என் மகன் காமர்ஸ் படிப்பு படிக்கிறான். சட்டப்படிப்பு ஏற்றதா? போலீஸ் துறையில் சேர ஆசைப்படுகிறான். ஸ்திர ராசி, ஸ்திர லக்னம் என்பதால் எத்தகைய துறையில் சேரந்து உயர் கல்வி பயில்வது சிறந்தது. கேதுவின் சாரத்தில் மூன்று கிரகங்கள் (சனி, ராகு, சுக்கிரன்) பயமாக உள்ளது, சிறப்பான எதிர்காலம் அமையுமா? - வாசகர், கோயம்புத்தூர்

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து

உங்கள் மகனுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, உத்திரம் நட்சத்திரம். பாக்கியாதிபதியான சந்திரபகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சூரிய பகவானின் சாரத்தில் (உத்திரம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சந்திரபகவானின் சாரத்தில் (அஸ்தம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுய சாரத்தில் (பூரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் ஆறாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். ஒரு கிரகம் நீச்சமாகி வர்கோத்தமம் பெற்றால் நீச்சபங்க ராஜயோகம் உண்டாவதற்குரிய பல விதிவிலக்குகளில் ஒன்றாகும். இதனால் சனிபகவான் ஆறாம் வீட்டில் முழுமையான பலம் பெற்றிருக்கிறார் என்று கூற வேண்டும். இதனால் ஆறாம் வீட்டிற்குரிய காரகத்துவங்கள் சிறப்படையும். மேலும் சனிபகவான் 3,6,11 ஆம் வீடுகளில் இருப்பது சிறப்பாகும். இதனால் தைரிய, சுக ஸ்தானாதிபதியான சனிபகவான் தான் ஆதிபத்யம் பெற்றுள்ள வீடுகளின் பலனையும் முழுமையாக வழங்குவார் என்றும் புரிந்து கொள்ள வேண்டும். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார். எந்த ஒரு கிரகத்துக்கும் ராசியை விட நவாம்சத்தில் சுபபலம் கூடியிருந்தால் அந்த கிரகம் சிறப்பான நன்மைகளைச் செய்யக்கூடிய தகுதியைப் பெறும் என்று புரிந்து கொள்ள வேண்டும். இதனால் நண்பர்கள் மூலமாக நன்மைகள் உண்டாகும் என்று பொதுவாகக் கூற வேண்டும். 
அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்ன கேந்திரத்தில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியான தன் ஆட்சி, உச்ச மூலத்திரிகோண வீட்டை அடைகிறார். செவ்வாய் புதபகவான்களின் பரிவர்த்தனையை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அதாவது, லக்னாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை மற்றும் ஆறாமதிபதியும் எட்டாமதிபதியும் பரிவர்த்தனை (விபரீத ராஜயோகத்தைக் கொடுக்கிறது) என்கிற இரண்டு வகையிலும் சிறப்பைப் பெறுகிறது. இதனால் இந்த இரண்டு தசா புக்திகளும் ஒன்றுக்கொன்று இணைந்து வேலை செய்யும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த இரண்டு கிரகங்களின் காரகத்துவங்களும் வலுப்பெறும். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். கேதுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (அவிட்ட நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (மகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
ஸ்திர லக்னம், ஸ்திர ராசி அமைந்திருப்பதால் எத்தகைய கல்வி அமையும் என்று பொதுவாகக் கூற முடியாது. அதாவது, அந்த இரண்டு வீடுகளுக்கும் நான்காம் வீட்டைக் கொண்டு கல்வியை ஓரளவுக்கு கணிக்க வேண்டுமே அன்றி, அதை முழுமையாகப் பயன்படுத்தக் கூடாது. ஒருவர் கல்வி கற்பதற்கு மூன்று திரிகோணாதிபதிகளும் துணை புரிகிறார்கள். அதோடு கற்ற கல்வியைப் பயன்படுத்த தொழில் ஸ்தானமும் காரணமாகிறது. நான்காம் வீட்டிற்கு அதிகபலம் கூடி அதன்படி கல்வி அமைந்தாலும் அந்த ஜாதகத்தின் மூல பலத்திற்கேற்ப உத்தியோகமோ தொழிலோ அமையும். உதாரணமாக, ஒருவருக்கு கணினி துறையில் கல்வி அமைந்து அவர், வங்கி காப்பீட்டுத் துறையில் நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக கணினி சம்பந்தப்பட்ட வேலையில் இருப்பார். அதேபோல் கணினி படிப்பு படித்து கணினி துறையிலேயே உத்தியோகம் செய்வார். அதனால் லக்னத்திலிருந்து நான்காம் வீட்டை மட்டுமே கொண்டு கணினி படிப்பைப் படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்யக்கூடாது. அவருக்கு லக்னத்திலிருந்து நான்காம் வீடு கும்ப ராசியாகும். சிம்ம ராசியிலிருந்து நான்காம் வீடு விருச்சிக ராசியாகும். நான்காம் வீட்டில் குரு, கேதுபகவான்களும் விருச்சிக ராசியில் சூரிய புதபகவான்களும் அமர்ந்திருக்கிறார்கள். புதபகவானை கணக்கன் என்பார்கள். புதபகவான் வலுத்திருந்தால் காமர்ஸ் படிப்பு நன்கு வரும். அதேநேரம் அவர் முழுமையாக கணிதம் சம்பந்தப்பட்ட துறையில் ஈடுபட வாய்ப்பு குறைவு. அவருக்கு லக்னாதிபதியும் பூர்வபுண்ணியாதிபதியும் சட்டம் நீதி துறைகளுக்கு காரகம் பெற்றிருக்கிறார்கள். 
ஒருவர் ஜாதகத்திற்கு ஏற்ற படிப்புகளைப் படித்து அந்த துறையிலேயே கோலோச்சுவதற்கு மூன்று திரிகோணாதிபதிகளும் சீராக பலம் பெற்றிருக்க வேண்டும். அவருக்கு செவ்வாய், குரு, சந்திர பகவான்கள் நல்ல பலத்துடன் இணக்கமாக இருப்பதால் சட்டப் படிப்பு ஏற்றது. செவ்வாய்பகவான் காவல்துறைக்கும் காரகம் வகிப்பதால் அந்தத் துறையிலும் வெற்றி கிடைக்கும். இங்கு, குருபகவானின் பலத்தையும் பார்க்க வேண்டும். குருபகவான் பாக்கியாதிபதியை சமசப்தமாகப் பார்வை செய்வதால் கஜகேசரி யோகம் உண்டாகிறது. அதனால் அவர் சட்டம் படித்தாலும் சட்ட வல்லுநராக வங்கி, காப்பீடு போன்ற துறைகளிலும் கம்பெனி சட்டங்களை செயல்படுத்தும் சட்ட நிறுவனங்களிலும் வேலைக்குச் செல்வார் என்று கூறலாம். அதனால் அவரை சட்டப்படிப்பை மேற்படிப்பாகப் படிக்க வைக்கவும். லாபாதிபதியும் லக்னாதிபதியும் வலுவாக இருப்பதாலும் தொழில் ஸ்தானாதிபதி லக்ன கேந்திரத்தில் இருப்பதாலும் நிரந்தர வருவாய் வரும் சிறப்பான வேலை அமைந்துவிடும். 
குரு மஹா தசை நடக்கும் காலத்தில் சட்டத்துறையில் முழுமையாகத் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். ராகுபகவான் பாக்கியாதிபதியுடன் தொழில் ஸ்தானத்தில் இணைந்திருப்பதால் இன்னும் மூன்றாண்டுகளுக்குப் பிறகு தொடங்கும் ராகுபகவானின் தசையில் சுய புக்தி முடிந்தவுடன் உத்தியோகத்தில் உயரத்தொடங்கி விடுவார். கேதுபகவானின் சாரத்தில் மூன்று கிரகங்கள் இருந்தால் பாதிப்பு என்று எதுவும் இல்லை. இதேபோன்று பலருக்கும் ராகுபகவானின் சாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் குறையா என்று சந்தேகம் உள்ளது. இத்தகையோர்களுக்கு ராகு- கேது பகவான்கள் பெற்றுள்ள சுப அல்லது அசுபத் தன்மையை பொறுத்தே பலன்கள் அமையும். மற்றபடி, பொதுவாக, ராகு- கேது பகவான்களின் சாரம் சிறப்பல்ல என்று கூற முடியாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com