புக்தியின் காலம் அறிய..

உங்களுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் 2 ஆம் பாதம். பிறப்பில் சனி மகாதசையில் இருப்பு 13 வருடங்கள்,
புக்தியின் காலம் அறிய..

எனக்கு 55 வயதாகிறது. சொந்த வீடு அமைப்பு உண்டா? அது எப்பொழுது அமையும்? ஆயுள் பலம் எப்படி உள்ளது? ஒரு தசையில் புக்தியைக் கண்டுபிடிக்க சுலபமான வழி உண்டா?
- வாசகர், தஞ்சாவூர்

உங்களுக்கு விருச்சிக லக்னம், விருச்சிக ராசி, அனுஷம் நட்சத்திரம் 2 ஆம் பாதம். பிறப்பில் சனி மகாதசையில் இருப்பு 13 வருடங்கள், 1 மாதம், 24 நாள்கள் என்று வருகிறது. லக்னம் வர்கோத்தமமாக (அதாவது ராசியிலும் நவாம்சமும் விருச்சிக ராசியாக) அமைகிறது. மேலும் உங்களுக்கு விருச்சிக ராசி. லக்னமும் ராசியும் ஒன்றாகவே அமைவது ஒரு தனிச்சிறப்பாகும். லக்னத்திலிருந்தும் சந்திர ராசியிலிருந்தும் கிரகங்களின் நிலைமைகளைப் பார்க்கும் வழக்கம் உள்ளது. குறிப்பாக, குரு, சனி, ராகு- கேது பகவான்களின் பெயர்ச்சிகளை லக்னத்திலிருந்தும் பார்த்து பலன் கூறுவார்கள். இப்படி ராசியும் லக்னமும் ஒன்றாக அமைந்திருப்பவர்களுக்கு ராசிக்கு நடக்கும் பலன்கள் லக்னம் மூலமாகவும் தானாகவே பொருத்தமாக அமைந்து விடுமல்லவா? மேலும் சந்திரபகவான் பாக்கியாதிபதியாகி லக்னத்தில் நீச்சமாகி நீச்சபங்க ராஜயோகத்தைப் பெற்று நவாம்சத்தில் லாப ஸ்தானத்தில் (கன்னி ராசி) அமர்ந்திருக்கிறார்.
லக்னம் மற்றும் ஆறாம் வீடான ருணம் (கடன்),
ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். ஆறாமதிபதி எட்டாம் வீட்டில் அமர்வது விபரீதராஜயோகத்தைக் கொடுக்கிறது. லக்னாதிபதி எட்டாம் வீட்டில் அமர்வது சிறு குறை என்றாலும் அவர் நவாம்சத்தில் உச்சம் பெறுவதால் நான்கில் மூன்று பங்கு பலம் பெற்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றுள்ள சனிபகவானுடன் இணைந்திருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். மேலும் குருபகவான் தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார்.
களத்திர, நட்பு மற்றும் அயன ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம லாபாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் தன, பஞ்சமாதிபதியான குருபகவானின் சாரத்தில் (புரட்டாதி நட்சத்திரம்) சுக ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். இங்கு ஒன்றை கவனிக்க வேண்டும். அதாவது பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானாதிபதியின் சாரத்திலும் தொழில் ஸ்தானாதிபதியான சூரிய
பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியின் சாரத்திலும் அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு "நட்சத்திர பரிவர்த்தனை', "சூட்சும பரிவர்த்தனை' "அல்லது சாரபரிவர்த்தனை' என்று பெயர்.
இதனால் பூர்வபுண்ணியத்தால் செய்தொழில் வளர்ச்சி அடைந்து சிறப்பான நிலையை எட்டி விடுவீர்கள் என்று கூற வேண்டும். மேலும் தொழில் ஸ்தானாதிபதி தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். கேது- ராகு பகவான்கள் சுக, தொழில் ஸ்தானங்களில் அமர்ந்து நவாம்சத்தில் மகர, கடக ராசிகளை அடைகிறார்கள். மேலும் அவர்களும் நட்சத்திர பரிவர்த்தனை பெற்றிருக்கிறார்கள் அதாவது கேதுபகவான் ராகுபகவானின் சாரத்திலும் (சதய நட்சத்திரம்), ராகுபகவான் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்திருக்கிறார்கள். நான்காம் வீட்டைக்கொண்டு ஒருவருக்கு அமையும் வீடு, வாகனம் பற்றி அறிய வேண்டும். நான்காம் வீடு பலம் பெற்று அமைந்திருக்குமானால் வித்யா பாண்டித்யம் (கல்வியில் நுணுக்கமாக புரிந்து கொள்ளும் தன்மை) பிறருக்குப் பயன்படுகிற வகையில் வாழ்கின்ற பண்பும் ஜாதகருக்கு அமையும்.
வீடு, வாகன காரகராக சுக்கிரபகவானை குறிப்பிட்டுள்ளார்கள். நான்காம் வீட்டோன் வலுத்திருந்தால் சொந்த வீடு பாக்கியம் உண்டு. நான்காம் வீட்டோன் தசை, புக்தி, அந்தரங்களில் சொந்த வீடு அமையும். நான்காம் வீட்டோன் லக்னத்தில் இருந்தால் சொந்த வீட்டில் நிம்மதியாக வாழும் நிலை உண்டாகும். நான்காம் வீட்டில் அசுபர்கள் கூடி இருந்தால் சொந்த வீட்டில் வாழ பிரச்னைகள் தோன்றும். உங்களுக்கு சுக்கிரபகவான் (வீடு, வாகன காரகர்) ஆறாம் வீட்டில் மறைவு பெற்றுள்ளார். இதை "பிருகு ஷட்தோஷம்' என்பார்கள். அதேநேரம் உங்களுக்கு சுக்கிரபகவான் வர்கோத்தமத்தில் இருப்பது நலமே. நான்காம் வீட்டில் அசுப கிரகங்கள் இருந்தாலும் அவர்களுக்கு சாரபலம் நன்றாக உள்ளது.
நான்காம் வீட்டோனான சனிபகவான் நான்காம் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருந்தாலும் குருபகவானுடன் இணைந்து ஆட்சி பெற்றுள்ளார். இதனால் உங்களுக்கு சொந்த வீடு பாக்கியம் உள்ளது என்று உறுதியாகக் கூறலாம். 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் சுக்கிரபகவானின் தசை நடக்கும். இந்த தசை முடியும் தருவாயிலோ அதாவது கேதுபகவானின் புக்தியிலோ அல்லது சூரியபகவானின் தசையின் முற்பகுதியிலோ சொந்த வீடு கட்டி குடிபுகும் யோகம் உண்டாகும்.
சனிபகவான் ஆயுள் காரகராகி எட்டாம் வீட்டுக்கு எட்டாம் வீட்டில் (பாவாத்பாவம்) ஆட்சி பெற்று இருப்பதால் தீர்க்காயுள் உண்டு. ஒரு தசையில் புக்தியை எப்படி தோராயமாக கணிக்க வேண்டும் என்பதற்கு ஒரு சிறிய வழி உள்ளது. இதை அனைவரும் சுலபமாகப் புரிந்து
கொள்ளலாம்.
ஒன்பது கிரகங்களின் தசை காலங்களாவன: சூரியபகவான் (6), சந்திரபகவான் (10), செவ்வாய்பகவான் (7), ராகுபகவான் (18) குருபகவான் (16), சனிபகவான் (19), புதபகவான் (17), கேதுபகவான் (7), சுக்கிரபகவான் (20), சந்திரபகவானின் தசையில் சந்திரபகவானின் புக்தி 10 மாதங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதை சுலபமாக அறிந்து கொள்ள (பஞ்சாங்கத்தைப் பார்க்காமல்) ஒரு வழி உள்ளது. சந்திரபகவானும் 10 வருடங்கள் என்று உள்ளதால் 10ஷ்10= 100 என்று வருகிறது. இதில் கடைசி எண் "0' என்பது நாள்களாகும். முதலில் வருவது மாதங்களாகும். அதாவது சந்திரபகவானின் தசையில் சந்திரபகவானின் புக்தி 10 மாதங்கள், "0' நாள்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும். இதேபோல் மற்ற கிரகங்களின் தசை புக்திகளை மனதிலேயே பெருக்கி கடைசி எண்ணை தவிர்த்து விட்டால் முதலில் வருவது மாதங்கள் கடைசியில் வருவது நாள்கள் என்பதாகும். இதில் நாள்களில் சிறிது மாறுதல் வரும். ஆனால் மாதங்கள் மாறாது. தொடர்ந்து யோக தசைகள் நடக்க இருப்பதால் (பத்தாமதிபதி, பாக்கியாதிபதி மற்றும் லக்னாதிபதி) எதிர்காலம் வளமாக அமையும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும்.பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

ஜோதிடர் கே.சி.எஸ். ஐயர், சென்னை. ஜோதிடரை தொடர்பு கொள்ள: 044-24412168

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com