என் மகளுக்கு இரண்டு முறை குறை பிரசவமாகி குழந்தைகள் தங்கவில்லை. உத்தியோகமும் நிரந்தரமாக அமையவில்லை. புத்திர தானம், தொழில் தானம்பாதிக்கப்பட்டுள்ளதா? குருவுக்கு சந்திரன் பன்னிரண்டில் உள்ளதால் சகட யோகத்தால் வாழ்க்கை ஏற்ற இறக்கமாகவே இருக்கும் என்று கூறினார். மேலும்நிரந்தரக் கடனாளி என்றும் கூறினார். மகன் ஜாதகத்தில் சனிக்கு 9 இல் செவ்வாய் இருப்பதுதான் காரணமாம். வெளிநாடு சென்று சம்பாதிக்க வாய்ப்புள்ளதா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?- வாசகர், திருச்சி

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம் முதல் பாதம் என்று வருகிறது. சுவாதி நட்சத்திரமல்ல.

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், துலா ராசி, விசாக நட்சத்திரம் முதல் பாதம் என்று வருகிறது. சுவாதி நட்சத்திரமல்ல. லக்னத்திற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்று சந்திர கேந்திரத்தில் இருப்பது பஞ்சமஹா புருஷயோகங்களிலொன்றான சச மஹா யோகத்தைக் கொடுக்கிறது. இதனால் லக்னாதிபதி முழுபலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். ஸ்திர லக்னங்களுக்குஒன்பதாமிடம் பாதக ஸ்தானம் என்று கூறினாலும் அங்கு லக்னாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் பாதகாதிபத்ய தோஷம் உண்டாகாது என்று கூற வேண்டும்.
ஒன்பதாமிடம் வலுத்திருப்பதால் சுபிட்சம் உண்டாகும். வாழ்க்கைக்குத் தேவையான பொருள்கள் சேரும். தந்தைக்கும் பாக்கியம் உண்டாகும். அங்கே அன்னைகாரகரும் இருப்பதால் தாய்க்கும் நலமே. பூர்வபுண்ணிய புத்திர மற்றும் அஷ்டம ஸ்தானாதிபதியான புதபகவான் ஆறாம் வீட்டில் லக்னாதிபதியின் சாரத்தில் (பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலா ராசியை அடைகிறார். சுக பாக்கியாதிபதியான சுக்கிரபகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். கும்ப லக்னத்திற்கு சுக்கிரபகவான் யோககாரகராகி லக்னத்தைப் பார்க்கிறார். அதனால் தன்னாளுமை கூடும். சமயோஜிதமாகப் பேசும் திறமையும் எதையும் சுலபமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றலும் உண்டாகும். தனம் வாக்குகுடும்பம் மற்றும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான விருச்சிக ராசியில் லக்னாதிபதியான சனிபகவானின் சாரத்தில்(அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னிராசியை அடைகிறார்.
தைரிய தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். களத்திர ஸ்தானாதிபதியான சூரியபகவான் ஆறாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். ராகு- கேது பகவான்கள் பூர்வபுண்ணியம் மற்றும் லாப ஸ்தானங்களில் அமர்ந்து நவாம்சத்தில் முறையே துலாம் மற்றும் மேஷ ராசிகளை அடைகிறார்கள்.
அவருக்கு தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். பொதுவாக, தொழில் ஸ்தானாதிபதி திரிகோணராசியில் அமர்ந்திருந்தால் செய்தொழிலில் வருமானத்திற்குத் தடையிராது என்று கூற வேண்டும். அதோடு அவருடன் ராகுபகவானும் இணைந்திருக்கிறார். இதனால் செய்தொழில் நல்ல முறையில் விரைவாக இயங்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். செவ்வாய்பகவான் ராகுபகவான் சாரத்திலும் ராகுபகவான், செவ்வாய்பகவானின் சாரத்திலும் பரிவர்த்தனை பெற்றிருப்பதற்கு "சாரபரிவர்த்தனை' அல்லது "நட்சத்திர பரிவர்த்தனை' என்று பெயர்.
இவர்கள் இருவரின் பார்வை லாப ஸ்தானத்தின் மீதும் படிகிறது. தொழில் ஸ்தானத்தில் தனலாபாதிபதியான குருபகவான் அமர்ந்து இருக்கிறார். அவரின் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் ஆறாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் வர்கோத்தமம் பெற்ற சூரியபகவான் மீதும் விபரீத ராஜயோகம் பெற்ற புதபகவானின் மீதும் படிகிறது. ஆறாம் வீட்டில் களத்திர ஸ்தானாதிபதி வலுவாக இருப்பதால் மனைவியாலும் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். ஆறாம் வீட்டில் ஒரு கேந்திராதிபதியும் ஒரு திரிகோணாதிபதியும் இணைந்திருக்கிறார்கள் என்று கூற வேண்டும். அதோடு புத ஆதித்ய யோகமும் உண்டாகிறது.
சூரியபகவானை குருபகவான் பார்வை செய்வதால் சிவராஜயோகமும் உண்டாகிறது. புத்திர ஸ்தானாதிபதியை புத்திரகாரகர் பார்வை செய்கிறார் என்ற கூற வேண்டும். ஆறாம் வீட்டை சர்வீஸ் அதாவது மற்றையோருக்கு வேலை செய்யும் வீடு என்பார்கள். ஆறாம் வீடு உபஜெய ஸ்தானமுமாகும். உபஜெயம் என்றால் வெற்றிக்கு உதவும் ஸ்தானம் எனறு பெயர். இந்த வீடு வலுத்திருப்பவர்கள் உத்தியோகத்தில் சிறப்பான நிலையை எட்டி விடுவார்கள்.
சந்திரபகவான் குருபகவானுக்கு பன்னிரண்டாம் வீட்டில் இருந்தால் சகட (சக்கர) யோகம் உண்டாகி வாழ்க்கை, சக்கரம் போல் கீழே மேலே போய்க்கொண்டிருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய சகட யோகம் உள்ளவர்கள் பலர் பெரிய ஏற்ற இறக்கம் இல்லாமல் வாழ்வதைப் பார்க்கிறோம். புத்திர பாக்கியம் கிடைக்குமா என்று கேட்டுள்ளீர்கள். அவருக்கு புத்திர ஸ்தானாதிபதி மறைவு பெற்றிருப்பதால் விபரீத ராஜயோகமும் "மறைந்தபுதன் நிறைந்த மதி; நிறைந்த நிதி' என்கிற வகையிலும் பலம் பெற்றும் குருபகவானால் பார்க்கப் பெற்று இருப்பதும் சிறப்பாகும். அதனால் புத்திர பாக்கியம்உண்டு என்று கூற வேண்டும். இரண்டு குழந்தைகள் (ஓர் ஆண், ஒரு பெண்) உண்டு. அடுத்த ஆண்டு இறுதிக்குள் புத்திர பாக்கியம் கைகூடும். என் மகன்நிரந்தரக் கடனாளியா என்றும் கேட்டுள்ளீர்கள்.
ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானாதிபதியான சந்திரபகவான் சுப பலம் பெற்று பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. எந்த ஒருபாபத்திற்கும் அந்த பாவாதிபதியின் பலம் கூடுதல் அல்லது குறைவு என்பதை லக்னாதிபதியின் பலத்துடன் சீர்த்தூக்கிப் பார்த்து முடிவு எடுக்க வேண்டும்.
அவருக்கு லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று இருப்பது அவர் ஆறாமதிபதியைவிட கூடுதல் பலம் பெற்றிருக்கிறார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதனால் அவர், நிரந்தர கடனாளியாகவோ, வியாதிஸ்தராகவோ, விரோதிகளைப் பெற்றோ வாழ்வார் என்று கூறுவதற்கில்லை. அதனால் உங்கள் நண்பர் கூறியதற்கு எந்த முகாந்தரமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். தொழில் ஸ்தானாதிபதி லக்னத்திற்கு திரிகோண ராசியில் இருப்பது குறை என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. பாக்கிய ஸ்தானமும் சூரியபகவானும் சந்திர பகவானும் நல்ல நிலையில் இருப்பதால் பெற்றோர்களுக்கும் இறுதிவரை ஆதரவாக இருப்பார். தற்சமயம் அவருக்கு சனிபகவானின் தசையில் இறுதிப் பகுதி நடப்பதால் இந்த தசை முடிவதற்குள் அதாவது அடுத்த ஆண்டு இறுதிக்குள் படிப்புக்கேற்ற தகுதியான நிரந்தர உத்தியோகம் கிடைத்து விடும். தொடரும் புதமஹா தசையும் சிறப்பாக இருக்கும். வெளிநாடு சென்று பொருளீட்டும் யோகமும்உண்டாகும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com