நான் விசைத்தறியில் ஜவுளி உற்பத்தி செய்து வருகிறேன். நிலம் சம்பந்தப்பட்ட தரகு தொழிலும் செய்து வந்தேன். தற்சமயம் தொழில் மந்தமாக உள்ளது. தொழில் எப்படி அமையும்? தற்சமயம் மறைந்த குரு தசை நடப்பதும் அது ஆறாம் தசையாக இருப்பதும் அவரை சனிபகவான் பார்ப்பதும் குறை என்கிறார்கள். மேலும் நவாம்சத்தில் மூன்று கிரகங்கள் நீச்சம். என் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்? ஆயுள் பற்றியும் பயமாக உள்ளது. பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், திருச்செங்கோடு

உங்களுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம், நான்காம் பாதம். சந்திரபகவான் ஐந்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சம் பெறுகிறார்

உங்களுக்கு மேஷ லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம், நான்காம் பாதம். சந்திரபகவான் ஐந்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியில் நீச்சம் பெறுகிறார். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் கடக ராசியில் நீச்சமடைகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷபராசியை அடைகிறார்.
 ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் எட்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். பாக்கியாதிபதி தன் வீட்டிற்கு பன்னிரண்டாம் வீடான எட்டாம் வீட்டில் மறைவு பெறுவது புதையல் யோகம் என்று பெயர். பொதுவாக, எட்டாம் வீட்டை புதையல் ஸ்தானம் என்று கூறுவார்கள். அதனால் எட்டாம் வீட்டில் அமர்ந்திருக்கும் பாக்கியாதிபதி நன்மையை செய்யக் கடமை பட்டவராவார். எட்டாம் வீட்டின் பலத்தை வைத்து ஒருவருக்கு மற்றவரின் பொருள் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று கூறவேண்டும்.
 குருபகவானின் பார்வை அயன ஸ்தானத்தின் மீதும் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சனிபகவானின் மீதும் சுகஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் கேதுபகவானின் மீதும் படிகிறது. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் ஏழாம் வீடான களத்திர நட்பு ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானாதிபதியான மூன்றாமதிபதியும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
 பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கும் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியில் நீச்சம் பெறுகிறார். ராகுபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். கேதுபகவான் சுகஸ்தான நான்காம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
 நீங்கள் விசைத்தறி ஜவுளி உற்பத்தித் தொழில் செய்து வருகிறீர்கள். இது செவ்வாய்பகவான் மற்றும் சுக்கிரபகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது என்று கூறவேண்டும். பொதுவாக, தொழில் ஸ்தானம் தொழில் ஸ்தானாதிபதி வலுவாக அமைந்திருப்பது அனைவருக்கும் சிறப்பாகும். அதோடு லக்னாதிபதியின் பலம் சிறப்பான அடித்தளத்தையும் அந்தஸ்தையும் கொடுக்கும். முதலில் தொழில் ஸ்தானத்தை எடுத்துக் கொள்வோம்.
 தொழில் ஸ்தானத்தில் லக்னாதிபதி உச்சம் பெற்றிருக்கிறார். அவருடன் ராகுபகவான் இணைந்திருக்கிறார். இதற்கு அஷ்டமஹா நாகயோகம் என்று பெயர். ஆட்சி அல்லது உச்சம் பெற்ற கிரகத்துடன் ராகுபகவான் இணைந்திருந்தால் இந்த யோகம் உண்டாகும். இந்த யோகம் தொழில் ஸ்தானத்தில் ஏற்படுவதால் தொழில் ஸ்தானம் வலுப்பெறுகிறது என்று கூறவேண்டும். தொழில் ஸ்தானாதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து சமசப்தம (ஏழு) பார்வையாக பாக்கியாதிபதியான குருபகவானை பார்வை செய்கிறார். தர்மகர்மாதிபதியோகம் இதனால் உண்டாகிறது. சர லக்னங்களுக்கு பதினொன்றாமதிபதியான சனிபகவான் பாதகாதிபதியாக வருவதால் முழுமையான தர்மகர்மாதிபதி யோகத்தின் பலன் கிடைக்குமா என்று கேட்டால் கிடைக்கும் என்று பதில் கூற வேண்டும். சனிபகவான் லாபாதிபதி என்கிற காரணத்தால் அவர் பெரிய பாதிப்புக்கு உள்ளாக மாட்டார் என்பது அனுபவ உண்மை. சனிபகவானோடு அசுபங்களைக் குறிக்கும் கிரகங்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருந்தால் குறை என்று கொள்ள வேண்டும். இதனால் இன்னல்கள் ஏற்படலாம். மற்றபடி சனிபகவானோடு புண்ணியங்களைக் குறிக்கும் கிரகங்கள் மட்டுமே சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகர் முற்பிறவியில் பல புண்ணியங்களைச் செய்துள்ளார் என்றும் இப் பிறவியில் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிப்பார் என்றும் பொருள். இதற்குக் காரணம், சனிபகவான் கர்மகாரகராவார். மேலும் நாம் செய்த பாவபுண்ணியங்களை அனா பைசா வித்தியாசம் இல்லாமல் நமக்கு கொடுப்பவர் என்பதாலும் ஆகும். சனி, குருபகவான்கள் இணைந்திருந்தாலோ அல்லது சமசப்தம பார்வை செய்தாலோ ஜாதகர் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவார். தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றமடைவார். எல்லோரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். மற்றவர்களின் உதவிகள் தானாகவே தேடிவரும். சமூகத்தில் நல்ல மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். ஜாதகருக்கு வாழ்க்கையில் முழுத்திருப்தி கிடைக்கும். அதனால் சனி, குருபகவான்களின் இணைவு அல்லது பார்வை ஒரு விரும்பத் தகுந்த அமைப்பு என்று உறுதியாகக் கூறலாம்.
 சனிபகவான் ஆயுள் காரகராகிறார். ஆயுள்காரகரை முழுச்சுபரான குருபகவான் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு என்று உறுதியாகக் கூறலாம். ராசியில் பலம் பெற்ற கிரகங்கள் நவாம்சத்தில் நீச்சம் பெற்றிருந்தால் அந்தக் கிரகங்கள் சற்று பலமிழக்கும் என்பது உண்மை. அதேநேரம் முழுமையான பலமிழந்துவிடும் என்று கூற முடியாது. இந்த நிலையில் இருக்கும் கிரகங்களின் தசையில் சிறு இடையூறுகள் விரயங்கள் ஏற்படலாம். மற்றபடி தசை முழுவதும் வேலை செய்யாது என்று கூறமுடியாது.
 நான்காவதாக, சனி தசை, ஐந்தாவதாக செவ்வாய் தசை, ஆறாவதாக குருதசை, ஏழாவதாக ராகு தசை வந்தால் அந்த மஹா தசைகள் துயர் தரும் தசைகள் என்று கூறப்பட்டுள்ளது. இந்த கிரகங்களை செவ்வாய், சனி, ராகு, சூரிய பகவான்கள் பார்த்தாலும் சேர்ந்தாலும் துயரங்களுக்கு பதிலாக யோகம் ஏற்படும். உங்களுக்கு ஆறாவதாக, குருமஹா தசை நடக்கத் தொடங்கியுள்ளது. அவரை சனிபகவான் பார்வை செய்கிறார். இதனால் இந்த குரு மஹா தசை யோக தசையாகச் செல்லும் . நீங்கள் செய்து வரும் தொழிலையே தொடர்ந்து செய்து வரலாம். பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் பலமான கிரகங்கள் அமர்ந்து இருப்பதாலும் புத்திரகாரகர் குருபகவான் பாக்கியாதிபதியாகி வலுப்பெற்றிருப்பதாலும் உங்கள் குழந்தைகளும் வாழ்க்கையில் நல்ல முறையில் வளர்ச்சி அடைவார்கள். மற்றபடி எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com