நான் சிங்கப்பூரில் நல்ல வேலையில் இருக்கிறேன். நான் தலைமைப் பதவிக்குச் செல்வேனா? கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்கள் முழுமையாக பலன் கொடுக்காதா? பாதகாதிபதிக்கு கேந்திராதிபத்ய தோஷம் கிடையாதா? தொழில் ஸ்தானம் பாதிக்குமா? பத்தில் சுக்கிரன் நன்மையல்ல என்று கூறுகிறார்கள். ராகு தசையில் பாதி முடிந்துவிட்டது. இன்னும் இரண்டு பதவி உயர்வு கிடைத்துவிட்டால் தலைமை பதவி கிடைத்துவிடும். ராகு தசையில் வெற்றி கிடைக்குமா? சொந்தமாக தொழில் செய்யலாமா? - வாசகர், சிங்கப்பூர்

உங்களுக்கு மீன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில்

உங்களுக்கு மீன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாமிடத்தையும் லாப ஸ்தானமான பதினொன்றாம் இடத்தையும் லக்னம் மற்றும் உயிர் ஸ்தானமான ஒன்றாமிடத்தையும் பார்வை செய்கிறார். ஒரு ஜாதகத்திற்கு லக்னாதிபதியின் பலம் அடிப்படை பலம் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். இது கட்டடத்திற்கு அஸ்திவாரம் எந்த அளவிற்கு பலம் பெற்றிருக்க வேண்டுமோ அதுபோல் ஜாதகத்திற்கு லக்னாதிபதியின் பலத்தைக் கூற வேண்டும். 
லக்னாதிபதி ஆட்சி உச்சம், மூலத் திரிகோணம், நட்பு வீடு ஆகிய இடங்களில் இருந்தால் பலம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. உங்களுக்கு உச்சம் பெற்றிருப்பது முழு பலம் என்று கூறவேண்டும். குருபகவான் சுபக்கிரகமாக கேந்திர ஸ்தானமான முதல் வீட்டிற்கும் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகுமா என்றால் இரண்டு வகையில் "இல்லை' என்று கூற வேண்டும். 
முதலாவதாக, கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகத்துக்கு லக்ன ஆதிபத்யம் வந்தால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது என்கிற அடிப்படையிலும் அந்த கிரகம், ஒரு திரிகோண ஸ்தானத்தில் அமர்ந்து இருந்தாலும் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது என்கிற மற்றொரு அடிப்படையிலும் குருபகவான் முழுபலம் பெற்று சிறப்பாக அமர்ந்து இருக்கிறார் என்று கூற வேண்டும். 
ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். தன ஸ்தானம் இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுயசாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும்; அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுய சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும்; களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
லாப ஸ்தானாதிபதியான பதினொன்றாமதிபதியும் விரய ஸ்தானாதிபதியான பன்னிரண்டாமதிபதியுமான சனிபகவான் ஆறாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். 
பாதகாதிபத்ய தோஷம் பெற்ற கிரகங்களுக்கு கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடுமா என்கிற கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். அதாவது தனுசு லக்னத்திற்கு புதபகவான் ஏழாம் வீட்டிற்கு அதிபதியாக வருவதால் பாதகாதிபதியாகவும் மற்றும் பத்தாம் வீடான கேந்திரத்திற்கு அதிபதியாக வருவதால் கேந்திராதிபத்ய தோஷத்தையும் பெறுகிறார். 
இந்த புத, குருபகவான்கள் பத்தாம் வீடுகளான கன்னி, மீன ராசிகளில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் குறைந்து விடுகிறது என்று கொள்ள வேண்டும். அதேநேரம் கன்னி, மீன லக்ன காரர்களுக்கு புத குருபகவான்கள் பத்தாம் வீட்டில் இருந்தால் அது அவர்களுக்கு சொந்த வீடாகவும் ஆவதால் கேந்திராதிபத்ய தோஷம் உண்டாகாது என்றும் கூற வேண்டும். இப்படி பல கோணங்களில் ஆராய்ந்து கேந்திராதிபத்ய தோஷம் எந்த அளவுக்கு நன்மை செய்யும் என்று சீர்தூக்கி பார்த்து முடிவு செய்ய வேண்டும் என்பதே எங்கள் கருத்தாகும். 
உங்களுக்கு பத்தாம் வீட்டில் அஷ்டமாதிபதி இருப்பதால் தொழிலில் திடீர் முடக்கம் வருமா என்று கேட்டுள்ளீர்கள். அதாவது " பத்தில் ஒரு பாபி' என்கிற விதி இல்லையே என்றும் கேட்டுள்ளீர்கள். 
பொதுவாக, பத்தாம் வீட்டில் சுபக்கிரகமோ அல்லது அசுபக்கிரகமோ எது இருந்தாலும் நன்றாக வேலை செய்யும் என்பது அனுபவ உண்மை. அஷ்டமாதிபதி பத்தாம் வீட்டில் இருந்தால் அடுத்தவர் திடீரென்று விட்டுச் சென்ற வேலையை எடுத்து திறம்பட நடத்துவார் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. 
அதாவது உங்களுக்கு மேல் வேலை செய்தவர் உங்களுக்கு அதிகாரிகளாக இருந்தவர் திடீரென்று வேலையை விட்டுச் சென்று விட்டால் அந்த வேலை உங்களுக்குக் கிடைத்து அதில் சிறப்பான வெற்றியைப் பெறுவீர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
ஆறாம் வீட்டில் ராகுபகவான் இருந்து தசையை நடத்துவது சிறப்பு. பொதுவாக, ஆறாம் வீடு உத்தியோகம் பார்க்கும் வீடு என்று கூறியிருந்தாலும் அந்த ஆறாம் வீட்டில் உள்ள ராகுபகவானின் தசையில் சிலர் சொந்தத்தொழில் தொடங்கி பெரிய வெற்றிகளை அடைந்து விடுகிறார்கள். இவர்களின் ஜாதகத்தில் லக்னாதிபதி மற்றும் பத்தாம் வீட்டின் அதிபதிகளின் பலம் சிறப்பாக இருப்பதைப் பார்க்கிறோம். உங்களுக்கு லக்னம் மற்றும் பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான கிரகம் உச்சமடைந்திருக்கிறார். 
ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து அஷ்டலட்சுமி யோகத்தைப் பெறுகிறார். அவர் அமர்ந்திருக்கும் வீட்டின் அதிபதி ஆறாம் வீட்டைப் பார்வை செய்கிறார். அவர் சந்திர சனி பகவான்களின் பலத்தை கிரகித்துக் கொண்டும் சூரிய, புத, கேது பகவான்களின் பார்வையை பெற்றும் பலன்களைத் தருவார் என்றால் மிகையாகாது. 
அதனால் நீங்கள் ராகுபகவானின் தசையில் அற்புதமான நிலையை எட்டி விடுவீர்கள். நீங்கள் சார்ந்துள்ள துறையில் சொந்தமாகவும் தொழில் செய்ய வாய்ப்புகள் குருமஹா தசையில் அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் வளமாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com