தேவை மஞ்சளுக்குத் தனி வாரியம்

மஞ்சள் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி வாரியம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
தேவை மஞ்சளுக்குத் தனி வாரியம்

மஞ்சள் ஏற்றுமதியை ஊக்குவிக்க தனி வாரியம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.
இந்தியாவில் ஈரோடு, ஆந்திர மாநிலம் நிஜாமாபாத், மகாராஷ்டிர மாநிலம் சாங்கிலி ஆகிய இடங்களில் மிகப்பெரிய மஞ்சள் சந்தைகள் இருந்தாலும் ஈரோடு மஞ்சள் சந்தையில்தான் தரமான மஞ்சள் கிடைக்கிறது.
ஈரோடு, நசியனூர் சாலையில் உள்ள செம்மாம்பாளையத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பில் தனியார் மஞ்சள் சந்தையிலும், ஈரோடு, மணிக்கூண்டு அருகே கோபி கூட்டுறவு வேளாண் விற்பனை சங்கத்திலும், கருங்கல்பாளையத்தில் ஈரோடு கூட்டுறவு வேளாண் விற்பனைச் சங்கத்திலும், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திலும் வாரந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.
இச்சந்தையில் மஞ்சளை விற்பனை செய்ய திருப்பூர், கோவை, கரூர், திருச்சி, வேலூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் வந்துசெல்கின்றனர். இவற்றை கொள்முதல் செய்ய கர்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள் வந்து செல்கின்றனர்.
மஞ்சள் வர்த்தகத்தை நம்பி ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், லட்சக்கணக்கான விவசாயிகளும் உள்ளனர். ஆனால், மஞ்சள் விவசாயிகளுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெரிய அளவில் உதவிகள் கிடைப்பதில்லை என்ற கருத்து விவசாயிகளிடம் உள்ளது.
நறுமண வாரியத்தின்கீழ் மஞ்சள் இருப்பதால் இதற்குப் பெரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை. மஞ்சளுக்கு தனி நல வாரியம் அமைத்தால் மஞ்சள் விவசாயிகளுக்கும் பயன் கிடைப்பதோடு, மஞ்சள் வர்த்தகத்தையும் பெருக்க முடியும் என்பது விவசாயிகளின் நம்பிக்கை.
இதுகுறித்து, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.காசியண்ணன் கூறியதாவது:
உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலையில் இருக்கும் தேங்காய்க்கு தென்னை வாரியம், காபிக்கு காபி வாரியம் இருக்கிறது. இதனால், தென்னை, காபி விவசாயிகளுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. ஆனால், மஞ்சள் நறுமண வாரியத்தில் இருப்பதால் மஞ்சள் விவசாயிகளால் மத்திய அரசிடம் இருந்து நன்மை பெற முடியவில்லை என்பது மஞ்சள் விவசாயிகளின் மனக்குறை.
உலக சந்தையில் ஏகபோக உரிமையை இந்தியா கொண்டிருக்கும் ஒரே நறுமணப் பயிர் மஞ்சள்தான். உலக மஞ்சள் உற்பத்தியில் 92 சதவீதம், இந்தியாவில்தான் விளைகிறது. இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 80,000 டன் மஞ்சள் ஏற்றுமதியாகிறது. உள்ளூரில் ரூ. 9,500-க்கு விலைபோகும் மஞ்சள், தரம் பிரிக்கப்பட்டு உலகச் சந்தையில் ரூ. 12,000 முதல் ரூ. 13,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.
உலக சந்தையில் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கும் மஞ்சளுக்கு தனி வாரியம் இல்லாததால் அதன் உற்பத்தி, விற்பனை உள்ளிட்டவற்றில் பல்வேறு சிரமங்களை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.
நறுமண வாரியத்தில் இருக்கும் ஏலக்காய், கொத்தமல்லி, கோக்கோ, மிளகாய் உள்ளிட்டவற்றில் உலக சந்தையில் இந்தியாவின் பங்கு மிகவும் குறைவுதான். ஆனால், உலக சந்தையில் கோலோச்சும் இந்திய மஞ்சளுக்குத் தனி வாரியம் இருந்தால் அதன் ஏற்றுமதியில் தனி கவனம் செலுத்தி நல்ல வருவாய் ஈட்டலாம்.
மஞ்சளைப் பொருத்தவரை, அறுவடை செய்த நாள் முதல் வேகவைத்து பதப்படுத்தி விற்பனைக்கு கொண்டுவர குறைந்தபட்சம் 30 நாள்கள் ஆகிறது. மஞ்சளுக்குத் தனி வாரியம் இருந்தால் அறுவடை செய்த மறுநாளே மஞ்சளை விற்பனைக்கு கொண்டு வரக் கூடிய நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த முடியும்.
தனி வாரியம் இருந்தால் இந்தியாவில் 3 இடங்களில் உள்ள தேசிய அளவிலான மஞ்சள் சந்தையை ஒழுங்குபடுத்த முடியும். இச்சந்தைகளில் உலகம் முழுவதும் இருந்து விவசாயிகளின் மஞ்சள் மூட்டைகளை ஏலம் எடுக்கும் நவீன ஏல முறைகளை அறிமுகப்படுத்த வாய்ப்பு கிடைக்கும்.
நறுமண வாரியத்தில் பல பயிர்கள் இருப்பதால் மஞ்சள் பயிர் மீது அதிகாரிகள் தனி கவனம் செலுத்துவதில்லை. மஞ்சளுக்குத் தனி வாரியம் அமைத்தால் அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி இப்பயிரை மேம்படுத்த உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இதுகுறித்து, இந்திய மஞ்சள் விவசாயிகள் சங்க தேசியத் தலைவர் பி.கே.தெய்வசிகாமணி கூறியதாவது:
இந்தியாவில் இருந்து ஆண்டுக்கு 80 ஆயிரம் டன் மஞ்சள் ஏற்றுமதி ஆகிறது. இதன் மூலம் நாட்டுக்கு ரூ. 9,000 கோடி அன்னியச் செலவாணி கிடைக்கிறது. ஆனால், நறுமண வாரியம் மூலம் மஞ்சள் வளர்ச்சிக்கு ரூ. 2 கோடி மட்டுமே மானியம் கிடைக்கிறது. மஞ்சளுக்குத் தனி வாரியம் அமைத்தால் மஞ்சள் ஏற்றுமதிக்கு மேலும் பல வாய்ப்புகள் உருவாகும். கொச்சியில் தலைமையிடமாக இயங்கும் நறுமண வாரியம், கேரளத்தில் உள்ள ஏலக்காய், மிளகு, பட்டை, கிராம்பு ஆகியவற்றுக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இந்த வாரியம் பிற மாநிலங்களில் உள்ள பயிர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது.
இந்தியாவில் தெலங்கானா மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 31.5 சதவீதமாக மஞ்சள் உற்பத்தியாகிறது. அடுத்தபடியாக 21 சதவீதம் தமிழகத்திலும், ஆந்திரத்தில் 9.5 சதவீதமும் உற்பத்தியாகிறது.
மஞ்சளுக்கான வாரியம் அமைக்க வலியுறுத்தி தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடும் முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், மஞ்சளின் தாயகமான தமிழகத்தில் இருந்து அரசியல் ரீதியாக இதுவரை யாரும் அழுத்தம் கொடுக்கவில்லை.
வேகவைக்காத பச்சை மஞ்சளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக் கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஆனால், சிலர் இந்தியாவில் இருந்து தென்கொரியா, வடகொரியா, வியட்நாம், சீனா, பர்மா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு கிழங்கு மஞ்சளை ஏற்றுமதி செய்கின்றனர். அங்கு இங்குள்ள தரமான மஞ்சளைப் பயிரிட்டால் இந்திய ஏற்றுமதி பாதிக்கப்படும். எனவே, கிழங்கு மஞ்சள் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து, ஈரோடு மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.செல்வகுமார சின்னையனிடம் கேட்டபோது, மஞ்சளுக்குத் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் வலுவாக குரல் கொடுத்துள்ளேன். தொடர்ந்து வலியுறுத்துவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com