வேக வளர்ச்சி பெறும் இயற்கை வேளாண்மை

மண் மணம் மாறாமல், நீர்வளம் குறையாமல், சுற்றுச்சூழல் அழியாமல், உணவு குணம் குன்றாமல், உடல்நலம் கெடாமல் நமது முன்னோர் பின்பற்றிய உழவுத் தொழில், தற்போது இயற்கை வேளாண்மை என்ற புதிய பெயரில் அறிமுகம்
வேக வளர்ச்சி பெறும் இயற்கை வேளாண்மை

மண் மணம் மாறாமல், நீர்வளம் குறையாமல், சுற்றுச்சூழல் அழியாமல், உணவு குணம் குன்றாமல், உடல்நலம் கெடாமல் நமது முன்னோர் பின்பற்றிய உழவுத் தொழில், தற்போது இயற்கை வேளாண்மை என்ற புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இயற்கையோடு இயைந்த வேளாண் நடைமுறைகளைத்தான் உழவு என்று நமது முன்னோர்கள் கூறிவந்தனர். 1960-களில் உணவுப் பஞ்சம் தலைவிரித்தாடியபோது, உணவு தானிய உற்பத்தியைப் பெருக்குவதற்காக அப்போதைய மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் பசுமைப் புரட்சி.
அதிக மகசூல் தரும் கலப்பு விதை, வேதி இடுபொருள், நீர்ப்பாசனம் போன்ற அறிவியல் ரீதியான அணுகுமுறைகள் மூலம் உணவு உற்பத்தி பெருக்கப்பட்டதையே பசுமைப் புரட்சி என்றழைக்கிறார்கள்.
உணவு உற்பத்தியைப் போலவே நோய் உற்பத்தியும் இந்தியாவில் பெருகவே, இதற்கான காரணத்தை தேடியபோது, பசுமைப் புரட்சி தந்த பக்கவிளைவுகள் என்று தெரியவந்தது. அதனைத் தடுக்கும் விதமாக, 2000-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் புத்துயிர் பெற்றுள்ளது இயற்கை வேளாண்மை எனும் நமது பழைமையான உழவு முறை.

விரிவாகும் வர்த்தகம்

வேதிப் பொருள்களால் விளையும் உணவு தானியங்களால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து, வேதிப் பொருளில்லா விளைபொருள்களை நாடும் மனப்போக்கு விரிந்து வருகிறது. இயற்கை வேளாண் முறை கீழிலான நிலப்பரப்பும் கடந்த பத்தாண்டுகளில் பரந்து விரிந்து வருகிறது.
2003-04-ஆம் ஆண்டில் 42 ஆயிரம் ஹெக்டேராக இருந்த இயற்கை வேளாண் பரப்பு, 2016-ஆம் ஆண்டில் 7.2 லட்சம் ஹெக்டேராக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இயற்கை வேளாண் பொருள்களின் ஏற்றுமதி 30% வளர்ச்சி பெற்றது. உள்நாட்டுச் சந்தை 40% வளர்ச்சி பெற்றது.
இயற்கை வேளாண் விளைபொருள் சந்தை நாளுக்கு நாள் பெருகி வருவதால், அதன் உற்பத்தியும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. உணவே மருந்து என்ற கருத்தியல் நகர்ப்புற மக்களிடையே இயற்கை வேளாண் உணவுப் பொருள்களுக்கான விழிப்புணர்வுக்கு வித்திட்டுள்ளது. இதனால் இந்தியாவில் இயற்கை வேளாண்மையின் உற்பத்தி, சீர்படுத்துதல், பதனிடுதல், சிப்பமிடுதல், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட வர்த்தக நடவடிக்கைகள் சுறுசுறுப்படைந்துள்ளன.
சவால்கள்
இயற்கை வேளாண் உணவுப் பொருள் ஏற்றுமதி மற்றும் உள்நாட்டுச் சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றாலும், இங்கு அனைத்துத் தரப்பு மக்களிடையிலும் அது போதுமான அளவு பரவவில்லை என்று கூற வேண்டும். சந்தை தேவை அதிகமிருந்தும், உணவு தானிய உற்பத்தி குறைவாக உள்ளது. உற்பத்திக்கான செலவினங்களைக் குறைக்கும்போது விலை குறையவும், விற்பனை பெருகவும் வாய்ப்புள்ளதாக இயற்கை வேளாண்மையின் பன்னாட்டு தகுதி மையம் தெரிவிக்கிறது.

பிற மாநிலங்கள்

கேரளத்தில் 1 லட்சம் விவசாயிகள் இயற்கை வேளாண் முறையில் காய், கனி, தானிய உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநில அரசின் ஊக்க நிதியுடன் 10 கூட்டுறவு அமைப்புகள் இயற்கை வேளாண் விளைபொருள்களை உள்ளூரில் விற்பனை செய்வதிலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதிலும் உதவி புரிந்து வருகின்றன.
சிக்கிம் மாநிலத்தில் 2003-ஆம் ஆண்டு முதல் இயற்கை வேளாண்மைக்கு ஊக்கம் அளிக்கத் தொடங்கியது அந்த மாநில அரசு. கடந்த 14 ஆண்டுகளில் சிக்கிமின் மொத்த விளைநிலப் பரப்பில் 99% (76,392 ஹெக்டேர்) இயற்கை வேளாண் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. அதேபோல மேகாலயமும் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளித்து வருவதோடு, 2020-ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் ஹெக்டேர் நிலத்தை இயற்கை வேளாண் வரம்புக்குள் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிசா, உத்தரபிரதேசம், கர்நாடகம், குஜராத், உத்தராகண்ட் மாநிலங்களிலும் இயற்கை வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க 2004-ஆம் ஆண்டிலேயே கர்நாடக அரசு இயற்கை வேளாண்மைக் கொள்கையை வகுத்து, அதற்காக ஆண்டுதோறும் ரூ.200 கோடியை செலவிட்டு வருகிறது.
இதன் விளைவாக, கடந்த 13 ஆண்டுகளில் 94,000 ஹெக்டேர் நிலப் பரப்பை இயற்கை வேளாண் விளைநிலமாக மாற்றியமைத்து, 70,000 விவசாயிகளின் உதவியுடன் ஆண்டுக்கு 2.82 லட்சம் டன் உணவு தானியங்கள் உற்பத்தியாகியுள்ளது.

மத்திய அரசு மும்முரம்

இயற்கை வேளாண் முறையை விவசாயிகளிடையே ஊக்குவிக்கும் விதமாக, அவ்வகை விளைபொருள்களுக்கான சந்தைகளை மேம்படுத்த மத்திய அரசு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், இயற்கை வேளாண் முறையில் பங்களிப்பை உறுதிப்படுத்தும் விதமான ஊக்கத் திட்டங்களுக்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்திருக்கிறது மத்திய அரசு.

விழிப்புணர்வு

தூய்மை இந்தியா திட்டம் போல, இயற்கை விளைநிலம், இயற்கை உணவு, தூய்மையான சுற்றுச்சூழல் திட்டங்களை உருவாக்கி, அத்திட்டங்களை மும்முரமாக செயல்படுத்த வேண்டும். இயற்கை வேளாண்மையால் சுற்றுச்சூழல் பாதுகாப்பாக இருப்பதோடு, பொருளாதார வளர்ச்சி, சமூக நலம் பேணப்படும் என்பதை அனைவரும் உணரச் செய்ய வேண்டும்.
ஏற்றுமதிக்காக மட்டுமல்லாது உள்நாட்டு மக்களின் நலனுக்காகவும் மலிவான விலையில் உற்பத்தி செய்து, விற்பனை செய்தால் இயற்கை வேளாண் உணவுப் பொருளுக்கு அதிக வரவேற்பும் வருவாயும் கிடைக்கும்.

சந்தை மதிப்பு ரூ. 5,000 கோடி!

உலக அளவில் இயற்கை வேளாண் உணவுப் பொருள்களின் விற்பனை ரூ.5.20 லட்சம் கோடியாக உள்ளது. நிகழாண்டின் இறுதியில் இது ரூ.6.50 லட்சம் கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இயற்கை வேளாண் உணவுப் பொருள்களின் சந்தைமதிப்பு ரூ.5 ஆயிரம் கோடியாக உள்ளது. இதில் ஏற்றுமதி வர்த்தகம் ரூ.3,500கோடி, உள்நாட்டு வர்த்தகம் ரூ.1,500கோடி அடக்கம். 2020-ஆம் ஆண்டில் இந்தியாவின் இயற்கை வேளாண் உணவுப் பொருள் சந்தை மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
உலக அளவில் இயற்கை வேளாண்மையை கடைப்பிடிக்கும் 172 நாடுகளில் இந்தியா முதன்மையான இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டில் 7 லட்சம் உழவர்கள் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, 699 உணவுப் பொருள் பதனிடுவோர், 669 ஏற்றுமதியாளர்கள் உள்ளனர். ஆனாலும் இந்தியாவின் மொத்த வேளாண் நிலப்பரப்பில் 0.4 சதவீதம் நிலத்தில் மட்டுமே இயற்கை வேளாண் முறை நடைபெற்று வருகிறது.

இயற்கை வேளாண் விளைநிலமும், விளைபொருளும்

வரிசை மாநிலம் விளைநிலம்
(ஹெக்டேர்) விளைபொருள் (மெட்ரிக் டன்)
1 மத்தியப் பிரதேசம் 3,97,546 3,21,963
2 மகாராஷ்டிரம் 1,34,524 2,17,322
3 ராஜஸ்தான் 1,07,523 60,116
4 ஒடிசா 81,533 28,972
5 சிக்கிம் 76,392 67,630
6 உத்தரப்பிரதேசம் 53,954 50,298
7 கர்நாடகம் 52,473 2,54,760
8 குஜராத் 49,353 60,625
9 உத்தராகண்ட் 36,880 23,714
10 கேரளம் 22,980 9,122

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com