நான் அரசாங்க கடைநிலை ஊழியராக 16 வருடங்களாக இருக்கிறேன். எனக்கு குரு, சந்திரன், சூரியன் ஆகிய கிரகங்கள் பலமாக இருக்கிறார்கள் என்கின்றனர். ஏழாம் வீடு எப்படி உள்ளது? வாடகை வீட்டில் இருக்கிறேன். சொந்த வீடு அமையுமா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?  - வாசகர்

உங்களுக்கு கடக லக்னம், கடக ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்


உங்களுக்கு கடக லக்னம், கடக ராசி. லக்னாதிபதியான சந்திரபகவான் லக்னத்தில் புதபகவானின் சாரத்தில் (ஆயில்ய நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார். லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று இருப்பது பல பிறவிகளில் செய்த புண்ணியம் என்று கூறுவார்கள். லக்னத்தை உயிர் ஸ்தானம் என்பார்கள். சந்திரபகவானை உடல் காரகர் என்பார்கள். அதாவது, கடக லக்னத்தில் லக்னாதிபதி சந்திரபகவான் இருப்பது உயிரும் உடலும் கலந்தது போல் ஆகிறது என்று கூற வேண்டும். பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுயசாரத்தில் (சித்திரை நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். எந்த ஒரு கிரகமும் சுய சாரத்தில் அமர்ந்திருப்பது சிறப்பாகும். அதோடு அந்த கிரகம் வர்கோத்தமும் பெற்றிருப்பது "பருத்தி புடவையாய்க் காய்த்தது!' என்பார்களேஅதுபோல் பலன்தரும் அமைப்பாகும். 
ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் லக்னத்தில் சுய சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அதோடு, லக்னத்தில் குருபகவான் திக்பலம் பெறுகிறார். பாக்கியாதிபதி லக்னத்தில் உச்சம் பெறுவது மேன்மையாகும். லக்னாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் லக்னத்தில் இணைந்து குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறார்கள். தனம் வாக்கு குடும்ப ஸ்தானாதிபதியான சூரியபகவான் பத்தாம் வீட்டில் கேதுபகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் ரிஷப ராசியை அடைகிறார். தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார். நீச்சம் பெற்றுள்ள புதபகவான் அந்த வீட்டுக்கு அதிபதியான குருபகவான் உச்சம் பெற்று பார்வை செய்வதால் அவருக்கு நீச்சபங்க ராஜயோகம் உண்டாகிறது. 
சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் லாப ஸ்தானத்திலேயே சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) ஆட்சி பெற்று அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் சுய சாரத்தில் (உத்திரட்டாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியில் உச்சம் பெறுகிறார். கேதுபகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் ராகுபகவானின் சாரத்தில் (சுவாதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். ராகுபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார்.
உங்களுக்கு லக்னத்தில் லக்னாதிபதியும் பாக்கியாதிபதியும் இணைந்திருப்பது சிறப்பு. இவர்களின் நேர்பார்வை ஏழாம் வீட்டின் மீது படிகிறது. ஏழாம் வீட்டை களத்திர ஸ்தானம் என்று பொதுவாகக் கூறினாலும் அது நண்பர்களையும் கூட்டாளிகளையும் அவர்களால் நன்மையா அல்லது தீமையா என்பதையும் உணர்த்தும் வீடாகும். பொதுவாக, இந்த வீடு சுபத்துவம் பெற்றிருந்தால் அவர்கள் நல்ல நண்பர்களைப் பெற்று அவர்களால் தக்க உதவிகளையும் பெறுவார்கள். சிலர் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் செல்வாக்குள்ள நண்பர்களைப் பெற்று அவர்களுடன் சகஜமாகப் பழகி காரியங்களைச் சாதித்துக் கொள்வார்கள். மேலும் சிலர் கூட்டுத்தொழிலில் இருந்து பெயரளவுக்கே பங்கு கொண்டாலும் நண்பர்களால் ஏமாற்றப்படாமல்  அவருக்குரிய லாபப் பங்கு வீடு தேடி வந்துவிடும். ஏழாம் வீடு வலுத்திருப்போர் சமுதாயத்தில் செல்வாக்குடன் திகழ்வார்கள். சிலர் நண்பர்களின் வீட்டில் வாடகை கொடுக்காமல் சுதந்திரமாக வாழ்வார்கள். மேலும் உச்சம் பெற்றுள்ள குருபகவானின் ஒன்பதாம் பார்வை நட்பு ஸ்தானாதிபதியான சனிபகவானின் மீது படிகிறது. இது மேற்கூறிய அதிர்ஷ்டத்தை உறுதி செய்கிறது. இதனால் முக்கிய தருணங்களில் தக்க அறிவுரைகள் உங்களைத் தேடி வரும். அதனால் தவறான முடிவுகளை எடுக்காமல் தப்பித்துக் கொள்வீர்கள். ஒருவருக்கு நல்ல நண்பர்கள் கிடைத்து விட்டால் வாழ்க்கை இன்பகரமாக ஆகிவிடுமல்லவா? அதோடு, செல்வாக்குள்ள நண்பர்கள் என்றால் பாதுகாப்பான வாழ்க்கையை இறுதிவரை வாழலாம். மேலும் ஏழாம் வீட்டின் மூலம் ஒருவர் வாழ்க்கையில் எந்த அளவுக்கு பயணங்களைச் செய்வார் என்றும் அறியலாம். உங்களுக்கு ஏழாம் வீடு சர ராசியாகி வலுவாக உள்ளதால் அடிக்கடி சிறிய பயணங்களையும் செய்ய நேரிடும். பல ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிக்கும் வாய்ப்பும் உண்டாகும்.
வீடு, வாகனம் பற்றி அறிய நான்காம் வீட்டையும் சுக்கிரபகவானையும் பார்க்க வேண்டும். உங்களுக்கு நான்காம் வீட்டில் கேதுபகவான், ராகுபகவானின் சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் நட்பு வீடான கும்ப ராசியை அடைகிறார். நான்கு பதினொன்றாம் வீடுகளுக்கு அதிபதியான சுக்கிரபகவான் பதினொன்றாம் வீடான லாப ஸ்தானத்தில் அமர்ந்திருக்கிறார். சர லக்னங்களுக்கு பதினொன்றாம் வீட்டை பாதக ஸ்தானம் என்று அழைக்கிறோம். பாதகாதிபதி பாதக ஸ்தானத்தில் ஆட்சி பெற்றோ மற்றபடி பலம் பெற்றோ அமர்ந்திருப்பது சிறப்பு என்று பலமுறை எழுதியிருக்கிறோம். உங்களுக்கு சுக்கிர தசை முடிந்து சூரிய தசை தொடங்கிய காலகட்டத்தில் அதாவது முப்பந்தைந்தாவது வயதில் அரசு வேலை கிடைத்தது. சூரியபகவான் தொழில் ஸ்தானத்தில் திக் பலம் பெற்று அமர்ந்திருக்கிறார். மற்ற அரசு கிரகங்கள் வலுத்திருப்பதாலும் பித்ரு தோஷம் இருப்பதால் உங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற முடியவில்லை. மற்றபடி லக்ன சுபரின் தசை நடக்கத் தொடங்கியவுடன் உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டது. இத்தகைய நிலைமையை ஜோதிடத்தில் " அபவாத யோகம்' என்பார்கள். வலுவான கிரகங்களின் தசைகள் தக்க வயதில் வராமல் போவதை இது குறிக்கிறது. 
அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து ஐந்து, பத்தாம் வீடுகளுக்கு அதிபதியான செவ்வாய்பகவானின் தசை ஏழாண்டுகள் நடக்கும். செவ்வாய்பகவான் கடக லக்னத்திற்கு யோக காரகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த காலகட்டத்தில் வருமானம் பெருகி சொந்த வீடு கட்டும் பாக்கியம் உண்டாகும். மற்றபடி பிற்கால வாழ்க்கை சீரும்சிறப்புமாக அமையும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியபகவானையும் சிவபெருமானையும் வழிபட்டு வரவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com