எனக்கு சிறிய கடன் இருக்கிறது. அது எப்பொழுது அடையும். என் ஜாதகம் சிறப்பானது என்று கூறுகிறார்கள். லக்னாதிபதியின் வர்கோத்தமம் மேன்மையானது என்றும் தசாம்ச லக்னமும் அதில் செவ்வாய் பகவான் அதிக பலம் பெற்றுள்ளதால் நன்மை என்றும் கூறினார். என் கடன் அடைந்துவிட்டால் போதும். எதிர்காலம் எவ்வாறு அமையும்?- வாசகர்

உங்களுக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம் முதல் பாதம். லக்னாதிபதியான சூரியபகவான் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவானின்

உங்களுக்கு சிம்ம லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம் முதல் பாதம். லக்னாதிபதியான சூரியபகவான் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம், 2 ஆம் பாதம்) அமர்ந்து நவாம்சத்தில் ஒரே ராசியில் அமரும் நிலை) அடைகிறார். ஒரு ராசியில் ஒன்பது அம்சங்கள் அதாவது பிரிவுகள் உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே. இவைகளை பாதங்கள் என்றும் கூறுவார்கள். பன்னிரண்டு ராசிகளை, சரம் (மேஷம், கடகம், துலாம், மகரம்) என்றும்; ஸ்திரம் (ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்) என்றும்; உபயம் (மிதுனம், கன்னி, தனுசு, மீனம்) என்றும் பிரித்திருக்கிறார்கள். சர ராசிகளில் முதல் பாதத்தில் (அம்சத்தில்) அமர்ந்து இருக்கும் கிரகம் வர்கோத்தமம் பெறும். ஸ்திர ராசிகளில் ஐந்தாம் பாதத்தில் (அம்சத்தில்) அமர்ந்து இருக்கும் கிரகம் வர்கோத்தமம் பெறும். உபய ராசிகளில் ஒன்பதாம் பாதத்தில் (அம்சத்தில்) அமர்ந்து இருக்கும் கிரகம் வர்கோத்தமம் பெறும். "வர்கம்' என்றால் "பிரிவு' என்றும்; "உத்தமம்' என்றால் "உயர்வு', "சிறப்பு' என்றும் பொருள். அதனால் இத்தகைய அமைப்புக்கு "வர்க உத்தமம்', "வர்கோத்தமம்' என்று பெயர் உண்டாகியது.
வர்கோத்தமத்தில் உள்ள கிரகங்கள் சிறப்பான பலம் பெற்றிருக்கும் என்றும்; திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் கொண்டு வந்து சேர்க்கும் என்றால் மிகையாகாது. இந்த மூன்று வர்கோத்தம நிலைகளில் சரம் மற்றும் உபய ராசிகளில் ஏற்படும் வர்கோத்தமம் அதாவது முதலாம் மற்றும் ஒன்பதாம் அம்சங்களில் ஏற்படுவதால் முழுமையான பலம் ஏற்படாது. இந்த கிரகங்கள் முன் ராசிக்கோ, பின் ராசிக்கோ "சந்தி' என்கிற நிலையில் இருப்பதே இதற்குக் காரணமாகும். மேலும் ஸ்திர ராசியில் ஏற்படும் வர்கோத்தமம் ஒரு ராசியில் நட்ட நடு அம்சத்தில் அதாவது ஐந்தாம் அம்சத்தில் ஏற்படுவதால் முழுமையான மேன்மையான பலம் பெற்றிருக்கும் என்றால் மிகையாகாது. அதனால் சரம் மற்றும் உபய வர்கோத்தமத்திற்கு 95% மதிப்பெண் வழங்கினால் ஸ்திர வர்கோத்தமத்திற்கு 100 மதிப்பெண்களை வழங்கலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதனால் உங்களுக்கு லக்னாதிபதியான சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் திக்பலம் பெற்று முழுமையான வர்கோத்தம பலத்துடன் அமர்ந்திருக்கிறார் என்று கூறவேண்டும்.
பூர்வபுண்ணிய புத்திர மற்றும் அஷ்டமாதிபதியான குருபகவான் லக்னத்தில் லக்னாதிபதியான சூரியபகவானின் சாரத்தில் (உத்திர நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண வீடான தனுசு ராசியை அடைகிறார். சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனபூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மேஷ ராசியை அடைகிறார். இதனால் மூன்று திரிகோணாதிபதிகளும் முழுமையான பலத்துடன் அமர்ந்திருக்கிறார்கள் என்று கூற முடிகிறது. தனம் வாக்கு குடும்பாதிபதி மற்றும் லாபாதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலா ராசியை அடைகிறார். தைரிய தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) மற்றும் களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவான் சுக ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். அயன ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ராகுபகவான் தைரிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்திலும் (விசாக நட்சத்திரம்) கேதுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்திலும் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் முறையே ரிஷப, விருச்சிக ராசிகளை அடைகிறார்கள்.
தசாம்ச கட்டத்தை வைத்து ஒருவரின் தொழில், உத்தியோகம், கடன் வருதல் அல்லது கடன் கொடுத்தல் போன்றவை பற்றியும் நிம்மதியாக வேலை பார்த்து ஓய்வு பெற்ற பிறகு வாழ்க்கை அமைதியாகக் கழியுமா என்பதைப் பற்றியும் அறியலாம். இந்த தசாம்ச கட்டத்தில் செவ்வாய்பகவானின் நிலை மிகவும் முக்கியமானது. உங்களுக்கு தசாம்ச கட்டத்தில் மகர லக்னமாகி லக்னத்திலேயே செவ்வாய்பகவான் ஆட்சி பெற்றிருக்கிறார். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவானும் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற சுக்கிரபகவானும் அமர்ந்திருக்கிறார்கள். உங்கள் லக்னத்திற்கு செவ்வாய்பகவான் கேந்திர திரிகோணாதிபதியாகி லாப ஸ்தானத்தில் ராஜயோக பதவியைஅடைகிறார். தசாம்ச கட்டத்தில் உத்தியோகத்திற்குக் காரகர்களான செவ்வாய்பகவான் மற்றும் சனிபகவான்கள் வலுத்திருப்பதால் நன்மை. அதாவது இவர்கள் இருவரும் எந்த அளவுக்கு வலுவாக உள்ளார்களோ அந்த அளவுக்கு உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும் என்பது திண்ணம்.
உங்களுக்கு மகர லக்னமாகி அதிபதியான சனிபகவான் சந்திரபகவானுக்கு (ராசிக்கு கன்னி சந்திரன்) கேந்திர ஸ்தானமான நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கிறார். அதனால் உங்களுக்கு சனி, செவ்வாய் புக்தி காலங்களில் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். செவ்வாய்பகவான் பாக்கியாதிபதியாகி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதால் ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களிலிருந்து வருமானம் கிடைக்கும். தற்சமயம் குருபகவானின் பார்வையில் அமர்ந்திருக்கும் புதபகவானின் தசை நடக்கத் தொடங்கி ஓராண்டு முடிந்து விட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் பொருளாதார நிலை ஓரளவு மேம்பட்டுவிடும். படிப்படியாக வருமானம் கூடத்தொடங்கி இன்னும் இரண்டாண்டுகளுக்குள் கடன்கள் முழுமையாக அடைந்துவிடும். பூர்வபுண்ணிய புத்திர காரகரான குருபகவான் புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் உங்கள்இரு மகன்களும் வாழ்வில் உயர்வான நிலையை எட்டி விடுவார்கள். புத்திர, பௌத்திரர்களுடன் (பேரக்குழந்தைகள்) உங்கள் ஓய்வுக்காலம் மகிழ்ச்சியாகக் கழியும் என்றால் மிகையாகாது. மற்றபடி உங்களுக்கு எதிர்காலம் வளமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com