எனக்கு 37 வயதாகிறது. களத்திர தோஷ ஜாதகமா? திருமணம் நடைபெறுமா? எப்போது கைகூடும்? சர்ப்பதோஷத்தால் திருமணம் நடக்கவில்லையா? பொருளாதாரம் எவ்வாறு இருக்கும்? அரசு வேலை கிடைக்குமா? ஏழரை சனி முடிந்த பின்பும் முன்னேற்றமில்லையே. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர், போடிநாயக்கனூர்

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்த

உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, விசாக நட்சத்திரம். அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்னாதிபதியான சூரியபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லக்ன கேந்திரத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்ன கேந்திரத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார்.
தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிர
பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண ராசியான துலாம் ராசியை அடைகிறார். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் லக்ன கேந்திரத்தில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். ராகுபகவான் லக்ன கேந்திரத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். கேதுபகவான் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.
பொதுவாக, திருமணத்திற்கு களத்திர ஸ்தானாதிபதி நன்றாக பலம் பெற்றிருக்க வேண்டும். களத்திர ஸ்தானாதிபதி சுபக் கிரகங்களுடன் சேர்ந்திருந்தால் சுலபமாக தக்க வயதில்திருமணம் நடந்தேறும். அதோடு குடும்ப ஸ்தானமும் சுக ஸ்தானமும் நன்றாக அமைந்தால் மணவாழ்க்கை அமைதியான கடலில் செல்லும் படகைப் போன்று எந்த தடுமாற்றமுமின்றி சீராகச் செல்லும்.
உங்களுக்கு களத்திர நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவான் லக்னத்தில் அமர்ந்து ஏழாம் வீட்டைப் பார்வை செய்கிறார். அவர் தன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான லக்னாதிபதியான சூரியபகவானின் சாரத்தில் இருப்பது குறை. இருப்பினும் சூரியபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் உச்சம் பெற்றிருப்பது சிறப்பாகும். இதனால் களத்திர ஸ்தானாதிபதி தான் பெற்றுள்ள ஸ்தான பலத்தாலும் சார பலத்தாலும் பலம் பெறுகிறார் என்று புரிந்துகொள்ள வேண்டும். சனிபகவான் அவருடன் பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான செவ்வாய்பகவானுடன் இணைந்து இருக்கிறார். இத்தகைய சேர்க்கையினால் சனிபகவானுக்கு பலம் குறைகிறது. மேலும் சனிபகவானுடன் ராகுபகவான் இணைந்திருப்பது சிறப்பானது என்றாலும் களத்திர ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார் என்கிற ரீதியில் பார்த்தால் குறை என்றே கூறவேண்டியிருக்கிறது. இவர்களுடன் பூர்வபுண்ணியாதிபதியான குருபகவான் லக்ன சுபராகி இணைந்து இருப்பதால் இந்த குறைகள் நீங்கிவிடும் அம்சமாகும் என்று உறுதியாகக் கூறலாம்.
களத்திர ஸ்தானாதிபதியுடன் குருபகவான் இணைந்து இருப்பதால் ஆன்மிகத்தில் நாட்டமுள்ள படித்த பெண் மனைவியாக அமைவார். குருபகவான் சுக, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்து இருப்பதால் குருமங்கள யோகம் உண்டாகிறது. இதனால் குடும்பத்தில் சுக பாக்கியங்கள் நிறையும் என்று கூற முடிகிறது. மேலும் நிலபுலன்களாலும் தொடர்ந்து வருமானம் வரும். குருபகவானின் பார்வை புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டின் மீது படிவதால் புத்திர பாக்கியம் சீராக இருக்கும். ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தின் மீதும் கேதுபகவானின் மீதும் படிவதால் சர்ப்ப தோஷம் குறைகிறது. களத்திர ஸ்தானமும் சுபத் தன்மையைப் பெறுகிறது. ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்து இருக்கும் புதஆதித்யர்கள் மீதும் படிகிறது. சூரியபகவானை குருபகவான் பார்வை செய்வதால் சிவராஜ யோகம் உண்டாகும் என்பதை அனைவரும் அறிந்ததே. தற்
சமயம் குருபகவானின் பார்வையிலுள்ள லாபாதிபதியான புதபகவானின் தசையில் களத்திர ஸ்தானாதிபதியான சனிபகவானின் புக்தி நடப்பதால் அடுத்த ஆண்டு இறுதிக்குள் சமதோஷமுள்ள பெண் நல்ல குடும்பத்திலிருந்து தெற்கு அல்லது தென்மேற்கு திசையிலிருந்து அமைந்து திருமணம் கைகூடும். களத்திர தோஷமும் தீர்ந்துவிடும் அமைப்புகள் உள்ளதால் கவலை வேண்டாம். பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் தன ஸ்தானமான இரண்டாம் வீடு, பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீடும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீடும் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
உங்களுக்கு மேற்கூறிய வகையில் புதன் செவ்வாய்பகவான்கள் பலமாக இருப்பதால் இறுதிவரை பொருளாதாரம் நன்றாகவே தொடரும். பொதுவாக, சூரிய, குரு, செவ்வாய், சனிபகவான்கள் வலுவாக இருப்பதால் அரசு வேலை கிடைக்கும் என்று கூறவேண்டும். உங்களுக்கு இந்த அரசு கிரகங்கள் வலுவாக உள்ளதால் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் இன்னும் இரண்டாண்டுகளுக்குள் வேலை அமையும். சென்ற ஆண்டு இறுதியில் துலாம் ராசிக் காரர்களுக்கு ஏழரை நாட்டுச் சனி முடிவடைந்து விட்டது. இன்னும் இண்டாண்டுகளுக்குள் சனிபகவான் கோசாரப்படி உங்களின் மூன்றாம் ராசியில் சஞ்சரிக்கிறார். சனிபகவான் 3,6,11 ஆம் இடங்களில் லக்ன கட்டத்திலோ அல்லது கோசாரத்திலோ சஞ்சாரம் செய்தால் அவர்களுக்கு சராசரிக்கும் அதிகமான அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராமல் கிடைக்கும் என்றால் மிகையாகாது. உங்களுக்கு பெரும்பாலான கிரகங்கள் கேதுபகவானின் சாரத்தில் சஞ்சரிப்பதாலும் நடக்க இருப்பதும் கேதுபகவானின் தசையாக இருப்பதாலும் பிரதி தினமும் விநாயகப் பெருமானை வழிபட்டு வரவும். மற்றபடி எதிர்காலம், மணவாழ்க்கை, பொருளாதாரம், புத்திர பாக்கியம் ஆகியவை சிறப்பாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com