என் மகனுக்கு 46 வயதாகிறது. விளையாட்டில் மிகவும் ஆர்வம் மிக்கவன். கராத்தே சண்டை செய்யும்போது ஒருவர் காலால் எட்டி உதைக்கும்பொழுது தலையில் பலமாக அடிபட்டது. மருத்துவர்கள் கண் நரம்பில் அடிப்பட்டதாகக் கூறினார்கள். படிப்படியாகக் பார்வை குறைந்து வருகிறது. தனியாக எங்கும் செல்ல முடியாது. தற்சமயம் கேட்கும் சக்தியும் குறைகிறது. எப்போது மறுபடியும் பார்வை திரும்பும். தீவிரமாக வைத்தியம் செய்கிறோம். வேலையும் இடையிடையே விட்டு விட்டுப் போகிறது. திருமணம் எப்போது நடைபெறும்? எதிர்காலம் எவ்வாறு அமையும்?&nbs

உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து

உங்கள் மகனுக்கு மீன லக்னம், மீன ராசி, உத்திரட்டாதி நட்சத்திரம். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்தால் ஜாதகர் வாழப்பிறந்தவர் என்று கூறுவார்கள். சந்திரபகவான் கற்பனை வளத்திற்கும் புதிய சிந்தனைகளுக்கும் காரணமாகிறார். எந்த ஒரு பாவத்தின் பலத்தை அறியவும் அந்த பாவத்தை ஒன்றாம் வீடாகக் கொண்டு பலத்தைக் கணக்கிட வேண்டும். சந்திரபகவான் தன் வீட்டிற்கு பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். ஐந்தாம் வீட்டை விதி வீடு என்பார்கள். சந்திரபகவான் மனோகாரகராக இருந்தாலும் ரத்தம், சுவாசகோசம், கண்கள், கருப்பை ஆகியவற்றையும் குறிக்கிறார். லக்னத்தில் சந்திரன் (ராசி, லக்னம் ஒன்றே) சிறந்த பேச்சாளராகவும் முடியும். எழுத்தாளராகவும் முடியும். பேச்சின் மூலம் ஜீவனம் அமையவும் வாய்ப்புண்டு. லக்னத்திற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். குருபகவான் ஆசிரியர், மதபோதகர், ஆலோசகர், மருத்துவத்துறை, ரசாயனத்துறை ஆகிய துறைகளில் வருமானத்தை ஈட்டித் தருவார். அவர் நவாம்சத்திலும் பத்தாம் வீட்டில் அமர்ந்து இருப்பது சிறப்பு. குருபகவானுக்கு கேந்திராதிபத்ய தோஷமும் நீங்கிவிடுகிறது. தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) நீச்சம் பெற்று அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். கடக ராசிக்கு அதிபதியான சந்திரபகவான் லக்ன கேந்திரத்தில் அமர்ந்து இருப்பதால் செவ்வாய்பகவானுக்கு முழுமையான நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். ஒரு கேந்திராதிபதி ஒரு திரிகோணாதிபதியுடன் இணைந்திருந்தாலோ அல்லது ஒரு கேந்திராதிபதி மற்றொரு கேந்திரத்திலோ, திரிகோண ஸ்தானத்திலோ இருந்தால் அந்த கிரகம் சிறப்பான பலம் பெற்றிருக்கிறது என்று கூற வேண்டும். அவருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் ஒரு திரிகோணாதிபதியும்; ஒரு கேந்திராதிபதியும் இணைந்திருப்பது சிறப்பு. அதோடு ஒரு கேந்திராதிபதி ஒரு திரிகோணத்தில் இருப்பதும் மற்றொரு சிறப்பாகும். ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டுக்கதிபதியான சூரியபகவான் சுகஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மீன ராசியை அடைகிறார். லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கடக ராசியை அடைகிறார். ராகுபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (உத்திராடம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் இருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார். கேதுபகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூசம் நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார்.
 குருபகவானின் ஐந்தாம் பார்வை தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தின் மீது படிவது ஒரு சிறப்பான தன யோகமாகும். குருபகவானின் ஏழாம் பார்வை சுக ஸ்தானமான நான்காம் வீட்டின் மீது படிகிறது. அதோடு அங்கு அமர்ந்திருக்கும் ஆறாம் வீட்டுக்கதிபதியான சூரியபகவானின் மீதும் படிகிறது. இதனால் முழுமையான சிவராஜயோகமும் உண்டாகிறது. குருபகவானுக்கு கேந்திர ஸ்தானத்தில் சந்திரபகவான் இருப்பது கஜகேசரி யோகமாகும். மேலும் இது லக்னாதிபதிக்கும் ஐந்தாமதிபதிக்கும் இருக்கும் சிறப்பான உறவு என்றும் கூறவேண்டும். இதனால் அவருக்கு நிரந்தர வேலை உண்டு என்று உறுதியாகக் கூறலாம். சூரியபகவானுக்கும் குருபகவானுக்கும் உறவு உள்ளதால் அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். ஆலயம் சம்பந்தப்பட்ட அறநிலையத்துறையின் மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. தன ஸ்தானாதிபதி தன் வீட்டிற்கு நான்காம் வீட்டில் அதிபலம் பெற்றிருப்பதால் குடும்பத்தில் பொருளாதார பற்றாக்குறை என்று எதுவும் ஏற்படாது.
 ஆரோக்கியத்திற்கு அதிபதியான சூரியபகவான் சுக ஸ்தானத்தில் இருப்பது சுக பங்கத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும். அவர் அசுபர் சாரத்தில் உள்ளார். பகைவர்கள், திருடர்கள், உடலில் ஏற்படும் காயங்கள், ஏமாற்றங்கள், கலவரங்கள், துயரங்கள், கடன்கள், வியாதிகள், தாய்மாமன், மாற்றான்தாய், தாடையின் வலது பக்கம், வயிற்றின் வலது பக்கம், வலது காலின் அடிப்பகுதி ஆகியவைகள் ஆறாம் வீடு பெற்றுள்ள சுப அசுப பலத்தைக் கொண்டு அறியலாம்.
 லக்னம் என்பது "தான்', "தன் உயிர்', "தன் சரீரம்' ஆகும். ஆறாம் வீடு என்பது "ரோகம்' ஆகும். தன் சரீரத்தை பிரதிபலிக்கும் லக்னம் பலம் குறைந்து, ரோக ஸ்தானம் வலுத்தால் வியாதியின் ஆதிக்கம் ஏற்படக் கூடும் அல்லவா? அதனால் லக்னாதிபதியின் பலம் ஆறாம் வீட்டுக்கதிபதியின் பலத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கவேண்டும். அவருக்கு லக்னாதிபதி ஆறாம் வீட்டுக்கதிபதியை விட கூடுதலாக சுப பலத்துடன் இருக்கிறார். பொதுவாக, கண் உபாதைக்கு சூரியபகவானையும்; சுக்கிரபகவானையும் கவனமாகக் கூறுவார்கள். காதுக்கு மூன்றாம் வீட்டைப் பார்க்க வேண்டும். மூளைக்கு குருபகவானும்; தலைக்கு சூரியபகவானும்; நரம்புக்கு புதபகவானும் காரகத்துவம் பெறுகிறார். தலையில் பலமாக அடிபட்டு (சூரியன்) மூளை வரை (குருபகவான்) பாதித்து அதனால் மூளையிலிருந்து செல்லும் நரம்பு மண்டலம் (புதபகவான்) பாதிக்கப்பட்டு கண்களுக்குச் செல்லும் (சுக்கிரபகவான்) நரம்பு பாதிக்கப்பட்டு கண்பார்வை குறைந்து விட்டது. கடந்த 18 ஆண்டுகளாக அவருக்கு சுக்கிரபகவானின் தசை நடந்தது. இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மீதம் உள்ளது. தற்சமயம் புதபகவானின் புக்தி முடியும் தறுவாயில் உள்ளதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் மறுபடியும் பார்வை வரத் தொடங்கும். தொடர்வதும் குருபகவானின் பார்வையை பெற்றிருக்கும் சூரியபகவானின் தசையாக உள்ளதால் வேலைக்கும் செல்வார். சூரியமஹா தசையில் முற்பகுதியில் திருமணம் கைகூடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். இந்த கேள்விக்குரிய பதிலை மிகவும் கனத்த இதயத்துடன் எழுதியிருக்கிறோம். உங்கள் மகனுக்கு எங்களின் ஆசிகள்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com