எனக்கு காலசர்ப்ப தோஷம் உள்ளதா? காளஹஸ்தி, திருநாகேஸ்வரத்தில் பால் அபிஷேகம் செய்தோம். ராகு- கேது தோஷம் உள்ள வரனைத்தான் பார்க்க வேண்டுமா? எனக்கு மணவாழ்க்கை எப்படி அமையும்? சுகாதிபதி ஐந்தாம் வீட்டில் இருப்பது பாதகம் செய்யுமா? அரசு வேலையில் உள்ள கணவர் அமைவாரா? என் தந்தை உடல்நலம் குறைவாக உள்ளார்? அவர் இருக்கும்பொழுதே என் திருமணம் நடக்குமா? - வாசகி, சென்னை

உங்களுக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சந்திரபகவான் ஆறாம் வீடான

உங்களுக்கு மகர லக்னம், மிதுன ராசி, திருவாதிரை நட்சத்திரம். களத்திர, நட்பு ஸ்தானாதிபதியான சந்திரபகவான் ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம் ) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனிபகவான் லக்னத்தில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். லக்னத்தில் சனிபகவான் ஆட்சி பெற்றிருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகம் உண்டாகிறது. 
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீடு மற்றும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டுக்கும் அதிபதியான குருபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூச நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். 
சப்தம கேந்திரமான ஏழாம் வீட்டில் குருபகவான் உச்சம் பெற்றிருப்பதால் குருபகவானுக்குரிய பஞ்சமஹா யோகமான ஹம்ஸ யோகம் உண்டாகிறது. 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். ஆறாம் வீடான ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானத்திற்கும் ஒன்பதாம் வீடான பாக்கிய ஸ்தானத்திற்கும் அதிபதியான புதபகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். 
அஷ்டமாதிபதியான எட்டாம் வீட்டுக்கதிபதி சூரியபகவான் குடும்ப ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (சதய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானமானமூன்றாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) உச்சம் பெற்று நவாம்சத்தில் கன்னி ராசியில் நீச்சமடைகிறார். 
லக்னத்தில் ராகுபகவான் சூரியபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். ஆட்சி பெற்ற சனிபகவானுடன் ராகுபகவான் அமர்ந்திருப்பதும் உச்சம் பெற்ற குருபகவானுடன் கேதுபகவான் இணைந்திருப்பதும் இரண்டு அஷ்டமஹா நாக யோகங்கள் உண்டாவதைக் குறிக்கின்றது.
உங்களுக்கு லக்னம் 25 -ஆம் பாகையிலும் சனிபகவான் 08 -ஆம் பாகையிலும் ராகு- கேது பகவான்கள் 3 -ஆம் பாகையிலும் குருபகவான் 11- ஆம் பாகையிலும் உள்ளார்கள். குருபகவான் மட்டும் ராகு- கேது பகவான்களின் கட்டுக்கு வெளியே இருப்பதால் காலசர்ப்ப யோகமோ தோஷமோ ஏற்படாது. அதோடு சர்ப்பக் கிரகங்களுக்கு குருபகவானின் சம்பந்தம் ஏற்பட்டால் சர்ப்ப தோஷம் பெருமளவுக்குக் குறைந்துவிடும். அதனால் சர்ப்ப தோஷத்திற்கு மட்டுமே பொருத்தம் பார்க்க வேண்டும் என்றும் கூறக்கூடாது. மற்றபடி சனி மற்றும் குருபகவான்களுக்கு ஏற்ற சமதோஷம் அமைந்தாலே போதுமானது. 
சர்ப்ப கிரகங்களுக்கு அமையாவிட்டாலும் பாதகம் எதுவும் ஏற்படாது. சர்ப்ப கிரகங்களுக்கு மட்டும் பொருத்தம் பார்த்து மற்ற முக்கிய கிரகங்களுக்கு சமதோஷம் ஏற்படாவிட்டால் மணவாழ்க்கையில் சஞ்சலங்களும் குழப்பங்களும் ஏற்படலாம். அதனால் சர்ப்ப தோஷத்தின் முழுமையான பாதிப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டு விட்டு, அதற்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும் என்று உங்களின் மூலம் அனைவருக்கும் கூறிக்கொள்ள விரும்புகிறோம். 
ஒருவருக்கு மணவாழ்க்கை சீராக அமைய, முக்கியமாக, லக்னம் (1-ஆம் வீடு) குடும்பம் (2-ஆம் வீடு) களத்திரம் (7- ஆம் வீடு) சுகம் (4-ஆம் வீடு) அயன ஸ்தானம் (12 -ஆம் வீடு) ஆகிய வீடுகளின் சுப அல்லது அசுப பலன்கள் காரணமாகின்றன. அதிலும் முக்கியமாக களத்திர ஸ்தானத்திற்கு அடுத்தபடியாக குடும்ப ஸ்தானமும் சுக ஸ்தானமும் வலுப்பெற்றிருக்க வேண்டும். உங்களுக்கு குடும்ப ஸ்தானத்தில் புத ஆதித்ய யோகம் ஏற்பட்டு அவர்கள் இருவரின் பார்வையும் மாங்கல்ய ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீது படிகிறது.
ஏழாம் வீட்டிற்கு இரண்டாம் வீடு கணவன் அல்லது மனைவியின் பொருளாதாரத்தைத் தெரிவிக்கும் வீடாகும். இந்த வீட்டுக்கதிபதி பாக்கியாதிபதியுடன் கூடி அந்த வீட்டைப் பார்வை செய்வது கணவரின் பொருளாதாரம் மேன்மையாகவே அமையும் என்று கூறலாம். 
பொதுவாக, அந்தந்த காரகர்களுக்கு இரண்டாம் வீட்டில் அதாவது நேத்திர ஸ்தானத்தில் ஒரு கிரகம் இருக்க வேண்டும். இப்படி இருந்தால் உடல் உழைப்பு குறைந்து லாபம் பெருகும். இல்லையேல் உடல் வருத்தி உழைத்து பொருள் சேர்க்க வேண்டும் என்று கூற வேண்டும். உதாரணமாக, கல்விக்காரகரான புதபகவானுக்கு இரண்டாம் வீட்டில் கிரகம் இல்லாமல் இருந்தால் கல்வி பாதிக்கப்படும் என்று பொருள் கொள்ளக்கூடாது. அதேநேரம் உடலுழைப்புக்கு ஏற்ற மதிப்பெண்கள் கிடைத்து விடும் என்று புரிந்து கொள்ள வேண்டும். 
உங்களுக்கு நான்காம் வீட்டுக்கதிபதி தன் வீட்டிற்கு இரண்டாம் வீட்டில் இருப்பதால் குடும்ப சுகம் கெட்டு விடவில்லை. மாறாக, மேன்மையுறும் என்று கூறுகிறோம். 
களத்திர ஸ்தானமும் களத்திர ஸ்தானாதிபதியும் மாங்கல்ய ஸ்தானமும் வலுவாக உள்ளதால் உங்கள் கணவர் படித்தவராகவும் சிறப்பான அரசு வேலையில் உள்ளவராகவும் அமைவார். உங்களுக்கு தந்தைகாரகரான சூரியபகவானும் தந்தை ஸ்தானாதிபதியான புதபகவானும் இணைந்திருக்கிறார்கள். அதோடு, தந்தை ஸ்தானத்தை 
பூர்வபுண்ணிய கர்ம ஸ்தானாதிபதியான சுக்கிரபகவான் பார்வை செய்வதால் உங்கள் திருமணத்தை உங்கள் தந்தை நடத்தி வைப்பார். இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். மற்றபடி, நீங்கள் இதுவரை செய்துள்ள பரிகாரங்கள் போதுமானது மற்றும் சரியானது. பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com