முதல் எட்டு ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2017!

மேஷம் முதல் விருச்சிக ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டுப் பலன்களை அறிந்து கொள்ள...
முதல் எட்டு ராசிகளுக்கான தமிழ்ப் புத்தாண்டுப் பலன்கள் - 2017!

மேஷம் முதல் விருச்சிக ராசிக்காரர்கள் வரை...
 

அடுத்த 4 ராசிகளுக்கான பலன்கள் அடுத்த வாரம் தினமணியின் வார இதழ்களில் வெள்ளி மணி இணைப்பில் காணலாம்.. அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

புத்தாண்டுப் பொதுப் பலன்கள்

தமிழ் ஆண்டுகள் பிரபவ முதல் அட்சய வரை அறுபது என்பது அனைவரும் அறிந்ததே. தற்சமயம் 31 ஆம் ஆண்டான ஹேவிளம்பி, இந்த சித்திரை மாதம் முதல் தேதி (14.4.2017) உத்திராயண புண்ணிய காலம், வசந்த ருது, கிருஷ்ணபட்சம் (தேய்பிறை) திருதியை திதி வியாழக்கிழமை பின்னிரவு விடிந்தால் வெள்ளிக்கிழமை 02.07 (ஐஎஸ்டி) அளவில் விசாக நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் துலாம் ராசியில் மகர லக்னத்தில் சனிபகவானின் ஹோரையில் பிறக்கிறது.

இந்த ஆண்டு ஆனி மாதம் 6 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பின்னிரவு (விடிந்தால் புதன்)21-6-2017அன்று 04.49 (ஐஎஸ்டி) மணிக்கு சூரியபகவானின் ஹோரையில் சனிபகவான் அதிவக்கிர கதியில் விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இங்கு சனிபகவான் ஐப்பசி மாதம் 8 ஆம் தேதி (25.10.2017) வரை சஞ்சரித்து விட்டு ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி (26.10.2017) வியாழக்கிழமை பிற்பகல் 03.32 (ஐஎஸ்டி) மணிக்கு சூரிய ஹோரையில் விருச்சிக ராசியிலிருந்து (அதிவக்கிர சஞ்சாரம் முடிந்து) தனுசு ராசிக்கு மறுபடியும் பெயர்ச்சி ஆகிறார். இந்த ஆண்டு ஆவணி மாதம் 24 ஆம் தேதி (9.9.2017) சனிக்கிழமை இரவு 20.41 (ஐஎஸ்டி) மணிக்கு சனிஹோரையில் ராகு/கேது பகவான்கள் சிம்ம, கும்ப ராசியிலிருந்து முறையே கடக, மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள்.

இந்த ஆண்டு ஆவணி மாதம் 27 ஆம் தேதி (12.9.2017) செவ்வாய்க்கிழமை காலை 07.00 (ஐஎஸ்டி) மணிக்கு செவ்வாய் ஹோரையில் குருபகவான் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்த ஹேவிளம்பி விஷு புத்தாண்டு பலன்கள் இந்த ராகு- கேது, குரு சனிபகவான்களின் சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டும் எழுதப்பட்டுள்ளது.

வாசகர்கள் அனைவருக்கும் ஹேவிளம்பி தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

இந்த ஹேவிளம்பி ஆண்டின் ஜாதகத்தில் லக்னம் மற்றும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு அதிபதியாக சனிபகவான் வருகிறார். சனிபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்று நவாம்சத்தில் தன் நட்பு வீடான ரிஷப ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய கர்மாதிபதியான சுக்கிர
பகவான் உச்சம் பெற்று நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ஆறு மற்றும் பாக்கியாதிபதியான புதபகவான் சூரியபகவானுடன் இணைந்து புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். தைரிய மற்றும் அயன ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சுக லாபாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். கேது -ராகு பகவான்கள் குடும்ப, அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே தனுசு, மிதுன ராசிகளை அடைகிறார்கள். லக்னாதிபதியாக சனிபகவான் வருவதால் இந்த ஆண்டு அனைவரும் கடினமாக உழைத்து முன்னேற வேண்டி வரும். சனிபகவானை நீதிபதி என்று கூறுவார்கள். அவர் பன்னிரண்டாம் வீட்டில் (குருபகவானின் வீட்டில்) இருப்பதால் வெளிநாடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள் தீர்ந்துவிடும். வெளிநாட்டு வங்கிகளில் இருந்த பணம் நம் நாட்டிற்கு வந்து சேரும். வெளிநாடுகளுடன் வரி தொடர்பான ஒப்பந்தங்கள் நமக்கு சாதகமாக கையொப்பமாகும். எவ்வளவுக்கெவ்வளவு நேர்மையாக கடினமாக உழைக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நமக்கு பயனைத் தருபவர் சனிபகவானாவார். உழைப்புக்கு பின்வாங்கக் கூடாது. சமூக சேவை செய்பவர்கள் முன்னேறுவார்கள். 

பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். அவர் பூர்வபுண்ணிய காரகரான சூரியபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் சுக்கிரபகவானின் காரகத்துவம் பெற்ற தொழில்கள் வளர்ச்சி அடையத் தொடங்கும். குறிப்பாக, நகைத்தொழில், தங்கம், வெள்ளி, கவரிங், சிமெண்ட், பெயிண்ட், இரும்பு, கம்பி, பெட்ரோலியம் ஆயில், வாகன உதிரிபாகங்கள், மருந்துக் கடை சில்லரை, மொத்த வியாபாரம் ஆகிய துறைகள் சிறப்பாக வளர்ச்சி அடையும். பாக்கியாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் அமர்ந்து நட்பு ஸ்தானாதிபதியை சமசப்தம பார்வை செய்வதால் வியாபார விஷயங்களில் நுணுக்கங்களைப் புரிந்து கொள்ள முடியும். உலக வர்த்தக சங்கத்தில் நமது உரிமைகள் நிலை நாட்டப்படும். நான்காமிடமும் சனிபகவானும் வலுத்திருப்பதால் விவசாயம் மேன்மையடையும். புத, சுக்கிர, சனிபகவான்கள் யோக காரகர்களாக அமைந்து வலுவாக இருப்பதால் கேளிக்கைத் துறை ஏற்றம் பெறும். குறிப்பாக, இந்த துறைகளில் உலகளவில் விருதுகள் கிடைக்கும். அதனால் இந்த ஆண்டு சண்டைச் சச்சரவு இன்றி அமைதியாகக் கழியும் என்றால் மிகையாகாது.

ராகு / கேது பகவான்கள் முறையே கரும்பாம்பு, செம்பாம்பு என்று கூறுவார்கள். இவர்கள் தாம் அமர்ந்த வீடுகளை சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். அதனால் அந்த வீட்டுக்கதிபதிகளின் தன்மைக்கேற்ப பலனளிப்பார்கள். இவர்கள் யாருடன் இணைந்திருக்கிறார்களோ அந்தக் கிரகங்களும் இந்த சர்ப்பக் கிரகங்களின் குணத்தோடு ஒத்துப் போக வேண்டியுள்ளது. இவர்கள் ஆட்சி உச்சம் பெற்ற கிரகங்களுடன் இணைந்திருந்தால் அஷ்டமஹா நாகயோகத்தைப் பெறுகிறார்கள். மற்றபடி இவர்கள் தனித்தே இருந்தால் நலம் ஓங்கும். பொதுவாக, இவர்கள் லக்னத்திற்கு 3,6,11 ஆம் இடங்களில் இருப்பது நல்லது. ராகு-பகவானை பிதாமஹரைக் (தந்தையின் தந்தை) குறிப்பார் என்றும்; கேதுபகவானை மாதாமஹரைக் (அன்னையின் தந்தை) குறிப்பார் என்றும் கூறுவார்கள். ராகுபகவானைப் பற்றிய ஒரு ஜோதிட வழக்கே உள்ளது.

ஆ மேட எருது சுறா நண்டு கன்னி
ஐந்திடத்துங் கருநாகம் அமர்ந்திடவே
பூமேடை தனில் படுத்துறங்கும் ராஜயோகம்

என்று கூறப்பட்டுள்ளது. அதனால் இந்த கடக ராகு/ மகர கேது பெயர்ச்சி தனித்தன்மையை பெறுகிறது.

பொதுவாகவே, ராகு / கேது பகவான்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான வாழ்க்கைப் பாடங்களையும் அனுபவங்களையும் மேன்மையையும் கொடுக்கிறார்கள். ராகுபகவானை போககாரகர் என்றும் கேதுபகவானை மோட்சக்காரகர் என்றும் கூறுகிறார்கள். மோட்சக் காரகர் என்பதால் செல்வத்தைக் கொடுக்கமாட்டார் என்று இல்லை. திடீர் அதிர்ஷ்டத்தையும் அதை திடீரென்று பறித்து கொள்வதும் இவர்களுக்குக் கைவந்த கலை. அதனால் மேற்கூறிய ஜோதிட வழக்கு கேதுபகவானுக்கும் பொருந்தும் என்பது எங்கள் கருத்தாகும்.

இந்த ஆண்டு ஆவணி மாதம் 24 ஆம் தேதி (9.9.2017) அன்று ராகு- கேது பகவான்கள் முறையே, கடக/ மகர ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இதனால் ரிஷபம், கும்பம், கன்னி ராசிகள் ராகுபகவானின் சஞ்சாரத்தாலும் விருச்சிகம், சிம்மம், மீன ராசிகள் கேதுபகவானின் சஞ்சாரத்தாலும் நன்மையடைகின்றன. பத்தில் ஒரு பாபி என்கிற ரீதியில் பார்த்தால் மேஷம், துலாம் ராசிகளும் பயனடைகின்றன. இது ஒன்றரை ஆண்டுகள் 22.3.2019 வரை சஞ்சரித்துவிட்டு 23.3.2019 அன்று மாலை 04.14 (ஐஎஸ்டி) முறையே மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். அதோடு சூரியபகவானுடன் இணையும் கிரகங்களில் ராகு - கேது பகவான்களைத் தவிர மற்ற ஆறு கிரகங்களும் அஸ்தாங்கத தோஷத்தை அடையும். பொதுவாக, ராகு- கேது பகவான்கள் தசா புக்தியின் பிற்பகுதியில் பலன் தருவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com