என் மகனுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் புத்திரபாக்கியம் உண்டாகவில்லை. தற்சமயம் குருதசை நடக்கிறது. கேந்திராதிபத்ய தோஷம், பாதகாதிபத்ய தோஷம் பெற்று நீச்சமுமாகி இருப்பதால் பயமாக உள்ளது. நீச்ச கிரகத்துக்கு பார்வை பலம் உண்டா? நீச்சபங்க ராஜயோகம் உண்டாகி இரட்டிப்பாக பலன் கிடைக்குமா? என் மருமகளின் ஜாதகப்படி புத்திர பாக்கியத்தைப் பற்றி கூறவும். பரிகாரம் செய்ய வேண்டுமா? - வாசகர்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார்.

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், கன்னி ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்த நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் தொழில் ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர மற்றும் ஆறாம் வீட்டுக்கும் அதிபதியான சனிபகவான் தனம் வாக்கு குடும்பம் ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (விசாக நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்பம் மற்றும் பாக்கியாதிபதியான சுக்கிரபகவான், லாப ஸ்தானத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம் ) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியில் உச்சம் பெறுகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பன்னிரண்டாம் வீடான அயன ஸ்தானத்தில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியில் நீச்சம் பெறுகிறார். மூன்று எட்டுக்கதிபதிகள் பொதுவாகவே, துர்ஸ்தானாதிபதிகளாகக் கருதப் படுகிறார். அதாவது இந்த வீடுகள் மறைவு ஸ்தானங்களாகும். இந்த வீட்டுக்கதிபதிகள் மற்றொரு மறைவு ஸ்தானத்தில் இருப்பது விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கும். அதோடு இந்த வீட்டுக்கதிபதிகள் நவாம்சத்தில் பலமற்று இருப்பதும் "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்கிற ஜோதிடவிதியின் அடிப்படையிலும் சிறப்பாகும்.
 சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். பன்னிரண்டாமதிபதியான அயன ஸ்தானாதிபதி சூரியபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சுயசாரத்தில் (உத்திர நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். கேதுபகவான் குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். ராகுபகவான் அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
 பொதுவாக, சுபக்கிரகங்களான குரு, சுக்கிர, புத, வளர்பிறை சந்திரபகவான்கள் கேந்திர ராசிகளுக்கு (1,4,7,10) அதிபதிகளாக வந்தால் கேந்திராதிபத்ய தோஷத்தைப் பெறுவார்கள். இதில் குருபகவானின் கேந்திராதிபத்ய தோஷத்தைப் பற்றியே அனைவரும் அதிகமாக கவலைப் பட்டு கேள்வி கேட்கிறார்கள். மிதுன, கன்னி லக்னங்களுக்கு குருபகவான் கேந்திராதிபத்ய தோஷம் (பாதகாதிபத்ய தோஷம் (உபய லக்னங்களுக்கு ஏழாம் வீடு பாதக ஸ்தானம்) மாரகாதிபத்ய தோஷம் (அனைத்து லக்னங்களுக்கும் ஏழாம் வீடு) ஆகிய முப்பெரும் தோஷங்களைப் பெறுகிறார். அதேநேரம் குருபகவான் பெற்றுள்ள சுப அல்லது அசுப பலத்தைக் கருத்தில் கொண்டு இந்த தோஷங்கள் எந்த அளவுக்கு, எந்த காலகட்டத்தில் பாதிக்கும், இதற்கு நிவர்த்தி உண்டா? என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய்ய வேண்டும். கேந்திராதிபத்ய தோஷம் பெற்றுள்ள கிரகம் ஒரு திரிகோண ராசியில் அமர்ந்திருந்தால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும். இரண்டாவதாக, அந்த கிரகம் அசுபக் கிரகச் சேர்க்கை அல்லது பார்வை பெற்றிருந்தால் நீங்கிவிடும். இங்கு அசுபக்கிரகம் என்பது சுபாவ அசுபக்கிரகங்களான சூரியன், சனி மற்றும் சர்ப்ப கிரகங்கள் என்று மட்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது. அந்த லக்னத்திற்கு ஆதிபத்யம் பெற்றுள்ள கிரகத்துடன் விரோதம் பெற்றிருந்தாலும் போதுமானது.
 இங்கு குருபகவானுக்கு விரோதம் பெற்ற கிரகங்களான சுக்கிர, புதபகவான்களைக் கூற வேண்டும். மூன்றாவதாக, கேந்திராதிபத்ய தோஷம் பெற்றுள்ள கிரகம் அசுபர் சாரம் பெற்றிருப்பது. நான்கான்காவதாக, கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வேறு எந்த வகையிலாவது பலமிழந்து காணப்படுவது அதாவது நீச்சம் பெற்றிருப்பது, மறைவு ஸ்தானங்களான 3,6,8,12 ஆம் வீடுகளில் இருப்பது. அதனால் பலருக்கும் மேற்கூறிய எந்தவொரு வகையிலாவது கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடும். அதனால் அந்த தசை சுபமாக நல்ல பலன்களைத் தரும் என்று கூறவேண்டும். பலரும் பல நேரங்களில் இதைப்பற்றிக் கேட்பதால் உங்கள் சார்பாக, அனைவருக்கும் சற்று விரிவாக எழுதியுள்ளோம்.
 உங்கள் மகனுக்கு குருபகவான் திரிகோண ராசியில் அமர்ந்திருக்கிறார். அதோடு நீச்சமும் பெற்றிருக்கிறார். அதனால் கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடுகிறது. குருபகவான் அமர்ந்திருக்கும் நீச்ச ராசியின் அதிபதியான சனிபகவான் உச்சம் பெற்றிருப்பதால் குருபகவானுக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி உச்சம் பெற்றிருப்பதால் உறுதியாக புத்திர பாக்கியம் உண்டு என்று கூறவேண்டும். மேலும் குருபகவானை பரஸ்பரம் விரோதம் பெற்ற கிரகமான சுக்கிரபகவான் பார்வை செய்வதாலும் குருபகவானுக்கு கேந்திராதிபத்ய தோஷம் நீங்கிவிடுகிறது.
 நீச்ச கிரகத்திற்கு பார்வை பலம் உண்டா என்று கேட்டுள்ளீர்கள். நிச்சயம் உண்டு என்பதுதான் எங்கள் பதில். ஒரு கிரகம் நீச்சம் பெற்று விட்டாலே அந்த கிரகம் சுப பலன் தராது என்று பலரும் ஒதுக்கி வைக்கிறார்கள். இதுவும் தவறு. சில கிரந்தங்களில் நவாம்சத்தில் உள்ள கிரகங்களுக்கும் பார்வை பலம் உள்ளது என்றும் சில கிரந்தங்களில் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் நவாம்சத்தில் கிரகங்களுக்கு ஏழாம் பார்வைக்கு முழு பலம் உண்டு என்பதே எங்கள் கருத்தாகும். மற்றபடி சிறப்பு பார்வைகளுக்கு அரை பலன்தான் என்றும் கூறவேண்டும்.
 அவருக்கு தற்சமயம் குருபகவானின் தசையில் சனிபகவானின் புக்தி இன்னும் இரண்டரை ஆண்டுகள் நடக்கும். உங்கள் மருமகளுக்கு மகர லக்னம். தற்சமயம், பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் தசை நடக்கிறது. அவருடன் பாக்கியாதிபதியான புதபகவானும் குருபகவானும் இணைந்திருக்கிறார்கள். அதனால் உங்கள் மகன் மருமகள் ஜாதகங்களின்படி, அவர்களுக்கு அடுத்த ஆண்டு இறுதிக்குள் மழலை பாக்கியம் உண்டாகும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com