படும். மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் நாட்டம் செல்லும். கவுரவம் அந்தஸ்து உயரும். வீண் செலவுகள் உண்டாகும்.

பூராடம்:
இந்த மாதம் தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்களது தொழில் விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதற்கு தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். ஆனால் போட்டிகள் பற்றிய கவலைகள் தோன்றும். சமாளிக்க முயல்வீர்கள்.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது திறமையால் அலுவலக பணியை சிறப்பாக செய்வார்கள். புதிய தொடர்புகள் மகிழ்ச்சியை  தருவதாக இருக்கும். குடும்பத்தில்  சுபகாரியம் நடைபெறும். மனைவி குழந்தைகளுடன் சந்தோஷமாக  பொழுதை கழிப்பீர்கள். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி

சந்திராஷ்டம தினங்கள்: 20 - 21

அதிர்ஷ்ட தினங்கள்: 13 - 14

தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

இந்த ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் உங்கள் செயல்பாடுகளில் சிறு இடையூறுகள் குறுக்கிடக் காண்பீர்கள். இதனால், தாமதத்துக்குப் பிறகே வெற்றிகளைப் பெறுவீர்கள். எதிர்பார்த்த வருமானம் கிடைத்தாலும் அதிகமாக உழைப்பை மேற்கொள்வீர்கள். ஒருமுறைக்கு இருமுறை பயணம் செய்தால்தான் உங்கள் காரியங்களைச் சரியாக முடிக்க முடியும். செய்யும் தொழிலை சீரமைப்பீர்கள். உங்கள் புகழும் செல்வாக்கும் குறையாது. சிறிய விஷயங்களுக்கும் கூட பெரிதாகக் கவலைப்படுவீர்கள். குடும்பத்தில் பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. நோய்நொடிகளிலிருந்து விடுபடுவீர்கள். வண்டி வாகனங்களும் இருக்கும் வீட்டுக்கும் பராமரிப்புச் செலவுகள் செய்யவேண்டி வரும். கடன் பிரச்னைகள் என்று எதுவும் ஏற்படாது. அனைவரிடமும் வாக்குவாதம் செய்யாமல் சமாதானப்போக்கை கடைப்பிடிக்கும் காலகட்டமாக இது அமைகிறது. 

இந்த ஆண்டு கார்த்திகை மாதத்திலிருந்து ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பீர்கள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மறைந்து சந்தோஷ சம்பவங்கள் நடக்கும். குடும்பத்திலும் உங்கள் மதிப்பு மரியாதையும் சீரடையும். வருமானம் உயரத் தொடங்கும். கடந்த கால நஷ்டங்கள் வேறு ரூபத்தில் திரும்பி வரும். ஸ்பெகுலேஷன் துறையின் மூலமும் லாபத்தைக் காண்பீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியால் பூரிப்படைவீர்கள். இல்லத்தில் மழலைப் பாக்கியம் உண்டாகும். உங்களின் பொதுத்தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். வறியவர்களை தேடிச்சென்று உதவி செய்வீர்கள். அலைச்சல்கள் மறைந்து சரியான நேரத்தில் உணவெடுத்துக்கொள்வீர்கள். உங்கள் ஆன்மிக பலம் கூடும். புனிதத் தலங்களுக்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சிலருக்கு புது வீடு வாங்கி கிரகப்பிரவேசம் செய்யும் யோகமும் உண்டாகும். வேலை வேலை என்கிற நிலை மாறி அத்தியாவசிய விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் தொய்வில்லாமல் சிறப்பாகவே முடிவடையும். வாழ்க்கையில் தன்னிறைவை காணும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.

உத்தியோகஸ்தர்கள் படிப்படியாக முன்னேற்றத்தை அடைவார்கள். மேலதிகாரிகளின் ஆதரவும் இருக்கும். தாற்காலிகமாக இருந்தவர்கள் நிரந்தர பணியில் அமர்த்தப்படுவார்கள். வேலை மாற்றம் செய்ய விரும்புவோர் அதை இந்த ஆண்டு செய்வார்கள். அலுவலகப் பயணங்களால் உபரி வருமானங்கள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடிவடையும். புதிய கடைகளைத் திறப்பீர்கள். கூட்டாளிகளும் இதற்குத் தேவையான உதவிகளைச் செய்வார்கள். வாக்குத்தவறி தொழில் வட்டாரத்தில் கெட்ட பெயர் வராமல் பார்த்துக்கொள்ளவும். அகலக் காலும் வைக்க வேண்டாம். விவசாயிகள் விளைச்சலில் அதிக கவனம் செலுத்துவார்கள். பாசன வசதிகளைப் பெருக்கிக்கொள்வார்கள். வேலையாட்கள் அனுகூலமாக நடந்துகொள்வார்கள். கையிருப்புப் பொருள்கள் மீது அக்கறை காட்டவும். பெரிய நஷ்டங்கள் எதுவும் உண்டாகாது. எதிர்பாராத பணவரவு உண்டாகும். வெளியில் கொடுத்திருந்த பணமும் திரும்ப கைவந்து சேரும். குடும்பச் சூழ்நிலையும் திருப்திகரமாக இருக்கும். 

அரசியல்வாதிகளைத் தேடி பதவிகள் வரும். எதிரிகளின் பலம் குறையும். தொண்டர்களின் குறைகளை அக்கறையுடன் பரிசீலித்துத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் கௌரவத்தை நிலை நிறுத்திக்கொள்வீர்கள். கட்சி மேலிடத்திடம் பேசும்போது மட்டும் கவனமாக இருக்கவும். கலைத் துறையினருக்கு சக கலைஞர்களின் உதவி சிறப்பாக இருக்கும். துறையில் உயர்ந்தவர்கள் உங்களைத் தூக்கிவிடுவர். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். திறமைகள் பளிச்சிடும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமானம் சிறப்பாக இருக்கும். பெண்மணிகள் புதிய ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வார்கள். தந்தை வழி உறவினர்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவமணிகள் படிப்பில் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு உண்டாகும். 

பரிகாரம்: சனிபகவானை வழிபட்டு வரவும்.

***

ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள் - 2017

இந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் மனோபலம் கூடும். தைரியமாகவும் துணிச்சலாகவும் உங்கள் காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். சிலர் விசாலமான வீட்டிற்குக் குடிபெயருவார்கள். சமுதாயத்தில் மதிப்பு வாய்ந்த பொறுப்புகள் கிடைக்கும். உங்கள் வார்த்தைகளுக்கு வீட்டிலும் வெளியிலும் மதிப்புண்டாகும். தொலைதூர தொடர்புகளில் ஆதாயங்களைப் பெறுவீர்கள். தத்துவ அறிவு பலப்படும். நண்பர்கள் உற்றார் உறவினர்களுக்கு நீங்கள் உதவிகளைச் செய்வீர்கள். பொருளாதாரம் சீராக இருந்தாலும் சிறிய எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. விலகிச் சென்றிருந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள். பழைய சம்பவங்களை மறந்து ஏற்றுக்கொள்வீர்கள். ஆன்மிகத்திலும் இறைவழிபாட்டிலும் மனதைச் செலுத்துவீர்கள். இந்த காலத்தில் எவரிடமும் வெளிப்படையாகப் பழக வேண்டாம். அடுத்தவர்களை சரியாக எடை போடுவீர்கள். அரசு விவகாரங்களில் அனுகூலமான போக்கைக் காண்பீர்கள். வழக்கு விவகாரங்களிலிருந்து சற்று விலகி இருக்கவும். குழந்தைகளின் முன்னேற்றத்திற்குத் தடையிராது. நீண்டகால எண்ணம் ஒன்று நிறைவேற இந்த காலகட்டத்தில் அடித்தளமிடுவீர்கள்.

செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்கள் வாழ்வில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுவிடும். பொருளாதார வசதிகள் உங்களைத் தேடிவரும். அதிர்ஷ்ட தேவதையின் கடைக்கண் பார்வை உங்கள் மீது சற்று கூடுதலாக விழும். நினைத்த காரியங்கள் குறித்த நேரத்தில் தாமதமின்றி நடந்தேறும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். தொடர்ந்து வியாதியால் அவதிப்பட்டவர்கள் அதிலிருந்து வீழ்வார்கள். வீடு, வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். குடும்பத்தாருடன் சுற்றுலாவுக்கு சென்று வருவீர்கள். உங்களை ஒதுக்கி வைத்திருந்தவர்கள் தாங்களாகவே நேசக்கரம் நீட்டுவார்கள். சொந்தபந்தங்களை நீங்களும் பலப்படுத்திக்கொள்வீர்கள். புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளும் நடக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். தவறு செய்யும் நண்பர்களையும் அரவணைத்துச் சென்று திருத்திவிடுவீர்கள். குழந்தைகளை பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்துவீர்கள். சமுதாயத்தில் முக்கியத்துவம் அதிகரிக்கும். முக்கியப் பிரதிநிதித்துவங்களையும் பெற்று பாராட்டுகளும் கிடைக்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது. 

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த ஆண்டு வருமானம் மளமளவென்று உயரத் தொடங்கும். நெடுநாள்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த பதவி உயர்வும் உங்களைத் தேடிவரும். சக ஊழியர்களின் நட்பும் ஆதரவும் கிடைப்பதால் சிறுசிறு தவறுகள் அமுங்கிப்போய்விடும். வேலைகளை திட்டமிட்டுச் செய்வீர்கள். வியாபாரிகள் எந்தப் போட்டியுமின்றி வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கொடுக்கல் வாங்கல்களில் எந்தச் சிக்கலும் வராது. வசதிகளும் பெருகும். புதிய சந்தைகளைத் தேடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்கி லாபத்தை அள்ளுவீர்கள். வண்டி வாகனம் வாங்கும் ஆண்டாக அமைகிறது. விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகி லாபம் அதிகரிக்கும். கால்நடைகளின் மூலம் நல்ல பலனை எதிர்பார்க்கலாம். வெகு நாள்களாகத் தள்ளிப்போட்டிருந்த ஸ்திரச்சொத்துகள் வாங்கும் திட்டம் கைகூடும். புதிய கழனிகளில் வித்தியாசமாக விவசாயம் செய்து மகசூலை அள்ளுவீர்கள். 

அரசியல்வாதிகளுக்கு தொல்லை கொடுத்துவந்த எதிரிகளின் பலம் குறையும். அவர்கள் உங்களிடமிருந்து விலகியே நிற்பார்கள். கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கட்சி மேலிடம் அளிக்கும் பணிகளைச் செவ்வனே முடித்து பாராட்டைப் பெறுவீர்கள். பலவழிகளிலும் வருவாய் கிடைக்கும். கலைத் துறையினரின் திறமைகள் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். அதில் வெற்றியடைய சில செலவுகளைச் செய்வீர்கள். விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். இதன் மூலமும் திடீர் சன்மானம் கிடைக்கும். ரசிகர்களை அரவணைத்துச் சென்று உற்சாகப்படுத்துவீர்கள். பெண்மணிகள் குடும்பத்தில் சந்தோஷத்தைக் காண்பார்கள். குழப்பங்களும் கருத்து வேறுபாடுகளும் நீங்கி கணவரிடம் அன்யோன்யமாகப் பழகுவீர்கள். குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த குறை நீங்கும். மாணவமணிகள் கல்வி கேள்விகள் மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்குவீர்கள். ஆசிரியர்களின் நேசத்தைப் பெறுவீர்கள். நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபட்டு வரவும்.