டி.வி.எஸ். மோட்டார்: வாகனங்களின் விலை ரூ.4,150 வரை குறைப்பு

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி இருசக்கர வாகனங்களின் விலையை ரூ.4,150 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார்: வாகனங்களின் விலை ரூ.4,150 வரை குறைப்பு

டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி இருசக்கர வாகனங்களின் விலையை ரூ.4,150 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கிடும் வகையில் இருசக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறைந்த விலை பிரிவு வாகனங்களின் விலை ரூ.350 முதல் ரூ.1,500 வரையிலும், பிரீமியம் பிரிவு பைக்குகளின் விலை மாடல்களைப் பொருத்து ஒவ்வொரு மாநிலத்திலும் ரூ.4,150 வரையிலும் குறைக்கப்பட்டுள்ளது என்று டி.வி.எஸ். அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாகன விற்பனை 11% உயர்வு: டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி சென்ற ஜூன் மாதத்தில் 2,73,364 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 2,47,364 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 11% சதவீதம் அதிகமாகும். இருசக்கர வாகன விற்பனை 11.8 சதவீதம் உயர்ந்து 2,68,638-ஆக காணப்பட்டது. ஏற்றுமதி 39,163 என்ற எண்ணிக்கையிலிருந்து 13 சதவீதம் அதிகரித்து 44,389-ஆக காணப்பட்டது என்று டி.வி.எஸ். மோட்டார் தெரிவித்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப்
இருசக்கர வாகன தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஜூனில் 14 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
ஹீரோ மோட்டோகார்ப் சென்ற ஜூன் மாதத்தில் 6,24,185 வாகனங்களை விற்றுள்ளது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 5,49,533 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 14 சதவீதம் அதிகமாகும். தேவை சிறப்பான அளவில் அதிகரித்ததையடுத்து மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 5,47,185-ஆகவும், ஸ்கூட்டர்கள் விற்பனை 22 சதவீதம் வளர்ச்சி கண்டு 77,000-ஆகவும் இருந்தது என்று ஹீரோ மோட்டோகார்ப் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வாகன விலை குறைப்பு: ஜிஎஸ்டி அமலுக்கு வந்ததையடுத்து, வரி குறைப்பின் பலன்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அதிகம் விற்பனையாகும் இருசக்கர வாகனங்களின்விலையை ரூ.400 முதல் ரூ.1,800 வரை குறைப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்துள்ளது. ஒரு சில சந்தைகளில் பிரீமியம் பிரிவிலான இருசக்கர வாகனங்களின் விலையை ரூ.4,000 வரை குறைப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபோர்டு
கார்களின் விலையை 4.5 சதவீதம் வரை உடனடியாக குறைக்க ஃபோர்டு இந்தியா நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: ஜிஎஸ்டியின் பலனை வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அனைத்து மாடல் கார்களின் விலையையும் 4.5 சதவீதம் வரை உடனடியாக குறைக்க முடிவெடுத்துள்ளோம். இந்த விலை குறைப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். குறிப்பாக, மும்பையில் நிறுவனத்தின் ஸ்போர்ட்ஸ் வகை காரான எண்டவர் மாடலின் விலை ரூ.3 லட்சம் வரை குறையும். தில்லியில் ஃபிகோ காரின் விலை ரூ.2 ஆயிரமும், எக்கோஸ்போர்ட் மாடல் விலை ரூ.8 ஆயிரம் வரையிலும், எண்டவர் மாடல் விலை ரூ.1.5 லட்சம் வரையிலும் குறையும் என்றார் அவர்.
இருப்பினும் அந்த நிறுவனத்தின் பிரபல ஸ்போர்ட்ஸ் ரக காரான மஸ்டாங் மாடலின் விலை எவ்வளவு குறையும் என்பதை ஃபோர்டு தெரிவிக்கவில்லை. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதன் எதிரொலியாக, மாருதி சுஸுகி, டொயோட்டா, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு கார்களின் விலையைக் குறைப்பதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பஜாஜ் ஆட்டோ


பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 23 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு திங்கள்கிழமை அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
பஜாஜ் ஆட்டோ சென்ற ஜூனில் 2,44,878 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனை செய்யப்பட்ட 3,16,969 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 23 சதவீதம் சரிவாகும்.
மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 2,73,298 என்ற எண்ணிக்கையிலிருந்து 25 சதவீதம் குறைந்து 2,04,667-ஆக இருந்தது. ஏற்றுமதி 4 சதவீதம் சரிந்து 1,17,903-ஆக காணப்பட்டது. வர்த்தக வாகன பிரிவில் விற்பனை 8 சதவீதம் சரிந்து 40,211-ஆக இருந்தது என பஜாஜ் ஆட்டோ அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அசோக் லேலண்ட்
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை சென்ற ஜூன் மாதத்தில் 11 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அசோக் லேலண்ட் சென்ற ஜூன் மாதத்தில் 12,330 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 11,108 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 11 சதவீதம் அதிகமாகும். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 8,685 என்ற எண்ணிக்கையிலிருந்து 6 சதவீதம் அதிகரித்து 9,202-ஆக இருந்தது. மேலும், இலகு ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 2,423-லிருந்து 29 சதவீதம் வளர்ச்சி கண்டு 3,128-ஆக இருந்தது என்று அசோக் லேலண்ட் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com