என் மகளுக்கு எப்போது திருமணமாகும்? 8 இல் ராகு இருப்பது குறை.  தாலிபாக்கியம் எவ்வாறு உள்ளது? களத்திர ஸ்தானாதிபதி செவ்வாய் நீசம். இதனால் கணவர் நலம் வளமாக அமையுமா? குழந்தை பாக்கியம் தாமதமாகுமா? என்மகளுக்கு நல்ல ஜாதகமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?- வாசகர், நெல்லை

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி. லக்னம் மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிரபகவான் மூன்றாம் வீடான

உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், கன்னி ராசி. லக்னம் மற்றும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானங்களுக்கு அதிபதியான சுக்கிரபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். 
தனம், வாக்கு, குடும்பம் மற்றும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் தன ஸ்தானத்திலேயே ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் தனுசுராசியை அடைகிறார். 
தர்மகர்மாதிபதியான சனிபகவான் தர்ம ஸ்தானமான பாக்கிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் மேஷ ராசியில் நீசமடைகிறார். 
மூன்றாமதிபதியான தைரிய ஸ்தானாதிபதி சந்திரபகவான் கன்னி ராசியில் சுய சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். 
சுக ஸ்தானாதிபதியான சூரியபகவான் குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருக சீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
களத்திர நட்பு மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் மூன்றாமிடமான தைரிய ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில்( ஆயில்ய நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில் உச்சமடைகிறார். 
அஷ்டம, லாபாதிபதியான குருபகவான் மூன்றாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார். 
கேதுபகவான் குடும்ப ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். ராகுபகவான் எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
உங்கள் மகளுக்கு குடும்ப ஸ்தானம், அஷ்டம ஸ்தானம் ஆகிய வீடுகளில் கேது - ராகுபகவான்கள் அமர்ந்திருக்கிறார்கள். இதற்கு சர்ப்ப தோஷம் என்று பெயர். அஷ்டம ஸ்தானமானது ஆயுள் ஸ்தானம் என்றாலும் பெண்களுக்கு மாங்கல்ய ஸ்தானமுமாகும். தாலி பாக்கியம் என்பதை இந்த வீட்டைக் கொண்டே பார்க்க வேண்டும். 
எட்டாம் வீட்டில் ராகுபகவான் உள்ளதால் தாலி பாக்கியத்தைச் சற்று கவலையுடன் கேட்டுள்ளீர்கள். ராகுபகவான், தான் இருக்கும் வீட்டைத் தனதாக்கிக் கொண்டு பலன் தருவார் என்பது விதி. பொதுவாக, ராகுபகவான் அசுபக்கிரகம் என்பதாலும் சனிபகவானைப் போல் ராகுபகவான் செயல்படுவார் என்பதாலும் ராகுபகவானையும் சனிபகவானையும் கண்டு அனைவருக்கும் சிறு சலனம் ஏற்படுவது இயற்கையே. மற்றபடி ராகுபகவானின் பலத்தையும் அந்த வீட்டிற்கு அதிபதியான குருபகவானின் பலத்தையும் சீர்தூக்கிப் பார்த்து பலன்களை அறிய வேண்டும். 
பொதுவாக, ராகு - கேது பகவான்களுக்கு இடம் கொடுத்த அதிபதிகள் ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருப்பவர்களும் ராகு- கேது பகவான்களுக்கு கேந்திர ராசிகளில் கிரகங்கள் இருப்பவர்களும் பாக்கியவான்களாவார்கள். இத்தகையோர் அவர்கள் சார்ந்த துறையில் சாதனை செய்வார்கள் என்று கூற வேண்டும். 
அந்த கிரகங்கள் மற்றவர்களின் பலம் பெற்று அதாவது ராகு- கேது பகவான்களை விட கூடுதல் பலம் பெற்றிருந்தால் சர்ப்ப கிரகங்களால் அசுபங்கள் எதுவும் நடக்காது. அவருக்கு ராகுபகவான் தனுசு ராசியில் கோதண்ட  ராகுவாக அமர்ந்திருக்கிறார். அதனால் ராகுபகவான் சுபாவத்தில் குருபகவானின் சுபத்துவத்தைப் பெறுகிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். குருபகவான் புதபகவானின் சாரத்தில் உச்சம் பெற்று நவாம்சத்தில் தனுசு ராசியில் ஆட்சி பெறுகிறார். ஷட் பலத்தில் குருபகவானுக்கு 1.18 மடங்கு கூடுதல் பலமும்; சுய வர்க்கப் பரல்களின் பலத்தைப் பார்க்க வேண்டியது அவசியம். 
சுய வர்க்கத்தில் அதிகபட்சமாக 8 பரல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 5 அல்லது அதற்கு மேல் பரல்கள் நல்ல பலம் என்றும் 2 அல்லது அதற்குக் கீழ் அமைந்தால் பலன் இல்லை என்றும் கொள்ள வேண்டும். அதிகமான பரல்கள் கொண்ட வீடுகளில் அந்த கிரகங்கள் கோசாரத்தில் சஞ்சாரம் செய்யும் காலத்தில் கூடுதலான பலன்கள் கிடைக்கும். அதேபோல் கோசாரத்தில் அந்த கிரகம் நல்ல இடத்தில் சஞ்சாரம் செய்தாலும் அந்த கிரகத்திற்கு அந்த குறிப்பிட்ட ராசியில் சுய வர்க்கப் பலன்கள் குறைந்து காணப்பட்டால் முழுமையான நன்மைகள் கிடைக்காமல் போகின்றது. அதனால் உங்கள் மகளுக்கு தீர்க்கமாங்கல்யம் உண்டு. 
களத்திர மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் நீச்சம் பெற்றிருப்பது குறையா?  பாதிப்பு உண்டாகுமா? என்று கேட்டுள்ளீர்கள். கடக ராசியில் குருபகவான் உச்சம் பெற்றிருப்பதாலும் நவாம்சத்தில் செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருப்பதாலும் இரண்டு வகைகளில் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். 
ஷட் பலத்தில் செவ்வாய்பகவானுக்கு 1.06 மடங்கு கூடுதல் ரூப பலமும் சுயவர்க்கத்தில் கடக ராசியில் 4 பரல்களும் அமைகின்றன.  இதன் அடிப்படையில் பார்த்தால் படித்த நல்ல சிறப்பான உத்தியோகத்திலுள்ள வரன் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப்பிறகு அமைந்து ஓராண்டுக்குள் திருமணம் கைகூடும். கணவரின் வாழ்வு வளமாகவும் மணவாழ்க்கை சிறப்பாகவும் அமையும். 
தன புத்திர ஸ்தானாதிபதியான புதபகவான் தன ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்து ஷட்வர்க்கத்தில் 1.17 மடங்கு கூடுதல் ரூப பலமும் சுயவர்க்கத்தில் மிதுன ராசியில் 4 பரல்களுடன் அமர்ந்து இருப்பதால் குழந்தை பாக்கியத்திற்குக் குறைவு வராது. அதேநேரம் அவர், கேதுபகவானுடன் இணைந்திருப்பதால் காலதாமதமாகுமா என்று பார்த்தால் லக்னாதிபதியான சுக்கிரபகவான் விபரீத ராஜயோகம் பெற்று தைரிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதாலும் புதபகவானுக்கு ரிஷப ராசியில் 6 சுய வர்க்கப் பரல்கள் அமைந்திருப்பதாலும் குழந்தை பாக்கியம் தாமதமாகாது. 
தர்மகர்மாபதி ஆட்சி பெற்றிருப்பதால் உத்தியோகம் பார்ப்பார். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com