இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குநர் விஷால் சிக்கா திடீர் ராஜிநாமா

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவியை விஷால் சிக்கா வெள்ளிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.
இன்ஃபோசிஸ் நிர்வாக இயக்குநர் விஷால் சிக்கா திடீர் ராஜிநாமா

இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி பதவியை விஷால் சிக்கா வெள்ளிக்கிழமை திடீரென ராஜிநாமா செய்தார்.
இதையடுத்து, அந்த பொறுப்புகளுக்கு புதிய நபரை தேர்ந்தெடுக்கும் வரை யு.பி. பிரவீண் ராவ் இடைக்கால நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக செயல்படுவார் என இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
மேலும், விஷால் சிக்காவை செயல் துணை இயக்குநராக நியமித்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தனது ராஜிநாமா குறித்து இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு விஷால் சிக்கா எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கடந்த பல காலாண்டுகளாகவே பொய்யான, அடிப்படையற்ற, தீங்கிழைக்கும் நோக்குடன் என்மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுப்பது அதிகரித்தே வந்தது. என்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் பலமுறை சுதந்திரமாக நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் பொய் என்று நிரூபணமாகியுள்ளது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், இதுபோன்ற தாக்குதல் தொடர் கதையாகி வந்தது மட்டுமின்றி இன்னும் மோசமான நிலைக்கு சென்றது. நிறுவனத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல யாருடைய உதவியை உறுதியாக நம்பியிருந்தோமோ அவர்களாலேயே இந்த அவல நிலை உருவானது. நீண்ட நாள் யோசித்த பின்னரே இந்த ராஜிநாமா முடிவு எடுக்கப்பட்டது என்று விஷால் சிக்கா அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விஷால் சிக்கா திடீரென விலகியதற்கு இன்ஃபோசிஸ் நிறுவனரான என்.ஆர். நாராயண மூர்த்தி வெளியிட்டு வந்த கடுமையான கருத்துகளே முக்கிய காரணம் என இன்ஃபோசிஸ் நிர்வாக குழு குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து அந்த குழு மேலும் கூறியுள்ளதாவது:
விஷால் சிக்காவின் சீரிய தலைமையின் கீழ் இன்ஃபோசிஸ் லாபகரமான வருவாய் வளர்ச்சியைப் பெற்றது.
இந்த நிலையில், நிறுவனர் நாராயண மூர்த்தி எழுதியதான கடிதம் பல்வேறு ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால், நிர்வாகக் குழுவின் ஒருமைப்பாடு சிதைந்ததுடன், நிறுவனத்தின் ஆளுமைத் தரமும் குறைந்து போனது.
அவருடைய கடிதம் முழுவதும், உண்மைக்குப் புறம்பான தகவல்கள், ஏற்கெனவே நிராகரிக்கப்பட்ட வதந்திகளுமே நிரம்பியிருந்தன. நிறுவன விவகாரங்களில் அவர் தொடர்ந்து பொருத்தமற்ற கோரிக்கைகளையே எழுப்பி வந்தார். ஆனால், அவற்றையெல்லாம் ஏற்க நிர்வாக குழு திட்டவட்டமாக மறுத்து விட்டது.
இருப்பினும், நாராயண மூர்த்தியின் மோசமான செயல்பாடுகளால் நிறுவனம் பின்விளைவுகளை சந்திக்கும் என்பதில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டது.
இந்த இக்கட்டான சூழ்நிலையில், பங்குதாரர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று நிர்வாக் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்ஃபோசிஸ் நிர்வாக குழுவின் இந்த குற்றச்சாட்டு தனக்கு மிகுந்த மனவேதனை அளித்துள்ளதாக என்.ஆர். நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது:
பணமோ, அல்லது என்னுடைய வாரிசுகளுக்கு பதவியோ இதுவரையில் நான் கோரியது கிடையாது. நிர்வாகக் குழுவின் குற்றச்சாட்டு, அதனை சொன்ன விதம் எனக்கு மனவேதனையை அளித்துள்ளது. என்மீதான குற்றச்சாட்டுகளுக்கு சரியான நேரத்தில் சரியான விதத்தில் பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்.
இன்ஃபோசிஸ் பங்குகள் விலை வீழ்ச்சி: தலைமைச் செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விஷால் சிக்காவின் திடீர் விலகலையடுத்து எழுந்த பரபரப்பால் பங்குச் சந்தையில் இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை 9.6 சதவீதம் வீழ்ச்சி கண்டு ரூ.923.10-ஆக சரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com