எனக்கு 50 வயதாகிறது.  வேலையை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் உண்டாகிவிட்டது. விருப்ப ஓய்வு வாங்கிவிட்டேன். என் மூத்த அண்ணனுடன் சேர்ந்து தொழில் செய்யலாமா? முதலீட்டைக் காப்பாற்றிக் கொண்டு உயர எனக்கு விதிக்கப்பட்டுள்ளதா? சுக்கிரனை குரு பார்வை செய்வதால் முன்னேற்றமிராது என்று கூறுகிறார்கள். எனக்கு வேறு வழியில்லை. என்ன முடிவு எடுக்க வேண்டும்? - வாசகர்

உங்களுக்கு சிம்ம லக்னம், விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி. லக்னாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தைரிய தொழில் ஸ்தானாதிபதியான

உங்களுக்கு சிம்ம லக்னம், விசாக நட்சத்திரம், விருச்சிக ராசி. லக்னாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தைரிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் அஷ்டமாதிபதியான குருபகவானை அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் உச்சம் பெற்று சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். நான்காம் வீடான சுகஸ்தானத்திற்கும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான், தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்மராசியை அடைகிறார். இரண்டு மற்றும் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்)) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். தைரிய மற்றும் தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் லக்னாதிபதியான சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம்  வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அஷ்டம  ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி  நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் நீச்சமடைந்து (குருபகவானின் சாரத்தில்) நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான கடக ராசியை அடைகிறார். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்தும் கேதுபகவான் தைரிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்தும் நவாம்சத்தில் முறையே துலாம், மேஷ ராசிகளை அடைகிறார்கள்.
சொந்தத் தொழில் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டைக் காப்பாற்றிக் கொண்டு உயர முடியுமா? இது எனக்கு விதிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டுள்ளீர்கள். மேலும் சுக்கிரபகவானை குருபகவான் பார்ப்பதால் முன்னேற்றமிராது என்றும் பயமுறுத்துகிறார்கள் என்றும் கூறியுள்ளீர்கள்.  சொந்தத் தொழில் செய்வதோ அல்லது உத்தியோகம் பார்ப்பதோ கிரகங்களின் வழியாக விதிக்கப்பட்டுள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாது. தொழில் செய்து வருமானம் ஈட்டுவது என்பது தொழில் ஸ்தானத்தின் அபரிமிதமான வலுவைப் பொறுத்து அமைகிறது. தொழில் ஸ்தானம் மற்றும் தொழில் ஸ்தானாதிபதி பெற்றுள்ள பலத்தைக் கொண்டு ஒருவர் செய்தொழிலில் எந்த அளவுக்கு பொருளீட்டி வருவார் என்று கூற வேண்டும். சிலர் குறுகிய காலத்திற்குள் பெரிய பணம் ஈட்டி விடுகிறார்கள், சிலர் பலகாலம் உழைத்து படிப்படியாகப் பொருளீட்டுகிறார்கள். சிலர் நன்றாகச் சம்பாதித்து அவைகளை இழக்கவும் செய்கிறார்கள்.இவை அனைத்தும் பத்தாம் வீட்டின் மாட்சிமை என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. 
உங்களுக்கு தொழில் ஸ்தானம் ரிஷப ராசியாகிறது. தொழில் ஸ்தானாபதி சுக்கிரபகவான் பத்தாம் வீட்டிற்கு ஒன்பதாம் வீடான ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று (அவர் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கும் அதிபதி) உச்சம் பெற்ற குருபகவானின் பார்வையை பெறுகிறார். சிம்ம லக்னத்திற்கு குருபகவான் எட்டாம் வீட்டிற்கு அதிபதியாக வந்தாலும் அவர் ஐந்தாம் வீட்டிற்கும்  அதிபதியாவதாலும் லக்னாதிபதியான சூரியபகவானுக்கு ஆத்ம நண்பர் என்பதாலும் அவர் சுபராகவே கருதப்படுகிறார். சுக்கிரபகவான் சுபக்கிரகமாகி பத்தாம் வீடான கேந்திர ராசிக்கு அதிபதியாவதால் அவருக்கு இயற்கையிலேயே கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகும். அவர் மறைவு பெற்றதால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும் என்று கூற வேண்டும். அவர் ஆறாம் வீட்டில் மறைவு பெறுவதால் பிருகு ஷட் தோஷம் (ஆறாம் வீட்டில் சுக்கிரபகவான் இருப்பது குறை) உண்டாகிறது. தொழில் ஸ்தானாதிபதிக்கு குருபகவானின் பார்வை சிறப்பென்றாலும் குருபகவானுக்கு சுக்கிரபகவானின் பார்வையும் கிடைக்கிறது.  அதாவது அவர்கள் இருவரும் சமசப்தமமாகப் பார்வை செய்து கொள்கிறார்கள். அதாவது குருபகவான் ஏழாம் பார்வை அல்லாமல் ஐந்தாம் பார்வையாலோ அல்லது ஒன்பதாம் பார்வையாலோ சுக்கிரபகவானை பார்வை செய்தால்தான் சுக்கிரபகவானுக்கு முழுமையான சுபத் தன்மை உண்டாகி அவரின் காரகத்துவம் சிறப்பாக வேலை செய்யும். 
இங்கு, ஒரு முக்கியமான விஷயத்தையும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். குருபகவானுக்கு ஏழாம் வீட்டில் சுக்கிரபகவானன்றி வேறு சுபக்கிரகம் இருந்தால் அந்த கிரகம், குருபகவானுக்கு நண்பர் என்கிற அந்தஸ்தில் இருந்தால் (குருபகவானுக்கு சூரிய, சந்திர, செவ்வாய் பகவான்கள் நண்பர்கள்; சனி, புதன் சமம்) அவர்கள் இருவரும் பரஸ்பரம் பார்வை செய்து கொண்டால் சுப பலன்கள் கூடும். அதோடு குருபகவான் மற்றும் அந்த கிரகத்திற்கு லக்ன சுப ஆதிபத்யம் உண்டாகியிருந்தால் "பருத்தி புடவையாய்க் காய்த்தது போல் என்பார்களே..!' அதுபோல் மேன்மைகள் உண்டாகும் என்பதை உங்கள் மூலம் அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 
மேலும் இது ஒரு ராஜயோக அமைப்பாகும். மூத்த சகோதரருடன் சேர்ந்து தொழில் செய்யலாமா? என்பதற்கு பதில் என்னவென்றால் செவ்வாய்பகவான் சகோதர காரகராவார். அவர் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான சனிபகவானால் பார்க்கப்படுகிறார். 
செவ்வாய்பகவானும் சனிபகவானும் சமசப்தமப் பார்வை செய்வது இருவருக்கும் அனுகூலமான அமைப்பல்ல. அவர்களின் காரகத்துவங்களின் சுபப் பலன்கள் குறையும்.  அதேநேரம் சனிபகவானை உச்ச குருபகவான் லக்ன சுபராகி சிறப்புப் பார்வையான  ஒன்பதாம் பார்வையால் பார்ப்பதால் சனிபகவானின் அசுபத்தன்மைகள் பெருமளவுக்குக் குறைந்துவிடும். அதனால் நீங்கள் அதிக முதலீடு செய்யாமல் உங்கள் சகோதரருடன் இணைந்து தொழில் செய்யலாம். சனி பகவான் நட்பு ஸ்தானாதிபதியாக வருவதால் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும்,. வியர்வை சிந்தி உழைக்க வேண்டும் என்றால் மிகையாகாது. மூத்த சகோதர ஸ்தானாதிபதியான பதினொன்றாம் வீட்டுக்கதிபதியான புதபகவான் ஐந்தாம் வீட்டில் புதஆதித்ய யோகம் பெற்று பதினொன்றாம் வீட்டைப் பார்வை செய்வதால் பிற்கால வாழ்க்கையில் முன்னேறி விடுவீர்கள். எதிர்காலம் வளமாக அமையும். பிரதி வெள்ளிக்கிழமைகளில் மஹாலட்சுமியை வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com