ரிசர்வ் வங்கியில் புதிய அத்தியாயம்

இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்ற எவருக்கும் இல்லாத ஒரு விநோத நிலை உர்ஜித் படேலுக்கு ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் புதிய அத்தியாயம்

இதற்கு முன்பு ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பொறுப்பேற்ற எவருக்கும் இல்லாத ஒரு விநோத நிலை உர்ஜித் படேலுக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு ஆளுநர் போய் மற்றொரு ஆளுநர் நியமனமாவது என்ற சாதாரண சூழலுக்கு மாறாக, ஓர் அசாதாரண நிழலை ரகுராம் ராஜன் விட்டுச் சென்றிருக்கிறார். அந்த நிழல் சிறிது காலமாவது ரிசர்வ் வங்கியின் காட்சிகளில் ஆடி, தனது சுவடைப் பதித்துக் கொண்டிருக்கும்.

விடைபெறும் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனுக்கும் புதிதாகப் பொறுப்பேற்கும் ஆளுநர் உர்ஜித் படேலுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு - ரகுராம் ராஜன் நிதி தொடர்பான விஷயங்களைப் பற்றி மட்டுமல்லாமல், பிற விஷயங்களைப் பற்றியும் சொந்தக் கருத்துகளை ஓயாமல் வெளியிட்டு வந்தார். அரசு அமைப்புகளுடன் இசைந்து செயல்பட்ட அனுபவம் ரகுராம் ராஜனுக்கு இல்லாததால், முக்கியப் பொறுப்பு வகிக்கும் ஒருவருக்குத் தேவையான இங்கிதம் சற்றுக் குறைவாக இருந்தது என்றுகூடச் சொல்லலாம்.

தனது அறிவுஜீவி தோரணையையும் நட்சத்திர அந்தஸ்தையும் எப்போதும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் விதத்தில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டது மட்டுமல்லாமல், மத்திய அரசையும் அதன் கொள்கைகளையும் அவ்வப்போது மெல்லிய முறையில் இடித்துரைத்து வந்தார் ரகுராம் ராஜன்.

இதற்கு நேர்மாறாக, உர்ஜித் படேல் தனது பணிகளைக் குறித்தும் கூட மிகக் குறைவாகவே பேசி வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் என்கிற வகையில், அவர் ஒரே ஒரு முறை மட்டுமே பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.

இத்தகைய சூழலில், அமைதியாகவும் முனைப்புடனும் தனது பணியைச் செய்யும் ஒருவரை ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்க மத்திய அரசு தீர்மானித்ததில் எந்த வியப்பும் இல்லை.

உர்ஜித் படேல் சர்வதேச நிதி அமைப்பான ஐ.எம்.எஃப்.பில் பணியாற்றிய காலத்தில் அவரை நன்கு அறிந்தவர்கள், நாட்டின் மத்திய வங்கியின் தலைமையை ஏற்று நடத்தக் கூடிய சிறந்த நபர் இவர் என்கிறார்கள்.

ஐ.எம்.எஃப். தவிர, தனியார் துறையிலும் சிறிது காலம் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநராகவும் நன்றாகக் கால் ஊன்றியவர். கடன் மற்றும் வட்டி விகிதம் குறித்து தனியார் துறைக்கு இருக்கும் கவலைகளைக் குறித்து அவருடைய அனுபவம் போதிய ஞானத்தை அவருக்குத் தந்திருக்கும் என்று நம்பலாம். உர்ஜித் படேல் பெயர் ரிசர்வ் வங்கி ஆளுநராக அறிவிக்கப்பட்டதும் அவரைத் தொடர்பு கொண்டு பேட்டியெடுக்க நாட்டின் அனைத்து தொலைக்காட்சி சேனல்களும் முன்னணி வணிக நாளிதழ்களும் பத்திரிகையாளர்களும் போட்டி போட்டு முயற்சித்தனர். ஆனால் அவர் மசியவில்லை.

வாராக் கடன் பிரச்னை தொடர்பாக அரசு வங்கிகளிடம் அவர் எவ்வளவு கறாராக இருக்கப் போகிறார்? பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் எத்தனை தீவிரம் காட்டப் போகிறார்? வளர்ச்சியா-பணவீக்கமா? என்கிற கொதிக்கும் விவாதத்தில் வங்கிகளின் வாராக் கடன் என்கிற கூடுதல் தீயை எப்படிக் கையாளப் போகிறார்...? இதெல்லாம் பொறுத்திருந்து செயல் வடிவில் காண வேண்டியவை.

வாராக் கடன் மதிப்பு ரூ. 5.5 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்றொரு புள்ளிவிவரம் கூறுகிறது. அது ஒரு புறம்.

வங்கி நிதி நிலை விவகாரத்தில் இன்னொரு முக்கிய விஷயம் - ரூபாயின் மதிப்பை சரி கட்ட 3 ஆண்டுகளுக்கு முன்னால் வெளிநாட்டு கரன்சி டெபாசிட் ஏராளமாகப் பெறப்பட்டது. வெளிநாட்டு கரன்சி டெபாசிட் 2,500 கோடி டாலர் வரை திரட்ட வங்கிகளுக்கு ரகுராம் ராஜன் காலத்தில் அனுமதி வழங்கப்பட்டது. அந்த டெபாசிட்கள் அடுத்த ஓரிரு மாதங்களில் முதிர்வடையவுள்ளன. அந்த டெபாசிட் பணம் முழுவதும் மீண்டும் வெளிநாட்டுக்குத் திரும்புமானால், ரூபாய் மதிப்பு என்னவாகும்? அதை எதிர்கொள்ள ரிசர்வ் வங்கி என்ன செய்யப் போகிறது?
மற்றொரு முக்கிய அம்சம் - இது நாள் வரை வட்டி விகித நிர்ணயம் உள்ளிட்ட நிதிக் கொள்கையில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுதந்திரமாகச் செயல்பட்டு வந்தார். அந்தக் கொள்கையில் அரசுக்கும் பங்களிப்பு இருக்க வேண்டும் என்ற கருத்து முந்தைய அரசு காலத்திலேயே எழுந்தாலும் கூட, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த பிறகு - அதிலும் இரண்டு முழு ஆண்டுகள் கழிந்த பிறகுதான் அந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

எம்.பி.சி. என்கிற நிதிக் கொள்கை நிர்ணயக் குழு அமைப்பதின் முதல் கட்டமாக, மத்திய அரசு சார்பில் 3 நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அடுத்து, ரிசர்வ் வங்கி சார்பில் 3 பேர்களின் பெயரை ஆளுநர் என்ற முறையில் உர்ஜித் படேல்தான் அறிவிக்க வேண்டும். மூவரில் ஒரு நபர் அவரேதான். மீதி இரண்டு இடங்களுக்கு ரிசர்வ் வங்கியின் ஒரு துணை ஆளுநரையும் மூன்றாவதாக ரிசர்வ் வங்கியிலிருந்தே இன்னொரு நபரையும் அவர் நியமிக்க வேண்டும்.
அவர் முன் இருக்கும் இரு முக்கியப் பணிகள் இவைதான்-

ரகுராம் ராஜன் காலத்திலேயே அறிவிக்கப்பட்ட வட்டிக் குறைப்பு முழுவதுமாக மக்களைச் சென்றடையவில்லை. வங்கிகளை அவர் கடிந்து கொண்டதுதான் மிச்சம். சர்வதேச காரணங்கள் உள்ளிட்ட பொருளாதாரத் தேக்க நிலையால் தொழில் துறை வழியாகக் கிடைக்க வேண்டிய வருமானம் வற்றிவிட்ட நிலையில், வங்கிகள் தங்கள் குறுகிய கால வருமானத்தை விட்டுக் கொடுக்க மனமில்லாமல், சாதாரண வங்கிப் பயனாளிகளின் பணப் பையில் கையைவிட்டன. உர்ஜித் படேல் அந்த விஷயத்தில் என்ன நிலைப்பாட்டை எடுப்பார் என்று பார்க்க வேண்டும்.

"உலக அளவில் பொருளாதார நிலை தொய்வு அடைந்து வரும் நிலையில், இந்தியா வழிகாட்டி விளக்காக உள்ளது' என்று பல்வேறு சர்வதேச பொருளாதார அமைப்புகளும் பொருளாதார நிபுணர்களும் இப்போதும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

முதலீடு இருந்தால்தான் உற்பத்தி பெருகும். உற்பத்தியான பொருள் சந்தையில் செலவாக வேண்டுமென்றால் தேவை அதிகரிக்க வேண்டும். தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள தனி நபர் வருமானம் பெருக வேண்டும். அரசுத் துறை ஊழியருக்கு உள்ள உறுதியான வருமான வாய்ப்பு தனியார் துறையைச் சேர்ந்த ஊழியருக்கு இல்லை. மூலதனமும் தேவையும் குறைவாக இருப்பதால் முழு உற்பத்தித் திறனில் தொழில் துறை இயங்கவில்லை. இப்படியாக ஒரு மாயச் சுழல் நிலவுகிறது.

வட்டியைக் குறைத்து பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் அதே நேரத்தில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய கயிறு மேல் நடக்கும் வித்தையை உர்ஜித் படேல் எப்படிக் கையாள்கிறார் என்று பார்க்க வேண்டும்.

"பணவீக்கத்தை மட்டும் இலக்காக வைத்துக் கொண்டு வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல் விடக் கூடாது - கடுமையான பணவீக்கக் கட்டுப்பாடு சித்தாந்தம் எல்லா நாட்டுக்கும் பொருந்தாது' என்ற கருத்து அழுத்தம் பெற்று வருகிறது.

தொழிலகத் துறை பல்வேறு விவகாரங்களினால் கட்டிப் போடப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு வேளாண் துறையைப் பொருத்தவரையில், பருவ மழை சீராக இருந்ததால் அந்தத் துறை உற்பத்தியும் வருவாயும் மெச்சும்படியாகவே இருக்கும் என்று தெரிகிறது. அரசு வங்கிகளின் வாராக் கடன் சுமை தொடர்ந்து நமது பொருளாதாரத்தில் நெருக்கடியைக் கொடுத்து வருகிறது. அதே சமயம், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் வட்டி விகிதத்தை உயர்த்தி வைத்திருப்பது தொழில் துறையை பாதிக்கிறது. இதற்கு இடைப்பட்ட ஒரு நிலையில், சாதுர்யமாக நிதிக் கொள்கையை ரிசர்வ் வங்கி வகுக்க வேண்டியிருக்கிறது.

இந்த விஷயத்தில் பொருளாதார சித்தாந்தங்களால் தனக்குத் தானே புதிய ஆளுநர் விலங்கிட்டுக் கொள்ள மாட்டார் என்றும் முதிர்ச்சியடைந்த சிந்தனையுடன் நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப முடிவுகள் எடுப்பார் என்று நம்பும் விதத்தில் அவர் முன்பு ஒரு முறை பேசியுள்ளார்.

"நிதிக் கொள்கைகளைச் செயல்படுத்துவதில் ரிசர்வ் வங்கி கழுகும் அல்ல, புறாவும் அல்ல - நாங்கள் ஆந்தையைப் போலச் செயல்படுவோம். ஆந்தை என்றாலே விவேக புத்தியுள்ள பறவை என எல்லோருக்கும் தெரியும். மற்றவர்கள் உறங்கும்போது, நாங்கள் விழித்துக் கொண்டு எல்லாவற்றையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்' என்று கூறி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் உர்ஜித் படேல்.

பிரேசில், ரஷியா, இந்திய, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டு முயற்சியான பிரிக்ஸ் வங்கியின் உருவாக்கத்தில் உர்ஜித் படேலின் பங்கு கணிசமானது என்பது நிறைய பேருக்குத் தெரியாது. பிரிக்ஸ் வங்கியின் நடைமுறைகள், கூட்டு நாடுகளிடையே பரிவர்த்தனை அடிப்படைகளை வகுப்பதில் பல்வேறு சிக்கலான அம்சங்களை ஆராய்ந்து ஆலோசனை வழங்கியிருக்கிறார் படேல்.

உர்ஜித் படேல் "பணவீக்கக் கட்டுப்பாடு' நிபுணர் என்று கூறப்படுகிறது. ஆளுநர் என்ற முறையில் அவர் ஒவ்வொரு விவகாரத்தையும் எப்படிக் கையாளப் போகிறார் என்பதை ஆவலுடன் தொழிலதிபர், வணிகரிலிருந்து சாதாரண சந்தை வாடிக்கையாளர்-நுகர்வோர் வரை எல்லோருமே ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர் என்று கூறினால் அது மிகையான வார்த்தையே இல்லை. அவருடைய அனுபவம், அத்துடன் பொதுவான அவருடைய செயல்பாடுகள் குறித்தும் கடந்த இரண்டு- இரண்டரை ஆண்டு காலமாக அவரைப் பார்த்து வருகிற மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்கு அவரைத் தேர்ந்தெடுத்துள்ளது. அதன் நிர்வாகத்தில் புதிய அத்தியாயம் தொடங்கியிருக்கிறது. பிரதமர் மோடி தலைமையிலான அரசும், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலும் இணைந்து சுமுகமாகச் செயல்படுவார்கள் என்று நம்பலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com