என் பெண்ணுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? எட்டாமிடத்தில் ராகு இருப்பதால் ராகு தோஷம் என்று கூறுகிறார்கள். அப்படி என்றால் என்ன நடக்கும்? ஜாதகத்தில் தசா சந்தி பார்க்க வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். சிலர் தேவையில்லை என்று சொல்கிறார்கள். இதில் எதை சரி என்று எடுத்துக் கொள்ள வேண்டும்? - வாசகர், சென்னை 

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். சந்திரபகவான் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார்.

உங்கள் மகளுக்கு மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். சந்திரபகவான் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலத்திரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சூரியபகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். பாக்கியம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். குருபகவான் பன்னிரண்டாமதிபதியாகி ஆறாம் வீட்டில் மறைவு பெறுவது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும். அதோடு அவர், பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தையும் பன்னிரண்டாம் வீடான தன் ஆட்சி வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் சூரிய, சுக்கிர பகவான்களையும் இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, கேது பகவான்களையும் பார்வை செய்கிறார்.
 தனம் வாக்கு குடும்பம் மற்றும் களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். தைரிய மற்றும் ஆறாமதிபதியான புதபகவான் லாப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் நீச்சம் பெறுகிறார். தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லாப ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் உச்சம் பெறுகிறார். ராகுபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். கேதுபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
 எட்டாம் வீட்டில் ராகுபகவான் இருப்பதால் என்ன நடக்கும் என்று கேட்டுள்ளீர்கள். லக்னத்திலிருந்து பன்னிரண்டு வீடுகளுக்குள் ஒன்பது கிரகங்களும் சஞ்சரிப்பார்கள். இதில் லக்னம், இரண்டாம் வீடு, ஏழாம் வீடுகள் முக்கியமாகப் பார்க்க வேண்டும். லக்னம் (உயிர், ஆத்மா, ஜீவன்) இரண்டாம் வீடு (தனம், வாக்கு, குடும்பம், பேச்சு) ஏழாம் வீடு களத்திரம் (மனைவிக்குக் கணவன், கணவனுக்கு மனைவி, நட்பு (நண்பர்கள் கூட்டாளிகள்)) ஆகியவற்றைக் குறிக்கும். திருமணப் பொருத்தம் பார்க்கும்போது முதல் கட்டமாக, இந்த மூன்று வீடுகளுக்கும் பொருத்தம் உள்ளதா என்று பார்க்கவேண்டும். அதாவது இந்த வீடுகளில் அமர்ந்திருக்கும் லக்ன சுபர்கள், சுபாவ அசுப கிரகங்கள் ஆகியவற்றைச் சீர்தூக்கிப் பார்த்து சேர்க்க வேண்டும். இரண்டாவதாக நான்கு (சுகம், வீடு, வாகனம், தாய் ) ஐந்து (பூர்வபுண்ணியம், புத்திரம், புத்தி) எட்டு (ஆயுள், புதையல், பெண்களுக்கான மாங்கல்ய ஸ்தானம்) பன்னிரண்டு (அயனம், படுக்கை சுகம், விரயம், மோட்சம்) ஆகிய நான்கு வீடுகளுக்கும் இரண்டாம் கட்டமாகப் பொருத்தம் பார்க்க வேண்டும். இந்த வீடுகளில் அமர்ந்திருக்கும் ஓரளவுக்கு ஏற்ற சமதோஷம் ஆண் (வரன்) பெண் (வது) இருவருக்கும் அமைந்திருக்க வேண்டும்.
 ராகு- கேது பகவான்கள் சுபாவ அசுபக் கிரகங்களாவார்கள். லக்னத்தில் ராகு- கேது பகவான்கள் இருந்தால் களத்திர ஸ்தானமான ஏழாம் வீட்டில் முறையே கேது- ராகு பகவான்கள் இருப்பார்கள். அதேபோல் குடும்ப ஸ்தானத்தில் ராகு- கேது பகவான்கள் இருந்தால் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் கேது- ராகு பகவான்கள் இருப்பார்கள். சுக ஸ்தானத்தில் ராகு- கேது பகவான்கள் இருந்தால் பத்தாம் வீட்டில் தொழில் கர்ம ஸ்தானத்தில் கேது- ராகு பகவான்கள் இருப்பார்கள். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் ராகு- கேது பகவான்கள் இருந்தால் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் கேது- ராகு பகவான்கள் இருப்பார்கள். இந்த நான்கு பாவங்களும் சர்ப்ப கிரகத்தால் பாதிக்கப்படும் என்று கூறவேண்டும். இந்த வீடுகளுக்குரிய காரகத்துவங்களும் இதற்கேற்றபடி ஏற்ற இறக்கங்களைப் பெறும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும்.
 அவருக்கு ராகுபகவான் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் வீட்டில் இருக்கிறார். எட்டாம் வீடு அனைவருக்கும் ஆயுள் ஸ்தானமுமாகும். அதனால் இந்த வீட்டிற்கு உண்டான காரகத்துவங்கள் பாதிக்கப்படலாம் என்பதே உங்கள் கேள்விக்குப் பொதுவான பதிலாகும். இதை குறை என்கிற ரீதியில் பார்த்து சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். மற்றபடி எட்டாம் வீட்டிலுள்ள ராகுபகவான் நவாம்சத்தில் தன் நண்பரான சனிபகவானின் வீடான மகர ராசியில் இருக்கிறார். மாங்கல்ய ஸ்தானத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் லக்னாதிபதியாகி தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து நான்காம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தையும் அங்கு விபரீத ராஜயோகம் பெற்ற பாக்கியாதிபதியையும் (குருமங்கள யோகம்) ஏழாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் எட்டாம் பார்வையாக காம ஸ்தானத்தையும் (உச்ச வீடு) பார்வை செய்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார். இதனால் அவருக்கு தீர்க்க மாங்கல்யம் உண்டு என்று கூறலாம்.
 ஆண் (வரன்) பெண் (வது) இருவருக்கும் ஒரு தசை முடிந்து மற்றொரு தசை தொடங்கும் காலம். ஒரே சமயத்தில் உண்டாவது தசா சந்தி என்பதாகும். பொதுவாகவே ஒரு தசை முடியும் கடைசி ஒன்றரை ஆண்டுகளும் (சராசரியாக) புதிய தசை தொடங்கி ஒன்றரை ஆண்டுகளும் தசா சந்தி காலம் என்றும் இந்த காலகட்டங்களில் குழப்பங்கள், சஞ்சலங்கள் உண்டாகலாம் என்றும் கூறுவார்கள். இதனால் இந்த காலகட்டங்களில் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பார்கள். ஆண், பெண் இருவருக்கும் இந்த தசாசந்தி காலம் ஆறு மாதத்திலிருந்து ஓர் ஆண்டுக்குள் சமமாகத் தொடங்கினால் இந்த காலகட்டத்தில் இருவருக்கும் குழப்பமான காலகட்டமாக அமைவதால் ஒரு சேர இருவரின் வாழ்க்கையிலும் குழப்பங்கள் உண்டாகலாம் என்று தவிர்க்கச் சொல்வார்கள். இந்த தசா சந்தி இருவருக்கும் பல ஆண்டுகள் கழித்து வந்தால் அந்த காலகட்டத்தில் கவனமாக இருந்தும் அந்த கிரகங்களுக்குச் சாந்தி செய்தும் கொள்வதால் பாதிப்பு பெருமளவுக்குக் குறைந்து விடும். இதனால் தசாசந்தி வரும் ஜாதகங்கள் மற்ற விதங்களில் பொருந்தி வந்தால் இந்த ஒரே காரணத்திற்காகத் தவிர்க்க வேண்டாம் என்பதை உங்கள் மூலமாக மற்றவர்களுக்கும் கூறிக் கொள்ள விரும்புகிறோம். உங்கள் மகளுக்கு அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும். மற்றபடி அவருக்கு எதிர்காலம் சிறப்பாக அமையும்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com