என் மகன் கடந்த 5 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்கிறார். திருமணமாகி மூன்றாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. இருவருக்கும் ஐந்தாம் வீட்டில் சர்ப்பக் கிரகங்கள் இருப்பது குறையா? தாய்நாட்டிற்கு வந்து வேலைக்கு முயற்சிக்கலாமா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா? லக்னத்தில் குருசந்திர யோகம் அமைவது சிறப்பா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், விருதுநகர்

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சுயசாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து

உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், ரோகிணி நட்சத்திரம், ரிஷப ராசி. தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சுயசாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ஒருவருக்கு லக்னமும் ராசியும் ஒன்றாக அமைவது சிறப்பாகும். லக்னத்தைக் கொண்டே ஒருவருடைய உருவ அமைப்பு, உயரம், அழகு, நிறம், குணம், ஆரோக்கியம், மனோபாவம், உடல் வலிமை ஆகியவற்றை அறியலாம். லக்னமும் லக்னாதிபதியும் நன்றாக அமைந்துவிட்டால் மட்டுமே சுக வாழ்க்கை உண்டாகும். அதோடு மற்ற கிரகங்களால் உண்டாகும் யோக பலன்களை ஜாதகர் அனுபவிக்க முடியும். கிரகங்களின் ஸ்தான பலத்தை குறிப்பிடும்பொழுது, உச்சபலத்திற்கு முழு பலனும், மூலத்திரிகோண பலத்திற்கு 90 விழுக்காடு பலனும், ஆட்சி பலத்திற்கு 80 விழுக்காடு பலனும் கிடைக்கும். சந்திரபகவான் உச்சம் பெற்றிருப்பதால் சந்திரபகவான் முழுமையான பலத்தைப் பெற்றவராகிறார். சந்திரபகவானுக்கு "மதி' என்று ஒரு பெயர் உண்டு. சந்திரபகவானின் பலம் வலுத்தவர்களுக்கு இயற்கையிலேயே மதியூகம் சிறப்பாக அமைந்துவிடும். இவர் மனோகாரகர் அல்லது மனதை நிர்ணயிப்பவர் என்றும், மாத்ருகாரகர் அதாவது தாயை நிர்ணயிப்பவர் என்கிற காரகத்துவங்களும் உள்ளது. கவர்ச்சிகரமான முகத்தோற்றம், கற்பனா சக்தி, அமைதியாகவும் பொறுமையாகவும், நிதானமாகவும் சிந்தித்து முடிவெடுக்கும் இயல்பும் மற்றவர்களின் மனதைப் படிக்கும் ஆற்றலும், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நடந்துகொள்ளும் புத்திசாலித்தனமும் உள்ளுணர்வுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளுதல் போன்றவற்றிற்கும் சந்திரபகவான் காரணமாகிறார். பொதுவாக, வளர்பிறை சந்திரபகவான் முழுச் சுபராக கருதப்படுகிறார். கடக ராசியானது நீர் ராசி மற்றும் சர ராசியாகவும் ஆவதால் அடிக்கடி பயணம் செய்யும் வாய்ப்புகளும் தேடிவரும். சட்டென்று துணிந்து வேகமாகச் செயல்படக் கூடியவராகவும், தன்மானம் மிக்கவராகவும் இருப்பார். சந்திரபகவானுக்கு பகை வீடு என்று எதுவும் கிடையாது.
 அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். லக்னத்தில் குருபகவான் பலம் பெற்று அமர்ந்து இருந்தால் தீர்க்காயுள், நல்ல அறிவு, சிறப்பான கல்வி, செல்வம் செல்வாக்கு ஆகியவற்றை உண்டாக்குவார். பூர்வீகச் சொத்துகள் தடங்கலின்றி கிடைக்கும். எடுத்த காரியங்களை சிறப்பாகச் செய்து முடிக்கும் திறமை உண்டாகும். பெரியோர்களின் நட்பு, தேகத்தில் பொலிவு, அரசாங்கத்திலிருந்து வெகுமதி, பாராட்டு போன்றவை உண்டாகும். வாழ்க்கையில் சிறிய நிலையிலிருந்து படிப்படியாக உயர்ந்து உயரிய நிலைமையை எட்டி விடுவார்கள்.
 ஒரு செயல் செய்யும் பொழுது அதில் எக்காரணத்திலாவது உண்டாகக்கூடிய அவப் பெயரை முன்பே அறிந்து கொள்ளும் உள்ளுணர்வு ஏற்பட்டு அதிலிருந்து தப்பித்துக்கொள்ளும் புத்தி இயற்கையிலேயே அமையும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் செயல்களில் கூடுதல் லாபம் உண்டாகும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். லக்னத்திற்கும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுகாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமானபதினொன்றாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில்(உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் நீச்சமடைகிறார். கேதுபகவான் சுக ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
 உங்கள் மருமகளுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, அவிட்டம் நட்சத்திரம். லக்னம் மற்றும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகத்தைக் கொடுக்கிறார். அவருடன் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவானும் இணைந்திருக்கிறார். இதனால் மஹாவிஷ்ணு மஹா லட்சுமி யோகம் உண்டாகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, சனி பகவான்களையும் லாப ஸ்தானத்தையும் அங்கு ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் ஆறு மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவானையும்; லக்னத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் புத, சுக்கிர பகவான்களையும் பார்வை செய்கிறார். பூர்வபுண்ணிய புத்திர காரகரான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதியைப் பார்வை செய்வது சிறப்பு. ராகுபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. தற்சமயம் குரு மஹா தசையில் புதபகவானின் புக்தி நடக்கத் தொடங்கி இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும்.
 உங்கள் மகனுக்கு பலமான குருசந்திர யோகம் லக்ன கேந்திரத்தில் உண்டாகியிருக்கிறது. இதை ஜோதிட கிரந்தங்கள் சிறப்பாக கூறுகின்றன. அவருக்கு சுக ஸ்தானத்தில் கேதுபகவான் அமர்ந்திருந்தாலும் பாவகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். இதை பெரிய குறை என்று எடுத்துக்கொள்ள முடியாது. குருபகவானின் பார்வை புத்திர ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் பிதுர்காரகரான சூரியபகவானின் மீதும் படிகிறது. அவருக்கும் தற்சமயம் குருபகவானின் தசையில் தர்மகர்மாதிபதியான சனிபகவானின் புக்தி நடக்கிறது. இந்த காலகட்டம் அவரது வாழ்க்கையில் அனுகூலமான திருப்பங்களை கொண்டு சேர்க்கும். இன்னும் இரண்டாண்டுகளுக்குள் புத்திரபாக்கியம் உண்டாகும். தாய்நாட்டுக்கு வந்து நல்ல வேலைக்கு முயற்சி செய்யலாம். அதனால் உத்தியோகம் பாதிப்படையாது. தொழில் ஸ்தானத்தில் பலமான ராகுபகவான் அமர்ந்திருப்பதும் சிறப்பாகும். இரண்டு குழந்தைகள்; ஒரு பெண், ஓர் ஆண் உண்டு. அவர்களைப் பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரச் சொல்லவும். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com