நான் நல்ல கம்பெனியில் வேலையில் இருந்தேன். விருப்ப ஓய்வூதிய திட்டத்தில் வெளியே வந்து விட்டேன். ஏன் எனக்கு பாதியில் உத்தியோகம் போனது? மறுபடியும் வேலை அமையுமா? வெளிநாடு செல்லும் யோகம் உள்ளதா? திருமணம் எப்போது நடைபெறும்? தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருந்தாலும் செவ்வாய் ஸ்தம்பித்தல் இருப்பதால் வேலையில் பாதிப்பு ஏற்படுமா? ஜோதிடத்தை தொழிலாக எடுத்துக் கொள்ளலாமா?- வாசகர், ஓசூர்

உங்களுக்கு கடக லக்னம். மிருகசீரிஷ நட்சத்திரம் 4 ஆம் பாதம், மிதுன ராசி. பிறப்பில் செவ்வாய் தசையில் இருப்பு 0 வருடங்கள், 6 மாதங்கள், 21 நாள்கள் என்று வருகிறது.

உங்களுக்கு கடக லக்னம். மிருகசீரிஷ நட்சத்திரம் 4 ஆம் பாதம், மிதுன ராசி. பிறப்பில் செவ்வாய் தசையில் இருப்பு 0 வருடங்கள், 6 மாதங்கள், 21 நாள்கள் என்று வருகிறது. லக்னாதிபதியான சந்திரபகவான் அயன சயன மோட்ச ஸ்தானத்தில் மறைவு பெறுகிறார். இது ஒரு வலுவான அமைப்பு என்று கூற வேண்டும். ஏனெனில் சந்திரபகவான் சுபக்கிரகமாகி கேந்திர ராசிக்கு அதிபதியாகி மறைவு பெறுவதால் இத்தகைய நிலை என்றும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் அவர் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய புத்திர மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். அவர் நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) மற்றும் பாக்கியம் என்கிற ஒன்பதாம் வீட்டுக்கதிபதியான குருபகவான் நீச்சம் பெற்று நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதியான இரண்டாம் வீட்டுக்கதிபதியான சூரியபகவான், மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்தில் சுய சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். தைரியம் மற்றும் விரயாதிபதியான புதபகவான் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திலேயே ஆட்சி உச்சம் மூலத்திரிகோணம் பெற்று நவாம்சத்தில் மிதுன ராசியில் ஆட்சி பெற்று அதிபலமாக அமர்ந்திருக்கிறார். நான்காமதிபதியும் சுகஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியாகி நான்காம் வீட்டில் மூலத்திரிகோணம் பெற்று நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். களத்திர, நட்பு ஆகிய ஏழாம் வீட்டுக்கும் அஷ்டமம் என்கிற ஆயுள் ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். ராகு- கேது பகவான்கள், ஆறு மற்றும் பன்னிரண்டாம் வீடுகளில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே, மிதுனம், தனுசு ராசிகளை அடைகிறார்கள். 
உத்தியோகத்தில் திடீரென்று பாதிப்பு ஏன் ஏற்பட்டது என்று கேட்டுள்ளீர்கள். தற்சமயம், உங்களுக்கு சனிபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கிறது. பொதுவாக, சனிபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தியிலோ அல்லது சுக்கிரபகவானின் தசையில் சனிபகவானின் புக்தியிலோ ஒருவருக்கு எதிர்பாராத திருப்பங்கள் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறுவார்கள். அப்படி இருக்கையில் உங்களுக்கு இந்த தசா புக்தியில்  விருப்ப ஓய்வுடன் கணிசமான ரொக்கமும் கிடைத்ததில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. மேலும் சுக்கிரபகவானின் புக்தி 3.4.2018 வரை தொடருகிறது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் குருபகவானும் கோசாரத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானத்திற்குப் பெயர்ச்சி ஆகிறார். அதனால் உங்களுக்கு மறுபடியும் உத்தியோகத்திற்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். லக்னாதிபதியும் சனிபகவானும் பன்னிரண்டாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் வெளியூரில் உத்தியோகம் அமையும். வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் சென்று பொருளீட்டும் யோகம் உண்டாகும். செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் பரணி நட்சத்திரத்தில் அமர்ந்து அந்த நட்சத்திர அதிபதியான சுக்கிரபகவானால் பார்க்கப்பட்டதால் உத்தியோகத்தில் உயர்வு உண்டாகுமே அன்றி குறை உண்டாகாது.
செவ்வாய்பகவான் ஸ்தம்பித்து விட்டாரா என்று கேட்டுள்ளீர்கள். "செவ்வாய் ஸ்தம்பித்தல்' என்றால் செவ்வாய்பகவான் ஆறு மாதத்திற்கும் மேலாக, ஒரு ராசியில் சஞ்சரிப்பதைக் குறிக்கிறது. இது பல வருடங்களுக்கொரு முறை நடக்கும். அந்த காலகட்டத்தில் செவ்வாய்பகவானின் பகை கிரகமான சனிபகவானின் தொடர்பு ஏற்படும் காலத்தில் உலகத்தில் வெடி விபத்து, தீயால் கொடுமை ஆகியவை உண்டாகும். மற்றபடி பஞ்சாங்கங்களில் குரு, சனி, செவ்வாய் பகவான்களுக்கு வக்கிரம் என்று போடுவதுபோன்று "ஸ்திரம்' அதாவது "ஸ்டேடிக்' என்று குறிப்பிடுவதை பார்க்கிறோம். அதாவது, ஒரு கிரகம் நேர்கதியில் சென்று வக்கிரம் அடையும் காலத்திற்குமுன் ஓரிரு நாள்கள் ஸ்திரகதியில் இருப்பார்கள். அதுபோல் வக்கிரநிவர்த்தி அடையும் காலத்திலும் ஓரிரு நாள்கள் ஸ்திர கதியில் இருப்பார்கள். இதை அந்த கிரகம் ஸ்தம்பித்தல் என்று கொள்ளக்கூடாது. அதற்கும் இதற்கும் பலன்கள் வேறு வேறாகும். ஸ்திர காலத்தில் அந்த கிரகம் வக்கிர நிலையில் உள்ளது என்பதுபோல் பார்க்கவேண்டும் என்றும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 
இதுபோன்று தான் எப்பொழுதுமே வக்கிரமாகச் சஞ்சரிக்கும் ராகு- கேது பகவான்களும் சில சமயம், சில நாள்கள் ஸ்திரமான நிலையில் சஞ்சரிப்பார்கள். நீங்கள் சொந்தத் தொழில் என்று எதுவும் செய்யக்கூடாது. புதபகவானும் கேதுபகவானும் வலுவாக இருப்பதால் உங்களுக்கு ஜோதிடம் வரும். பகுதி நேரமாக அதைச் செய்யலாம். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அந்நிய சம்பந்தத்திலிருந்து பெண் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் 
துர்க்கையையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com