என் மகனுக்கு 5 வயதாகிறது. இன்னும் சரியாய் பேச்சு வரவில்லை. எப்பொழுது முழுமையாகப் பேசுவான்? லக்னம், ஆறாம் வீடு வலுவாக உள்ளதா? பன்னிரண்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் பலன் என்ன? மேலும் பன்னிரண்டாம் வீட்டிற்குப் பாபகர்த்தாரி யோகம் உண்டாகிறதா? இவரின் ஜாதகத்தால் எனக்கு நன்மை உண்டாகுமா? சிலர் ஜாதகப்படி நிலம், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டா? பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகர், திருக்கழுக்குன்றம்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் நான்காம் வீடான சுகஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீடான ருணம்

உங்கள் மகனுக்கு தனுசு லக்னம், தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம். லக்னம் மற்றும் நான்காம் வீடான சுகஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் அமர்ந்திருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். வர்கோத்தமங்களில் (சரம், ஸ்திரம், உபயம்) ஸ்திர வர்கோத்தமம் என்பது ராசியின் நடுவில் அதாவது ஐந்தாவது அம்சத்தில் அமைவதாகும். இது மிகவும் சிறப்பாகும். லக்னம் என்கிற உயிரானது சுக்கிரபகவானின் சாரத்தில் பூராடம் நட்சத்திரத்தில் உதயமாகிறது. பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஆகிய ஐந்தாம் வீட்டிற்கும் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். ஒன்பதாம் வீட்டுக்கதிபதியான பாக்கியாதிபதி சூரியபகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நலாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்திற்கும் மூன்றாம் வீடான தைரிய ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்திற்கும் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மூலத்திரிகோண ராசியான கும்பராசியில் ஆட்சி பெறுகிறார். ஆறாம் வீட்டிற்கும் லாப ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிர பகவான் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் அயன ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலா ராசியை அடைகிறார். அஷ்டம ஸ்தானாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். கேதுபகவான் ஆறாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். ராகுபகவான் பன்னிரண்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார்.
உங்கள் மகனுக்கு லக்னத்தில் சந்திரமங்கள யோகம் உண்டாகிறது. இதனால் அவரின் முயற்சிகளை திடசிந்தனையுடன் செயல்படுத்தும் ஆற்றல் உண்டாகும். ஒருவருக்கு லக்னம் சரிவர அமையவில்லை என்றால் எதையும் சாதிக்க முடியாது. ஆகவே, சாதனை என்பதையும் லக்னம் குறிக்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும். லக்னத்தில் அமர்ந்திருக்கும் கிரகங்களின் பார்வைபடும் இடங்களில் ஏற்படுத்துகின்ற அதிர்வுகள் லக்னத்தைப் பாதிக்கும். லக்னத்தில் அமர்ந்திருக்கும் அஷ்டமாதிபதியான சந்திரபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டைப் பார்வை செய்வார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானின் பார்வை சுகஸ்தானமான நான்காம் வீட்டின் மீதும் ஏழாம் வீடான களத்திர நட்பு ஸ்தானத்தின்மீதும் அஷ்டம ஆயுள் ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் படிகிறது. இந்த வீடுகள் பலம் பெறும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதாவது வீடு வாகனம், கல்வி, புத்திசாலித்தனம், இல்வாழ்க்கை ஆன்றோர் நட்பு, ஆயுள் போன்றவை மேன்மையடையும். அதோடு லக்னம் தலையை குறிக்கிறது. இதனால் லக்னம் வலுத்திருந்தால் புத்திசாலித்தனம் கூடும் என்று பொதுவாகக் கூறலாம். நான்காம் வீட்டுக்கதிபதி ஆறில் மறைவு பெற்றால் சொந்தவீடு, வாகனம் அமைய குறுக்கீடும் உடல் நலமும் பாதிக்கும் என்பதும் பொது விதி.
அவருக்கு நான்காமதிபதி ஆறாம் வீட்டில் இருக்கிறார். அவர் லக்னாதிபதியான குருபகவான் சுபக்கிரகமாகி ஆறாம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கப் பெற்று அமர்ந்திருப்பது சிறப்பு. நான்காம் வீடும் நான்காம் வீட்டோனும் வலுவாக இருப்பதால் பூமி சம்பந்தமான வில்லங்கள் நீங்கும். நிலம், வீடு, வாகனம் ஆகியவையும் சேரும். லக்னாதிபதியும் ஒன்பதாமதிபதியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்வது சிறப்பு. தந்தையை காப்பாற்றுவார். தந்தையாலும் நலமுண்டாகும். சனிபகவான் உச்சம் பெற்றிருக்கிறார். கடினமாக உழைக்கக் கூடிய சக்தியைக் கொடுப்பார். தன்னலமிராது மற்றையோருக்குத் தொண்டாற்றும் தகுதி உண்டாகும். 
ஆயுள் காரகரான சனிபகவான் லக்னத்தைப் பார்வை செய்வதால் நீண்ட ஆயுள் உண்டாகும். இன்னமும் சரியாகப் பேச்சு வரவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். லக்னம் ஆறாமதிபதியின் சாரத்தில் லக்னாதிபதி ஆறாமிடத்தில் எட்டாமதிபதியின் சாரத்தில் எட்டாமதிபதி லக்னத்தில் ஆறாமதிபதியின் சாரத்தில் அமர்ந்திருப்பது சிறுகுறை என்று கூறவேண்டும். அதோடு பிறக்கும்போது ஆறாமதிபதியான சுக்கிரபகவானின் தசையும் நடந்தது. மற்றபடி லக்னாதிபதி வர்கோத்தமத்தில் இருந்து தர்மகர்மாதிபதிகளையும் ஆறாமதிபதிகளையும் பார்வை செய்கிறார். 
குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள். இதன் பொருள் என்னவென்றால் குருபகவானின் பார்வையால் ஏனைய கிரகங்கள் தங்களுடைய குறைபாடுகள் நீங்கப்பெற்று நலம் புரியும் தகுதியைப் பெறுவார்கள் என்பதாகும். இதற்குக் காரணம் அவர் கிரகங்களில் தலை சிறந்தவராகவும் விளங்குதே ஆகும். பாக்கியாதிபதியான சூரிய பகவானுடன் ராகுபகவான் இணைந்திருப்பது பித்ரு தோஷமாகும். இந்த குறைபாடும் குருபகவானின் பார்வையினால் வெகுவாகக் குறைந்துவிடும். பன்னிரண்டாம் வீட்டிற்கு பாபகர்த்தாரி யோகம் உண்டாகி இருப்பதால் பெரிய பாதிப்பு ஏற்படாது. காரணம் செவ்வாய்பகவான் லக்ன காரகராகிறார். சனிபகவான் குடும்பாதிபதியாகவும் ஆகிறார். 
செவ்வாய்பகவான் லக்ன சுபர் என்றும் பாக்கியாதிபதியின் சாரத்தில் வர்கோத்தமம் பெற்று ராசியின் ஒன்பதாவது அம்சத்தில் அமர்ந்திருப்பதாலும் அவர் நலமே செய்யக் கடமை பட்டவராவார் என்று கூற வேண்டும். மற்றபடி அவருக்கு தற்சமயம் சூரியபகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப்பிறகு பிற்பகுதி நடக்கும். அந்த காலகட்டத்திற்குள் ஜன்ம சனியும் விலகிவிடும். அதனால் படிப்படியாக நல்லபடியாக பேச்சு வந்துவிடும். 
தர்மகர்மாதிபதி யோகம், சிவராஜ யோகம் மற்றும் சந்திரமங்கள யோகம் போன்ற சிறப்பான யோகங்கள் உள்ளதால் எதிர்காலம் சிறப்பாக அமையும். மற்றபடி பன்னிரண்டாம் வீட்டில் நான்கு கிரகங்கள் இருப்பது நன்மையே. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com