என் மகளுக்கு 28 வயதாகிறது. ஐந்து வயதில் மகன் இருக்கிறான். இருவருக்கும் ஐந்தாம் வீட்டில் குரு. இது நன்மையில்லை என்கிறார். அவர் அரசு வேலைக்கு முயற்சி செய்கிறார். சூரியன் ராகு இணைந்தால் அரசு வேலை கிடைக்காதா? மேலும் அவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு அவ்வப்போது வலிப்பும் ஏற்படுகிறது. இது எப்போது தீரும்? அரசு வேலை அமையுமா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகி, சேலம்

உங்கள் மகளுக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம் மற்றும் இரண்டாம் வீடான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் பன்னிரண்டாம்

உங்கள் மகளுக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். லக்னம் மற்றும் இரண்டாம் வீடான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானாதிபதி, கர்ம ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ஆறு மற்றும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் சூரியபகவானின்சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் நீச்சமடைகிறார். மூன்று மற்றும் பன்னிரண்டாம் வீடுகளுக்கு அதிபதியான குருபகவான், பூர்வபுண்ணிய புத்திர காரகராகி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். நான்கு மற்றும் பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) ஆட்சி பெற்று நவாம்சத்தில் துலா ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திரபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானாதிபதியான சூரியபகவான் குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்)  அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ராகுபகவான் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் சுயசாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். கேதுபகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சுய சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். 
அவருக்கு அரசு வேலை கிடைக்குமா என்று கேட்டுள்ளீர்கள். முதல் அரசுக்கிரகமான சூரிய பகவான் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து தன் ஆட்சி வீட்டைப் பார்வை செய்கிறார். குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியம், லாபம், லக்னம் மற்றும் அங்கு அமர்ந்திருக்கும் தர்மகர்மாதிபதிகளைப் பார்வை செய்கிறார். லக்னத்தின் மீது குருபகவானின் பார்வை படுவதால் அவரின் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். செவ்வாய்பகவான் ஆட்சி பெற்று தொழில் ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். சனிபகவான் லக்னாதிபதியாகி ஆறாம் வீடான உத்தியோக ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். அதோடு தற்சமயம் லக்னாதிபதியின் தசை நடக்கத் தொடங்கியுள்ளது. சூரியபகவான் ராகுபகவானுடன் இணைந்திருப்பதால் அரசு வேலை கிடைப்பது சந்தோஷமா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளீர்கள். சூரியபகவான் அரசுக்கிரகம் என்றால் ராகுபகவானும் சூரியபகவானுக்கு ஒத்த பலம் பெற்றவர் என்பதை மறுக்க முடியாது. கிரகண காலத்தில் ராகுபகவான் சூரியபகவானை விழுங்குவார் என்று கூறப்பட்டுள்ளது. சூரியபகவான் ஒரு நெருப்பு கிரகமாவார். அவரின் அருகில் செல்லும் கிரகங்கள் கருக்கப்பட்டு அஸ்தாங்கத தோஷத்தை அடைவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட சூரியபகவானையே விழுங்கும் சக்தி ராகுபகவானுக்கு உண்டு என்று பார்த்தால் சூரியபகவானின் காரகத்துவங்களை வழங்க அவருக்கு தகுதி உண்டு என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள், வேலைகள், அதிகாரப்பதவிகள், பாராட்டுகள், கௌரவங்கள் அனைத்தையும் சூரியபகவானைப் போலவே ராகுபகவான் வழங்குவார் என்றால் மிகையாகாது. 
ராகுபகவான் தான் இருக்கும் வீட்டின் பலத்தையும் தான் இணைந்துள்ள, பார்க்கப்படும் கிரகம் அல்லது கிரகங்களின் பலத்தையும் தனதாக்கிக் கொண்டு பலன்களைத் தருவார் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் " சனி வத் ராகு' என்பதும் ஜோதிட வழக்கு. அதாவது, ராகுபகவான் சனி பகவானைப்போன்று பலனளிப்பார் என்பதாகும். ராகுபகவான் அமர்ந்திருக்கும் கும்ப ராசிக்கு அதிபதியான சனிபகவான் (லக்னாதிபதி) ராகுபகவானுக்கு ஆத்ம நண்பராவார். அதனால் அவருக்குத் தற்சமயம் நடக்கும் சனிபகவானின் தசையில் அரசு வேலை அமைந்து நல்ல நிலையையும் எட்டி விடுவார் என்று உறுதியாகக் கூறலாம்.
மன அழுத்தத்தினால் வலிப்பு சம்பந்தப்பட்ட நோய் அவ்வப்போது வருகிறது.  இது எப்பொழுது தீரும் என்றும் கேட்டுள்ளீர்கள். மூளை இடும் கட்டளைகள் நரம்பு மண்டலத்தைச் சரியாக சென்றடையாததால் வலிப்பு நோய் உண்டாகிறது என்று கூறுவார்கள். மூளையை சூரியபகவானும் நரம்பு மண்டலத்தை புதபகவானும் ஆள்கிறார்கள். அதோடு மூளை பத்திரமாக வைக்கப்பட்டுள்ள கபாலம் அதாவது தலையை சூரியபகவான் ஆட்சி செய்கிறார். இந்த மூன்று கிரகங்கள் நல்ல சுப பலத்துடன் இருந்தால் இந்த கிரகங்கள் சம்பந்தப்பட்ட எந்த வியாதியும் வராது என்று கூறலாம்.  ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி)  ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான புதபகவான் லக்னமாகிய உயிர் ஸ்தானத்தில் சூரியபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருக்கிறார். ஆறாமதிபதி லக்னத்தில் அமர்ந்திருப்பது குறை என்றாலும் அவரே பாக்கியாதிபதியாகவும் ஆவதால் குறையிலிருந்து மீட்டுக் கொடுத்துவிடுவார்.  மூளைக்குக் காரகரான குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் தன் ஆத்ம நண்பரான சூரியபகவானின் சாரத்தில் அமர்ந்து இருப்பதால் அடுத்த ஆண்டு ஐனவரி மாதத்திற்குப்பிறகு அவரின் வலிப்பு நோய் மறைந்து விடும். சந்திரபகவான் மனதிற்குக் காரகராகிறார். அவர் ராகுபகவானின் சாரத்தில் அமர்ந்து, ராகுபகவான் சுய சாரத்தில் இருப்பதாலும் சனி, சந்திர பகவான்கள் பரஸ்பரம் பார்வை செய்வதாலும் சனி மஹாதசை அவரின் மன அழுத்தத்தை நீக்கி தெளிவாக்கி விடும் என்றால் மிகையாகாது. 
குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியாகி பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் இருப்பது குறை என்று கூறக்கூடாது. உங்கள் ஜோதிடர் "காரகோ பாவநாசாய' என்ற ஜோதிட விதி உள்ளதைக் குறித்து சொல்லியிருப்பார். பொதுவாக, அந்த பாவத்திற்குரிய கிரகம் அந்த பாவத்தில் இருந்தால் குறை என்று கூறப்பட்டிருந்தாலும் அந்த பாவத்தின் அதிபதி சிறப்பான சுபபலம் பெற்றிருந்தாலோ அல்லது அந்த பாவத்தை லக்ன சுபர்கள் பார்த்தாலோ குறை ஏற்படாது என்று கூற வேண்டும். அவருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லக்ன கேந்திரத்தில் சுபபலத்துடன் இருப்பது சிறப்பு. அதனால் ஐந்தாம் வீட்டில் குருபகவான் இருந்தால் நன்மையில்லை என்பதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி பொத்தாம் பொதுவாகக் கூறாமல் ஜாதகத்தின் முழுமையான பலத்தை சீர்த்தூக்கிப் பார்த்து பலன் கூற வேண்டும். மற்றபடி உங்கள் மகளுக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சிவபெருமானையும் சனிபகவானையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com