நான் ஆடிட்டர் படிப்பு படித்து துபாயில் வேலை பார்க்கிறேன். என் தந்தை நான் சிறுவனாக இருந்தபோது கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார். ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து விட்டோம். தற்சமயம் வேலை போய்விடும் போல் உள்ளது. வேறு வேலை இங்கேயே கிடைக்குமா? வேறு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்யலாமா? இந்தியாவுக்கு வந்தால் பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். நிரந்தரமாக வெளிநாட்டிலேயே வசிக்க விரும்புகிறேன். அது நடக்குமா? எனக்கு யோக ஜாதகமா? காலசர்ப்ப யோகம் உள்ளதா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?&nbs

உங்களுக்கு சிம்ம லக்னம், கடகராசி, பூசம் நட்சத்திரம். அயன ஸ்தானாதிபதியான பன்னிரண்டாம் வீட்டுக்கு அதிபதியான சந்திரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில்

யோக ஜாதகம்!
உங்களுக்கு சிம்ம லக்னம், கடகராசி, பூசம் நட்சத்திரம். அயன ஸ்தானாதிபதியான பன்னிரண்டாம் வீட்டுக்கு அதிபதியான சந்திரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். லக்னாதிபதி சூரியபகவான் லாப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். லக்னாதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு என்றாலும் அவர் அசுபர் சாரத்தில் இருப்பது சிறு குறை என்றே கூற வேண்டும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார்.
 தனம் வாக்கு குடும்ப ராசியான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண வீடான கன்னி ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும்; தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் உச்சம் பெறுகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ராகுபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுயசாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். கேதுபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார்.
 அனைவருக்கும் லக்னாதிபதியின் பலம் மிகவும் அவசியம் என்று பலமுறை எழுதியிருக்கிறோம். உங்களுக்கு லக்னாதிபதியான சூரியபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. பொதுவாக, திருமண முகூர்த்தங்கள் திருமண முகூர்த்தங்கள் குறிக்கும் காலங்களில் சூரியபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் முகூர்த்தங்கள் சிறப்பானவை என்று முகூர்த்த விதானம் கூறுகிறது. லக்னாதிபதி வலுத்திருப்பதால் எக்காலத்திலும் உங்களுக்கு நன்மையே உண்டாகும் என்று உறுதியாகக் கூறலாம். அவர் தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான ராகுபகவானின் சாரத்தில் இருப்பதால் சூரியபகவானுக்கு முழுபலம் கிடைக்கவில்லை என்றும் கூறவேண்டும். பூர்வபுண்ணியாதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். "ஓடினவனுக்கு ஒன்பதில் குரு' என்பது ஜோதிட வழக்கு. குருபகவான் அமர்ந்திருக்கும் ராசியோ சர ராசியாகும். குருபகவான் தன் ஆத்ம நண்பரான சூரியபகவானின் சாரத்தில் அமர்ந்திருக்கிறார். நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். குருபகவானின் ஜந்தாம் பார்வை லக்னத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானின் மீதும் படிகிறது. இதனால் லக்னம் என்கிற உயிர் ஸ்தானம் புஷ்டியாகிறது.
 செவ்வாய்பகவானின் மீது குருபகவானின் பார்வை படிவதால் சிறப்பான குருமங்கள யோகம் உண்டாகிறது. இதனால் வீடு, நிலம் போன்றவைகளின் மூலம் எதிர்பாராத திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும். இந்த வகை முதலீடுகள் லாபத்தைத் தரும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். குருபகவானின் ஏழாம் பார்வை தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டின் மீதும் அங்கு பலம் பெற்று (ராகு/ கேது பகவான்களுக்கு 3, 6,11 ஆம் வீடுகள் பலம் பெற்றவை)அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும் படிகிறது.
 ராகுபகவான் பயணக்கிரகமாவதால் பயணங்களாலும் நன்மைகள் கூடும். குருபகவானின் ஒன்பதாம் பார்வை பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் குழந்தைகளும் நல்ல நிலையை எட்டி விடுவார்கள். ஐந்தாம் வீடு வலுத்தவர்களுக்கு லாட்டரி போன்ற திடீர் அதிர்ஷ்டங்களும் கிடைக்கும். குருபகவான் எட்டாம் வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் அஷ்டமாதிபதியும் பலம் பெறுகிறார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். தொழில் ஸ்தானத்தில் புதபகவான் கல்விக்காரகராகி (கணக்கன் என்றும் அழைக்கப்படுகிறார்) தனித்து வலுவாக உள்ளதால் ஆடிட்டர் படிப்பு படித்து அதன் மூலம் வேலை அமைந்தது. மேலும் புதபகவானின் பார்வை கல்வி ஸ்தானத்தின் மீதும் படிவதால் மேலாண்மை படிப்பை பிரபல பல்கலைக்கழகங்களில் படிக்கவும் வாய்ப்புண்டாகும். தொழில் ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்தில் அமர்ந்து நவாம்சத்தில் உச்சம் பெறுகிறார். தொழில் ஸ்தானாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனைபெறுவதும் விசேடமாகும். இதனால் தொழில் வகையில் இறுதிவரை எந்த பெரிய பின்னடைவும் உண்டாகாது.
 பொதுவாக, நிரந்தர வெளிநாடு வாசத்திற்கு ஒன்பதாம் வீடும் பன்னிரண்டாம் வீடும் பலம் பெற்றிருக்க வேண்டும். அதோடு களத்திர, நட்பு ஸ்தானமும் ஸ்தானாதிபதியும் கூடுதல் பலத்தோடு இருந்தால் திருமணத்திற்குப்பிறகு வெளிநாடு சென்று பொருளீட்டவும் வாழ்க்கைத் துணையின் மூலமும் வருமானம் வரவும் வாய்ப்புண்டாகும். உங்களுக்கு பன்னிரண்டாம் வீட்டில் பன்னிரண்டாமதிபதி ஆட்சி பெற்று விபரீத ராஜயோகமும் பெற்றிருக்கிறார்.
 அவருடன் ஆறு மற்றும் ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவானும் இணைந்து இருக்கிறார். ஆறாம் வீட்டுக்கதிபதி சேவகம் (சர்வீஸ்) செய்வதைக் குறிக்கிறார். அதனால் உங்களுக்கு நிரந்தர வெளிநாட்டு வாசம் உண்டாகும். தற்சமயம் சுக்கிரபகவானின் தசை முடிய இன்னும் இரண்டாண்டுகள் உள்ளன. அதாவது, சுக்கிரபகவானின் தசையில் புதபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் இன்னும் ஓராண்டுக்குள் நீங்கள் வசிக்கும் வளைகுடா நாட்டிலேயோ அல்லது ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலோ நல்ல வருமானம் கிடைக்கும் உத்தியோகம் கிடைத்துவிடும்.
 கேதுபகவான் 17 ஆம் பாகையிலும் குருபகவான் 28 ஆம் பாகையிலும் இருக்கிறார்கள். அதனால் அனைத்து கிரகங்களும் (லக்னம் உட்பட) கேது மற்றும் ராகு பகவான்களின் பிடிக்குள் அடங்கியிருப்பதால் காலசர்ப்ப யோகம் உண்டாகிறது. பொதுவாக, கால சர்ப்ப யோகம் உள்ளவர்களுக்கு 32 வயதுக்கு மேல் யோகங்கள் உண்டாகும் என்று கூறப்பட்டிருந்தாலும் பலருக்கு 26 வயதிலிருந்தே நற்பலன்கள் நடக்கத் தொடங்கிவிடுகிறது என்பது அனுபவ உண்மை. அதோடு, இத்தகையோர் வாழ்க்கையில் பெரும் சாதனைகளைச் செய்கிறார்கள். உங்களுக்கு தொடரும் சூரியபகவானின் தசையில் பிற்பகுதியிலிருந்து மறுபடியும் உயர்வு அனுகூலமான திருப்பங்கள் உண்டாகும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com