என் பூர்வீகச் சொத்து பங்கினை என்னை ஏமாற்றி கையொப்பம் பெற்று எனக்குப் பணம் தராமல் ஏமாற்றிவரும் என் உடன்பிறந்த சகோதரருக்கு தண்டனை உண்டா? பணம் எனக்கு எப்பொழுது கிடைக்கும்? ஜோதிட ரீதியாக நான் ஏன் ஏமாற்றப் பட்டேன். எனக்கு சனி, குரு, சந்திரன் உச்சம். "காரகோ பாவ நாசாய' என்பதால் வந்த வினையா? எந்தக் கடவுளை வணங்க வேண்டும்? - வாசகர், சிதம்பரம்

உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின்

உங்களுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, மிருகசீரிஷ நட்சத்திரம். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் தைரியஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான விருச்சிக ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமானஇரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுயசாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் ருணம் (கடன்), ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தைரிய ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (அஸ்வினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூல நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
 ஒருவர் வாழ்க்கையில் ஏமாற்றப்படுவதற்கு முக்கியமான இடமாக ஏழாம் வீடு அமைகிறது. இதை களத்திர, நட்பு ஸ்தானம் என்பார்கள். இந்த வீடு ஏழாம் வீட்டின் சுப அல்லது அசுப நிலையினால் ஒருவருக்கு அனுசரித்துச் செல்லும் கணவன் அல்லது மனைவி அமையுமா அல்லது அமையாதா என்று அறிந்து கொள்ளமுடியும். இதை வைத்துதான் சிலருக்கு அனுசரித்துச் செல்லாத கணவரோ அல்லது மனைவியோ அமைந்தால் "அவர்கள் இருவருக்கும் ஏழாம் பொருத்தம்' என்று ஒரு வாக்கியம் உண்டாகியது. இந்த ஏழாமிடம் நட்பு ஸ்தானமுமாகிறது. சிலருக்கு வாழ்க்கையில் நல்ல நண்பர்கள் அமைந்து அவர்களால் தக்க நேரத்தில் தக்க உதவிகளும் கிடைக்கும். சிலர் எப்பொழுதும் நண்பர்களின் கூட்டத்திலேயே இருப்பார்கள். இவர்களுக்கு ஏழாம் வீடு சுப பலத்துடனும் வலுவாகவும் அமைந்திருக்கும் என்றால் மிகையாகாது. இந்த ஏழாம் வீடு சுப வலு குறைந்திருப்பவர்களுக்கு நண்பர்களாலும் மற்றவர்களாலும் நன்மைகள் இராது. மேலும் அவர்களால் தொல்லைகள், சிக்கல்களில் மாட்டிக்கொள்ளுதல் போன்றவைகளும் உண்டாகும்.
 உங்களுக்கு இரண்டு மற்றும் ஏழாம் வீடான நட்பு ஸ்தானத்திற்கும் அதிபதியாக சுக்கிரபகவான் வருகிறார். அவர், சுபக்கிரகமாகி ஒருகேந்திர வீடான ஏழாம் வீட்டிற்கு அதிபதியாகி மற்றொரு கேந்திர வீடான லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். அதேநேரம் சுக்கிரபகவானை சுபாவ அசுபக் கிரகமான சனிபகவான் சமசப்தமாகப் பார்வை செய்கிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகத்தை அசுபக் கிரகம் பார்வை செய்தால் கேந்திராதிபத்ய தோஷம் பெருமளவுக்கு மறைந்து விடும் என்பது விதி. அதனால் இத்தகையோர் மற்றவர்களால் ஏமாற்றப்படலாம் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
 " காரகோ பாவ நாசாய' என்றால் அந்த காரகர் அந்த பாவத்திலேயே இருப்பது குறை என்பதாகும். சூரியபகவான் ஒன்பதாம் வீட்டில் இருந்தால் தந்தைக்கும்; சந்திரபகவான் நான்காம் வீட்டில் இருந்தால் அன்னைக்கும்; செவ்வாய்பகவான் மூன்றாம் வீட்டில் இருந்தால் சகோதரருக்கும்; குருபகவான் ஐந்தாம் வீட்டில் இருந்தால் புத்திரருக்கும்; சுக்கிரபகவான் ஏழாம் வீட்டில் இருந்தால் களத்திரத்திற்கும் (கணவன் அல்லது மனைவி) ஆகாது என்றும் உள்ளது. அனுபவத்தில் இதுவும் முழுமையாக ஒத்துவருவதில்லை. ஆயுள்காரகரான சனிபகவான் ஆயுள் ஸ்தானத்தில் இருப்பது தீர்க்காயுள் என்றும் உள்ளது.
 உங்களுக்கு சகோதர காரகரான செவ்வாய்பகவான் சகோதர ஸ்தானத்திலேயே சுய சாரத்தில் அமர்ந்திருக்கிறார். மூத்த சகோதர ஸ்தானத்தை பதினொன்றாம் வீடாகவும் இளைய சகோதர ஸ்தானத்தை மூன்றாம் வீடாகவும் வைத்துள்ளார்கள். பூர்வீகச் சொத்து கஷ்டம் இல்லாமல் கிடைக்கவும் அதன்மூலம் வருமானம் கிடைக்கவும் ஒருவருக்கு ஒன்பதாம் வீடும் சூரியபகவானும் வலுவாக இருக்க வேண்டும். உங்களுக்கு ஒன்பதாமதிபதி குருபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். சூரியபகவான் சுய சாரத்தில் குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். செவ்வாய்பகவானும் சனிபகவானும் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார்கள். பாக்கிய ஸ்தானத்தில் ராகுபகவான் (பிதாமஹர் அதாவது தந்தையின் தந்தையைக் குறிப்பவர்) அமர்ந்திருப்பது சிறுகுறை. மற்றபடி பூர்வீகச் சொத்து கிடைப்பதற்கு பெரிய பாதகமான அமைப்பு எதுவும் இல்லை. நட்பு ஸ்தானத்திற்கு உண்டான குறை வெளிப்படாமல் சனி மஹா தசை முடியும் வரையில் காக்கப்பட்டீர்கள். ஆறாமதிபதியின் தசை நடக்கத் தொடங்கியவுடன் மனதில் சிறிது அலட்சியம் உண்டாகி, சகோதரருக்கு பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கையெழுத்துப் போட்டு கொடுத்து ஏமாற்றப்பட்டீர்கள். ஒரு ஜாதகத்தில் ஏதாவது ஒரு குறை இருந்தால் அது ஒரு காலகட்டத்தில் தன் வேலையை காட்டி விடும் என்று புரிந்து கொள்ள வேண்டும். பன்னிரண்டாமதிபதியை விட்ட எட்டாமதிபதியும், எட்டாமதிபதியை விட ஆறாமதிபதியும் கெடுதல் செய்வார்கள் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். ஒருவருக்கு அனுபவப்பட்ட அறிவு மற்றும் பாடம் கிடைத்தால் அதை "புத்திக்கொள்முதல்' என்பார்கள். இந்த அனுபவத்தில் புத்திக்காரகரான புதபகவானின் பங்கு நிச்சயம் இருக்கும். அதாவது தர்க்க ரீதியாக யோசிக்காமல் அவசர புத்தியை செயல்படுத்தி வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்கொடுப்பது புதபகவானே ஆவார். மற்றபடி உங்கள் ஜாதகம் மிகவும் சிறப்பாக வலுவாக உள்ளதால் உங்களுக்கு பெரிய இழப்பு ஏற்படாது என்று கூறவேண்டும். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியவுடன் நடக்க இருக்கும் சுக்கிரபகவானின் புக்தியில் உங்கள் சகோதரரிடமிருந்து வரவேண்டிய உங்கள் பணம் கைவந்து சேரும் என்று உறுதியாகக் கூறலாம். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com