என் மகளுக்கு மூன்று கிரகங்கள் வக்கிரம். இது நன்மையா? நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிக்காக சுமார் 7 ஆண்டாக மருந்து உட்கொண்டு வருகிறார். இந்த பிரச்னை எப்பொழுது தீரும்? அவர் புத்திசாலியாகவும் சாதுர்யமாகவும் திறமைசாலியாகவும் உள்ளார். அவர் மருத்துவர் அல்லது அரசு அதிகாரியாக பிரியப்படுகிறார். எது ஏற்றது? எங்களுக்கு ஆதரவாக இருப்பாரா?- வாசகர்

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதம். லக்னம் மற்றும் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான்

உங்கள் மகளுக்கு கும்ப லக்னம், கன்னி ராசி, அஸ்த நட்சத்திரம் மூன்றாம் பாதம். லக்னம் மற்றும் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீடான, ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் பூர்வபுண்ணியாதிபதியின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி மற்றும் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சனிபகவான் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் லக்னாதிபதி சனிபகவானும் பூர்வபுண்ணியாதிபதியான புதபகவானும் நட்சத்திரப் பரிவர்த்தனை அதாவது சார பரிவர்த்தனை பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. இது கிரகங்கங்களின் பரிவர்த்தனையைவிட ஒரு மடங்கு கூடுதல் சிறப்பு என்று கூற வேண்டும். பரிவர்த்தனை பெற்ற கிரகங்கள் ஒன்றுக்கொன்று இணைந்து வேலை செய்யும் என்று கூற வேண்டும். சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் மற்றும் லாபாதிபதியான குருபகவான் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில்  (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெறுகிறார். தைரிய மற்றும் பத்தாமதிபதியான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்மராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதி ஆட்சி பெற்று பாக்கிய ஸ்தானாதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுயசாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். 
களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் திக்பலம் பெற்று லக்னாதிபதியின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். ராகு-கேது பகவான்கள் குடும்பம் மற்றும் அஷ்டம ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே தனுசு மற்றும் மிதுன ராசிகளை அடைகிறார்கள். உங்கள் மகள் புத்திசாலியாகவும் சாதுர்யமாகவும் உள்ளார் என்று எழுதியுள்ளீர்கள். பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தை புத்தி ஸ்தானம் என்றும் கூறுகிறார்கள். ஐந்தாம் வீட்டைக் கொண்டு பூர்வீக வழியில் நன்மை, நல்ல அறிவு கூர்மை, ஞாபக சக்தி, செல்வம், செல்வாக்கு, புத்திரப்பேறு, மேற்படிப்பில் ஏற்றம், சமுதாயத்தில் பெயர், புகழ் ஆகியவற்றையும் அறிய வேண்டும். லக்னத்திற்கு ஐந்தாம் வீட்டில் சுபக்கிரகங்கள் என்று அழைக்கப்படும் குரு, சுக்கிர, புத, சந்திரபகவான்கள் போன்ற கிரகம் அல்லது அசுபக்கிரகங்கள் அமையப் பெற்றாலும் இந்த ஐந்தாம் வீட்டுக்கதிபதி சுப ஸ்தானங்களில் சுபக்கிரகங்களுடன் (குறிப்பாக, கேந்திர திரிகோண ராசிகளில் கேந்திர, திரிகோணாதிபதிகளுடன் இணைந்திருப்பது அல்லது பார்க்கப்படுவது) அமையப் பெற்றாவும் செல்வம், செல்வாக்கு, சமுதாயத்தில் புகழ் ஏற்படுவது மட்டுமல்லாமல் பூர்வீக வழியில் ஏற்றம் உயர்வு உண்டாகிறது. 
அவருக்கு சுகபாக்கியாதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுயசாரத்தில் அமர்ந்து பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தைப் பார்ப்பது முதல்தர யோகமாகும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானத்தில் (கேந்திர ராசி) மற்றொரு கேந்திராதிபதியான சூரியபகவானுடன் இணைந்திருக்கிறார். சூரிய, புத பகவான்கள் லக்னாதிபதியின் சாரத்தில் அமர்ந்து புத ஆதித்ய யோகத்தைப் பெறுகிறார்கள். மேலும் ஐந்தாம் வீட்டை விதி வீடு என்றும் கூறுவார்கள். இந்த ஐந்தாம் வீடு பலம் பெற்றிருந்தால் குருட்டு அதிர்ஷ்டம் வரும். மருத்துவத்திற்கு காரகம் பெற்ற கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு பகவான்கள் வலுப்பெற்றிருப்பதால் மருத்துவப் படிப்பு படிக்கும் யோகம் உள்ளது. அதோடு அரசு கிரகங்களான சூரியன், செவ்வாய், குரு, சனிபகவான்கள் சிறப்பாக வலுப்பெற்றிருப்பதால் அரசு வழியில் முதல்தர பதவிகளிலும் அமர்ந்து விடுவார். 
நம் உடலில் நரம்பு மண்டலத்தை புதபகவான் ஆளுகிறார். இந்த நரம்பு மண்டலத்தை குருபகவான் மூளையிலிருந்து கட்டுப்படுத்துகிறார். அதனால் நரம்பு சம்பந்தப்பட்ட வியாதிகள் என்றால் இந்த இரண்டு கிரகங்களில் பலத்தை லக்னாதிபதியின் பலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்து அதற்குரிய பரிகாரங்களைச் செய்தால் குறிப்பிட்ட அசுபம் நடக்கும் காலத்திற்குப்பிறகு வியாதி குணமடைந்துவிடும் என்று கூற வேண்டும். அவருக்கு சனிபகவானும் புதபகவானும் சாரபரிவர்த்தனையில் இருக்கிறார்கள். புதபகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியாகிறார். அவர் லக்னாதிபதியைவிட சிறிதே பலம் கூடியிருக்கிறார் என்று கூறினாலும் பாக்கியாதிபத்யம் ஏற்படுவதால் அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு நரம்பு சம்பந்தப்பட்ட உபாதைகள் தீர்ந்துவிடும். சந்திரபகவான் ஆறாம் வீட்டுக்கதிபதியாகி எட்டாம் வீட்டில் சுயசாரத்தில் விபரீத ராஜயோகம் பெற்றிருக்கிறார். சந்திரபகவானை தனு (உடல்) காரகர் என்று அழைப்பார்கள். அவர், கேதுபகவானுடன் இணைந்து இருக்கிறார். கேதுபகவானும் சந்திரபகவானின் சாரத்தில் அமர்ந்து இருப்பதால் நிரந்தர பாதிப்பு எதுவும் ஏற்படாது. மனோகாரகருடன் சர்ப்பக்கிரகங்கள் இணைந்து இருப்பதால் அவ்வப்போது மனசஞ்சலம் குழப்பம் ஏற்பட்டு விலகும் என்றும் கூறவேண்டும்.
அனைத்து கிரகங்களும் நேர்கதியில் சஞ்சரிப்பார்கள். குரு, சனி, புதன், சுக்கிரன், செவ்வாய் பகவான்களுக்கு வக்கிர (பின்னோக்கி) சஞ்சரிப்பது என்று உள்ளது. சூரியசந்திர பகவான்களுக்கு வக்கிர சஞ்சாரத்தில் இருப்பார்கள். சூரியபகவான் குருபகவானிடமிருந்து ஏறக்குறைய 150 பாகைகள் விலகியவுடன் குருபகவான் வக்கிரகதி அடைவார். மறுபடியும் சூரியபகவான் 150 ஆவது பாகைக்கு வந்தவுடன் அவரின் வக்கிர கதி முடிந்துவிடும். சூரியபகவான் சனிபகவானிடமிருந்து ஏறக்குறைய 120 பாகைகள் விலகியவுடன் சனிபகவான் வக்கிர கதி அடைவார். மறுபடியும் சூரியபகவான் 120 பாகைக்கு வந்தவுடன் அவரின் வக்கிரகதி முடிந்துவிடும். மற்ற மூன்று கிரகங்களுக்கு இத்தகைய குறிப்பிட்ட காலக்கிரகமம் கிடையாது. மேலும் சூரியபகவானுக்கு மிக அருகில் சஞ்சரிக்கும் கிரகம் வக்கிரமடைவது என்பது பொது விதியானாலும் புதபகவான் இதற்கு விதிவிலக்காகிறார். 
ஒரு வருடத்தில் சனிபகவான் சற்றேறக்குறைய 140 நாள்களும் குருபகவான் 120 நாள்களும் வக்கிரமடைவார்கள். வக்கிரமடையும் காலத்திற்கு முன்பும் வக்கிர நிவர்த்தி அடையும் நேரத்திலும் இரண்டு மூன்று நாள்கள் நகராமல் இருப்பார்கள். இதை கிரகம் ஸ்தம்பித்தல் என்று புரிந்து கொள்ளக்கூடாது. கிரகம் ஸ்தம்பித்தல் என்பது வேறு நிலையில் நடைபெறுகின்றது. உங்கள் மகளுக்கு மூன்று கிரகங்கள் (செவ்வாய், புதன், சனி பகவான்கள்) வக்கிர கதியில் இருக்கிறார்கள். வக்கிர கிரகங்கள் எதிர்பாராத பலன்களை கொடுப்பார்கள் என்று கூற வேண்டும். மேலும் அவைகள் அதிபலம் பெற்றது என்றும் புரிந்து கொள்ள வேண்டும். சில கிரந்தங்களில் வக்கிரம் பெற்ற கிரகம் தன் முந்தைய ராசியில் சஞ்சரிப்பதற்கொப்பான பலன்களைக் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. மற்றபடி மூன்று கிரகங்கள் வக்கிரம் பெற்றுள்ளதால் உங்கள் மகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கவலை வேண்டாம். பெற்றோருக்கு இறுதிவரையில் ஆதரவாக இருப்பார் என்று கூற முடிகிறது. பிரதி புதன் கிழமைகளில் பெருமாளை வழிபட்டு வரவும். உங்கள் குலதெய்வத்தையும் வருடமொருமுறை வழிபட்டு வரவும். தற்சமயம் நடக்கும் ராகு மஹாதசை கும்ப லக்னத்திற்கு யோக தசையாக நடக்கும் என்று கூறவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com