என் பேரனுக்கு  சரியாகப் பேச்சு வரவில்லை. எப்பொழுது பேச்சுவரும்?  பாலாரிஷ்ட தோஷம் என்றால் என்ன? - வாசகி

உங்கள் பேரனுக்கு துலா லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஒன்பதாம்

உங்கள் பேரனுக்கு துலா லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னம் மற்றும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். லக்னாதிபதி திரிகோண ராசிகளில் இருப்பது சிறப்பு. அதிலும் அவர் உச்ச திரிகோணமான ஒன்பதாம் வீட்டில் இருந்தால் கடுகளவு உழைப்பில் மலையளவு வருமானம் கிடைக்கும் என்று கூறலாம். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளும் தானாகவே தேடிவரும். லக்னாதிபதி உயிர் ஸ்தானாதிபதியாவதால் அவரின் சிறப்பான பலம் அனைவருக்கும் அவசியமானதாகும். அதனால் ஜாதகர் மற்றவர்களை மிஞ்சக்கூடிய அளவுக்கு திறமைகளை வளர்த்துக் கொள்வார் என்றால் மிகையாகாது. சுக பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சனிபகவான் லக்னத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். ஒன்பதாம் அதிபதியான பாக்கியாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்பம் மற்றும் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியுமான செவ்வாய்பகவான் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மேஷ ராசியை அடைகிறார். தைரிய மற்றும் ஆறாமதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பத்தாமதிபதியான கர்மாதிபதியுமான சந்திரபகவான் மேஷ ராசியில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். லாப ஸ்தானமான பதினொன்றாமதிபதியான சூரியபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடகராசியை அடைகிறார். ராகுபகவான் லக்னத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். கேதுபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
ஒருவர் ஜாதகத்தில் லக்னத்திற்கு அடுத்தபடியாக பூர்வபுண்ணியம் உள்ளதா என்று பார்க்க வேண்டும். அவருக்கு பூர்வபுண்ணியாதிபதி லக்னத்தில் உச்சம் பெற்று குருபகவானால் பார்க்கப்படுகிறார். இதனால் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சசமஹா யோகம் உண்டாகிறது. இதனால் பூர்வபுண்ணியம் முழுமையாக உள்ளது. லக்னாதிபதி ஆட்சி பெற்ற பாக்கியாதிபதியுடன் பாக்கிய ஸ்தானத்தில் இருப்பது லட்சுமி யோகமாகும். பேச்சு என்பது இரண்டாம் வீடான வாக்கு ஸ்தானத்தைக் கொண்டு அறியப்படுகிறது. மேலும் பேச்சுக்குரிய கிரகம் அறிவுக்கு காரணமான புதபகவானாவார். புதபகவான் சுப பலம் பெற்றிருக்கிறார். வாக்கு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் எட்டாம் வீட்டில் கர்மாதிபதியான சந்திரபகவானின் சாரத்தில் அமர்ந்து தன் ஆட்சி வீடான வாக்கு ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்.  நவாம்சத்திலும் அவர் தன் மூலத்திரிகோண ராசியை அடைகிறார். மேலும் அவருடன் லாபாதிபதியான சூரியபகவானும் சந்திரபகவானின் சாரத்தில் இணைந்திருக்கிறார்.
சர லக்னங்களுக்கு பதினொன்றாம் வீடான லாப ஸ்தானம் பாதக ஸ்தானமாகும். பாதக ஸ்தானாதிபதியான சூரியபகவான் எட்டாம் வீட்டில் மறைவு பெறுவதால் பாதகாதிபத்யம் நீங்கி விடுகிறது. சூரியபகவானுக்கு சாரமளித்த சந்திரபகவான் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாகிறார்.
சூரியபகவான் கர்ம ஸ்தானத்திற்கு லாப ஸ்தானத்தில் அதாவது பாதக ஸ்தானத்தில் (கடகம் சர ராசியாகும்) அமர்ந்து தசையை நடத்துகிறார். நிரந்தர வியாதி ஏற்படுமா என்பதை எட்டாம் வீட்டை வைத்து பார்க்க வேண்டும். எட்டாம் வீடு பெரியதாக பாதிப்படையவில்லை என்று கூற வேண்டும். சூரிய, செவ்வாய் பகவான்கள் எங்கு சேர்ந்திருந்தாலும் தோஷம் என்பது பொது வாக்காகும். அவர்கள் இருவரும் அசுப ஆதிபத்யங்கள் நீங்கி நலம் செய்யும் நிலையில் இருக்கிறார்கள். மேலும் எட்டாம் வீட்டோன் பல நிலைகளிலும் அசுப பலம் பெற்றிருந்தால்தான் நிரந்தர வியாதி அல்லது பாதிப்பு ஏற்படும். லக்னாதிபதி ஆறாம் வீட்டு ஆதிபத்யம் பெற்றிருந்தால் (ரிஷப, விருச்சிக லக்னங்களுக்கு) ஆறாமாதிபத்யத்தை விட லக்ன ஆதிபத்யம்தான் சிறப்பு என்றும்; அதேபோல் லக்னாதிபதி எட்டாம் வீட்டு ஆதிபத்யம் பெற்றிருந்தால் (மேஷம், துலாம் லக்னங்களுக்கு) எட்டாமாதிபத்யத்தை விட லக்ன ஆதிபத்யம் சிறப்புறும்  என்றும் கூற வேண்டும்.
மூன்று ஆறாமதிபதியான குருபகவான் லக்னத்திற்கு அசுபர் என்கிற நிலையில் இருந்தாலும் அவரைவிட லக்னாதிபதி கூடுதல் பலம் பெற்று சிறப்பாக அமர்ந்திருக்கிறார். மேலும் அசுப ஸ்தானங்களான 3,6,8,12 மற்றும் சுப ஸ்தானங்களான 1,4,7,9,10 ஆகிய எந்த வீட்டுக்கும் பாபகர்த்தாரி யோகம் ஏற்படவில்லை. பாபகர்த்தாரி யோகம் சுப ஸ்தானங்களுக்கு ஏற்பட்டால் சுபம் குறையும் என்றும்; அசுப ஸ்தானங்களுக்கு ஏற்பட்டால் அசுபம் கூடும் என்றும் கூற வேண்டும். பாப கர்த்தாரி யோகம் என்பது ஒரு பாவத்திற்கு 2,12 ஆம் வீடுகளின் அசுப கிரங்கள் ஒன்றோ அதற்கு மேற்பட்டோ இணைந்திருப்பதாகும். இதில், ராகு/ கேது பகவான்கள் 12 ஆம் வீட்டில் இருந்தாலும் பாப கர்த்தாரி யோகத்தால் பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் அவர்கள்அப்பிரதட்சணமாக அதாவது பின்னோக்கி பதினொன்றாம் வீட்டை நோக்கி பயணிப்பார்கள் என்பதால் தான் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அரிஷ்ட யோகம் என்றால் லக்னாதிபதி 6,8,12 ஆம் அதிபதிகள் எவரோடும் இணைந்தோ அல்லது பார்க்கப்பட்டாலோ ஏற்படும். குழந்தைகளுக்கு எட்டு வயது வரை பாலாரிஷ்டம் பார்க்க வேண்டும் என்பார்கள். அவருக்கு லக்னாதிபதியே எட்டாமதிபதியாகி, ஆறு, பன்னிரண்டாமதிபதிகளுடன் இணைந்திருப்பதால் கூறியிருப்பார்கள் என்று நினைக்கிறோம். இந்த கிரகங்களில் புத, சுக்கிர பகவான்களுக்கு திரிகோணாதிபத்யம் ஏற்பட்டு விடுவதால் பாலாரிஷ்டம் ஏற்படாது. இந்த  ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் புதபகவானின் புக்தியும்; அடுத்த ஆண்டு இறுதிவரை சுக்கிரபகவானின் புக்தியும் நடந்து சூரியமஹா தசை முடிவுற்று விடும். அதனால் இந்த ஆண்டு அவருக்கு பேச்சு முழுமையாக வரத்தொடங்கிவிடும். ஐந்து வயது வரை பேச்சு வராமல் திருச்செந்தூர் முருகப்பெருமானின் அருளால் பேசும் ஆற்றல் பெற்ற குமரகுருபரர் இயற்றிய கந்தர்கலி வெண்பா மற்றும் மீனாட்சியம்மைப் பிள்ளை தமிழ் ஆகியவைகளை படித்துவரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com