நான் தற்சமயம் உணவு சம்பந்தப்பட்ட தொழில் செய்து வருகிறேன். எனக்கு இதில் வளர்ச்சி ஏற்படுமா? சாதனை செய்ய வாய்ப்புகள் உள்ளதா? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? - வாசகர் 

உங்களுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவான் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில்

உங்களுக்கு ரிஷப லக்னம், மேஷ ராசி, கிருத்திகை நட்சத்திரம். தைரிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவான் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
 லக்னம் மற்றும் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் அமர்ந்து (உத்திராடம் நட்சத்திரம்) நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். எந்த ஒரு ஜாதகத்திற்கும் லக்னாதிபதியின் பலம் மிகவும் அவசியம் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். உங்களுக்கு லக்னாதிபதி எண்பது விழுக்காடு பலம் பெற்றிருக்கிறார் என்று கூறவேண்டும்.
 தனம் வாக்கு குடும்பம் ஆகிய இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
 நான்காமதிபதியான சுக ஸ்தானாதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
 நட்பு ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பது குறை என்றாலும் பன்னிரண்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது. இதனால் திருமண வாழ்க்கையில் முன்னேற்றங்கள் உண்டாகும். அதோடு இத்தகையோர் திருமணத்திற்குப்பின்பே வாழ்க்கையில் சிறப்பான வளர்ச்சியை எட்டுவார்கள் என்பதும் அனுபவ உண்மை.
 அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் வாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
 எட்டாமதிபதி ஆறாம் வீட்டில் அமர்ந்திருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும் அமைப்பாகும். ""மறைந்த புதன் நிறைந்த மதி, மறைந்த குரு நிறைந்த நிதி'' என்பது ஜோதிட வழக்காகும். உங்களுக்கு புத, குரு பகவான்கள் இருவரும் மறைந்திருப்பது மேற்கூறிய வழக்கின்படி சிறப்பாகும்.
 தர்ம (ஒன்பது) கர்மாதிபதியான (பத்தாமதிபதி) சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான மகர ராசியை அடைகிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். கேதுபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார்.
 சாதனையாளர்கள் அனைவருக்கும் திரிகோணாதிபதிகளும் கேந்திராதிபதிகளும் ஓரளவுக்கு வலுவாக அமைந்திருப்பார்கள் என்பது ஜோதிட கருத்தாகும். உங்களுக்கு மூன்று திரிகோணாதிபதிகளும் மேற்கூறிய வகையில் பலம் பெற்றிருப்பது சிறப்பு. சப்தம கேந்திரத்தில் (ஏழாம் வீட்டில்) சுகாதிபதியும் தர்மகர்மாதிபதியுமான சனிபகவானும் இணைந்திருப்பது சிறப்பு.
 ரிஷப லக்னத்திற்கு சூரியபகவான் கேந்திர ஸ்தானமான சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியாக வருகிறார். பொதுவாக, அசுபக்கிரகங்களுக்கு (சூரியன், சனி, செவ்வாய், ராகு- கேது பகவான்கள்) கேந்திர ஸ்தானங்களுக்கு அதிபதிகளாக வந்தால் நலம் புரிவார்கள். லக்னாதிபதியான சுக்கிரபகவான் சூரியபகவானுக்கு பகை கிரகமாக இருந்தாலும் லக்னத்திற்குச் சுபராகிறார். ஒரு கேந்திராதிபதி மற்றொரு கேந்திரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. அவரோடு மற்றொரு கேந்திராதிபதி (கர்மாதிபதி) சனிபகவான் (பத்தாமதிபதி ஏழாம் வீட்டில்) அமர்ந்திருக்கிறார்.
 சனிபகவான் தர்மகர்மாதிபதியாகி சப்தம கேந்திரத்தில் (நட்பு ஸ்தானம்) மற்றொரு கேந்திராதிபதியுடன் இணைந்திருக்கிறார். இதனால் தொழில் ஸ்தானாதிபதி நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும்.
 தற்சமயம் சனி மஹா தசை நடக்கிறது. சனிதசை யோக தசையாகும். இரும்பு, இயந்திரம், கருப்பு நிறப்பொருள்கள், உளுந்து, எள், அறிவியல், விவசாயம், எண்ணெய் சம்பந்தப்பட்ட இனங்களில் வருவாய் பெறலாம்.
 சனி மஹா தசை யோக தசையானதால் விடாமுயற்சியும் உழைப்பும் அதிகமாகத் தேவைப்படும். சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் லக்னாதிபதியையும் பார்ப்பதால் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டியது அவசியமாகும். அதேநேரம், உழைப்புக்குப் பின் வாங்கக் கூடாது. சனிபகவான் லக்னத்தைப் பார்வை செய்வது "மஹா கீர்த்தி யோகம்' என்று அழைக்கப்படுகிறது.
 ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டில் ராகுபகவான் சுயசாரத்தில் அமர்ந்திருப்பது அஷ்டலட்சுமி யோகமாகும். அதோடு குருபகவானும் சந்திரகேந்திரத்தில் இருப்பதால் அஷ்ட லட்சுமி யோகம் முழுமையாகிறது.
 ஆறாம் வீட்டில் செவ்வாய், குரு பகவான்கள் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். ராகுபகவான் மற்ற கிரகங்களின் சுய பலத்தை தனதாக்கிக் கொண்டு பயன் தருவார் என்பதை அனைவரும் அறிந்ததே. பொருளாதாரநிலை எந்த அளவுக்கு உயர்வாக இருக்கும் என்பதை இரண்டாம் வீட்டின் பலத்தை ஆறாம் வீட்டின் பலத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
 உங்களுக்கு புதபகவானும் மேற்கூறிய வகையில் சுப பலம் பெற்றிருப்பதால் பெரியதாக கடன், வியாதி, விரோதம் என்று எதுவும் ஏற்பட்டு விடாது. செவ்வாய்பகவான் நெருப்பு சம்பந்தப்பட்ட துறைகளுக்கும் குருபகவான் மேலாண்மைத் துறைக்கும் முக்கியமாக காரகத்துவத்தைப் பெறுபவர்களானதால் உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் வளர்ச்சியைக் காண்பீர்கள். அதோடு வாகன காரகரான சுக்கிரபகவானும் பயண காரகரான ராகுபகவானும் வலுப்பெற்று இருப்பதால் பல இடங்களுக்கு பொருள்களை எடுத்துச் சென்றும் விற்பனை செய்யலாம். அதனால் அச்சப்படாமல் உங்கள் தொழிலில் கவனம் செலுத்தவும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com