என் மகளுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகிறது. வெளிநாட்டில் கணவருடன் வசிக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்குள் மூன்று முறை அபார்ஷன் ஆகிவிட்டது. குழந்தையில் இவர் ஜாதகத்தினைப் பார்த்தவர்கள், இவர் பிற்காலத்தில் ராணிபோல் வாழ்வார் என்றார்கள். அதுபோலவே படித்து முடித்தவுடன் நல்ல கணவர் அமைந்து வெளிநாட்டில் சுகமாக வசிக்கிறார். செயற்கை முறையில் குழந்தை பெற முயற்சிக்கலாமா? வேலை அல்லது சொந்தத் தொழில் செய்யலாமா? சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். அங்கு அதைச் செய்யலாமா? - வாசகர், சென்னை

உங்கள் மகளுக்கு மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் இரண்டாம் வீடான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும்

உங்கள் மகளுக்கு மகர லக்னம், மீன ராசி, ரேவதி நட்சத்திரம். லக்னம் மற்றும் இரண்டாம் வீடான தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமம் பெற்று (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தைப் பெறுகிறார். குடும்பாதிபதியும் வலுத்திருப்பதால் குடும்பத்தில் உயர்வைக் காணலாம். ஒரு ஜாதகருக்கு லக்னாதிபதியின் பலம் மிகவும் அவசியம் என்றும் அது நல்லபடியாக அமைந்துவிட்டால் மற்ற அம்சங்கள் சற்று ஏறக்குறைய இருந்தாலும் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாமல் காக்கப்பட்டு விடுவார் என்றும் கூற வேண்டும். மேலும் வாழ்க்கைக்கு கிடைக்க வேண்டிய அனைத்து நலன்களும் எந்தக் குறையுமில்லாமல் கிடைக்க உத்திரவாதமும் உண்டாகும்.
 பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதியுமான சுக்கிரபகவான் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சுய சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான துலாம் ராசியை அடைகிறார். இதனால் பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியும் சிறப்பான பலம் பெற்றிருக்கிறார் என்று புரிந்து கொள்ள வேண்டும். ஆறு மற்றும் ஒன்பதாமதிபதியான புதபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன்ஆட்சி வீடான மிதுன ராசியை அடைகிறார். இதனால் மூன்றாம் திரிகோணாதிபதியான பாக்கியாதிபதியும் சிறப்பான பலம் பெறுகிறார் என்று கூறவேண்டும். 1, 5, 9 ஆகிய மூன்று திரிகோண ராசிகளும் லட்சுமி ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. 1,4,7,10 ஆகிய வீடுகள் விஷ்ணு ஸ்தானங்கள் என்று அழைக்கப்படுகின்றன. தைரியம் மற்றும் அயன ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். சுக லாபாதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குருபகவான் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்.
 பொதுவாக, ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவான் இருப்பவர்களுக்கு நல்ல உடலாரோக்கியம் இருக்கும் என்று கூறுவார்கள். அதோடு ஆறாம் வீட்டில் செவ்வாய்பகவான் இருந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும் என்றும் குடல் சம்பந்தப்பட்ட உபாதைகள் என்று பெரியதாக எதுவும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சந்திரபகவான் தைரிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதியின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம் ) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். பொதுவாக, களத்திர நட்பு ஸ்தானாதிபதியான கிரகம் வர்கோத்தமத்தில் இருப்பது கணவரின் உயர்நிலைக்கு உத்திரவாதம் அளிக்கும் அம்சமாகும். மேலும் அவர்களுக்கு தகுதியானவர்களின் உதவி தக்க நேரத்தில் கிடைத்து செயல்கள் பூர்த்தியாகும் என்றும் கூறவேண்டும். இத்தகையோர் கூட்டுவியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவர்கள் என்றால் மிகையாகாது. இவர்கள் மற்றவர்களால் ஏமாற்றப்பட மாட்டார்கள் என்பதால் நண்பர்களின் மத்தியில் சிறப்பாக வலம் வருவார்கள் என்றும் கூற வேண்டும். எட்டாமதிபதியான சூரியபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ராகுபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னிராசியை அடைகிறார். கேதுபகவான் லாப ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். குருபகவானுடன் கேதுபகவான் இணைந்திருப்பது கோடீஸ்வர யோகமாகும். அதுவும் அவருக்கு குரு, கேது பகவான்கள் லாப ஸ்தானத்தில் இணைந்திருப்பது சிறப்பு. இதனால் அவருக்கு பொருளாதார வகையில் மேன்மைகள் சிறப்பாக உண்டாகும் என்று கூற வேண்டும்.
 சரி.. புத்திர பாக்கியத்திற்கு வருவோம்.. புத்திர ஸ்தானத்தில் ராகுபகவான் அமர்ந்திருப்பது குறை என்றாலும் குருபகவானின் பார்வையை பெறுவது அவரின் குறையை குறைக்கும். புத்திர ஸ்தானாதிபதி அஷ்டம ஸ்தானத்தில் மறைவு பெற்றிருப்பது குறை என்று எடுத்துக் கொண்டாலும் அவர் சுயசாரத்தில் இருப்பதும் நவாம்சத்தில் ஆட்சி பெற்றிருப்பதும் குறையை குறைக்கும் அம்சமாகும். அங்கு தர்மகர்மாதிபதி யோகம் உண்டாவதையும் பார்க்க முடிகிறது. மேலும் பாக்கியாதிபதி தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பது புதையல் யோகம் என்றும் உள்ளது. கர்ப்பப்பை கோளாறுகள்ஏற்பட சுக்கிரபகவானின் அசுப பலம் காரணமாகிறது. அதோடு புத்திர பாக்கியம். உண்டாக தசா புக்திகளும் அனுகூலமாக நடக்க வேண்டியதும் அவசியம். அவருக்கு இந்த ஆண்டு இறுதிவரை அஷ்டமாதிபதியான சூரியபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி நடக்கும். இந்த காலகட்டத்தில் குருபகவானின் சஞ்சாரமும் அஷ்டம ஸ்தானத்தில் நடக்கிறது. அதாவது அவருக்கு இந்த சூரியமஹா தசையில் முற்பகுதியில் புத்திர ஸ்தானத்திற்கும் புத்திர ஸ்தானாதிபதிக்கும் ஏற்பட்ட அசுப பலம் சற்று கூடுதலாக வேலை செய்தது. மேலும் அஷ்டமாதிபதியின் தசையில் ஒரு பகுதிதான் சிறப்பாக வேலை செய்யும் என்பதையும் அனுபவத்தில் பார்க்க முடிகிறது. புத்திரகாரகரான குருபகவானும் புத்திர ஸ்தானத்தையும் களத்திர ஸ்தானாதிபதியையும் களத்திர ஸ்தானத்தையும் தசா நாதரான சூரியபகவானையும் பார்வை செய்வதால் இந்த தசையில் பின்பகுதியில் குழந்தை பாக்கியம் இயற்கை முறையிலேயே கிடைக்கும். செயற்கை வைத்தியம் எதுவும் தேவையில்லை. புதபகவானின் புத்தியிலிருந்து அவருக்கு உத்தியோகத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சங்கீதத் துறையின் மூலம் பகுதி நேரமாகவும் பொருளீட்டும் யோகமும் உண்டாகும். காரணம் தர்மகர்மாதிபதிகள் அஷ்டம ஸ்தானத்திலிருந்து தன ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களிலிருந்து வருவாய் வரும் என்று கூறலாம். ஞானமார்க்கங்களில் ஈடுபடும் வாய்ப்புகளும் தேடி வரும். தொடரும் தசைகளும் யோக தசைகளாகவே நடக்கும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com