மருத்துவக் காப்பீடு... கவனத்தில் கொள்ள வேண்டியவை

மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திடீரென ஏற்படும் மருத்துவச் செலவைச் சமாளிக்க ஆரோக்கியமாக உள்ளபோதே மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
மருத்துவக் காப்பீடு... கவனத்தில் கொள்ள வேண்டியவை

மருத்துவச் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திடீரென ஏற்படும் மருத்துவச் செலவைச் சமாளிக்க ஆரோக்கியமாக உள்ளபோதே மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இதுவரை மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொள்ளாதவர்கள் உடனடியாக அது குறித்துச் சிந்திப்பது நல்லது.
மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து, தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அதைப் புதுப்பித்து வருவோர் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் உண்டு. மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியை எடுத்து விட்டு தொடர்ந்து சில ஆண்டுகள் பிரீமியம் செலுத்தி அதை புதுப்பித்து வருவோரில் சிலர், நமக்கு உடல்நலக் குறைவுதான் ஏற்படவில்லையே என பாதியிலேயே பிரீமியம் செலுத்துவதைக் கைவிடுவோரும் உண்டு; இவ்வாறு செய்வது நல்லது அல்ல.
மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுத்து தொடர்ந்து பிரீமியம் செலுத்துவோர் கவனத்தில் கொள்வதற்கு இந்த உண்மைச் சம்பவம் உதவும். மும்பையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஒருவர் அண்மையில் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கினார். கை-காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மும்பையில் விபத்து ஏற்பட்டவுடன், அங்கேயே முதலுதவி சிகிச்சை பெற்று, உயர் சிகிச்சை பெற விமானம் மூலம் சென்னை வந்தார்.
அவர் தேசிய வங்கி ஒன்றில் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுத்துக் கொண்டு, அதற்கு தொடர்ந்து பிரீமியம் செலுத்தி வந்தார். கை-காலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், சென்னையில் நவீன வசதிகள் கொண்ட கார்ப்பரேட் மருத்துவமனையில் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் அனுமதித்தனர்.
அவசர சிகிச்சைப் பிரிவில் அவரை டாக்டர்கள் அனுமதித்து காலில் ஏற்பட்டிருந்த பலத்த காயத்தையும் அதற்கான சிகிச்சை முறைகளையும் திட்டமிட்டனர். காலில் ஏற்பட்டுள்ள எலும்புமுறிவு உள்பட அனைத்து சிகிச்சைக்கும் சேர்த்து ரூ. 7 லட்சம் ஆகும் என டாக்டர்கள் மதிப்பிட்டு நோயாளியின் பெயரில் மதிப்பீட்டை ஆவணமாக அளித்தனர்.
பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவ இன்சூரன்ஸ் உள்ளதா என மருத்துவர்கள் கேட்டனர். பலத்த காயம் ஏற்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்டவர் சுயநினைவுடன் இருந்ததால், தாம் தொடர்ந்து எடுத்து வரும் மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி குறித்துக் கூறினார். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் தேசிய வங்கி தொடர்புடைய இன்சூரன்ஸ் நிறுவனம், அந்த நிறுவனத்துடன் தொடர்புடைய "டிபிஏ' எனப்படுகிற காப்பீட்டு சேவை நிறுவனம் ஆகியவற்றுடன் மருத்துவமனையின் இன்சூரன்ஸ் பிரிவு ஊழியர்கள் தொடர்பு கொண்டு அவருக்குண்டான காப்பீட்டுத் தொகையைக் கேட்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம் மட்டுமே உள்ளது; அதற்கு உரிய பிரீமியத்தைத்தான் பாதிக்கப்பட்டவர் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து செலுத்தி வருகிறார் எனத் தெரிய வந்தது. எனவே, மொத்த மருத்துவச் செலவு ரூ.7 லட்சத்தில், இன்சூரன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.1 லட்சம் மட்டுமே கிடைக்கும்; மீதம் சுமார் ரூ.6 லட்சம் தொகையை தயார் செய்ய வேண்டும் என்று உறவினர்களிடம் மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
வேறு வழியின்றி நோயாளியின் குடும்பத்தினர் தங்கள் கையைவிட்டு ரூ.6 லட்சம் செலவழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இத்தகைய நிலைக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையை விபத்தில் பாதிக்கப்பட்டவர் ஆண்டுதோறும் உயர்த்திக் கொள்ளாததே முக்கியக் காரணமாகும்.
காப்பீட்டுத் திட்டத்தில் சேரும்போது பெரிய தொகைக்கு உங்களை காப்பீடு செய்து கொள்ளவில்லை என்றாலும் கூட அடுத்தடுத்த ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ளலாம்.
ஆனால் மருத்துவ காப்பீட்டுத் தொகையை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொள்ளாமல் போனதற்கு மேலே குறிப்பிட்ட மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசிதாரர் மட்டுமே காரணம் அல்ல. ஏனெனில் குறிப்பிட்ட தேசிய வங்கி தனது மருத்துவ இன்சூரன்ஸ் குறித்த சுய விளம்பர அம்சங்களில் "ஆட்டோ டெபிட் ஃபெஸிலிட்டி' என்ற ஆங்கில சொற்றொடரைக் குறிப்பிட்டுள்ளது; அதாவது, மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது, விண்ணப்ப படிவத்தில் "ஆட்டோ டெபிட் ஃபெஸிலிட்டி' என்ற இடத்தை "டிக்' செய்து விட்டால், ஆண்டுதோறும் தன்னிச்சையாக, அதே அளவிலான பிரீமியம் தொகை அவரது வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்டு மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி புதுப்பிக்கப்பட்டு விடும். தானாகவே வங்கி சேமிப்புக் கணக்கிலிருந்து மருத்துவ பாலிசி பிரீமியம் செலுத்தப்படுவது செüகரியமாகத் தெரிந்தாலும், அது நமக்கு முற்றிலும் சாதகமான வழிமுறையல்ல.
இவ்வாறு மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசியை வங்கியே தன்னிச்சையாக புதுப்பிக்கச் செய்வது நல்லது அல்ல. ஏனெனில், மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி பயன்படுத்தப்படாத ஆண்டின் இறுதியில் காப்பீட்டுத் தொகையை ஓரளவு அதிகரித்துக் கொள்ளும் வசதி இருப்பது பலருக்குத் தெரியவதில்லை. அது பாலிசிதாரரின் உரிமையும் கூட.
மருத்துவ இன்சூரன்ஸ் பாலிசி "கிளெய்ம்' கோராத ஆண்டுகளில் காப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொண்டே வரும் நிலையில், அது திடீரென ஏற்படக் கூடிய பெரிய மருத்துவச் செலவுகளுக்கு மிகவும் உதவும்.
மருத்துவச் செலவுக்கு ஈடான தொகையை மருத்துவ இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கோரும்போது, காப்பீட்டுத் தொகையின் ("சம் அஷ்யூர்ட்') அடிப்படையிலேயே, படுக்கைக் கட்டணம் போன்ற சில மருத்துவமனைச் செலவுகள் தீர்மானிக்கப்படுவதால், "கிளெய்ம்' கோராத ஆண்டுகளில் தவறாமல் காப்பீட்டுத் தொகையை உயர்த்திக் கொள்வது நல்லது. காப்பீட்டுத் தொகையை உயர்த்துவதால், பிரீமியம் அதிகமாகச் செலுத்த வேண்டியுள்ளதே என கவலை கொள்ளக் கூடாது.
பழமொழி நினைவிருக்கட்டும்: "வரும் முன் காப்போம்' என நோய் பற்றியும் உடல் பற்றியும் கூறுவது பழமொழி. மருத்துவக் காப்பீட்டிலும் "தேவை வரும் முன் பாதுகாத்துக் கொள்வோம்' என்பது வழிமுறையாக இருக்க வேண்டும். அதிகத் தொகைக்கு காப்பீடு செய்து கொள்ளுங்கள். காப்பீடு என்பது இன்றைய தேவைக்கு அல்ல; நாளைய மருத்துவச் செலவுக்கு என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். உடனடியாக சிகிச்சை செலவுக்காகப் பயன்படாவிட்டாலும், பிரீமியம் தொகையை வருமான வரி விலக்கு பெறப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மருத்துவக் காப்பீடு என்பதை ஒரு வகை சேமிப்பாகக் கருதாமல், நமக்கும் நமது குடும்பத்தினருக்குமான அவசர மருத்துவ உதவிக்கு முதலீடாகக் கருத வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com