பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் லாப நோக்கு வாரம்

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால் கடந்த வாரத்தில் 5 வர்த்தக தினங்களும் சரிவுடனே முடிவடைந்தன.
பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களின் லாப நோக்கு வாரம்

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி செயல்பட்டதால் கடந்த வாரத்தில் 5 வர்த்தக தினங்களும் சரிவுடனே முடிவடைந்தன. இதையடுத்து, தொடர்ச்சியாக 5 வாரங்களாக ஏற்றம் கண்டு வந்த பங்குச் சந்தை கடந்த வாரத்தில் வீழ்ச்சியை சந்தித்தது.

சந்தேகத்துக்குரிய 331 நிறுவனங்கள் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட செபி அமைப்பு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதன் காரணமாக, பங்கு வர்த்தகத்தில் தொடர்ச்சியாக மந்த நிலை ஏற்பட்டது. முதலீட்டாளர்கள் லாப நோக்கம் கருதி பங்கு விற்பனை செய்தனர்.
அமெரிக்கா}வடகொரியா இடையே நிலவி வரும் போர் பதற்றம், அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவையும் பங்கு வர்த்தகத்தின் தொடர்ச்சியான சரிவுக்கு மேலும் வழிவகுத்தன.
அந்நிய நிதி நிறுவனங்கள் கடந்த வாரத்தில் மட்டும் ரூ.1,624.63 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றதாக செபி தாற்காலிக புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
ரியல் எஸ்டேட் பங்குகளின் விலை அதிகபட்சமாக 9.80 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. அதையடுத்து, மருந்து துறை நிறுவனப் பங்குகளின் விலை 7.71 சதவீதமும், மோட்டார் வாகனம் 6.10 சதவீதமும், மின்சாரம் 5.37 சதவீதமும், பொறியியல் சாதனங்கள் 4.49 சதவீதமும், வங்கி 3.48 சதவீதமும், வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருள்கள் 3.16 சதவீதமும், எண்ணெய்}எரிவாயு 3.01 சதவீதமும், உலோகத் துறை பங்குகளின் விலை 2.57 சதவீதமும் சரிந்தன. இவை தவிர, தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் சாதன துறை பங்குகளும் விலை குறைந்தன.
நிறுவனங்களைப் பொருத்தவரையில், டாடா மோட்டார்ஸ் பங்கின் விலை 13.95 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. டாடா மோட்டார்ஸ் டிவிஆர் 12.66 சதவீதமும், ஸன் பார்மா 10.92 சதவீதமும், டாக்டர் ரெட்டீஸ் 10.37 சதவீதமும், எஸ்பிஐ 8.12 சதவீதமும், அதானி போர்ட்ஸ் 5.61 சதவீதமும், கோல் இந்தியா 5.36 சதவீதமும், மஹிந்திரா & மஹிந்திரா 5.07 சதவீதமும், லூபின் 5.06 சதவீதமும், ரிலையன்ஸ் 4.68 சதவீதமும் சரிந்தன.
அதேசயம், டாடா ஸ்டீல் பங்கின் விலை 3.59 சதவீதம் உயர்ந்தது. விப்ரோ, இன்ஃபோசிஸ் பங்குகளுக்கும் சந்தையில் ஓரளவுக்கு வரவேற்பு காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,112 புள்ளிகள் (3.44%) வீழ்ச்சியடைந்து 31,213 புள்ளிகளாக நிலைத்தது. முன்னதாக ஐந்து வாரங்களில் சென்செக்ஸ் 1,403 புள்ளிகள் (4.54%) ஈட்டியிருந்த நிலையில் இந்த சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை பங்குச் சந்தையில் கடந்த வாரம் ரூ.23,778.08 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற வர்த்தகத்தில் நிஃப்டி 356 புள்ளிகள் சரிந்து (3.53%) 9,710 புள்ளிகளாக நிலைத்தது. முன்னதாக ஐந்து வாரத்தில் நிஃப்டி 545 புள்ளிகள் (5.73%) அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தேசிய பங்குச் சந்தையில் கடந்த வாரத்தில் ரூ.1,43,020.34 கோடி மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com