'பிஎஸ் - 6 ரக வாகனங்களை 2020-க்குள் தயாரிப்பது சாத்தியமல்ல': உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

பாரத் ஸ்டேஜ் - 6 மாசுக் கட்டுப்பாட்டுத் தரக் கொள்கைகளின் அடிப்படையில் 2020 ஏப்ரலுக்குள் வாகனங்களை உற்பத்தி செய்வதில் சில சிக்கல்கள் உள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள்
'பிஎஸ் - 6 ரக வாகனங்களை 2020-க்குள் தயாரிப்பது சாத்தியமல்ல': உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தகவல்

பாரத் ஸ்டேஜ் - 6 மாசுக் கட்டுப்பாட்டுத் தரக் கொள்கைகளின் அடிப்படையில் 2020 ஏப்ரலுக்குள் வாகனங்களை உற்பத்தி செய்வதில் சில சிக்கல்கள் உள்ளதாக இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
பிஎஸ் - 3 ரக வாகனங்களின் உற்பத்திக்கும், விற்பனைக்கும் அதிரடியாக அண்மையில் தடை விதித்த உச்ச நீதிமன்றம், கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பிஎஸ் - 4 விதிகளின் கீழ் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மட்டுமே விற்பனை செய்ய அனுமதித்தது.
இந்நிலையில், வரும் 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ் - 6 மாசுக் கட்டுப்பாட்டுக் கொள்கை அமலுக்கு வரும் என்றும், 2019-ஆம் ஆண்டு முதல் அந்தக் கொள்கையின் கீழ் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிக்கையை மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நீதிபதிகள் மதன் பி. லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் தரப்பில் வாதிட்டதாவது:
2019-இல் பிஎஸ் - 6 விதிகளின் கீழ் உற்பத்தியைத் தொடங்கி, 2020 ஏப்ரலுக்குள் அந்த வாகனங்களை விற்பனைக்குக் கொண்டுவர வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. தொழில்நுட்ப ரீதியாக ஓராண்டுக்குள் புதிய விதிகளின் கீழ் வாகனத் தயாரிப்பில் மாற்றங்களை மேற்கொள்ள இயலாது என்று அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பிறகு மனு மீதான விசாரணையை மே 1-ஆம் தேதிக்கு அவர்கள் ஒத்திவைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com