மோட்டார் வாகன விற்பனை 16-ஆண்டுகளில் காணப்படாத சரிவு

மோட்டார் வாகன விற்பனை சென்ற டிசம்பர் மாதத்தில் 16-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மோட்டார் வாகன விற்பனை 16-ஆண்டுகளில் காணப்படாத சரிவு

மோட்டார் வாகன விற்பனை சென்ற டிசம்பர் மாதத்தில் 16-ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாக இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைமை இயக்குநர் விஷ்ணு மாத்துர் கூறியதாவது:
மத்திய அரசு, ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று சென்ற நவம்பரில் அறிவித்தது மோட்டார் வாகனம் வாங்கும் வாடிக்கையாளர்களிடையே எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக, சென்ற டிசம்பரில் ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள், கார் ஆகியவற்றின் விற்பனை 16 ஆண்டுகளில் காணப்படாத அளவுக்கு வீழ்ச்சியை கண்டன.

அனைத்து ரக மோட்டார் வாகனங்களின் விற்பனை 2016 டிசம்பரில் 12,21,929-ஆக இருந்தது. 2015 டிசம்பரில் விற்பனையான 15,02,314 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 18.66 சதவீதம் சரிவாகும்.

இதற்கு முன், 2000-ஆம் ஆண்டு டிசம்பரில்தான் மோட்டார் வாகன விற்பனை எப்போதும் இல்லாத அளவில் 21.81 சதவீதம் வீழ்ச்சி கண்டிருந்தது.
உள்நாட்டில் சென்ற டிசம்பர் மாதத்தில் 1,58,617 கார்கள் விற்பனையாகின. 2015 டிசம்பரில் விற்பனை செய்யப்பட்ட 1,72,671 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 8.14 சதவீதம் குறைவாகும். கடந்த 2014 ஏப்ரலில் தான் கார்கள் விற்பனை அதிகபட்சமாக 10.15 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்தது. அதன்பிறகு, முதல்முறையாக சென்ற டிசம்பரில்தான் கார் விற்பனை இந்த அளவுக்கு சரிந்துள்ளது.

பயணிகள் வாகன விற்பனையும் 2,30,959 என்ற எண்ணிக்கையிலிருந்து 1.36 சதவீதம் குறைந்து 2,27,824-ஆக காணப்பட்டது. இதற்கு முன், இதன் விற்பனை 2014 அக்டோபரில்தான் அதிக அளவாக 7.52 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்தது.

அதேபோன்று, மொத்த இரு-சக்கர வாகன விற்பனை டிசம்பரில் 11,67,621 என்ற எண்ணிக்கையிலிருந்து 22.04 சதவீதம் வீழ்ச்சியடைந்து 9,10,235-ஆக இருந்தது.

இந்திய மோட்டார் வாகன தயாரிப்பாளர்கள் சங்கம் புள்ளிவிவரங்களை வெளியிட தொடங்கிய 1997-ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது இருசக்கர வாகன விற்பனை இந்த அளவுக்கு வீழ்ச்சி கண்டது இதுவே முதல்முறை.

ஸ்கூட்டர்கள் விற்பனையும் 15 ஆண்டுகளுக்கு பிறகு சென்ற டிசம்பரில் 3,86,305-லிருந்து 26.38 சதவீதம் சரிந்து 2,84,384-ஆக காணப்பட்டது. இதற்கு முன், கடந்த 2001-மார்ச் மாதத்தில்தான் ஸ்கூட்டர்கள் விற்பனை 27.05 சதவீதம் அளவுக்கு குறைந்திருந்தது.

மோட்டார் சைக்கிள்கள் விற்பனையும் எட்டு ஆண்டுகளுக்கு பிறகு சென்ற டிசம்பரில் 22.5 சதவீதம் சரிவடைந்து 5,61,690-ஆக இருந்தது.
மொத்த இருசக்கர வாகன விற்பனையில் பாதியளவு கிராமப்புறங்களில் நடைபெறுகிறது. பணத்தட்டுப்பாடு பிரச்னையால் அங்கு விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வர்த்தக வாகனங்கள் விற்பனையும் டிசம்பரில் 5.06 சதவீதம் குறைந்து 53,966-ஆக காணப்பட்டது. அதேசமயம், இலகு ரக பிரிவிலான வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆச்சர்யமூட்டும் வகையில் 1.15 சதவீதம் அதிகரித்து 31,178-ஆக காணப்பட்டது.

மோட்டார் வாகன விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு தாற்காலிகமானதே. பட்ஜெட்டில் ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு, பணத்தட்டுப்பாடு நீங்கி செலவிடும் வருவாய் அதிகரிக்கும் போது மோட்டார் வாகன விற்பனை சூடுபிடிக்கும்.

ஆனால், எதிர்பார்த்தபடி பட்ஜெட்டில் சலுகைகள் எதுவும் அறிவிக்காதபட்சத்தில், மோட்டார் வாகன விற்பனை இலக்கு எட்டப்படாமல் போக வாய்ப்புள்ளது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com