டி.வி.எஸ்.மோட்டார் வாகன விற்பனை 8% வளர்ச்சி

சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஏப்ரல் மாத வாகன விற்பனை 8 சதவீதம் அதிகரித்தது.
டி.வி.எஸ்.மோட்டார் வாகன விற்பனை 8% வளர்ச்சி

சென்னையில் தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் ஏப்ரல் மாத வாகன விற்பனை 8 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் சென்ற ஏப்ரலில் 2,46,310 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2016-ஆம் ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 2,27,096 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 8.46 சதவீத வளர்ச்சியாகும்.
மொத்த இருசக்கர வாகன விற்பனை 8.39 சதவீதம் அதிகரித்து 2,41,007-ஆக இருந்தது. உள்நாட்டு சந்தையில் இருசக்கர வாகன விற்பனை 1,97,692 என்ற எண்ணிக்கையிலிருந்து 3.96 சதவீதம் உயர்ந்து 2,05,522-ஆக காணப்பட்டது.
ஸ்கூட்டர்கள் விற்பனை 28.57 சதவீதம் அதிகரித்து 81,443-ஆக இருந்தது. மோட்டார் சைக்கிள்கள் விற்பனை 90,491-லிருந்து 10.38 சதவீதம் வளர்ச்சி கண்டு 99,890-ஆனது.
ஏற்றுமதி 41.8 சதவீதம் உயர்ந்து 40,221-ஆக காணப்பட்டது. இதில், இருசக்கர வாகன ஏற்றுமதி 43.9 சதவீதம் அதிகரித்து 35,485-ஆகவும், மூன்று சக்கர வாகன ஏற்றுமதி 11.7 சதவீதம் உயர்ந்து 5,303-ஆகவும் இருந்தது என்று டி.வி.எஸ். மோட்டார் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டொயோட்டா கார் விற்பனை 48% உயர்வு
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் ஏப்ரல் மாத கார் விற்பனை 48 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் இயக்குநரும், துணைத் தலைவருமான (விற்பனை & சந்தைப்படுத்தல்) என்.ராஜா தெரிவித்ததாவது:
டொயோட்டா புதிதாக அறிமுகம் செய்த ஃபார்ச்சுனர் மாடல் காருக்கு எதிர்பாராத அளவுக்கு சந்தையில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், 6 மாதங்களுக்குள்ளாகவே அதன் விற்பனை 12,200-ஐ தாண்டி சாதனை படைத்துள்ளது.
இது தவிர, மார்ச் மாதத்தில் அறிமுகமான கொரோலா ஆல்டிஸ், இன்னோவா கிரிஸ்டா மாடல் கார்களுக்கும் வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு பெருகியுள்ளது.
இதையடுத்து, சென்ற ஏப்ரலில் 14,057 கார்கள் விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டின் இதே மாத கால அளவில் விற்பனையான 9,507 கார்களுடன் ஒப்பிடுகையில் இது 48 சதவீதம் அதிகமாகும்.
உள்நாட்டில் கார் விற்பனை 51.81 சதவீதம் அதிகரித்து 12,948-ஆகவும், ஏற்றுமதி 1,109-ஆகவும் காணப்பட்டது என்றார் அவர்.
நிஸான் கார் விற்பனை 39% வளர்ச்சி
நிஸான் இந்தியா நிறுவனத்தின் ஏப்ரல் மாத கார் விற்பனை 39.26 சதவீதம் வளர்ச்சி கண்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அருண் மல்ஹோத்ரா கூறியதாவது:
நிஸானின் புதிய அறிமுகங்களான டெரானோ, டாட்ஸன் ரெடி-கோ கார்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதையடுத்து, ஏப்ரலில் கார் விற்பனை 39.26 சதவீதம் அதிகரித்து 4,217-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாத கால அளவில் கார் விற்பனை 3,028-ஆக இருந்தது என்றார் அவர்.
ராயல் என்ஃபீல்டு விற்பனை 25% உயர்வு
ஐஷர் மோட்டார்ஸின் இருச்கர வாகன தயாரிப்பு பிரிவான ராயல் என்ஃபீல்டு ஏப்ரல் மாதத்தில் 60,142 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்தது. கடந்த 2016-ஆம் ஆண்டின் இதே கால அளவில் விற்பனையான 48,197 வாகனங்களுடன் ஒப்பிடும்போது இது 25 சதவீதம் அதிகமாகும்.
ஏற்றுமதி 1,160 என்ற எண்ணிக்கையிலிருந்து 36 சதவீதம் உயர்ந்து 1,578-ஆக காணப்பட்டது என்று ஐஷர் மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா வாகன விற்பனை 6% குறைவு
மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை ஏப்ரல் மாதத்தில் 6 சதவீதம் குறைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்ததாவது:
உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கு அதிக முக்கியத்தும் கொடுத்து வருவது, சாதகமான பருவநிலை குறித்த மதிப்பீடு, நிலையான கொள்கை சூழல் ஆகியவற்றால் நடப்பு நிதி ஆண்டில் மோட்டார் வாகனங்களுக்கான தேவை அதிகரித்து விற்பனை சூடுபிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பல்வேறு காரணங்களால் சென்ற ஏப்ரலில் வாகன விற்பனை 6% சரிவடைந்து 39,357-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் வாகன விற்பனை 41,863-ஆக காணப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் மஹிந்திரா வாகன விற்பனை 39,357-லிருந்து 4% குறைந்து 37,829-ஆக இருந்தது. அதேசமயம், வர்த்தக வாகனங்கள் விற்பனை 16% அதிகரித்து 15,066-ஆகவும், ஏற்றுமதி 39% வீழ்ச்சியடைந்து 1,528-ஆகவும் காணப்பட்டது என்றார் அவர்.
அசோக் லேலண்ட் வாகன விற்பனை 30% சரிவு
ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் ஏப்ரல் மாத வாகன விற்பனை 30% சரிவடைந்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற ஏப்ரலில் 7,083 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் விற்பனை செய்யப்பட்ட 10,182 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 30 சதவீத சரிவாகும்.
கனரக மற்றும் நடுத்தர வணிக வாகனங்கள் விற்பனை 7,873 என்ற எண்ணிக்கையிலிருந்து 43% குறைந்து 4,525-ஆக இருந்தது.
அதேசமயம், இலகு ரக வணிக வாகனங்கள் விற்பனை 11% அதிகரித்து 2,558-ஆக காணப்பட்டது என்று அசோக் லேலண்ட் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com