எனது மனைவி திருமாங்கல்யத்தை கழற்றி விட்டார்கள். இவை அனைத்தும் நடக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா?

உங்களுக்கு துலாம் லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம், படிப்பில் குருமகா தசையில் இருப்பு 5 வருடங்கள், 2 மாதங்கள், 12 நாள்கள் என்று வருகிறது.
எனது மனைவி திருமாங்கல்யத்தை கழற்றி விட்டார்கள். இவை அனைத்தும் நடக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா?

நாங்கள் மிகுந்த கடன் பிரச்னையில் இருப்பதால் ஜோதிடம் பார்க்கச் சென்றோம். அதில் தெரிந்து கொண்ட விவரங்கள் 1. எனது மூதாதையருக்கு செய்யப்பட்ட செய்வினை கோளாறானது என்னையும் என் குடும்பத்தையும் பாதிப்பதாக தெரிந்து கொண்டோம். 2. எனக்கு நிலையான வேலை இருக்காது என்றும் வெளியூரில் வேலை பார்த்தால் கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் இன்றி நீடிக்கும் இல்லையேல் பிரிய நேரிடும். 3. இதனால் என் மனைவி பிரச்னைகளைத் தவிர்க்க திருமாங்கல்யம் அணிய வேண்டாம். 4. மகனுக்கு படிப்பு மற்றும் எதிர்காலம் சிறப்பாக கூறும்படி இல்லை. 5. மகளின் படிப்பும் சுமாராகத்தான் இருக்கும். அவரது முதல் திருமண வாழ்வு நிலைக்காது என்றார். எனது மனைவி திருமாங்கல்யத்தை கழற்றி விட்டார்கள். இவை அனைத்தும் நடக்கக்கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளனவா?
- வாசகர், திருநெல்வேலி 

உங்களுக்கு துலாம் லக்னம், மீன ராசி, பூரட்டாதி நட்சத்திரம் 3 ஆம் பாதம், படிப்பில் குருமகா தசையில் இருப்பு 5 வருடங்கள், 2 மாதங்கள், 12 நாள்கள் என்று வருகிறது. லக்னம் மற்றும் எட்டாம் வீட்டுக்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். லக்னாதிபதி பாதக ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதால் பாதகம் செய்ய மாட்டார். சனிபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சுயசாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னிராசியை அடைகிறார். புதபகவான் அயன ஸ்தானத்தில் ஆட்சி, உச்சம் மூலத்திரிகோணம் பெற்றும் வர்கோத்தமம் (ராசியிலும் நவாம்சத்தில் ஒரே ராசியில் இருக்கும் நிலை) பெற்று அமர்ந்திருக்கிறார். அவருடன் லாபாதிபதியான சூரியபகவான் அமர்ந்து (நவாம்சத்தில் மகர ராசி) புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். உச்சம் பெற்ற பாக்கியாதிபதி மற்றும் சூரியபகவானை ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றுள்ள குருபகவான் பார்வை செய்வதால் பாக்கியாதிபதி முழுமையான பலம் பெறுகிறார். மேலும் குருபகவானின் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானையும் பார்வை செய்கிறார். குருபகவானின் ஒன்பதாம் பார்வை தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும் படிகிறது. செவ்வாய்பகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுயசாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானத்தில் சனிபகவானும் தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் அமர்ந்திருப்பதால் இறுதிவரை சிறப்பான வருமானம் வந்து கொண்டிருக்கும். மேலும் பாக்கியாதிபதியும் பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் இறுதிவரை குடும்பத்துடன் இணைந்து வாழ உத்திரவாதம் உள்ளது. 

செவ்வாய்பகவான் சுயசாரத்தில் அமர்ந்து பலம் பெற்று இருப்பதால் மணவாழ்க்கையும் சிறப்பாகவே அமையும். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதியான குருபகவான் வர்கோத்தமம் (ரேவதி நட்சத்திரம் 4 ஆம் பாதம்) பெற்று ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்று இருப்பதாலும் லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்து இருப்பதாலும் உங்களுக்கு தற்சமயம் புதபகவான் தசை முடியும் தருவாயில் உள்ளதால் (அதாவது 1.12.2016 வரை) இது தசா சந்திப்பு காலமாக உள்ளதால் குடும்பத்தில் கடன் பிரச்னைகள் போன்ற குழப்பங்கள் உண்டாகியுள்ளன. தொடர்வது பலம் பெற்ற செவ்வாய்பகவானுடனுள்ள கேது பகவானின் தசை நடப்பதால் கடன்கள் தீர்ந்து பொருளாதாரம் சிறப்பாக வளர்ச்சி அடையும். ஆயுள் ஆரோக்கியம் இரண்டும் சிறப்பாக உள்ளது. சூரியபகவான் சுயசாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் மூதாதையர்களுக்கு செய்யப்படட செய்வினை உங்களை பாதிக்கின்றது என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். 

உங்கள் மனைவிக்கு மேஷ லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம் 3 ஆம் பாதம். சுக்கிர மகா தசையில் இருப்பு 9 வருடங்கள், 0 மாதங்கள், 5 நாள்கள் என்று வருகிறது. லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதியுமான செவ்வாய்பகவான் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் வர்க்கோத்தமத்தில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து இருக்கிறார். இதனால் லக்னம் மற்றும் மாங்கல்ய ஸ்தானாதிபதி சுப பலம் பெற்றிருக்கிறார். சூரிய பகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் பாக்கியாதிபதி மற்றும் புதபகவானுடன் இணைந்திருக்கிறார்.  தனம், வாக்கு, குடும்பம் மற்றும் களத்திரஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். தற்சமயம் கடக ராசியில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசை நடக்கிறது.  ராகுபகவானின் தசையில் பாக்கியாதிபதியான குருபகவானின் தசை 4.10 2017 வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் உங்கள் குடும்ப பிரச்னைகள் கடன் பிரச்னை உட்பட பெருமளவுக்குக் குறைந்து விடும். மணவாழ்க்கை, கணவரின் ஆயுள் ஆகியவை தீர்க்கமாக அமையும்.

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், மேஷ ராசி, பரணி நட்சத்திரம். பிறப்பில் சுக்கிர மகா தசையில் இருப்பு 9 வருடங்கள், 10 மாதங்கள், 13 நாள்கள் என்று வருகிறது. லக்னம் மற்றும் சுக ஸ்தானாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத சுக்கிர பகவான்களையும் தைரிய ஸ்தானம் பூர்வபுண்ணிய ஸ்தானம் அங்கு அமர்ந்திருக்கும் சந்திரபகவானையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சூரியபகவானின் தசை நடக்கிறது. இதில் சனி புக்தி 7.8.2017 உடன் முடிவடைகிறது. இந்த தசை முடிவதற்குள் (அதாவது 19.10.2019) அவர் வாழ்க்கையில் சாதகமான திருப்பங்களும் மகிழ்ச்சியும் உண்டாகிவிடும். தொடர்வதும் 

சந்திரபகவானின் தசையாக உள்ளதால் மேலாண்மைத்துறையில் படிப்பு சிறப்பாக அமைந்து நல்ல உத்தியோகத்தையும் பெற்றுவிடுவார். உங்கள் மகளுக்கு கடக லக்னம், விருச்சிக ராசி, அனுஷ நட்சத்திரம் 2 ஆம் பாதம். சனி மகா தசையில் கர்ப்பச் செல்லுபோக இருப்பு 10 வருடங்கள் 6 மாதங்கள் 9 நாள்கள் என்று வருகிறது. பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் லக்னாதிபதி, ஆட்சி பெற்ற பூர்வபுண்ணிய தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான், பாக்கியாதிபதியான குருபகவான், மற்றும் தைரிய ஸ்தானாதிபதியான புதபகவான் ஆகியோர் இணைந்து இருக்கிறார்கள். சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து அஷ்டம ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அவருக்கு 28.6.2017க்குப்பிறகு புதபகவானின் தசை நடக்கத் தொடங்கும். அவருக்கு படிப்பிலோ மணவாழ்க்கையிலோ பொருளாதாரத்திலோ எதிர்காலத்திலோ எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை. களத்திர ஸ்தானாதிபதிக்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்த்தால் போதுமானது. சௌபாக்கியவதியாக வாழ்வாள்.
அந்த நண்பர் ஆராயாமல் கூறியிருந்தாலும் அவர் கூறியதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதாலும் இவ்வளவு விளக்கமாக எழுதியிருக்கிறோம். உங்கள் மனைவிக்கு ஒரு நல்லநாள் பார்த்து மறுபடியும் மங்கலநாணை கட்டி விடவும். "தாலி பெண்ணுக்கு வேலி' மணவாழ்க்கைக்கு மாங்கல்யம்தான் முக்கியமான அடையாளம். பிரதி திங்கள்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் பார்வதி பரமேஸ்வரர்களை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com