நான் கோயில் அர்ச்சகராக உள்ளேன். என் மகன்களின் ஜாதகங்களில் தந்தையை குறிக்கும் சூரியன் 12 இல் மறைந்து ராசி லக்னத்திற்கு 9 இல் அசுபக்கிரகம் அமர்ந்துள்ளது. இந்த நிலை என்னை பாதிக்குமா? என் சொந்த வீடு கனவு எப்போது நிறைவேறும்? அவர்கள் படிப்பு, எதிர்காலம் பற்றி கூறவும். எங்கள் ஜாதகங்களில் என்னென்ன யோகங்கள் உள்ளன? - வாசகர், கிணத்துக்கடவு

உங்களுக்கு மகர லக்னம், புனர்பூச நட்சத்திரம் ஒன்றாம் பாதம், மிதுன ராசி. லக்னத்துக்கும் இரண்டாம் வீடான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான அஷ்டம ஸ்தானமான

உங்களுக்கு மகர லக்னம், புனர்பூச நட்சத்திரம் ஒன்றாம் பாதம், மிதுன ராசி. லக்னத்துக்கும் இரண்டாம் வீடான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ஐந்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பன்னிரண்டாம் வீடான விரய ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஏழாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். வீடு வாகனம் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் சந்திரபகவானின் நட்சத்திரத்தில் (திருவோண நட்சத்திரம் ) உச்சம் பெற்று நவாம்சத்தில் கடக ராசியில் நீச்சமடைகிறார்.
 களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் மிதுன ராசியில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) மறைவு பெற்று நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். எட்டாமதிபதியான அஷ்டம ஸ்தானத்திற்கு அதிபதியான சூரியபகவான் லக்னத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான சிம்ம ராசியை அடைகிறார். கேதுபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் ராகுபகவான், சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
 உங்களுக்கு இரண்டு பஞ்சமஹா புருஷ யோகங்கள் உள்ளன. குருபகவான் ஏழாம் வீட்டில் கேந்திரத்தில் உச்சம் பெற்றிருப்பதால் ஹம்ஸ யோகமும் செவ்வாய்பகவான் லக்ன கேந்திரத்தில் உச்சம் பெற்றிருப்பதால் ருசக யோகமும் உண்டாகிறது. சந்திர கேந்திரத்தில் சுக்கிர பகவான் இருப்பதும் ஒரு விதத்தில் கஜகேசரியோகம் போல் வேலை செய்யும். காரணம் சுக்கிரபகவானும் குருபகவானுக்கொப்பானவர் என்பதால் சூரியபகவானும் குருபகவானும் பார்வை செய்வதால் சிவராஜ யோகம் உண்டாகிறது. குருபகவானும் செவ்வாய்பகவானும் பார்வை செய்வதால் குருமங்கள யோகமும் உண்டாகிறது.
 ஒருவருக்கு எந்த அளவுக்கு தனப்ராப்தி (பொருளாதாரம், வருமானம்) உண்டாகும் என்பதை இரண்டாம் வீடு (தன ஸ்தானம்) ஒன்பதாம் வீடு (பாக்கிய ஸ்தானம்) பதினொன்றாம் வீடு (லாப ஸ்தானம்) ஆகிய மூன்று வீடுகளின் பலத்தைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இதிலிருந்து பெருமளவுக்கு ஒருவர் எந்த அளவுக்கு பொருளாதாரத்தில் உயர்வார் என்று அறிந்து கொண்டு விட முடியும். அதாவது எந்த அளவுக்கு சட்டியில் உள்ளது அகப்பையில் வருவதற்கு என்று புரிந்து கொள்ளலாம். உங்களுக்கு இரண்டாம் வீட்டில் கேதுபகவானும் இரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் அமர்ந்து தன ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். பாக்கியாதிபதி லக்ன கேந்திரத்திலும் லாப ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். இந்த மூன்று பாவாதிபதிகளும் சராசரிக்கும் சற்று கூடுதலாகவே பலம் பெற்றிருக்கிறார்கள் என்று கூற முடிகிறது. இதில் பாக்கியாதிபதியும் லாபாதிபதியும் இணைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.
 வீடு வாகனம் சுக ஸ்தானமான நான்காம் வீடும் அந்த வீட்டுக்கதிபதியும் பெற்றிருக்கும் பலத்தைக் கொண்டு வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டா என்று பார்க்க வேண்டும். அதோடு அஷ்டவர்க்கத்தில் நான்காம் வீடும் செவ்வாய்பகவான் மேஷராசியில் எவ்வளவு பிந்துக்கள் பெற்றிருக்கிறார் என்றும் பார்க்க வேண்டும். ஷட்வர்க்கங்களின் (ஆறுவிதமான விஷயங்கள்) லக்னாதிபதிக்கும் நான்காமதிபதிக்கும் தேவைக்கதிகமான ரூப பரல்கள் கிடைத்துள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.
 உங்களுக்கு நான்காம் வீட்டுக்கதிபதியான செவ்வாய்பகவான் உச்சம் பெற்றிருக்கிறார். அதனால் அடிப்படை பலம் உள்ளது என்று மேம்போக்காகவே தெரிந்து கொள்ளலாம். தசாம்சத்தில் தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவான் கும்ப ராசியில் மூலத்திரிகோணம் பெற்றிருக்கிறார். ஷட்பலத்தில் செவ்வாய்பகவானுக்கு 7.39 ரூப பலம் உள்ளது. (குறைந்த பட்ச அளவு 5.0) அஷ்டவர்க்கத்தில் நான்காம் வீட்டிற்கு 28 பிந்துக்களும் செவ்வாய்பகவானின் அஷ்டவர்க்கத்தில் மேஷராசிக்கு 3 பிந்துக்களும் கிடைக்கின்றன. இதனால் உங்களுக்கு உறுதியாக சொந்த வீடு அமையும் பாக்கியம் உள்ளது என்று கூற வேண்டும். அதேநேரம் கட்டிய வீட்டை வாங்கி வசிப்பதே உங்களுக்கு நலம் பயக்கும்.
 உங்கள் மூத்த மகனுக்கு விருச்சிக லக்னம், மேஷ ராசி. பத்தாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டில் நீச்சம் அடைகிறார். லக்னத்திற்கு ஒன்பதாம் வீட்டில் ராகுபகவானும் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அதாவது இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானும் இருக்கிறார்கள். சந்திரபகவான் பாக்கியாதிபதியாகி பூர்வபுண்ணியாதிபதியான குருபகவானுடன் இணைந்து தந்தைக்காரகரான சூரியபகவானைப் பார்வை செய்கிறார்கள். இதனால் சிவராஜ யோகம், குருசந்திர யோகம், பௌர்ணமி யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் அமர்ந்திருக்கும் லக்னாதிபதியான செவ்வாய்பகவானுக்கும் குருபகவானின் ஒன்பதாம் பார்வை கிடைக்கிறது. அதோடு கடகராசி என்றும் பலமுறை எழுதியிருக்கிறோம். இதனால் பாக்கிய ஸ்தானம் வலுவாக உள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 உங்கள் இரண்டாம் மகனுக்கு தனுசு லக்னம், ரிஷப ராசி. பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்து மூன்றாம் வீட்டைப் பார்வை செய்கிறார். ரிஷப ராசிக்கு ஒன்பதாம் வீடான இரண்டாம் வீட்டில் குரு, சுக்கிரன், ராகு பகவான்கள் அமர்ந்திருக்கிறார்கள். பாக்கியாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணியாதிபதியான செய்வாய்பகவானுடன் விருச்சிக ராசியில் (செவ்வாய்பகவான் ஆட்சி) அமர்ந்து இருக்கிறார்கள். இவருக்கும் பௌர்ணமி யோகம், சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. மேலும் குடும்ப ஸ்தானத்தில் லக்னாதிபதியான குருபகவான் நீச்ச பங்க ராஜயோகம் பெற்று மற்ற இரண்டு கிரகங்களின் சுபத்துவத்தைக் கூட்டுகிறார். அவருக்கு தற்சமயம் பாக்கியாதிபதியான சந்திரபகவானின் தசை நடக்கிறது.
 அவர்கள் இருவரையும் காமர்ஸ், பொருளாதாரம், சட்டம், மேலாண்மை சம்பந்தப்பட்ட படிப்புகளில் படிக்க வைக்கவும். 2020 ஆம் ஆண்டு சொந்த வீடு அமையும். அவர்களின் ஜாதகங்களின் மூலம் உங்களுக்கு நன்மையே விளையும். பிரதி புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.
 விஷ்ணுசகஸ்ரநாம ஸ்தோத்திரம் படித்து வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com