"செல்லிடப்பேசி கட்டணங்களில் இனி வெளிப்படைத் தன்மை'

ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் பலவிதமான "குறைந்த' கட்டணங்களை அறிவித்து வாடிக்கையாளர்கள் குழம்பிப் போயுள்ள நிலையில், இந்த விவகாரத்தை டிராய் கையிலெடுக்கத் தீர்மானித்து விட்டது.
"செல்லிடப்பேசி கட்டணங்களில் இனி வெளிப்படைத் தன்மை'

ஒவ்வொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் பலவிதமான "குறைந்த' கட்டணங்களை அறிவித்து வாடிக்கையாளர்கள் குழம்பிப் போயுள்ள நிலையில், இந்த விவகாரத்தை டிராய் கையிலெடுக்கத் தீர்மானித்து விட்டது.
செல்லிடப்பேசி கட்டணங்கள் தொடர்பாக வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை தொலைத் தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான "'டிராய்' துரிதமாக மேற்கொண்டுள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு சேவையில் ஏர்டெல், ஏர்செல், வோடபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இந்த நிறுவனங்கள் நிர்ணயிக்கும் செல்லிடப்பேசி சேவைக்கான கட்டண விகிதங்கள் வெவ்வேறு விதமாக உள்ளதுடன் வாடிக்கையாளர்களைக் குழப்பும் விதத்திலும் அமைந்துள்ளன.
இதையடுத்து, தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்தும் தங்களது கட்டண விவரங்களை எழுத்து மூலம் சமர்ப்பிப்பதுடன், மின்னணு வடிவிலும் தாக்கல் செய்ய வேண்டும் என்று டிராய் அறிவுறுத்தியுள்ளது.
பல்வேறு வட்டங்களுக்கான சிறப்பு கட்டண விகிதங்கள் உள்பட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுக்கு சுமார் 24,000 கட்டண விகிதங்களை நிர்ணயிக்கின்றன. இனி அனைத்து கட்டணங்களையும் டிராய் வலைதளத்தில் பதிவிட வேண்டும்.
டிராய் வலைதளத்தில் கட்டண விகிதங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பதிவிடுவதால் வெளிப்படைத் தன்மை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அது தொடர்பான செயலிகளையும் உருவாக்க உதவும். அதன் மூலம், சிறந்த திட்டங்கள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான திட்டங்களை அந்த செயலிகள் பரிந்துரை செய்யும் என்று டிராய் கூறுகிறது.
இதற்கான பணிகள் விரைவில் நடைபெறவுள்ளன. அதற்கு முன்னோட்டமாகவே, தற்போது தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய கட்டண விகிதங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன என்கிறார் டிராய் அமைப்பின் தலைவர் ஆர்எஸ். சர்மா.
வாடிக்கையாளர்கள் அவர்களுடைய தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்திடமிருந்து வெளியேற விரும்பினாலும் சில நிறுவனங்கள் அவர்களைத் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு மறைமுகமான சலுகைகளை வழங்கி அவர்களை தக்கவைத்துக் கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இது தவறான செயலாகும். ஒன்-டு-ஒன் அடிப்படையிலான நேரடியாக வழங்கும் சலுகைகள் குறித்து சம்பந்தப்பட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதன் வலைதளங்களில் வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை ஜியோ கடந்த மாதம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்க டிராய் மும்முரமாக களமிறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com