என் மகன் ஐஏஎஸ் தேர்வில் நேர்காணல் வரை சென்று சொற்ப மதிப்பெண்களில் தேர்வாகவில்லை. தற்சமயம் அரசில் எழுத்தராக பணிபுரிகிறார். ஐஏஎஸ் பணிக்கான தேர்வு மையம் தொடங்கலாமா? வேறு எந்தத் துறைகளில் ஈடுபடலாம்? ஆரோக்கியம் எப்படி இருக்கும்? சனி வக்கிரம் பெற்று சூரியபகவானின் பார்வையை பெறுவது குறையா? அவரின் ஜாதகத்தைப் பார்த்தவர்கள் ஓஹோ என்று கூறினார்கள். எப்பொழுது மாற்றம் வரும். பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? - வாசகி

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி. ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் சூரியபகவானின்

உங்கள் மகனுக்கு கும்ப லக்னம், கிருத்திகை நட்சத்திரம், மேஷ ராசி. ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார்.
 லக்னத்திற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (சித்திரை நட்சத்திரம்)அமர்ந்து நவாம்சத்தில் விருச்சிக ராசியை அடைகிறார்.
 எந்த ஒரு ஜாதகத்திற்கும் முதல் திரிகோணம் மற்றும் கேந்திராதிபதியான லக்னாதிபதியின் பலம் அடிப்படை பலமாக அமைகிறது. லக்னாதிபதி பலம் பெற்றுவிட்டாலே அந்த ஜாதகர் வாழ்க்கைக்குத் தேவையான ஆதாரத் தேவைகளைத் தடையின்றி பெற்றுவிடுவார். இதற்குப்பிறகு மற்ற திரிகோணம், கேந்திராதிபதிகளின் பலத்தைக் கொண்டு எந்த அளவுக்கு பலம் கூடுகிறது என்று பார்க்க வேண்டும்.
 தனம் வாக்கு குடும்ப ராசியாகிய இரண்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில் (அனுஷ நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமர்ந்திருக்கும் நிலை) அமர்ந்திருக்கிறார்.
 தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்ப ராசியை அடைகிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் ராகுபகவானின் சாரத்தில் (திருவாதிரை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மகர ராசியை அடைகிறார்.
 பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரியபகவானின் சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தனுசு ராசியை அடைகிறார். ராகுபகவான் பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் செவ்வாய்பகவானின் சாரத்தில் (மிருசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். கேதுபகவான் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (மூலம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார்.
 உங்கள் மகனுக்கு லக்னாதிபதி பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். அவர் வக்கிரம் பெற்றிருப்பதும் உச்சம் பெற்ற சூரியபகவானால் பார்க்கப் படுவதும் குறையா? என்று கேட்டுள்ளீர்கள்.
 பொதுவாக, சனிபகவான் சூரியபகவானிடமிருந்து சராசரியாக 120 பாகைகள் விலகும் பொழுது வக்கிரமடைகிறார். குருபகவான் சூரியபகவானிடமிருந்து சராசரியாக 150 பாகைகள் விலகும்பொழுது வக்கிரமடைகிறார்.அதாவது சனிபகவான் சராசரியாக வருடத்தில் ஐந்து மாதங்களும்; குருபகவான் வருடத்தில் சராசரியாக நான்கு மாதங்களும் வக்கிரம் பெறும் காலங்களாகும். வக்கிரம் பெற்ற கிரகங்கள் பின்னோக்கி சஞ்சாரம் செய்யும். சில நேரங்களில் அதிவக்கிரம் பெற்று (முந்திய ராசிக்குச் செல்வது) சஞ்சரிக்கும் நிலையும் ஏற்படும். வக்கிரம் பெற்ற கிரகங்கள் பலமிழக்கின்றனவா என்றால் இல்லை என்றே கூற வேண்டும். அதோடு, இந்த கிரகங்கள் பாவகத்தில் மாற்றம் பெற்று விடும் வாய்ப்பு இருப்பதால் இதனைக் கருத்தில் கொண்டு பலனைக் கூறவேண்டும். மற்றபடி வக்கிர கிரகங்கள் சஞ்சரிக்கும் போது சற்று கூடுதலான நற்பலன்களைத் தரும் என்று கூறவேண்டும்.
 "உச்சனை, உச்சன் பார்த்தால் பிச்சை' என்பது அனுபவத்தில் ஒத்துவருவதில்லை. மாறாக இத்தகையோர் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பதையும், தனியார் அல்லது அரசு துறைகளில் உயரிய பதவிகளில் அமர்ந்திருப்பதையும் பார்க்கிறோம். இத்தகையோர் பலர் அரசியலில் ஈடுபட்டு வெற்றியடைந்திருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு அரசு விருதுகளும் தேடிவரும். சூரிய, சனிபகவான்கள் அரசு கிரகங்கள் என்பதால் சமுதாயத்திற்கு உழைக்கும் பதவிகளைப் பெறுகிறார்கள். பலருக்கும் உதவி செய்து பெயரெடுக்கிறார்கள் என்றால் மிகையாகாது. சனிபகவான் சந்திர கேந்திரத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருப்பதால் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகமும் உண்டாகிறது. இதனால் அவருக்கு உயர் பதவிகள் தேடிவரும்.
 பொதுவாக, சனிபகவான் வலுத்திருந்தால் உழைத்து பொருளீட்ட வைப்பார். வெளிநாடு சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஆர்வத்தை ஊட்டுவார். தொழில் ஸ்தானத்தில் தன, லாபாதிபதியான குருபகவான் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். இதனால் சிறப்பான பலரும் போற்றத்தக்க வகையில் உத்தியோகம் அமையும். குருபகவான் ஆசிரியர் தொழிலுக்கும் காரணமாகிறார். இதனால் அடுத்தவர்களுக்குப் பாடம் சொல்லித் தரும் வேலையும் பார்க்க நேரிடும். குருபகவான் பலம் பெற்று பத்தாமிடத்தோடு சம்பந்தம் பெற்றிருப்பதால் ரசாயனம் சம்பந்தப்பட்ட தொழிலிலும் அபிவிருத்தி காணலாம். குருபகவான் குடும்பாதிபதியாகி குடும்ப ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் குடும்பத்திலும் உயர்வு உண்டாகும். உற்றார் உறவினர்களுடன் இணக்கமாக வாழும் நிலை உண்டாகும்.
 சமசப்தம பார்வையாக (ஏழாம் பார்வையாக) தொழில் ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவானும் குருபகவானும் பார்வை செய்து கொள்கிறார்கள். இதனால் மற்றவர்களை அதிகாரம் செய்யும் பதவிகள் அமையும். செவ்வாய், குரு பகவான்கள் சட்டம், நீதிதுறைகளுக்கு ஆதிபத்யம் பெற்று இருப்பதால் மற்றவர்களுக்கு ஆலோசனை தரும் கன்ஸல்டன்ஸி துறைகளிலும் ஈடுபடலாம். தற்சமயம் ராகுபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி அடுத்த ஆண்டு இறுதிவரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குள் மேற்கூறிய இவைகளில் அவருக்கு வாய்ப்புகள் தேடிவரும்.
 ஆரோக்கிய ஸ்தானாதிபதி விபரீத யோகம் பெற்று லக்னாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகளின் சம்பந்தம் பெற்றிருப்பதால் ஆரோக்கியத்தில் பெரிய குறைபாடுகள் என்று எதுவும் ஏற்படாது. மேலும் அவருக்கு அசுப ராசிகள் என்று அழைக்கப்படும் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் வீடுகள் கிரகங்களின்றி சுத்தமாக இருப்பதும் சிறப்பாகும். அதோடு, ஆறாம் வீட்டிற்கு குருபகவானின் ஒன்பதாம் பார்வை கிடைப்பதும் அவரின் ஆரோக்கியம் இறுதிவரை சிறப்பாகவே அமையும் என்றும் கூற முடிகிறது. இதனால் அவர் ஒரு முக்கியஸ்தர் என்கிற நிலையில் வாழ்வார் என்று கூறவேண்டும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com